Puttalam Online
uncategorized

எங்கள் ஆரம்பகால ஆசிரியப் பெருந்தகை அபூதாஹிர் (அப்துல் வஹாப்)

  • 26 November 2020
  • 253 views

எங்கள் ஆரம்பகால ஆசிரியப் பெருந்தகை அபூதாஹிர் (அப்துல் வஹாப்)

(அபூஹனீபா நவ்சாத்)

கண்ணியத்துக்குரிய அபூதாஹிர் சேர் புத்தளத்திலுள்ள நடுத்தரக் குடும்பமொன்றில் முஹம்மது ஷரீப், பாத்துமுத்து ஜொஹரா தம்பதிகளுக்கு நான்காவது மைந்தனாகப் பிறந்தார்கள். புத்தளம் அரசாங்க ஆண்கள் பாடசாலையில்  (கால ஸ்கூல்) அவர் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி பயின்றார்.

புனித ஆசிரியர் தொழிலுக்கு 1961.01.23 இல் பிரவேசித்தார்கள். அவரின் முதல் நியமனம் பெருக்குவட்டான், மூடுகாடு அரசினர் முஸ்லிம் வித்தியாலயமாகும். அதன்பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்று பலாங்கொட CCT வித்தியாலயத்துக்கு ஆசிரிய நியமனம் பெற்றார்கள். அங்கு இஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு மெளலவி ஆசிரியர்கள் இருக்கவில்லை. எனவே அப்பாடத்தைப் பொறுப்பேற்று கற்பிக்கத் தொடங்கினார்கள்.

அங்கிருந்து  புத்தளம் ஸாஹிறா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்தார்கள். இங்கு சுமார் ஒன்பது வருட காலம் தரம் ஏழு, எட்டு, என்பனவற்றுக்கு தமிழ், சுகாதாரம், புவியியல் ஆகிய பாடங்களை கற்பித்தார்கள். அதன் பின்னர் விருதோடை முஸ்லிம் வித்தியாலயத்தில் சிறிது காலம் கடமையாற்றியபின்னர் பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றார்கள். அங்கு அதிபராகப் பொறுப்பேற்று பத்தொன்பது வருடங்கள் சேவையாற்றி 1999.06.06 இல் தனது 38 வருடகால சேவையில் இருந்து ஓய்வுபெற்றார்கள்.

பாலர் உளப்பாங்கை உணர்ந்து கற்பிப்பதில் எமது ஆசான் அபூதாஹிர் அவர்கள் புத்தளம் நகரில் தலைசிறந்த ஒருவர் எனக் கூறினால் அவரிடம் பயின்ற மாணாக்கர் அனைவரும் அதனை நிச்சயமாக ஏற்றுக்கொள்வர். நாம் சுகாதாரம், தமிழ், புவியியல் போன்ற பாடங்களை அவரிடம் கற்றோம். பாடம் எமக்கு விளங்காவிட்டால் எத்தனை முறை என்றாலும் அவர்களுக்கே உரிய கவர்ச்சிகரமான பாணியில் கற்பிக்கும் ஆசான் அவர். சாந்தம் தவிழும் கம்பீரமான ஓர் ஆளுமை. எப்படிப்பட்ட முரட்டுத்தனமான மாணவனும் அந்தக் கண்களுக்கு அடங்கிவிடுவான்.

அவர்களது கற்பித்தல் முறையில் மாணவர்களுக்கான தண்டனைகள் மிகமிகக் குறைவாகும். வார்த்தைகளால் மிகத் தெளிவாக தமிழில் ‘சொல்லாட்சி’ செய்வார்கள்.தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு மாணவனுடைய மனநிலையையும் துல்லியமாக உணர்ந்து அவர்களது மன வளர்ச்சிக்கேற்ப அவர்களை வலுவூட்டி உதவிய நல்லாசான் அவர். தற்கால முன்பள்ளி, ஆரம்பக்கல்வி, ஆசிரியர்களுக்கு எமது அபூதாஹிர் ஆசிரியர் ஓர் எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.

புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் நிஸாம்தீன் சேர் அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் பூமரங்கள் நாட்டி பாடசாலையை அலங்கரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அத்துடன் கரப்பந்தாட்டத்தை இப்பாடசாலையில் பலப்படுத்தியவரும் இவரே.

பலாங்கொடையில் கற்பித்த காலப்பகுதியில் புத்தளம் ஆலங்குடாவை சேர்ந்த புகழ்பெற்ற ஆசான் ஜப்பார் அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்து நெருக்கமான நட்பை பேணினார்கள். தற்போது இளைப்பாறி வீட்டில் இருக்கும் ஆசிரியரை நாம் சந்தித்தவேளை, ஸாஹிரா கல்லூரியிலிருந்து பலாங்கொடைக்கு கல்விச் சுற்றுலா சென்ற சமயம் தாம் கற்பித்த CCT கல்லூரி மாணவர்கள் தமக்கு அளித்த மரியாதயை நெகிழ்வுடன் நினைவு கூறினார். மேலும் புத்தளத்தில் தாம் கற்பித்த மாணவர்கள் தம்மோடு கெளரவமாக நடந்துகொள்வது பற்றியும் சிலாகித்துப் பேசினார்.

பாலாவி முஸ்லிம் வித்தியாலயத்தில் தாம் அதிபராகக் கடமையாற்றிய பத்தொன்பது வருட காலப்பகுதியில் அப்பாடசாலையின் முன்னேற்றத்துக்காக அயராது பாடுபட்டுள்ளார்கள். அவ்வேளை அவருக்கு உறுதுணையாக இருந்த ஊர் பிரமுகர்கள் மற்றும் அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றார். அபூதாஹிர் சேரிடம் கற்றவர்கள் பலர் இன்று ஆசிரியர்களாக, துறைசார் நிபுணர்களாக, அரச உத்தியோகங்களைப் புரிபவர்களாக இருக்கின்றனர்.

எமது அபூதாஹிர் சேர் அவர்கள் ஓர் வேட்டைப் பிரியர். அக்காலத்தில் துப்பாக்கி பாவிப்பதற்கு கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. தற்போது நூர் பள்ளி அமைந்திருக்கும் பகுதி முன்பு புதர்கள் சூழ்ந்த பாரிய வெளியாகும். இங்கு முயல் வேட்டையில் ஈடுபடுவதை அவர் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்.

அபூதாஹிர் சேரின் மனைவி M.T.  உம்முல் கியாஸ் ஆவார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். பாத்திமா ஹுஸ்னா, முஹம்மது உசாம், நூருல் ஹிக்கமா, அஜ்ரத்துல் ஹம்னா (B.Sc, Business Management Special – ஆசிரியை) ஆகியோராவர். ஆசிரியருக்கு ஐந்து சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர்.

எங்கள் கண்ணியத்துக்குரிய ஆசிரியப் பெருந்தகை அபூதாஹிர் சேர் அவர்கள் தமது 81 ஆவது அகவையில் தனது குடும்பத்தினருடன் அமைதியாக வீற்றிருக்கின்றார். அவர்கள் சுகதேகியாக நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.

இறுதியாக…

எமக்கு கற்பித்த ஆசிரிய பெருமக்கள் அனைவரும் ஒரே வரிசையில் கண்ணியப்படுத்தப்படவேண்டியவர்கள். இவர்களில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களை கெளரவிப்பதும் தனிப்பட்ட முறையில் அவர்களது ஆளுமைகள், இயல்புகள், கற்பித்தல் முறைகள், நகைச்சுவைகள், போன்றவற்றை தற்போதைய பெருமக்களுக்கும் இளம் சந்ததிகளுக்கும் தெரியப்படுத்துவதுமே இக்கட்டுரைகள் நோக்கம் என்பதனைத் தாழ்மையுடன் குறிப்பிடுகின்றேன்.

/Zan


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All