Puttalam Online
uncategorized

புத்தளம் நகரின் அரசியல் ஆரம்பமும் நிகழ்வுகளும்

  • 19 March 2021

“அபுஹனீபா நவ்ஷாத்”

1850 களில் இலங்கையின் நிருவாகக் கட்டமைப்பு மாகாணத்திற்கு ஒரு G.A, மாவட்டத்திற்கு ஒரு  இந்த G.A. க்கு கீழ் பல பற்றுக்கள் (நிலப்பிரிவுகள்) இருந்தன. இந்தப் ‘பற்று’ களில் ஊர்கள் அமைந்திருந்தன அரசாங்க நிருவாகப் பிரிவில் ஒரு பற்றுக்கு ஒரு Omilder பொறுப்பாக இருந்தார் . இவரின் பொறுப்பு G.A. க்கு கீழ் அரசாங்க பொது நிர்வாகத்தில் பொறுப்புதாரிகளில் ஒருவராகும் . இந்தப் பதவியினை சிங்களத்தில் “முஹேந்திரம்” என்றார்கள். நமது பாசையில் “உடையார்” என அழைக்கப்பட்டார்.

ஓர் உடையாருக்கு கீழ் பல ஊர்கள் வரும். ஒவ்வொரு ஊருக்கும் இவருக்கு கீழ் Village Headman உண்டு. இப்படி குடியியல் சட்டம் இருந்தபோது, 1930 களில் D.R.O கந்தோர் District Revenue Office ஐ கொண்டு வந்து உடையார் V. Headman பதவிகள் இல்லாமல் ஆக்கப்பட்டன. G.S முறை ஊருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. (D.R.O கந்தோரை இல்லாமலாக்கிய பிற்பாடுதான் நாட்டில்  A G.A முறை வந்தது)

1931 இல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இலங்கையின் பொது நிருவாகத்தில் சுதேசிகளுக்கும் சாதகமாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற யாப்பு சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பிற்பாடு 1932இல் “டொனமூர் “ சீர்திருத்த ஆணைக்குழு மூலம்  டொனமூர் யாப்பு இலங்கைக்கு ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த டொனமூர் யாப்பு மூலம் எம் இலங்கை நாடு பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு முதன்முதலாக உள்ளூராட்சி சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.

பெரும் நகரங்கள் மாநகர சபைகளாகவும் (M.C.) அடுத்தபடியாக நகரசபைகள் (U.C.) ஆகவும் அதற்கு அடுத்து பட்டின சபைகள் (T.C.)  கிராம சபைகள் (V.C.) என்பன உருவாகின அக்காலத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் இல்லை எனவே அரசியல்வாதிகள் எல்லோரும் சுயேட்சையாகவே போட்டியிட்டார்கள்.

1933 இல் நாடு முழுவதும்  Urban District Council (U.D.C.) அறிமுகப்படுத்தப்பட்டது. புத்தளத்தில் எமது முதலாவது மாண்புமிகு நகரபிதாவாக W.A. முத்துகுமார் என்ற முத்தான மனிதர் தெரிவுசெய்யப்பட்டார்கள். இம்மண்ணுக்கு ஆரம்ப அரசியல் சேவையை செய்த மகான் இவர்தான். முதன் முதல் U.D.C. புத்தளம் நகர முஸ்லிம் உறுப்பினராக சங்கைக்குரிய M.S.M.A. ஜலாலுதீன் மரைக்கார் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்  இவர்கள் போட்டியிட்ட சின்னம் “வண்டிச் சக்கரம்” ஆகும்.

W.A. முத்துகுமார்

அவர்களை எதிர்த்து அக்காலத்திலேயே முதல் முதலாக ஒரு பெண்மணி போட்டியிட்டார்கள். அன்னாரின் பெயர் உம்மு சுலைஹா. ஆங்கிலப் புலமை மிக்க இவர் மர்ஹூம்களான வரீத், யாஸீர், ஆகியோரினதும் சிமித்தி, ஐசாபபா ஆகியோரின் தாயார் ஆவார். பதிவுகளில் உள்ள விடயங்கள்தான் இவை. ஆயினும் அனைவரும் அறியக்கூடிய வாய்ப்புக்காக குறிப்பிடப்படுகிறது.

1943 இல் M.S.M.  ஜலாலுதீன் மரைக்கார் புத்தளம் மண்ணின் முதல் முஸ்லிம் சட்டத்தரணியும் தனது சகோதரியின் மகனுமான சங்கைக்குரிய H.S. இஸ்மாயில் அவர்களை U.D.C. தேர்தலுக்கு தனது சின்னமான வண்டிச் சக்கரத்தில் சுயேட்சையாக களமிறக்கினார்கள். H.S. இஸ்மாயில் அவர்கள் அத்தேர்தலில் வெற்றி பெற்று புத்தளம் நகரின் மாண்புமிகு முதல் முஸ்லிம் நகரபிதாவானார்கள் என்பது வரலாறு. இவர் காலத்தில்தான் U.D.C.,  U.C.  யாக மாற்றப்பட்டது. தேவையானவைகளை ஆரம்பத்தில் அரசாங்கத்திடம் இருந்து கேட்டுப் பெற்றுக் கொடுத்த பெருந்தகை இவரேயாவார்.

1935ல் முதல் முறையாக ஒரு அரசியல் கட்சிஇலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. அது லங்கா சமசமாஜி கட்சியாகும். 1946 இல் இந்தியா, சுதந்திரத்திற்காகக் கடுமையாகப் போராடிக் கொண்டு இருக்கையில் நம் நாட்டுக்கும் அது கிடைக்கலாம் என்ற கதை அடிப்பட்டது . எனவே 1947ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 1948 இல் அனைவரும் எதிர்பார்த்திருந்த சுதந்திரமும் எளிதாகக் கிடைத்துவிட்டது. 1948ல்சோல்பரி யாப்பின்படி முதன்முதலாக நம் மண்ணிலிருந்து மாண்புமிகு H.S. இஸ்மாயில் அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு போட்டியின்றி வெற்றி பெற்று இலங்கை பாராளுமன்றத்தின் முதல் முஸ்லிம் சபாநாயகராகவும் வீற்றிருந்து இம்மண்ணுக்கு தேசிய அரசியலில் முதல் பெருமை சேர்த்தார்.

H.S. Ismail Speaker Puttalam

இவருக்கு பதிலாக புத்தளம் U.C. க்கு சேர்மனாக கொத்தாந்தீவின் அறிஞர் மாண்புமிகு காஸிம் சட்டத்தரணி நகரசபையை நிருவகித்து தொண்டுசெய்தார். அன்னாருக்குப்பின் U.C. யை, புத்தளத்தின் ஆரம்ப வீடமைப்புத்திட்டம் பூங்காக்கள் அமைத்த கண்ணியத்திற்குரிய பெருமகனார் சேர்மன் காதர் நிருவகித்தார்.  அதன்பிறகு குருனாகல் வீதி கடை பகுதியை அமைத்துக் கொடுத்த ஊரின் இக்கட்டான சமயங்களிலும் இம்மண்ணுக்கு ஒரு காவலனாக நின்ற மாண்புமிகு சேர்மன் இப்னு நிர்வாகம் செய்தார்.

அடுத்து சங்கைக்குரிய இறைநேசர் சேர்மன் ஹாபி தன்தொண்டுகளோடு நகரின் குடிநீருக்கான சேவையையும் செய்து ஒரு ரமலான் மாதத்தில் நோன்போடு இறையடிசேர்ந்த இம்மண்ணின் மாண்புமிகு மைந்தர் ஆவார். மேற்கூறிய பெருந்தகைகள் நம் மண்ணின் ஆரம்பகால நகரபிதாக்களாக வீற்றிருந்து தங்களால் இயன்ற வரை ஊருக்கு சேவை செய்தவர்களாவார்.

அதன்பின் எம் அன்புச் சகோதரர்கள் மாண்புமிகு ஜக்ரபும் நஸ்மியும்ஒருவர் பின் ஒருவராக நகரபிதாக்களாக இருந்து சேவை செய்தவர்களாவார் . புத்தளம் நகரின் கல்விக்காக பெரும் தொண்டு செய்த ஆளுமைமிக்க மாண்புமிகு சேர்மன் பாயிஸ் நிர்வாகம் செய்தார். எல்லோருடனும் நட்பாக பழகிய சங்கைக்குரிய ஹுஸைன் காக்காவும் பொறுப்பாக இருந்தார்.  குறுகிய காலம் இருந்தாலும் சகோதரர் மாண்புமிகு குயின்டஸ் குறையில்லாமல் நிர்வாகம் செய்தார். பின்னர் மீண்டும் ஆளுமைமிக்க சேர்மன் பாயிஸ் புத்தளத்தின் சேர்மனாக நிர்வாகம் செய்கிறார். இக்கட்டத்தில் அலிகானையும் தற்போதைய பிரதி சேர்மன் புஷ்பகுமாராவையும் சங்கையுடன் ஞாபகம் செய்கின்றோம்.

இது நம் மண்ணின் நகரசபை வரலாறாகும். தேசிய அரசியலில் மாண்புமிகு H.S. இஸ்மாயில் அவர்களுக்குப் பின் மாண்புமிகு பரிஸ்டர்  நெய்னா மரைக்கார் அவர்கள் களமிறங்கி முறையே நீதி, நிதி அமைச்சர்களாக புத்தகத்துக்கு பெருமை சேர்த்தார்கள் ,ரூபாய் நோட்டிலும் கையொப்பமிட்டார் . இவர்கள் வாழ்ந்த காலத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு தடவை தோல்வியை சந்திக்க நேர்ந்தாலும் கூட அன்னார் பெரும்பான்மை மக்களின் செல்வாக்கு உடையவராக வாழ்ந்தார்கள்.

M.H.M. Naina Maraikar

அடுத்து S.E.M. அசன் குத்தூஸ் என்ற உழைப்பால் உயர்ந்த மாண்புமிகு மனிதர் பாராளுமன்றத்தில் வீற்றிருந்து  தொண்டு செய்தார்கள் இடையிடையே மதிப்புக்குரியவர்களான சட்டத்தரணி அபுதாஹிரும்  S.E.M. அசன் குத்தூஸ் அவர்களது மகன் லத்தீபும் வலம் வந்தார்கள்.  பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும் அங்கம் வகித்து இந்த ஊருக்கு பெரும் தொண்டு செய்த மாண்புமிகு மனிதர்  M.H.M. நவவி அவர்கள் ஆவார். அடுத்து மாகாண சபைக்கும் இங்குள்ள யாழ்ப்பாண வாக்குகளால் பாராளுமன்றத்திற்கும் சென்றுதொண்டு செய்த நடுத்தர வர்க்கத்தின் முதல் புரட்சியாளர் மாண்புமிகு டாக்டர் இல்யாஸ் ஆவார். கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சராக பாராளுமன்றத்திற்கும் சென்று தொண்டு செய்தவர், தற்போதைய புத்தளம் சேர்மன் மாண்புமிகு பாயிஸ் ஆவார்.

புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ தொகுதியை  முன்வைத்து  பாராளுமன்றம் சென்றாலும் கூட பொதுவாக மாவட்ட மக்கள் அனைவருக்கும் பெரும் தொண்டு செய்து மறைந்த மாண்புமிகு அமைச்சர் தசநாயக்க அவர்களின் சீடராக இருந்து மாகாண சபையிலும் இன்று புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் தொண்டு செய்கின்ற மாண்புமிகு சிந்திக்க மாயாதுன்னே பாராட்டப்பட வேண்டியவர்.

தற்போதைய புத்தளம் மக்களின் பாராளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு அலி சப்ரி அவர்களின் “தர்ம சிந்தை” போற்றக்கூடிய ஒன்று . மேலும் மாகாண சபைகளில் தொண்டு செய்த மாண்புமிக்கவர்களான ரிபாத் டாக்டர் அவர்களின் தந்தையார் இஸ்மாயில் ஹாஜியார், சட்டத்தரணி கமர்தீன், இராதாகிருஷ்ணன், தாஹிர், யஹ்யா, ரியாஸ், நியாஸ் ஆகியோர் சங்கையுடன் நினைவு கூறப்பட வேண்டியர்வகள்.

அத்துடன் எமது பழம்பெரும் சங்கைக்குரிய U.C. மெம்பர்களான அசன் நெய்னாபிள்ளை, சட்டத்தரணி மொஹிதீன், யூ.செ. கபூர், மணி மாமா, உடையார் ஹாலித், வரிசை இப்ராஹிம் (நெருப்பு), உடையார் புஆத், T.S. ஆப்தீன், தட்டார் கபீர், மணல்தீவு மத்யூஸ், மணல்தீவு  பாவுல், கரீபா, பீர் ரஷீத், செ.கா. சமீம் (முனவ்வர் டொக்டர் தந்தையார்), பரகாத் சேர், அபூஹனீபா (கூப்பன் கடை), பீரிஸ் ஐயா (ஸ்ரீதர ஸ்டூடியோ), மஹ்பூப் மரைக்கார் (அரபா ரயிஸ் மில்), திருமதி கொஸ்தா, (ரயீசா) லத்தீப், ஒசன் (கருவாடு), அபூ காக்கா, மூஸின் (ஹபீல் டொக்டர் தனயன்), பாக்கீர், ஹபீல் (ஹைரியா அதிபரின் தம்பி), ஆகியோரையும் நிஸாம்தீன் சேர், ஹாலித் சேர், மோசஸ் சேர், சேவல் பாரூக், ரஹ்மத்துல்லாஹ் சேர், மெம்பர் அன்சார், ஹாதி (ஊசி), தட்டார் சலீம், நிஸ்தார், முஹ்ஸி சேர், T.S. அமீன், ஜவுபர் மரைக்கார், ஹபீல் நவுஸ், ரிபாய் (கைபீடி) போன்ற இம்மண்ணுக்கு சேவை செய்த பெருந்தகைகளை நினைவுகூருகின்றோம். (இதில் ஞாபக மறதி காரணமாக விடுபட்டவர்களை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொள்வோம்.)

தற்போதைய நகரசபை தலைவராக K.A. பாயிஸும் உப தலைவராக புஸ்பகுமாரவும் கடமையாற்றுகின்றனர். நகரசபை அங்கத்தவர்களான ரபீக், அஸ்கீன், ரஸ்மி, பர்வீன், ரிப்ராஸ், ஷிஹான். துமிந்த, விஜேதாச, டில்ஷான், ஜமீனா, குணசேகர, ஷ்ரியானி பெர்னாண்டோ, அனுல குமாரி, பெர்னாட் ராஜபக்ஷ, நகுலேஸ்வரன், ஷிபாக் ஆகியோர் சேவைபுரிகின்றனர். சித்தி சலீமா போன்றோரையும் சங்கையுடன் நினைவுகூருகின்றோம்.

இந்த ஆக்கத்தின் நோக்கம் இம்மண்ணுக்கு மகத்தான தொண்டுகள் புரிந்து இறைவனடி சேர்ந்த எம் மாண்புமிகு தலைவர்களை கண்ணியப்படுத்துவது ஆகும். அவர்களது ஈடேற்றத்திற்காக வாசகர்கள் அனைவரையும் துஆ இறைஞ்ச தூண்டுவதும் அதேபோல மகத்தான சேவைகள் செய்து கொண்டு நம் அனைவருடனும் வாழ்கின்ற இங்குள்ள அனைத்து அரசியல் சார்ந்த பெருமக்களையும் சங்கைபடுத்துவதுமாகும். இதில் நம் சமூகத்திற்கு சேவை செய்தவர்களோடு பெரும் பெறுமதிமிக்க தொண்டு செய்த சில பெருந்தகைகளின் பெயர்களும் அடங்குகின்றன. எனவே இவர்களும் எம்மைப் போன்ற மனிதர்கள் என்ற ரீதியில் இவ்வனைவரதும் பலவீனங்களை மறைப்பதோடு நம் சமூகத்தின் நலனுக்காக இவ்வனைவரதும் மனஒற்றுமைக்கும் பிரார்த்திப்போமாக.

இறுதியாக,

இந்த ஆக்கம் எனது மற்றைய ஆய்வுகளைப்போல் அல்லாமல் சர்சைக்குரியது என்பது புரிந்துதான் எழுதப்பட்டிருக்கிறது.

கட்சிகளுக்குள்ள, தனித்தனி அரசியல்வாதிகளுக்குள்ள, கருத்துமோதல்கள் வலுப்பெற்று, புரையோடிய புண்ணாகவும் இதயங்களில் இருந்துகொண்டிருப்பது என்பது அந்தக்காலம் தொட்டே நடந்துவரும் ஒன்றுதான். ஆயினும் இதை வாசிக்கும் அன்பர்கள் அனைவரும் எதிர்மறையாக சிந்திக்காமல், எமது நாடு இருக்கும் இன்றைய சூழலில் இந்த ஆக்கத்தின் நோக்கத்தை சற்று புரிந்துகொள்வானார்களானால்…. இந்த எழுத்து “சிறிது பயனடையலாம்”

நன்றி:
1. ஆங்கில பேராசான் சம்சுல் ரபீஉ அவர்களின் மகன் ரஸ்மி
2. சாகுல் ஹமீது முஹம்மது மொஹிதீன் இப்ராஹிம் (K.P)
(பழைய மொஹிதீன் ஜுவலர்ஸ்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சுவடிக்கூடம்View All