Puttalam Online
uncategorized

ஜனாஸாவுக்கு மலரும் மணமும் சுமந்த இரு செல்லங்கள்

  • 27 December 2020
  • 678 views

(அபூஹனீபா நவ்சாத்)

1975 – 1980 இல் இருந்து நம் இளம் தலைமுறை தவிர, புத்தளம் நகர மக்கள் அனைவருக்கும் அறிமுகமான இரு செல்லங்கள் பற்றி மண்ணின் மைந்தர்களில் எழுத்தக்கிடைத்தமையை பாக்கியமாகக் கருதுகிறேன். நான் புத்தளம் கண்காணிக்குளம் பள்ளியிலும்  IBM மண்டபத்திலும் (இபுனு பதூதா மஹால்)  பணியாற்றிய காலப்பகுதியில் அங்கு மேலதிகாரியாக இருந்த சட்டத்தரணி இப்திகார் முஹம்மத் அவர்கள் இதனை எழுதுமாறு ஆலோசனை வழங்கினார். மர்ஹூம் சபருல்லாஹ்கான், நஜிமுத்தீன் ஆகியோரே அவர்களாவர்.

சபருல்லாஹ்கான்

மர்ஹூம் சபருல்லாஹ்கான், நஜிமுத்தீன் ஆகிய இருவரும் புத்தளம் நகரில் இடம்பெறும் எந்த ஒரு ஜனாஸாவுக்கும், அந்த வீடுகள் எங்கிருந்தாலும் தவறாது சமூகமளிப்பார்கள். அந்த வீடுகளுக்கு செல்லும்போது அழகிய மலர்கொத்துக்களை எடுத்துச் செல்வார்கள். ஜனாஸா, வீட்டிலிருந்து பள்ளிக்கு அடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்போது அங்கிருந்து பன்னீர் செம்புகளையும் தாமாகவே எடுத்து, ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வார்கள். அடக்கஸ்தலத்தில் இறுதிக்கிரியைகள் முடியும் வரை காத்திருந்து, இறுதிக்கட்டத்தில் ஜனாஸாவை அடக்கம் செய்த மண் நிரப்பிய கபுரின் மத்தியில், தாம் கொண்டுவந்த மலர் கொத்துக்கள் நடப்படுவதை கண்ணாரக் கண்டு, அந்த ஜனாஸாவுக்கு தாம் செய்த சங்கையை எண்ணி, உளத் திருப்தியுடன் திரும்புவர். அவர்களில் ஒருவர் மர்ஹூம் சபருல்லாஹ்கான். மற்றையவர் நோயுற்ற நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் நஜிமுத்தீன்.

 

நஜிமுத்தீன்

இவ்விருவரும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களல்லர். நடுத்தரத்தையும் விட சற்று உயர்வான குடும்பங்களின் குமாரர்கள். வெவ்வேறு குடும்பத்தவர். பிறப்பிலேயே சற்று மனவளர்ச்சி குன்றி இருந்தபோதும் தமது சொந்தவேளைகளை தாங்களாகவே செய்துகொள்ளக்கூடிய ஆற்றல்மிக்கோர். 1965 இல் நாங்கள்  சின்ன ஸாஹிறாவில் கல்வி கற்கும்போது இவர்களிருவரும் பாடசாலைக்கு வந்துபோவதைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சிறிது காலத்திலேயே பாடசாலையில் இருந்து விலகிவிட்டனர். காலப்போக்கில் தமது வாழ்வில் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக்கொண்ட புனித காரியம்தான் மலர்க்கொத்து, பன்னீர்ச்செம்பு கொண்டு செல்லுதல்.

நல்லடக்கத்தின் பின்னர் அந்த ஜனாஸாவின் உறவினர்கள் கொடுக்கும் அன்பளிப்புக்களை சந்தோசத்துடன் பெற்றுக்கொள்வர். அதிலும் குறிப்பாக சபருல்லாகானுக்கு நோட்டுக்களை விட சில்லறைகளில்தான் பிரியம் அதிகம். சிலசமயம் இவர்கள் இருவரும் முரண்பட்டுக்கொள்வதும் உண்டு.

சிலவருடங்களுக்கு முன்னர் சபருல்லாஹ்கான் அவர்கள் சிலாபத்தில் வைத்து புகையிரத்தில் மோதுண்டு இவ்வுலக வாழ்க்கையை நிறைவுசெய்துகொண்டார். அதில் ஒரு பெரிய ஆச்சரியம் . பொதுவாக புகையிரத்தில் மோதுண்டோரின் உடல் உருக்குலைந்துவிடும். சிறிது அடிபட்டாலும் பெரிய காயம் ஏற்படும். ஆனால் அன்னாரது ஜனாஸா பூரணமாக, மலர்ந்த முகத்துடன் காணப்பட்டதை அனைவரும் கண்டு வியப்படைந்தனர். ‘காரண காரியங்களை வல்ல ரப்பே நன்கறிந்தவன்’. ஜனாஸாவுக்கு மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அவர்கள், அவருக்காக உளப்பூர்வமாக இறைஞ்சியதை ஜனாஸாவுக்கு சென்றபோது காணக்கூடியதாக இருந்தது. அந்த ரஹ்மான், சபருல்லாஹ்கான் அவர்களுடைய பிழைபொறுத்து ஆகிறத்தில் (மறுமையில்) சங்கை செய்வானாக.

மற்றையவர் நஜிமுத்தீன். இவர் தற்போது சுகயீனமுற்று வீட்டில் இருக்கிறார். எவருக்கும் எந்த தொந்தரவும் இல்லாதவர். வெள்ளை மனம். எல்லோருக்கும் தம்மாலான உதவிகளைசெய்து கொடுப்பவர். அன்னாரின் சிறுபராயத்திலிருந்தே நூற்றுக்கணக்கான நம்முன்னோரின் ஜனாஸாக்களுக்கு, தனது மெலிந்த நலிந்த கரங்களினால் மலர் கொத்தும், பன்னீர் போத்தலும் ஏந்தியவர்.

இந்த நேரத்தில் நாம் போய் அவரை பார்த்து ஆறுதல் கூறுவது நல் அமல்களில் (காரியம்) ஒன்றாகும்.

ஜனாப் அவர்கள்

இவரும் புத்தளத்தில் மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். மேற்கூறிய இருவரையும் விட இவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் (Autism). அமைதியும் சாந்தமும் அமையப்பெற்றவர். என்றும் சிரித்த முகம். எங்கள் சிறு பராயத்தில் ஜனாப் அவர்கள் எங்கள் ஏரியாவுக்கு வந்து, எல்லா வீடுகளுக்கும் சமுகமளித்து, சிறிது நேரம் இருந்து, நகைச்சுவை பண்ணிவிட்டு போவார்.

அவரைக் கண்டால் சிறார்களுக்கு குதூகலம். நாம் அவரை உட்காரவைத்து  அனைவரும் அவரை சூழ நின்று அவரின் செயல்களை பார்த்து மகிழ்வோம். சில ஒலிகளை எழுப்புவார். அவரின் எண்ணங்களில் தோன்றுபவற்றை எமக்கு பாடிக்காட்டுவார்.  அடிக்கடி முகத்தை தடவிக்கொள்வார்.

சிறுவர்கள் அனைவரும் அவர்மீது அன்புவைத்திருந்தோம். பூப்போல மென்மையானவர். அவருக்கு கோபம் வரும்போது பார்ப்பதற்கு சுவாரஷ்யமான இருக்கும். அவரை யாரும் கடிந்துகொண்டதே கிடையாது. அதேபோன்று அவரும் எவரையும் எந்தவிதப் பாதிப்புகளுக்கும் உள்ளாக்கவில்லை.

அன்னாரும்  சில வருடங்களுக்கு முன்னதாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள்.

சபருல்லாஹ்கான் அவர்களுக்கும் ஜனாப் அவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் புகும் பாக்கியத்தை நல்குவானாகவும். ஆமீன். அத்தோடு சுகவீனமுற்றிருக்கும் நஜிமுத்தீன் அவர்களுக்காகவும் பிரார்த்திப்போமாக.

/Zan

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All