Puttalam Online
uncategorized

புத்தளத்தில் புகழ்பெற்ற லெப்பை குடும்பம் – முஹல்லம்கள்

  • 24 December 2020
  • 734 views

இஸட். ஏ. ஸன்ஹிர்  (+94 777 48 49 12   zanhir@gmail.com)

ஆரம்ப காலத்தில் சமயம் சம்பந்தமான அனைத்து விடயங்களுக்கும் ஆலோசனை கூறுவதற்காக புத்தளத்தில் மூன்று பெரியார்கள் புத்தளம் மேற்கு, கிழக்கு, மத்தி ஆகிய மூன்று பகுதிகளில் கெளரவத்துடன் வாழ்ந்துவந்தனர். “முஹல்லம்” என்ற பட்டத்தைக் கொண்டிருந்த அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

புத்தளம் மேற்கில் முஹல்லமாக நாகூர் இப்ராஹிம் லெப்பை இருந்துவந்தார். கிழக்குப் பகுதிக்கு முஹல்லமாக சேகு சுலைமான் லெப்பை அவர்களும் மத்திய பகுதிக்கு முஹல்லமாக முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அவர்களும் விளங்கினர். இவர்களின் மூதாதையர் கேரளாவை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகின்றது.

புத்தளம் பள்ளிவாசல்களில் பணியாற்றிய கதீப்களும் முஅத்தின்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் லெப்பை குடும்பம், மோதீன் குடும்பம் என அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்த முஸ்லிம் வணிகர்கள் பள்ளிவாசல்களை அமைத்ததுடன் பள்ளி பராமரிப்பிலும் பரிபாலனத்திலும் பிரதான பங்கேற்றனர். அன்றைய முஸ்லிம் சமூகக் கட்டமைப்பில் லெப்பைமாருக்கு பிரதான அந்தஸ்து வழங்கப்பட்டு மதிக்கப்பட்டனர். பள்ளிவாசல்களில் லெப்பைமார் ஐவேளைத் தொழுகைகளை நடத்துவர். வெள்ளிக்கிழமைகளில்  ஜூம்ஆ பிரசங்கம் செய்வர். பள்ளிவாசல்களில் இடம்பெறும் வைபவங்களில் பிரதான ஓதல்களில் ஈடுபடுவர். ஊரின் நன்மை தீமையான அனைத்து நடவடிக்கைகளிலும் கலந்து பிரார்த்தித்து அவற்றை முன்னின்று நடத்திவைப்பர். திருமணங்களை நடத்துவோரும் லெப்பைமாரே.

கடிகாரம் பொருத்தப்படுமுன்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் – 1938 அளவில் (Side view)

புத்தளத்தில் மரைக்கார்மார்களுக்கு அடுத்ததாக லெப்பைகளுக்கான அந்தஸ்து கொடுக்கப்பட்டது. வைபவங்கள் நடைபெறும்போது சமூக அந்தஸ்துமிக்க இவ்வாறோனோருக்கு வட்டா, உணவுத்தட்டுக்கள் என்பன வைக்கப்படும்போது வேலைப்பாடுகள் அமைந்த துணியால் அவை போர்த்தப்பட்டு சபையில், அவர்களுக்கு முன்னால் அவற்றை வைப்பர். ‘வெள்ளை’ என்ற பெயரினால் இதனை அழைப்பர்.

சமூகத்தில் குற்றமிழைத்தோர் பள்ளிவாசல்களில் விசாரிக்கப்படுவர். மரைக்கார், மத்திசம் ஆகியோருக்கு சமமாக லெப்பைமாரும் இவ்விசாரணைகளில் கலந்துகொள்வர். அக்காலத்தில் பள்ளி நிருவாகத்தில் டிரஸ்ட்டியுடன் ‘மத்திச சபை’ என ஒன்றும் இருந்தது. புத்தளம் பெரியபள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னர் அப்பகுதியில் தர்ஹா ஒன்று இருந்தது. அதன் வெளிமண்டபத்தில் பல தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு பிரமுகர்கள் அமர்ந்து தத்தமது நடவடிக்கைகளில் ஈடுபடுவர். அதில் லெப்பைக்கும் ஒரு தூண் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட தூணில் மற்றவர் அமரமாட்டார். அமர்ந்தால் சர்ச்சை ஏற்படும். புத்தளம் தர்ஹா டிரெஸ்ட்டியையே இலங்கை அரசாங்கம் புத்தளம் ‘சோனகர் தலைவராக’  (Head Moor  Man)  தெரிவுசெய்தது. முதலாவது சோனகர் தலைவராக 01.02.1803 இல் அஹமது நெய்னாமரைக்கார் தெரிவுசெய்யப்பட்டார்.

கடிகாரம் பொருத்தப்படுமுன்னர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் – 1938 அளவில் (Front View)

கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் 1800 அளவில் சின்ன நெய்னா என்பவர் பள்ளி கதீபாக இருந்து கொத்பா ஓதி வந்துள்ளார். அப்போது புத்தளத்தில் பெரியபள்ளி கட்டப்படவில்லை. கடலோரத்தில் தர்ஹா ஒன்று இருந்தது. தற்போதைய மீலாத் மேடை மைதானத்தில் (பழைய கொத்வா பள்ளி மைதானம்) ஓர் பள்ளிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. அது ‘மீரா லெவ்வை பள்ளிவாசல்” என அழைக்கப்பட்டது.ஒரேயொரு ஜூம்ஆ மட்டுமே நடைபெற்றது. அதன் பின்னர் அல்லாப்பிச்சை லெப்பை, நாகூரான் லெப்பை, பேமரைக்கார் லெப்பை, முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை (நொண்டி லெப்பை), முஹம்மது முஹையத்தீன் (குப்பை ஹாஜியார்), சின்ன லெப்பை, லெப்பை நெய்னா லெப்பை, ஸகரிய்யா லெப்பை, மதீனா லெப்பை (தம்பி லெப்பை) ஆகியோர் பள்ளி கதீப்களாக கடமைபுரிந்துள்ளனர். மதீனா லெப்பை (தம்பி லெப்பை)யின் காலத்தில் பெரிய பள்ளி கட்டப்பட்டுவிட்டது.

தாஹிர் புரொக்டர் (குருநாகல்) அவர்களின் மகளின் திருமணத்தை நடத்தும் தம்பி லெவ்வை – மணமகன், உவைஸ் புரொக்டர் (கல் எலிய)  1970s

புத்தளம் மத்திய பகுதியில் முஹல்லமாக இருந்த முஹம்மது அப்துல்லாஹ் லெப்பையின் (நொண்டி லெப்பை) வழித்தோன்றல்களே, புத்தளம் பெரியபள்ளிவாசல் கதீப்களாக இருந்த ஸகரிய்யா லெப்பை, மதீனா லெப்பை (தம்பி லெப்பை) ஆகியோராவர். முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை புத்தளம் நீதிமன்றத்தில் ஒரு ஜுரியாகவும் இருந்துள்ளார். அவருக்கு வாரிசுரிமை தொடர்பான ஆலோசனைகளை இருவர் வழங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் (கெடும்பு ஆலிம்சா). இவர் ஒரு சிறந்த மார்க்க அறிஞர். குறிப்பாக முஸ்லிம் வாரிசுரிமை சட்டத்தில் தேர்ச்சிமிக்கவராக விளங்கினார். மற்றையவர் H.I. சாலிஹு (V.P.S). இவர் குடும்ப பரம்பரை விபரங்களில் பல தலைமுறைகள் பற்றிய சிறந்த அறிவுடையோராக விளங்கினார். அப்துல்லாஹ் லெப்பைக்குப் பின்னர்  முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் ஜுரியாகக் கடமையாற்றியுள்ளார்.

 H.I. சாலிஹு (V.P.S)

முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை (நொண்டி லெப்பை) 30.11.1928 இல் காலமானபின்னர் அவரின் புதல்வர் ஸகரிய்யா லெப்பை 21.12.1928 இல் கதீப்ஆக 30 ரூபா சம்பளத்துக்கு நியமனம் பெற்றார். புத்தளம் பெரியபள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னர் அங்கு தர்ஹா ஒன்று இருந்தது. அதனை உடைத்துக் கட்டவேண்டுமென அன்றைய நிருவாகக் கமிட்டி எடுத்த தீர்மானத்துக்கு இணங்க 27.08.1934 முதல் அதனை இடிக்கத்தொடங்கினர். உடைக்கப்பட்ட கட்டடப் பொருட்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 27.10.1934 இல் விற்கப்பட்டன. அதன் ஒரு பிரிவினை 73 ரூபாவுக்கு சேகு நெய்னா லெப்பை அவர்கள் கொள்வனவு செய்தார்கள்.

முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை அடுத்தடுத்து ஐந்து திருமணங்கள் புரிந்ததாக சொல்லப்படுகின்றது. அவரின் முதல் தாரத்துக்கு ஆண்கள் மூவர் பெண்கள் மூவர் என ஆறு பிள்ளைகள். ஆண்களில் முதலாமவரும் இறுதியானவருமே பெரியபள்ளி கதீப்களாக இருந்த  ஸகரிய்யா லெப்பையும், மதீனா லெப்பையும் ஆவர்.  மூத்த புதல்வர் ஸகரிய்யா லெப்பைக்கு ஓர் ஆண் வாரிசு. அவரின் பெயர் ரஹ்மத்துல்லாஹ். (சல்மாஸ். சட்டத்தரணி இப்திகாரின் மனைவியின் தகப்பன்) இவர் புத்தளத்தில் பல்வேறு கைத்தொழில் முயற்சிகளின் முன்னோடி என்பதுடன் ஆரம்பகாலத்தில் கப்பலில் தொழில் புரிய சென்றவருமாவார். இரண்டாவது மகனான சின்னவாப்பு லெப்பை என அழைக்கப்பட்ட  சேகு நெய்னா லெப்பை புடைவை வணிகராக தொழில்புரிந்தார். அவரின் கடை லெப்பை கடை என (முஸாதிக் ஸ்டோர்ஸ், சாதிகீன்) அழைக்கப்பட்டது. மூன்றாவது மகன் தம்பிலெவ்வைக்கு வாரிசுகள் இல்லை.

மதீனா லெப்பை

முஹம்மது அப்துல்லாஹ் லெப்பைக்கு மூன்று பெண்பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் சபியா உம்மா என்பவர் சிறுவயதிலேயே காலமானார். ஏனைய இருவரும் செய்னம்பு நாச்சியா (முஸல்பிட்டி), சம்சுன்னஹார் ஆகியோராவர். Cheap side ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தாயாரே சம்சுன்னஹார். முஹம்மது அப்துல்லாஹ் லெப்பையின் மருமகன் (சம்சுன்னஹாரின் கணவர்), லெப்பை நெய்னா லெப்பை ஆவார். இவரும் பெரியபள்ளி கதீபாகப் பணிபுரிந்தவர். அத்துடன் அவர் ஒரு சிந்தனைவாதியும் கூட. தனது தள்ளாத வயதிலும் கடுமையான நோயுற்ற நிலையிலும் அறபுத்தமிழ் கைஎழுத்துப் பணிகளில் ஈடுபட்டதை நான் சிறுவயதில் அவதானித்துள்ளேன். பல பெறுமதிமிக்க புத்தகங்கள் அவரின் சேகரிப்பில் இருந்தன. லெப்பை நெய்னா லெப்பையின் தம்பி சாகுல் ஹமீது லெப்பை.

பைரூஸ் மரக்காளை சாமுநெய்னா லெப்பை அவர்கள் முஹம்மது அப்துல்லாஹ் லெப்பையின் மற்றுமொரு மனைவியின் மகனாவார். பைஹகீ அவர்களின் தந்தை அஹமது லெப்பையும் அவ்வாறான ஒருவரே.

லெப்பை நெய்னா லெப்பையின் தம்பி, சாகுல் ஹமீது லெப்பை. இவருக்கு மூன்று ஆண்குழந்தைகள். அவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே காலம்சென்றுவிட்டனர். முஹம்மது அப்துல்லாஹ் லெப்பை, சேகு முஹய்யதீன் லெப்பை, குதுபுத்தீன் லெப்பை ஆகிய மூன்று ஆண் குழந்தைகளுள் இளையவர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றில் உயிரிழந்தார். இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் வெடிக்காதிருந்த ஒரு குண்டை தனது சிறுவயதில் கண்டெடுத்து விளையாடிக்கொண்டிருக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பெண்குழந்தைகள். அவர்களுள் மூத்தவர் யாகூத் உம்மா. அவரின் மகனே S.L. அபூஹனீபா (சுலைமான் லெப்பை அபூஹனீபா) ஆசிரியராவார்.

புத்தளம் கிழக்குப் பகுதி முஹல்லமாக இருந்த சேகு சுலைமான் லெப்பை அவர்களின் வாரிசுகளான கண்ணுவாப்பு லெப்பை, முதலியார் லெப்பை  ஆகியோர் லெப்பை தொழிலை செய்துவந்தனர். கண்ணுவாப்பு லெப்பை அவர்களுக்கு 08 வாரிசுகள். 4 ஆண்கள். 4 பெண்கள். ஆண்பிள்ளையொருவர் சிறு வயதினிலே காலமாகிவிட்டார். காதி நீதிமன்றத்தில் காசிம் புரக்டர் அவர்கள் காதி நீதவானாக இருந்த காலப்பகுதியில் கண்ணுவாப்பு லெப்பை ஐுரியாக செயற்பட்டவர்.

இவரின் பிள்ளைகள் அல்ஹாஐ் அப்துல் ஹமீத் லெப்பை (மெளலவி), உம்மு நசிதா உம்மா, ராபியத்துல் அதவியா, அல்ஹாஐ் முகம்மது ஹுசைன்,யூசுப் லெப்பை (ஆசிரியர், நீர்கொழும்பு, போருத்தொட்ட ), ஹுதைலா விவி , சித்தி சாபிறா ஆகியோராவர். அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அல்ஹாஜ் K.V.L. அப்துல் ஹமீது பஹ்ஜி அவர்கள் புத்தளம் பாத்திமா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்ததுடன் பெரிய பள்ளியில் ஜும்ஆ கொத்பாக்கள் ஓதுபவர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் புத்தளத்தில் நவீன பாணியில் கொத்பா ஓதிய ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமண வைபவம் ஒன்றை நடத்திவைக்கும் அல்ஹாஜ் மெளலவி K.V.L. அப்துல் ஹமீது பஹ்ஜி

புத்தளம் ஆனைமடு பாதையில் கொட்டுக்கட்சியில் சபாநாயகர் H.S. இஸ்மாயில் அவர்களினால் உருவாக்கப்பட்ட சுமார் 700 ஏக்கர் குடியேற்ற நிலத்தில் புத்தளத்தை சேர்ந்த 35 குடும்பங்கள் 1948 அளவில் குடியேற்றப்பட்டன. அதில் முதலியார் லெப்பை குடும்பமும் ஒன்று. அங்கு அவர்கள் பல பிரச்சினைககளுக்கு முகம்கொடுக்கவேண்டியேற்பட்டதனால் ஓரிரு குடும்பங்களைத் தவிர ஏனய குடும்பங்கள் அனைத்தும் திரும்பிவிட்டன. முதலியார் லெப்பை குடும்பம் உட்பட ஓரிரு குடும்பங்களே அங்கு எஞ்சின. புத்தளம் இனக்கலவரத்தின் பின் முதலியார் லெப்பை தனது குடும்பத்துடன் மீண்டும் புத்தளம் வந்தபோதும் இன்றும் அவருடைய சந்ததியினர் அங்கு வாழ்கின்றனர். முதலியார் லெப்பையின் ஒரு மகனே, சிங்கள மொழிமூலம் பயிற்றப்பட்ட ஆசிரியர் ஹாஜா சஹாப்தீன் ஆவார்.

முதலியார் லெப்பை தனது பாரியாருடன்

நுரைச்சோலை, பூலாச்சேனையில் முஹம்மது இப்ராஹிம் லெப்பை (பிறப்பு 1898) என்பவர் லெப்பையாக இருந்தார். 1950, 60 களில் நுரைச்சோலை பூலாச்சேனை கிராமங்களுக்கு ஒரேயொரு ஜூம்ஆவே நடைபெறும். அங்கு ஜூம்ஆ கொத்பா ஓதுவதுடன் ஏனைய சமய கிரியைகளிலும் முன்னின்று நடத்துபவர் முஹம்மது இப்ராஹிம் லெப்பையே. அவரின் மகன் செய்னுல் ஆப்தீன் (கட்டுரை ஆசிரியரின் தந்தை) இக்கிராமத்தின் முதலாவது ஆசிரியரும் அதிபரும் ஆவார்.

நுரைச்சோலை பள்ளிவாசல் – 1960s

நிற்போர் இடமிருந்து வலம் இரண்டாவது  கிராம விதனை அபூதாஹிர் (அப்பச்சா ஆசிரியர் மாமா – கோட் உடுத்தியிருப்பவர்), மூன்றாவது முஹம்மது இப்ராஹிம் லெப்பை (பள்ளி லெப்பை, கட்டுரை ஆசிரியரின் தந்தை வழி அப்பா)

காலப்போக்கில் புத்தளத்தில் பரம்பரை லெப்பை குடும்பக் கட்டமைப்பும் தொழிலும் படிப்படியாக வழக்கொழிந்தது. தமது குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகளுக்கு அவர்களின் பெயருடன் ,லெப்பை என்று இணைத்து விடும் பெயர் நடைமுறைகளும் இல்லாமலாகிவிட்டது. எனினும் இப்பரம்பரையினர் செய்த சேவையினை எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடமுடியாது.

Ref.

1. புத்தளம் முஹையதீன் தர்ஹா,எம்.ஏ. சாலிஹு – 1946
2. புத்தளம் வரலாறும் மரபுகளும், ஏ.என்.எம். ஷாஜஹான் – 1992
3. புத்தளம் முஹியித்தீன் ஜும்ஆ மஸ்ஜித் வைர விழா மலர், ஏ.என்.எம். ஷாஜஹான்

(தகவல்கள், புகைப்படங்கள் தந்துதவிய அனைவருக்கும் நன்றிகள்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All