Puttalam Online
uncategorized

எம் மண்ணின் கலைசார்ந்த அறிவியலில் பன்முக ஆளுமை – சான்றோன் A.N.M. ஷாஜஹான் சேர்

  • 13 January 2021
  • 211 views

(அபூஹனீபா நவ்சாத்)

புத்தளத்தில் கலை சார்ந்த அறிவியலை அழகும், அலங்காரக் கவர்ச்சியுமாக ஜனரஞ்சகமான முறையில் தேசியஅளவுக்குக்  கொண்டு சென்ற இம்மண்ணின் தமிழ்ப்புலமையில் இன்னொரு தலைமைத்துவமான சான்றோன் மர்ஹும் ஷாஜஹான் சேரை கௌரவிக்கக் கிடைத்தமையை ஒரு பாக்கியமாகக்  கருதுகிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

அன்னார் புத்தளத்தின் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் அசன்நெய்னா மரைக்கார், ஜொஹரா பீபி தம்பதிகளின் இரண்டாவது மகனாக 05.10.1928 இல் பிறந்தார்கள். சிறுவயதில் இருந்தே இவர்களுக்குக்  கல்வித்துறையில் பேரார்வம் இருந்தமையால் இவர்களது தமையனார் மதிப்பிற்குரிய மர்ஹும் A.M.M. ஹனிபா சேர் அவர்கள், தனது தம்பியின் கல்விக்காக உழைத்து அவரை ஆசிரிய அந்தஸ்த்தில் அமரச்செய்துவிட்டு, தானும் ஒரு ஆசிரியரானார்கள் என்பது இவ்விரு பெருந்தகைகளின் ஆரம்பகால வரலாறு ஆகும்.

அசன்நெய்னா மரைக்கார், ஜொஹரா பீபி தம்பதிகள்

L-R: சன்நெய்னா ரைக்கார் முஹம்மது ஹனிபா (A.M.M. Haniffa) , சன்  நெய்னா ரைக்கார் ஷாஜஹான் (A.N.M. Shajahan) – ஒரே தம்பதியினரின் பிள்ளைகள், முதல் எழுத்துக்களை வேறுபட்டவகையில் பிரயோகித்தனர்.

இவர் ஆரம்பம் முதல், புத்தளம் அரசினர் ஆண்கள் பாடசாலையில் (கால ஸ்கூல்) பயின்றவர். 1943 இல் கனிஷ்ட தராதர பரீட்சையில் (Junior School Certificate – J.S.C.) மொழியும் இலக்கியமும், எண்கணிதம், கிராமிய விஞ்ஞானம் (Rural Sc.), புவியியல், வரலாறு ஆகிய பாடங்களில் தோற்றி சித்தியடைந்தார்.  பின்னர் அதே பாடசாலையில் சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பில் (S.S.C.) ஒரேயொரு மாணவராகக் கற்றார். அப்போது வடமேல் மாகாணத்தின் ஒரேயொரு பரீட்சை நிலையமாக இருந்த குருநாகலில், ஒரேயொரு தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்தியாக KM 1 என்ற சுட்டிலக்கத்தில் தோற்றி, S.S.C. பரீட்சையில் முதற் பிரிவில் சித்திபெற்றார். இவர் சிறிது காலம் புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் ஆங்கிலம் பயின்றுள்ளார். அன்னார் தனக்குக் கல்வியளித்து தன்னை உயர்த்திவிட்ட புத்தளத்தின் ஆசிரியத் தந்தை திரு என்.ஜே. அல்பிரட் அவர்களை அவர் அடிக்கடி நினைவுகூர்வார்கள்.

முன்னால் இருப்போர். (இடமிருந்து வலம்) முதலாவது A.N.M. ஷாஜஹான், நிற்போர், முதல் வரிசை இடமிருந்து வலம் நான்காவது A.K. அபூஹனிபா ஆசிரியர் (புத்தளம் நகரின் பயிற்றப்பட்ட முதலாவது ஆசிரியர், இங்கு உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களை இனம்காண முடியவில்லை) –

இடம்: அரச ஆண்கள் பாடசாலை (தற்போதைய பாத்திமா கல்லூரி) – 1935 களில்.

ஆசிரியத் தந்தை திரு என்.ஜே. அல்பிரட் (புத்தளத்தில் முதலாவது தொடங்கப்பட்ட முஹம்மதியன் பாடசாலை புளிச்சாக் குளம், இரண்டாவது கரைத்தீவு போன்றவற்றின் முதல் அதிபர். புத்தளத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டவர்.)

புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் கற்றபோது ஆசிரியர் தராதரப் பத்திரப் பரீட்சைக்கும் தோற்றி சித்தியடைந்தார். அதேவேளை ஆசிரியர் கலாசாலை பிரவேசப் பரீட்சைக்கும் தோற்றி சித்திபெற்றமையால் அளுத்கம ஆசிரிய கலாசாலைக்கு பயிற்சிக்காகத் தெரிவுசெய்யப்பட்டார். இதற்கிடையில் ஆசிரிய நியமனமும் கிடைத்தது. எனவே ஆசிரியராக புத்தளம் அரச ஆண்கள் பாடசாலையில் 01.01.1947 – 31.01.1947 வரை கடமையாற்றி, ஆசிரிய கலாசாலைக்கு சென்று இரு வருடங்கள் (01.02.1947 – 31.12.1948) பயிற்சி பெற்றார்.

Govt. Boys School – 1953 – 1956

பயிற்சியின் பின்னர் அவரின் நியமனம், 01.01.1949 இல் குருநாகல் பரகஹதெனிய பாடசாலையிலாகும். மூன்று முறை  (1949, 1951, 1960) அங்கு கடமையாற்றிய இவர், அப்பாடசாலையின் கீதத்தையும் இயற்றியமை குறிப்பிடத்தக்கது. பண்ணல, வல்பொத்துவெவ, இலவன்குளம், ஆலங்குடா, பாலாவி, புளுதிவயல், வாழைச்சேனை பூநொச்சிமுனை, கடையாமோட்டை போன்ற சுமார் 17 பாடசாலைகளில் ஆசிரியராகவும் ஹெட் மாஸ்டராகவும் அதிபராகவும் கடமையாற்றினார். 18.10.1977 இல் வட்டாரக்கல்வி அதிகாரியாக (C.E.O) வாக பதவி உயர்வு பெற்றார்கள். பின்னர் கல்விப் பணிப்பாளரானார்கள். கல்வித் திணைக்களத்தில் சுமார் 42 ஆண்டுகள் சேவையற்றி 1988.10.05 இல் அன்னார் ஓய்வுபெற்றார்.

மத்தியில் மாலையுடன் இருப்பவர் ஷாஜஹான் ஆசிரியர். நிற்போர் இடமிருந்து வலம் முதலாவது A.M.M. இல்யாஸ் ஆசிரியர் (புழுதிவயல்)

பறகஹதெனிய பாடசாலை

இவரின் கற்பித்தல் முறை அலாதியானது. கற்கும் முழு மாணவரும் அதை ரசித்து, விரும்பி, படிக்கக் கூடியதாக இருக்குமாம். தமிழ் விழாக்கள், மீலாத் மேடைகள், மாணவர்மன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றினூடாக தாம்  சேவைசெய்த அனைத்துக் கிராமங்களிலும் மாணாக்கரை செப்பனிட்டு, பயிற்றுவித்து அவர்களின் ஆளுமைக்கு வித்திட்டார்கள்.

சான்றோன் ஷாஜஹானின் சாதனைப்பட்டியல் நீளமானது. 25.10.1964 இல் ஆரம்பிக்கப்பட்ட, சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயிலை தாபகத் தலைவராகக்கொண்ட, முஸ்லிம் கல்வி மாநாட்டின் தாபக உறுப்பினர்களுள் ஒருவர். அகில இலங்கை  இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து, நிருவாகக் குழுவில் ஒருவராக உயர்ந்து, மாவட்ட செயலாளராக இயங்கியவர். புத்தளத்தின் வரலாறு மரபுகள் மரபுரிமைகள் கலை கலாசார பண்பாட்டு தகவல்களை ஆவணப்படுத்தி ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர், ஹிஜ்ரா கமிட்டியின் புத்தளம் மாவட்ட செயலாளர், இஸ்லாமிய பாடநூல்களின் எழுத்தாளர் குழுவில் ஒருவர், இசை ஞானம் உள்ளவர், பாடலாசிரியர், சிறந்த பாடகர், நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர், சிறந்த சமூக சேவையாளர், கரப்பந்தாட்ட வீரர், ஓர் ஓவியரும் கூட.

சிறந்த சமூக சேவையாளரான ஆசிரியர் ஷாஜஹான் அவர்கள் புத்தளத்தின் பல அமைப்புக்களிலும்  கழகங்களிலும் பிரதான அங்கத்துவம் வகித்துள்ளார். புத்தளம் நகர அபிவிருத்தி சங்கத்தின் (Puttalam Town Development  Society) முதலாவது செயலாளர் அவர். 1935 இல் தொடங்கப்பட்ட முஸ்லிம் அபிவிருத்திச் சங்கத்தில் 1953 இல் தன்னை இணைத்துக்கொண்டார். கரப்பந்தாட்டதில் ஆர்வமிக்க இவர் ஆரம்ப காலங்களில் புத்தளத்தில் புகழ்பெற்றிருந்த சோசியல் விளையாட்டுக் கழகத்தில் விளையாடியதுடன் அதன் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியுமுள்ளார். புத்தளத்தில் நடைபெறும் மீலாத் நிகழ்ச்சிகளில் பிரதான பங்கேற்கும் இவர், கல்விப் புலத்தில் இடம்பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னின்று உழைப்பவர். 02.10.1964 இல் புத்தளம் கிரசென்ற் படமாளிகையில் இடம்பெற்ற, ‘புத்தளம்  சிலாபம் வட்டாரத் தமிழ் பாடசாலைகளின் கலை விழா’  நிகழ்வுகளில் விழாக் குழு செயலாளராக பணியாற்றியுள்ளார்.

1970 காலப்பகுதியில் கட்டப்பட்டு ‘சென்ட்ரல் மஸ்ஜித்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட,  மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் நிருவாகத்தின் முதலாவது செயலாளர் ஷாஜஹான் ஆசிரியரே. பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ள அரச காணி ஏ.என்.எம். ஷாஜஹான், எம்.ஐ.எம். ஹாலித், ஏ.எச். அப்பாஸ் ஆகியோரின் பெயரில் பள்ளிகட்டுவதற்காக, 99 வருட குத்தகைக்கு வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Masjidul Huda – 1973

பாடசாலையில் படிக்கும் காலத்தில் இருந்தே இவர் இலக்கியத்துறையில் ஆர்வம் காட்டினார். தனது இருபதாவது வயதில் ஆசிரிய கலாசாலைப் பயிற்சியைப் பூர்திசெய்த அன்னார், கலாசாலை ஆக்க வேலைக்காக எழுதி சமர்ப்பித்த நூல் ‘புத்தளம் பகுதி பூமி சாஸ்திரம்’ என்பதாகும். ஷாஜஹான் சேரின் தமிழ் இலக்கியப் பங்களிப்புக்கள் நாடுகடந்தவை.  1990 டிசம்பர் 29,30, 31 ஆகிய திகதிகளில் இந்தியா, கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் பேராளராக அவர் கலந்துகொண்டார். எட்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1995 ஜனவரி 1-5 காலப்பகுதியில் தஞ்சாவூரில் நடைபெற்றது. அதற்கு ஒரு ஆய்வுக்கட்டுரையை அவர் சமர்ப்பித்தார். மேலும் 2002 ஒக்டோபர் 21, 22, 23 திகதிகளில் இலங்கையில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ‘மூத்த படைப்பாளி’ என்ற அடிப்படையில் அன்னார் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 1996 இல் இந்தியா பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மலருக்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிறப்பு ஆக்கம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.

புத்தளத்தில் 30.12.1967 (ஹிஜ்ரி 27.09.1387) இல் நடைபெற்ற அல் குர்ஆன் 1400 வது ஆண்டு நிறைவு விழாவில் ஆசிரியரின், ‘வாழ்வளிக்கும் வான் மறையின் வரலாறு’ என்ற கட்டுரை முதற் பரிசு பெற்றதுடன் அது தனியொரு வெளியீடாக, நினைவு மலராக வெளிவந்தது. இதுவே அச்சு வாகனம் ஏறிய அன்னாரின் முதல் நூலாகும். ‘இஸ்லாமியப் பொது அறிவு வினா விடைகள் 1000’, ‘பாலர் இசைத் தமிழ்’ போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். மேலும் இப் பெருந்தகையுடைய நீண்ட கால ஆய்வுத்திறனில் விளைந்த அரிய நூல், ‘புத்தளம் வரலாறும் மரபுகளும்’ என்பதாகும். இந்நூல் வெளியிடப்பட்ட 1992 காலப்பகுதியில் இதற்கு ISBN (International Standard Book Number – 955- 95450-0-0) இலக்கமும் பெறப்பட்டது. இந்நூலுக்கு, 1992 டிசம்பர் மாதம் (திருவள்ளுவர் ஆண்டு 2022) கொழும்பு தமிழ்ச் சங்கம் நடத்திய, அனைத்திலங்கை ஐம்பதாம் ஆண்டு நிறைவுத்தேர்வில், நூலாக்கப் பரிசும் 1994 இல் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தேசிய சாகித்ய விழாவில் ,இலங்கை தேசிய சாகித்ய மண்டல சிறப்புப் பரிசும் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் விருதும் பொற்கிழியும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. எமது மண்ணின் ஆய்வுகள் மேலும் தொடர்வதற்கு இந்நூல் ஓர் அடிக்கல்லாக அமைகிறது.Click below link

https://noolaham.net/project/46/4579/4579.pdf

எம் மண்ணின் மைந்தன் சாஜஹான் சேர் அவர்கள் கலை, இலக்கியத் துறைகளுக்கு அளித்த பங்களிப்புக்கள் பல. அகில இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் பேரவையால் 22.12.1969 இல்  நடாத்தப்பட்ட அகில இலங்கை எழுத்தாளர் போட்டியில் சிறந்த எழுத்தாளராகத் தெரிவு செய்யப்பட்டார். முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மீலாத் விழா கவிதைப் போட்டியில் இரண்டு தடவை முதல் பரிசு பெற்றுள்ளார். 1991 தேசிய மீலாத் மலரில் இவரது இரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1996 இல் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாண இலக்கிய விழாவின் ‘மருத  நிலா’ மலருக்கு தனது ஆக்கம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் சிறப்பு மலர்களிலும் அன்னாரது கட்டுரைகள், கவிதைகள் பல வெளிவந்துள்ளன.  இவரது பல ஆக்கங்கள் அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக இன்னும் உள்ளன.

ஷாஜஹான் ஆசிரியர் அவர்கள் எமது புத்தளம் நகரில் அக்காலத்தில் இடம்பெறும் பிரதான நிகழ்வுகளுக்கு  எழுத்துத் துறையிலான பங்களிப்புகளை வழங்குவது வழக்கம். முன்மொழிவுகள், அறிக்கைகள், பிரசுரங்கள் போன்றன தயாரித்தல், வாழ்த்துப் பாக்கள், கவிதைகள், பாடல்கள் இயற்றுதல் போன்றவற்றுக்கு ஊர் மக்களும் பிரமுகர்களும் அன்னாரை நாடுவர். அவ்வாறே பொது நிகழ்வுகளிலும் பாமாலை பாடுவதும் இவரின் வழக்கமாக இருந்தது. உலக பிலியட்  சாம்பியன் விருதை வென்ற M.J.M. லாபிர் அவர்களுக்கு 17.05.1974 இல் புத்தளம் மக்கள் வரவேற்பளித்தபோது தயாரிக்கப்பட்ட வரவேற்புப் பா, 05.08.1996 இல் இடம்பெற்ற புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலய தாபகர்  விழாவில் பாடப்பட்ட பா மாலை, 18.07.1996 இல் மாத்தளையில் இடம்பெற்ற தமிழ் மொழித்  தின விழாவில், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர், யாழ் M.M. அப்துல் குத்தூஸ் அவர்களுக்கு கல்வியுலக நண்பர்களால் சேவை நலன் பாராட்டுக்காக அளித்த வாழ்த்துச் சரம், 03.09.1966 இல் சாறா நெசவுசாலை திறப்பு விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை போன்றன இவற்றுக்கு சில உதாரணங்களாகும்.

மதிப்புமிக்க ஷாஜஹான் சேர் அவர்கள் ஓர் ஓவியருமாவார். பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும்போது அவர் வரையும் ஓவியங்கள் சிறார்களை மிகவும் கவரும். 1968 இல் புத்தளத்தில் இடம்பெற்ற ‘திருக்குர்ஆன் 1400 வது ஆண்டு நிறைவு விழாப் போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கு வழங்கிய சான்றிதழ் அன்னாரால் வடிவமைக்கப்பட்டதே. அதற்கு ஒரு பரிசிலும் வழங்கப்பட்டது. இது தங்கம், வெள்ளி, செப்பு ஆகிய மூன்று வர்ணங்களில் புடைப்பு முறையில் (Embossed) அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

ஷாஜஹான் சேர் ஒரு வானொலிப் பாடகர். இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், முஸ்லிம் நிகழ்ச்சியில் 1967 ஆம் ஆண்டிலிருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக  அவர், இஸ்லாமியக் கீதங்களைத் தாமாகவே இயற்றி, பாடிவந்துள்ளார். இறை தூதரைப் புகழ்ந்து இஸ்லாமிய கீதங்கள் இயற்றி மாணவர்களைப் பயிற்றுவித்து பாடவும் வைத்தார்கள். அக்காலத்தில் சாஜஹான் சேர் இயற்றிய இஸ்லாமியக் கீதங்கள் பிரபலமானவை, பொருட்செறிவுமிக்கவை. இறைவன் அவர்களுக்கு இனிமையான குரலைக் கொடுத்திருந்தான். மக்கள் மெய்மறந்து ரசிக்கும் அளவுக்கு மிக அழகாகப் பாடுவார்கள். மீலாத் மேடையின் நிர்வாக அமைப்பில் இருந்து கொண்டே போட்டி நிகழ்ச்சியிலும் பங்குபற்றுவார்கள். அவர் பங்குபற்றிய ஒவ்வொரு தடவையும் புத்தளத்தின் மிகச்சிறந்த பாடகர்கள் அவரோடு போட்டியிட்டமை எனக்கு ஞாபகம். இது ஒரு அசாத்திய துணிவு. ஆனாலும் கூட சாஜஹான் சேரே முதலாவதாக வருவார். அதே போன்று அவர்களது மூத்தமகன் S.M.சனூசியும் இளையமகன் S.M. சஹ்ரானும் தங்கள் தந்தையாரைப் போன்றே அவர்கள் கலந்துகொண்ட அனைத்து இஸ்லாமிய கீதப் போட்டிகளிலும் வெற்றியீட்டி வந்தார்கள்.

அக்காலத்தில் மீலாத் மேடைகளில் ஷாஜஹான் சேரின் ‘அறிவுக் களஞ்சியம்’ நிகழ்ச்சி விமர்சையாக நடக்கும். இந்நிகழ்ச்சி அக்கால அனைவரும் ரசித்துப் பார்த்த ஒன்று. தனக்கே உரிய கவர்ச்சிப் புன்முறுவலுடன் வெகு சிறப்பாக அதனை நடத்துவார்கள். ‘இஸ்லாமியப் பொது அறிவு வினா விடைகள் 1000’ என்ற, தான் தயாரித்த நூலிலிருந்தும் அறிவுக் களஞ்சியத்திற்கான கேள்விகளை தயார் செய்தார்கள். ஒருமுறை அந்தப்போட்டியில் எங்களது குழுவான, அக்காலத்தில் பிரபலமான “நுஜூம்” கோஷ்டி வெற்றிபெற்றதை ஞாபகப்படுத்துகிறேன். அதற்கு முன்பும் எங்களது நுஜூம் கோஷ்டி, சாஜஹான் சேர் நடத்திய அறிவுக்களஞ்சியப்போட்டிகளில்  பல தடவைகள் வென்றமையையும் பழைய மீலாத் பதிவுகளில் காணலாம்.

அக்காலத்தில் நம்நாட்டில் ஹாபில்கள், காரிகள், முப்திக்கள் மிகக் குறைவு. அன்று இலங்கையில் பெருமானார் (ஸல்) அவர்களுடைய திருப்பெயரால் நடத்தப்பட்ட மீலாத் விழாக்கள், அதற்கு வருகைதந்து சொற்பொழிவாற்றிய தமிழ் நாட்டின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களின் கவலையும், தஃவாவுடைய பணியும், சகோதர சன்மார்க்க அமைப்புக்களின் பெருமுயற்சிகளும் சேர்ந்து, இன்று அல்லாஹ் அருளால் மத்ரஸாக்களும், ஹாபிழ்களும், காரிகளும், முப்திகளும், உலமாக்களும் நம்நாட்டில் நிறைந்துள்ளனர். ஆக, அக் கொண்டாட்டங்களின் உண்மையான குறிக்கோள் மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதேயாகும் என்பது அடியேனின் கருத்து.

காலங்காலமாக இலங்கையில் நடந்துவந்த இப்போட்டிகளில்… உதாரணமாக இம்மண்ணையே எடுத்துக்கொண்டால், அன்றைய மேடைகளில் கிறாத், பேச்சு, இஸ்லாமிய கீதங்களில் பங்கேற்ற மாணவர்களின் ஆளுமையை, இன்று அவர்களில் கணிசமாண தொகையினர் பெரும் நிர்வாகிகளாக இருந்து ஓய்வு பெற்றமையைவைத்துப் புரியலாம். சன்மார்க்க நெறிகளில் தவறாது, எந்தவித வாத்தியக் கருவிகளுமற்ற இஸ்லாமியக் கீதங்களை நாம் அன்று கேட்டு இன்புற்றோம். இன்று நம் சந்ததிகளின் கையில் சிருங்காரப் பாடல்களுடன் கூடிய போன்கள்…

14.02.1993

ஷாஜஹான் சேர் சுற்றுலாத் துறையில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் காட்டினார். அவர் கற்பித்த பாடசாலை மாணவர்களை ஆர்வத்துடன் சுற்றுலா அழைத்து செல்வார். அத்துடன் புத்தளம் நகரிலும் பொதுமக்களுக்காக இரண்டு மூன்று நாட்கள் சுற்றுலாப் பயணங்களை ஒழுங்கு செய்து தொடர்ச்சியாக அழைத்துச் செல்வதும் இவரின் வழக்கமாக இருந்தது. குடும்பத்துடன் பலமுறை இந்தியா சென்றுள்ளார். புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றியுள்ளார்.

இவர்களது குடும்பம் ஒரு கலைக் குடும்பம். தகப்பனார் அசன்நெய்னா மரைக்காரும் அக்காலத்தில் எம் பெருமானார் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து ‘பதம்’ பாடுவதில் வல்லவர். எம்மண்ணில் கலைத் துறைக்கு பெரும் தொண்டாற்றியவரான ஷாஜஹான் சேருக்கு புத்தளம் மீலாத் ஷரீப் சொசைட்டி 1991 இல் ‘கலை விற்பன்னர்’, ‘பல்கலை வித்தகர்’ என்ற இரு பட்டங்களை வழங்கி கௌரவித்தது. முஸ்லிம் சமய கலாசார அமைச்சு 1993 பெப்ரவரி 13 இல் தனது மூன்றாவது வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில்  ‘தாஜல் அதீப்’ (இலக்கிய வேந்தர்) என்ற பட்டத்தை வழங்கி பாராட்டி கெளரவித்தமை இங்கு நினைவுகூரத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக 1999 ஆம் ஆண்டு, கலாசார சமய அமைச்சின் கலாபூஷனம் விருது  வழங்கப்பட்டு அன்னார் கௌரவிக்கப்பட்டார்.

ஷாஜஹான் மாமா இயற்றிய பாடலொன்று இத்தருணத்தில் எனக்கு ஞாபகம் வருகிறது. இலகு தமிழில் படித்தவர், பாமரர் அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க இஸ்லாமிய கீதம் அது… அதன் முதல் வரிகள்…

“மன மகிழ்வுடன் மேடையில் ஏறினேன்.
மறையவன் அருள், தினம் தினம் வேண்டுகிறேன்
மங்காத ஒளி – மறை தந்த நபி
‘நபி ஜனனதினம் காண்போம் …'”

ஆம் அந்தப் பெருந்தகை, தம் வாழ்வில் நிர்வாகம் செய்த மீலாத் மேடைகள்…

என்று?.. நம் சிறார்கள் மீண்டும் மீலாதிலும்.. கிறாத், கீதங்கள், பேச்சுப்போட்டிகளில் தம் ஆளுமைகளை வளர்ப்பார்கள்?

இன்ஷாஅல்லாஹ்…

ஷாஜஹான் சேர் உருவாக்கிவிட்ட ஆளுமைகள் பல. புத்தளத்தின் தற்போதைய மூத்த ஆசிரியர்களான ஹாலித் சேர், வஹாப் சேர்,  உட்பட பலர் அன்னாரின் மாணாக்கரே. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஸாம், கணக்காய்வாளர் நாயகம் சப்ரி, இலங்கை வெளிநாட்டு சேவை  (S.L.O.S.) பிரதான உபசரிப்பாளர் வை.எல்.எம். சவாஹிர் போன்றோர் உட்பட நாடளாவிய ரீதியில் புகழ்பெற்ற பலருக்கு இவர் பாடசாலைகளில் கற்பித்துள்ளார். வை.எல்.எம். சவாஹிர் அவர்கள் ஓரிடத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். ‘நாற்பதாம் பத்துக் கடைசியில் பாலர் வகுப்பில் எனது சிறு விரல்களைப் பிடித்து மண்ணிலே தமிழின் ஆரம்ப எழுத்துக்களை எழுதச் சொல்லிக்கொடுத்த எனது கல்வித் தந்தையாக இருக்கும் அல்ஹாஜ் ஷாஜஹான் …..’

புத்தளம் வரலாறும் மரபுகளும் நூல் வெளியீட்டு விழாவில் . . .

L-R   பொலிஸ் அத்தியட்சகர் நிஸாம், இளங்கீரன் சுபைர், பேராசிரியர் அனஸ், அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர், நூலாசிரியர் ஏ.என்.எம். ஷாஜஹான்

கண்ணியத்திற்குரிய ஷாஜஹான் சேரின் மனைவியின் பெயர் சித்தி அதீபா. இரண்டு ஆண் பிள்ளைகள். S.M. சனூசி, S.M. சஹ்ரான். அவரின் சகோதரர் A.M.ஹனீபா. சகோதரி சபீதா உம்மா. இந்த சகோதரியின் மகன்தான் ஸன்ஹிர் சேர் என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.

ஷாஜஹான் சேரின் திருமணம்

சகோதரி சபீதா உம்மா, தாயின் தாயார், தாயார்

சிரித்த முகத்துடன் அனைவருடனும் அன்பாகப் பழகிய, கண்ணியத்திற்குரிய, புத்தளம்  தமிழ்ப்புலமை சான்றோர்களின் தலைமைகளில் ஒருவராக வீற்றிருந்த, கலாபூஷனம் சாஜஹான் சேர் தனது 76 ஆவது வயதில் 25.12.2004 இல் (சுனாமிக்கு முதல் தினம்) இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களிடம் கற்ற பெருந்திரளான மாணவர்களோடு மக்கள் வெள்ளம் அவர்களுக்காக இறைஞ்சியது. வல்ல அல்லாஹ் எங்கள் சாஜஹான் சேரை பொருந்திக்கொள்வானாகவும் ஆமீன்.

இறுதியாக…

புத்தளத்தின் ஆரம்பகால தமிழ்ப் புலமை, பேராசான்களான மதிப்பிற்குரிய A.M.I. நெய்னா மரைக்கார் சேரும் எனது தந்தையாரான A.K. அபூஹனிபா சேரும் தத்தமது ஆளுமைகளை பெரும்பாலும் இம்மண்ணில்தான் அளித்து மறைந்தார்கள். சாஜஹான் சேர், கலை சார்ந்த அறிவியலை தேசிய அளவுக்கு பலமுறை தம் வாழ்நாளில் கொண்டு சென்றவர். இது எம்மண்ணின் கலைசார்ந்த பரிணாம வளர்ச்சி. தற்போது ஓய்வில் இருக்கும் தமிழ் போராசான், ஷாஜஹான் சேரின் மாணவன் ஹாலித் சேர் முதற்கொண்டு இம்மண்ணின் ஆசிரியர்கள் அனைவரும் புலமையில் இந்நாட்டில் எவருக்கும் சளைத்தவர்களல்லர். இந்த பரிணாம வளர்ச்சியில் இன்று மதிப்பிற்குரியவர்களான பேராசிரியர் அனஸ் அவர்கள் முதற்கொண்டு கம்பளை ஸாஹிறா அதிபராக இருந்த மஹ்ரூப் மரைக்கார் சேர், கலாபூஷணம் ஜவாத்மரைக்கார் சேர், ‘வித்தியாலயம்’ சஞ்சிகை ஆசிரியர் ஸன்ஹிர் சேர் போன்றவர்களால் புத்தளத்தின் பெருமை உலகறியச்செய்யப்படுகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

Edited by Zanhir

நன்றி

ஷாஜஹான் சேரின் குடும்ப உறுப்பினர்கள்

/Zan


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All