(அபூஹனீபா நவ்சாத்)
இலங்கையில் கொரோனா என்ற நோய் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் ஆனாலும் எமது அரசாங்கத்தின் கொரோனா எதிர்ப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் இந்நாட்டில் வாழும் “சமுதாயமொன்றின்” பூரணமான எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. தோளோடு தோள் சேர்த்து கால்களையும் இணைத்து வணங்கிய இறைவழிபாடு ஒன்றரை மீட்டர் இடைவெளியாகிவிட்டது. வணக்க வழிபாடுகளுக்கான மக்கள் தொகையும் இருபத்தியைந்து ஆகிவிட்டது.
அரசாங்கத்தின் கட்டளைக்கமைய ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகிகளும் தாம் நிர்வாகம் செய்யும் பள்ளிவாயிலகளுக்கு, நம்மை ஆளுபவர்களில் இருந்து தொந்தரவுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக இயன்றவரை நெகிழ்வுத்தன்மையோடும் பள்ளி நிருவாகத்தில் கண்டிப்புடனும் நடந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது வந்து தொழுதுவிட்டுப்போகும் மஹல்லாவாசிகளைவிட பள்ளிகளை நிருவாகம் செய்யும் டிரஸ்டிமாருக்கு தாம் நிருவகிக்கும் பள்ளிவாசல்களைப் பற்றிய சிந்தனை பலமடங்கு அதிகம். எந்தநேரமும் பிரச்சினை ஒன்று வரும் போது, அரசாங்கத்திற்கு நம் பள்ளிவாசல்களை நிரந்தரமாகவோ தற்காலிகமாகவோ பூட்டிவைக்கக்கூடிய அதிகாரம் உண்டு.
இலங்கையில் சில இடங்களில் உள்ள பள்ளிவாகல்களில் ஒரே தலைமையின் கீழ் நின்று அரசாங்க, கலாசார அமைச்சின் வக்பு சபையின் உத்தரவுகளை ஒருமித்து, ஊர்மக்கள் அனைவரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட ஊர்கள் பாக்கியம் பெற்றவை. மற்ற அனைத்து ஊர்களிளுமுள்ள பள்ளிவாசல்கள் அந்த அந்த நிர்வாகிகளின் உத்தரவுக்கமைய இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு பள்ளிவாசல் நடைமுறைகளை அமைதியாக சகிப்புத்தண்மையுடன் பேணும் நிறைய ஊர்கள் நம் நாட்டில் உள்ளன.
ஓவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் ஓவ்வொரு சட்டதிட்டம் விதிமுறைகள். ஒரு மஸ்ஜித் மிகவும் கண்டிப்புடன் விதிமுறைகளைப் பின்பற்றும் போது அதற்கு மிகஅருகிலுள்ள மற்றுமொரு பள்ளிவாசல் எவ்வித கண்டிப்பும் இன்றி அதாவது முஸல்லா,முகக்கவசம் எதையுமே கண்டுகொள்ளாமல் தம் பள்ளிக்கு வரும் மஹல்லாவாசிகளை அரவணைத்துக்கொள்கின்றன. இப்படிப்பட்ட பள்ளிவாயில்களும்; நம்நாட்டில் தற்போதையகொரோனா நிலையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மேற்கூறியபடி நடந்துகொள்ளும் நகரங்களில் நமது புத்தளம் பிரதானமானதாகும். எம் ஊருக்கு இறைவன் அளித்தவரம் ‘தைரியம்’ இலங்கையின் ஏனைய முஸ்லிம் ஊர்களுடன் ஒப்பிடும் போது நமக்கு இது இன்று அதிகமாகவே உள்ளது என்பதனை இந்த மண்ணில் பிறந்த அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.
ஆனாலும் வாசக அன்பர்கள் இப்படி எழுதியதை தவறாக விளங்கிக்கொள்ளக்கூடாது. … Dont care .. என்று ஒன்று இருக்கிறதே. (மை கார். மை பெட்ரோல்) இதுவும் இலங்கையில் உள்ள அணைத்து நகர மக்களையும்விட நமது புத்தளம் மக்களுக்கு கொஞ்சம் அதிகம்தான்.
ஆக, ஒரு பள்ளிவாசலை நிருவாகிகள் ‘ஸ்ட்ரிக்’ பண்ணினால் பக்கத்தில் உள்ள ‘ஸ்ட்ரிக்’ இல்லாத, எல்லாம் ‘ஓபன்’ ஆன பள்ளியில் தொழுதுவிட்டு ‘ஸ்ட்ரிக்’ பண்ணிய பள்ளிவாசல் நிருவாகிகளுடன் மனஸ்தாபப்படுவது என்பது, தொழுகைக்கு வரும் நம் மண்ணில் பிறந்த அனைவருடைய மிகவும் நியாயமான…. உடம்புக்கும் மனசுக்கும் அலட்டிக்கொள்ளாத எண்ணம். அதேவேளை பள்ளிவாசல் நிருவாகிகளின் விடயத்தில் அதற்குத் தகுதியானவர்கள்தான் தெரிவுசெய்யப்படல்வேண்டும் என்று மார்க்கம் சொல்வதையும் இவ்விடயத்தில்தான் குறிப்பிடவேண்டியுள்ளது.
புத்தளத்தின் ஒற்றுமை என்பது H.S. இஸ்மாயில் ஹாஜியாரை ஏகமானதாகப் பாராளுமன்றத்துக்கு அக்கால மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியபோது நூற்றுக்கு நூறு இருந்தது. அது புத்தளத்தின் பொற்காலம். காலப்போக்கில் அது குறைந்து, குறைந்து பலவருடங்கள் பாராளுமன்ற உறுப்பினர் நம் ஊருக்குக் கிடைக்காத அளவு மாறிவிட்டது.
தற்போதோ நாம் ஏற்கனவே போட்டுவிட்ட, சன்மார்க்கத்தின் ஒற்றுமை என்னும் கயிறு, சில அடி தூரத்தில் புத்தளம் வாழ் மக்கள் அனைவருக்கும் கண்ணுக்கு எட்டும் தொலைவில் கீழே கிடப்பது இம்மண்ணில் பிறந்த அனைவரும் ஒற்றுமைப்பட்டே ஆகவேண்டும் என்பதன் இறுதி சந்தர்ப்பமாகும்.
ஏனெனில் தற்போது கொரோனோவால் பள்ளிநிர்வாகிகள் மஹல்லாவாசிகள் அணுகுமுறைகளில் ஏற்கனவே நம்மிடம்இருந்த கொஞ்ச நஞ்ச ஒற்றுமையும் இல்லாமல் போய்கொண்டிருப்பதை கவலையோடு குறிப்பிடுகிறேன்.
இக்கட்டத்தில் 40 வருடங்களுக்கு முன் ‘நாணலைப் போல வளைந்த நிலையில் நம் மண்ணுக்கு வந்து இன்று நம்முடன் உறவினர்களாகவும் பிண்ணிப்பிணைந்துவிட்ட பக்கத்து ஊர் சகோதரர்களின் ஒருமித்த கடின உழைப்பையும் இன்று தேக்கு மரங்கள் போல அவர்கள் அனைவரும் நிமிர்ந்து நிற்பதற்கு, அந்த மக்கள் அனைவரதும் ஒருமித்த ஒற்றுமையே மூலகாரணம் என்பதையும் குறிப்பிடவேண்டியுள்ளது.
‘மனிதர்கள்அனைவரும் பலவீனமான நிலையில் படைக்கப்பட்டுள்ளார்கள்’. ஆனாலும் அந்த சகோதரர்கள் அனைவரதும் முதல் பலம் அவர்களது ஒற்றுமையே என்பதை மீண்டும் மீண்டும் நம் மண்ணுக்கு ஞாபகம் செய்கிறேன்.
இறுதியாக எமது மண்ணான புத்தளம் மண்ணில் பிறந்த நாமும் இங்கு வாழ்கின்ற அனைவரும் தற்போது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் விழுந்துள்ள ஒற்றுமை எனும் கயிற்றை மிக அவசரமாகவும் அவசியமாகவும் ஒருமித்து பிடித்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
இதை தவறும் பட்சத்தில் அக்கயிறு நமது கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு போவதற்குரிய காலம் வெகுதொலைவில் இல்லை. வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக.
/Zan
Share the post "பள்ளிவாசல் நிர்வாகிகள் “”கொரோனா”” மஹல்லாவாசிகள் – “ஒற்றுமை”"