தனது எண்ணங்களில் தோன்றிய கவிதையோ, வெண்பாவோ, செய்யுளோ, உரைநடை இலக்கியமோ, அன்றி கட்டுரைகளாகட்டும்’ எழுதத் தொடங்கிவிட்டால் எழுதிமுடியும் வரை எழுதுகோலுக்கு ஓய்வில்லை. வெகுசொற்பவேளையில் அந்த ஆக்கம் தமிழ்த்தாயின் ‘செம்மொழி’ மணம் கமழ தயாராகிவிடும். அத்தகைய பேராற்றல்மிக்க, புத்தளம் நகரில் தமிழ் புலமை வரிசையில் தலைவர்களில் ஒருவராக வீற்றிருந்த ‘அபூசாலிஹ் சேர்’ என்று மக்களால் அழைக்கப்படும் மர்ஹும் A.M.I. நெய்னா மரைக்கார் அவர்களை ‘புத்தளம் ஒன்லைனின் மண்ணின் மைந்தர்களில்’ கௌரவிக்கக்கிடைத்திருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
அன்னார் 1922 ஜுலை 7ம் திகதி புத்தளத்தின் நடுத்தர குடும்பம் ஒன்றில் அப்துல் மஜீத் – சேகுமீரா நாச்சியா தம்பதிகளுக்கு மூத்தமகனாகப் பிறந்தார்கள். புத்தளம் ‘கால ஸ்கூலில்’ ஆரம்பக் கல்வியைக் கற்று, உயர்கல்வியை கொழும்பு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்தார்கள். எனினும் வறுமை காரணமாக பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் போயிற்று. எனவே ஊர் திரும்பி தொழில் செய்து கொண்டே கல்வியைத் தொடர்ந்தார்கள். H.S.C. பரீட்சையில் திறமை சித்தியடைந்திருந்த அவர்கள் மீண்டும் வெள்ளத்தைக்கு சென்று , தமிழின் உயர் நிலையான ‘பண்டிதர் பட்டம்’ பெரும் நோக்குடன் கல்வியைத் தொடர்ந்தார்கள். அப்போதும்கூட தனது வீட்டு வறுமை நிலை அக்கல்வியையும் தொடர இடமளிக்கவில்லை. இறுதியில் புனித ஆசிரியர் தொழிலில் பிரவேசித்தார்கள்.
அபூசாலிப் சேரின் முதல் நியமனம் முன்னக்குளம் வித்தியாலயமாகும். அதன்பின் அழுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் மொழியில் விஷேட பயிற்சி பெற்றார்கள். பின்னர் ஆசிரியராக கல்பிட்டி அல் அக்ஸா மகாவித்தியாலயத்தில் கடமையேற்றார்கள். தொடர்ந்து அப்பாடசாலையின் அதிபர் பதவியையும் பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக பாடசாலையை நடத்தினார்கள். 22.11.46 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு 23.11.1960 இல் அல் அக்ஸா எனப்பெயரிடப்பட்டது. 1960, 70 களில் இப்பாடசாலை புத்தளம் பிரதேசத்தில் புகழ்பெற்று விளங்கியமை குறிப்பிடத்தக்கது. 01.01.1964 இல் அல் அக்ஸாவில் தனது பணியைத் தொடங்கிய அன்னார் 28.02.1973 வரை அங்கு பணியாற்றினார்கள்.
A.M.I. நெய்னாமரைக்கார் அவர்கள் புத்தளம் சாஹிறாவிலும் சில வருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார்கள். பாலாவி, இலவன்குளம் பாடசாலைகளிலும் அவர்கள் பணி தொடர்ந்தது. 1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஓய்வு பெற்றார்கள்.
2. ரஸீன் மஹ்ரூப் (ஆசிரியர்) 3. A.M.I. நெய்னாமரைக்கார் (ஆசிரியர்) 4. ஜேம்ஸ் (அதிபர்)
புத்தளம் ஸாஹிராவில் அன்னார் அதிபராக இருந்த காலகட்டத்தில் பெரிய வகுப்பு மாணவர்களாக இருந்த நாங்கள் அவர்களிடம் தமிழ்ப்பாடம் கற்றோம். தனக்கே உரிய ஸ்டைலில் கண்ணாடியை சரிசெய்து, புருவத்தை உயர்த்தியவர்களாக, ‘சங்ககாலம்’ என்று தலைப்பிடுங்கள் என்பார்கள். பின் சொற்பநேரம் அவர்கள் கற்பித்துக் கொண்டு இருக்கும் போதே தமிழை ஆர்வத்துடன் கற்கும் மாணவர்கள் சிலர் சங்க காலத்துக்கே போய்விடுவார்கள். என்னோடு கற்ற தமிழ் மாணவர்களின் கூற்று இது.
அம்மாணவர்களது மனக்கண்ணில் சோழன் கரிகாலனும் சேரன் செங்குட்டுவனும் உலா வருவார்களாம். பாண்டியனின் மதுரையை எரித்த கண்ணகியின் காவியம் கண்முன்னே நிற்குமாம். உண்மையிலேயே கற்பித்தலில் அப்படி ஒரு வல்லமை அவர்களுக்கு உண்டு. அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் சித்தியடையாமல் இருந்ததில்லை.
கட்டுரை எழுதுவது எப்படி என்று முறையாக இவர்களிடம்தான் கற்றுக்கொண்டோம். மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் தரவரிசையில் பாராட்டப்படும். இவர்களது கற்பித்தல் முறையில் தண்டனைகள் குறைவு. ஆனால் கற்பிக்கும்போது அவர் எதை போதிக்கிறார் என்பதில் அனைத்து மாணவர்களும் அவதானமாக இருக்கவேண்டும். தவறும் பட்சத்தில் தண்டனை பெற நேரிடும்.
நெற்பயிர்ச் செய்கையில் மிகுந்த அனுபவசாலி. இலவன்குளத்தில் இவர்களுக்கு ஒரு வயல் இருந்தது. குறைந்த செலவில் நாட்டுப் பசளைகளை இட்டு அறுவடையில் இலாபம் கண்ட விவசாயி. மயிலங்குளத்தில் உருளைக்கிழங்கு பயிற்செய்கையும் செய்தார்கள். ஸாஹிறாவில் அதிபராக இருந்த காலத்தில் மதிப்புக்குரிய ஹாலித் சேரோடு இணைந்து பாடசாலையின் பின் வளவில் நெற்பயிர் செய்கை மேற்கொண்டார்கள்.
ஸாஹிறாவில் நெற்பயிர்ச் செய்கை
இவர்களது இளம் வயதில் திறமையான மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்கள். அக்கால ஆசிரியர்கள் பலர் ஒன்றாக ஓய்வு காலங்களில் ஆற்றுக்குப்போய் தங்குவார்களாம். அவ்வேளை மல்யுத்தம் ( ரெஸ்லின்) புரிவதும் உண்டு. அதில் அபூசாலிஹ் சேரை யாராலும் வெல்ல முடியாதாம் என்று அவரது நண்பரான எனது தந்தையார் வாயிலாக அறிந்தேன். அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் ரெஸ்லிங்கில் இவர்தான் ஹீரோ. மேலும் தத்துவ சாஸ்திரத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.
அக்காலத்தில் புத்தளத்தில், மனோ தத்துவதோடு “சாமுத்திரிகா லட்சணம்” என்று கூறப்படும் அல்லாஹ்வின் படைப்பில் …ஒரு மனிதனின் முக, அங்க அடையாளங்களையும் அவனின் பேச்சு நடை உடையையும் வைத்து அம்மனிதனின் குண இயல்புகளை துல்லியமாக அறிந்து கொள்ளும் கலையை அறிந்த வெகுசிலரில் அதிபர் A.M.I. நைனாமரைக்காரும் ஒருவராவார். எனது தந்தையாரான அதிபர் A .K. அபூ ஹனிபா அவர்களுக்கும் இக்கலையை பற்றிய ஞானம் இருந்தது.
நம் நாட்டில் தமிழ் பாஷையில் பாண்டித்தியம் பெற்றிருந்த இஸ்லாமிய அறிஞர்கள் கதைக்கும் போது பெரும்பாலும் தமது ஊர் சார்ந்த பேச்சு வழக்கில்தான் உரையாடுவார்கள். ஆனால் இந்த கட்டுரையின் நாயகனோ செந்தமிழில் அவர்களுக்கிருந்த ‘காதலின்’ காரணமாக சாதாரணமாக உரையாடும் போதும் தூய தமிழில்தான் கதைப்பார்கள்.
அவர்களது 11ஆவது குழந்தை பிறந்த போது, எட்டாவது மகன் தந்தையிடம் ஓடிவந்து ‘வாப்பா தம்பிக்கு என்ன பெயர்’ என்று கேட்டிருக்கின்றான். அதற்கு அதிபர் அவர்கள் அந்த மகனிடம் “தற்காலிகமாக, இப்னு மர்வான் என்று வைக்கப்பட்டுள்ளது”. என்று தூய தமிழில் கூறியுள்ளார். குழந்தையைப் பார்க்க வீட்டுக்கு வந்த ஒருவர், அந்தப் பாலகனிடம், குழந்தையின் பெயரைக் கேட்டதற்கு, தற்காலிகமாக, இப்னு மர்வான் என்பதனை, “தக்காளி மாமா இப்னு மர்வான்” என்று கூறியுள்ளான். அவனது மழலையை, அதிபர் உட்பட வீட்டில் உள்ள அனைவரும் ரசித்து சிரித்திருக்கிறார்கள். இச்சம்பவத்தை அதிபரது பத்தாவது மகனும் எனது உற்ற நண்பர்களில் ஒருவருமான மர்ஹும் அஜ்மல் றோஷன் வாயிலாக அறிந்தேன்.
அரசியலிலும் இவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் ‘எப்படிப்பட்ட தலைவரையும் எதிர்க்கும் உரிமை ஜனநாயக அரசியலுக்கு உண்டு. அந்த வகையில் இலங்கையின் நிதி அமைச்சராக, ரூபா நோட்டுக்களில் கையெழுத்திட்ட நமது மண்ணுக்குரியவரான மாண்புமிகு மர்ஹும் M.H.M. நெய்னா மரைக்காரை புத்தளம் அரசியலின் எதிர்க்களத்திலிருந்து எதிர்த்து, ‘ஆட்டப்பா கடை’ சந்தியில் அமைந்த (வெட்டுக்குளம் வீதி) S.L.F.P. மேடையில் “நீலமேகம்” என்று மாறுவேடம் அணிந்து முழங்கினார்.
மறைந்த ஜனாதிபதி பிரேமதாச அவர்களிடம் இருந்து பிரிந்த, இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்களான காமினியும், லலித்தும், பிரேமசந்திரவும் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அக்கட்சியின் சார்பில் புத்தளம் மாகாண சபைக்கு போட்டியிட்ட மர்ஹும் இஸ்மாயில் ஹாஜியாருக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்கள். இஸ்மாயில் ஹாஜியார் அவர்கள் அத்தேர்தலில் வெற்றிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நான் நெருங்கிப்பழகிய ஆசிரியர்களுள் அன்னாரும் ஒருவர். “நவுசாத் நீயும் எனக்கு ஒரு மகன்தான்’ என்று கூறுவார்கள். எதிலும் வெளிப்படைத் தன்மை உள்ளவர். “மனிதன் தவறு செய்யக்கூடியவன்.அந்த ரஹ்மான் மன்னிப்போனாக உள்ளான்” என அடிக்கடி கூறுபவர்களாக இருந்தார்கள். எத்தனை பிரச்சினைகள் வந்த போதிலும் தனது குடும்பத்தில் இறுதிவரை ஒன்றி வாழ்ந்த பெருந்தகை அவர்.
எனது உடன் பிறவா சகோதரிகளான அன்னாரின் மூத்தமகள் மும்தாஜ் அவர்களும் இளைய மகள் மஹ்ஜபீன் அவர்களும் தங்கள் தந்தையாரைப் பற்றி ஒரு சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, ஜப்பான்காரன் புத்தளத்துக்கு குண்டு போடப் போகிறான் என்ற பரபரப்பில் ஊரில் இருந்தோர் தமது உடமைகளுடன் ,சேத்துப் பள்ளம் தோட்டத்துக்கு (இஜ்திமா மைதானம்) ஓடினார்களாம். அந்த சமயம் தமது தந்தையார் தனது புத்தகங்களை அடுக்கி வைத்திருந்த “ரங்கு” பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு அவ்விடத்துக்குப் போய் அங்கு தானும் கற்று, தன்னோடு ஒத்த மற்ற மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்களாம். அதைப்பார்த்த அக்கால முதியவர்கள் தங்கள் தந்தையாரை “விளையும் பயிரை முளையிலே தெரியும் ” என்று பாராட்டினார்களாம்.
பாலாவி விமானநிலையத்தில் அந்த நாளில் “வெள்ளைக்காரர்” ஆமி ( ஆங்கிலேயர் ) இருந்த போது தங்கள் தந்தை அவர்களிடம் போய் ஆங்கிலம் கற்றதோடு அங்கு ஆமிக்கும் மக்களுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளாராகவும் இருந்தார்களாம். “எத்தகைய பிரச்சினை வந்த போதும் தமது தந்தை தமது இரவு உணவை தம் அனைவருடனும் சேர்ந்து உண்டு தம்முடனே உறங்குவார்கள்”, என்று கூறியதுடன், “எங்கள் தந்தைக்கு மகள்களாக பிறக்க நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்றும் உணர்ச்சி ததும்பக் கூறினர்.
அவர்களது ஓய்வு வாழ்வு மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலில், இஷா தொழுகையின் பின், நீண்ட இறைவணக்கங்களில் கழிந்தது. அந்த மஸ்ஜிதின் ட்ரஸ்ட்டி போர்டிலும் இருந்தார்கள். இவர்களின் மனைவியின் பெயர் ஜுனைதாபீவி என்று அழைக்கப்படும் சப்ரா பீபி ஆவார். இவருக்கு மூன்று பெண் மக்கள். மும்தாஜ் பாரிஜா, மஹ்ஜபீன், மர்ஹூமா ஜவஹர் நஹார் ஆகியோரே அவர்களாவர். ஆசிரியர் மர்ஹூம் ஸஹ்தி சிராஜ், ஆசிரியர் நிஹ்ரீர், ஆசிரியர் சபியுதீன், ஷிப்லினூஸ், அஸ்கர் முராத், மர்ஹூம் அஜ்மல் ரோஷன், ஷகீல் மெஹ்தாப் ஆகிய எட்டும் அவர்களின் ஆண் பிள்ளைகளாவர்.
எனது தந்தையாருக்கு கிடைத்த “வித்தக பேராசான்” பட்டம் அதிபர் ஏ.எம்.ஐ. நைனாமரைக்கார் அவர்களுக்கும் கிடைத்தது. புத்தளம் நகர சபை அன்னாரின் நினைவாக வான்வீதியில் அவரது வீடு அமைந்திருக்கும் ஒழுங்கைக்கு ஏ.எம்.ஐ. நெய்னாமரைக்கார் ஒழுங்கை எனப்பெயரிட்டு கெளரவித்துள்ளது. இறுதியாக எங்கள் புத்தளத்தின் தமிழ் புலமை சான்றோர்களின் தலைவர்களில் ஒருவரான ‘அபூஸாலிஹ் சேர்’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் , அதிபர் A.M.I. நைனாமரைக்கார் அவர்கள் 24 . 09 .1999 இல் இறையடி சேர்ந்தார்கள். அவர்களுடைய மாணாக்கர்களுடன் பெருந்திரளான மக்கள் அவர்களது இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்டு அன்னாருக்காக இறைஞ்சினார்கள். வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
தன்முகம் மலர்ந்து நா ருசித்த
தன்மனம் கவர்ந்த செந்தமிழை
வாய் நிறைந்த வார்த்தைகளால் – எமக்கு
அள்ளித்தந்த பேராசான்
இலக்கணமோ இலக்கியமோ
இதிகாசப்படைப்புக்களோ
மாணவரின் தரமறிந்து – அவர்தம்
மனதினிலே புகுத்திவைப்பார்
புத்தளத்தில் தமிழ் பாஷை உச்சரிப்பில்
இணையில்லா சொல்லாட்சி
கவிதைக்கு மொழிபெயர்ப்பில் பதக்கம் வென்ற
பாண்டித்தியம்
காளமேகப்புலவரின்
கடைக்கண் பார்வைபட்ட இவர்
மாறுவேட பண்டித “நீலமேகப் புலவராம்”
நிருவாகம் அரசியல் விவசாயம்
இவைகளிலும் சிறந்து நின்றார்
அபூ ‘சாலிஹ்’ எனும்
சாந்தமான பெயர் கொண்டார்
இம்மண்ணின் தமிழ் புலமை
சான்றோர்கள் பவனிவந்த
பேரணியின் தலைவர்களுள் ஒருவராவார்.
/Zan
Share the post "புத்தளத்தின் ‘தமிழ் புலமை’ பேராசான் A.M.I. நெய்னாமரைக்கார் (அபூஸாலிஹ் சேர்)"
இனிய சகோதரன் நவ்ஷாத்…என் தந்தையாரைப் பற்றி எத்தனை விடயங்களை சேகரித்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள்…மறந்து போனவற்றையெல்லாம் மறுபடியும் நினைவூட்டி இன்னுமொரு வாழ்க்கையை எங்கள் வாப்பாவோடு வாழ வைத்த உங்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறுகிறேன்…