‘சீனானாக்கானா’ என அழைக்கப்பட்ட இவர் புத்தளம் ‘ஹெட் முவர்மேன்’ (Head moor man) ஆவார். 1923 இல் தேசாதிபதி சேர் வில்லியம் மனிங் அவர்கள் இரண்டாவது ‘ஹெட் முவர்மேன்’ஆக இவரை நியமித்து சிறிது காலத்தில் ‘ஹெட் முவர்மேன்’ ஆக்கினார். காதியாராகவும் கடமையற்றிய இவர் சமூகத்தில் நன் மதிப்பை பெற்றிருந்தார். மத பக்திமிக்க இவர் புத்தளம் மெளலாமகாம் பள்ளிவாசல் நம்பிக்கை பொறுப்பாளராகவும் இருந்தவர். மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நலன் நிலையத்தை நிறுவி அரசுக்கு அன்பளிப்பு செய்ததுடன் அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலைக்குரிய (தற்போதைய ஸாஹிரா ஆரம்பப் பாடசாலை) ஒரு பகுதி நிலத்தையும் அன்பளிப்பு செய்தார். புத்தளம் முஸ்லிம் லீக் தலைவராகவும் இலங்கை முஸ்லிம் லீக் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் எச் எம் ஸாலிஹ் மரைக்கார் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.