இன்று உலகின் பல நாடுகள் மின் உற்பத்தியில் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கி நகர்கின்றன. “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கை திட்டத்தின் படி, 2030 ஆம் ஆண்டாகும் போது மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களிலிருந்து மொத்த மின்சார தேவையில் 70% ஐ பூர்த்தி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மீள்பிறப்பாக்க சக்தி உற்பத்தி குறுகிய கால இலக்குகளுடன் முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகரித்து வரும் மின்சக்தி தேவையை மீள்பிறப்பாக்க சக்தி மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் முதல் கட்டத்தின் கீழ், மன்னார் தீவில் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் பிரதான மின் கட்டமைப்புக்கு 30 மெகா வோட்டினை வழங்குகின்றது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், அந்த திறன் 100 மெகாவோட்டாக அதிகரிக்கப்படும். சுன்னாகம் மற்றும் பூனகரி பிரதேசங்களை மையப்படுத்தியும் காற்றாலைகள் நிர்மாணிக்கப்படும். சூரிய சக்தி மற்றும் இயற்கை வாயுவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மெகாவோட் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டங்களை செயல்படுத்தும் போது தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்படும் தடைகளை நீக்கி அரசு அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் கூறினார். ஏனைய நிறுவனங்களிடமிருந்து முன் ஒப்புதல் பெற்று முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பொறுப்பு மின்சக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டது.
முதலீட்டு சபையும் மின்சக்தி அமைச்சும் கூட்டாக முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு, திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சூரிய மின் உற்பத்தி பல திட்டங்களின் கீழ் இடம்பெறுகிறது. ஒரு லட்சம் சமுர்தி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, வீடுகளின் கூரைகளில் சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த நோக்கத்திற்காக ஒரு வீட்டிற்கு ரூ. 800,000 செலவை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
அமைச்சர் டலஸ் அலகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் சமபந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
Thanks to News.lk