அதிபர் தம்பதிகள் புத்தளம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்

ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி தாபகரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் இருவரையும் நகர சபைக்கு அழைத்து கெளரவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதிபர் தம்பதியினர் தமது அயலவர் முதல் அதிகாரிகள், நகர பிதா உட்பட அனைத்து ஆளுமைகள் அத்துடன் வந்தோரை வாழவைக்கும் . . .

ஒரு தசாப்தகால கல்விச் சேவையை புத்தளம் மண்ணில் ஆற்றி விட்டு பிரியாவிடை பெற்றுச்செல்லும் அப்துர் ரஹீம் அதிபர் தம்பதியினர் தமது அயலவர் முதல் அதிகாரிகள், நகர பிதா உட்பட அனைத்து ஆளுமைகள் அத்துடன் அனைத்து புத்தளம் வாழ் மக்களுக்கும் தமது உளம் கனிந்த நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து விடைபெறுகின்றனர்.

ஆசிரியர்களான அப்துர் ரஹீம், நிஸாரா அப்துர் ரஹீம் தம்பதியினர் இருவரும் இலங்கை அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து கல்கமுவையில் இருந்து புத்தளம் கல்வி வலயத்தில் பதவியமர்வு செய்யப்பட்டதனால் 2010 இல் இங்கு வந்தனர். வடமேல் மாகாண கல்விப் பணிமனையினால் அதிபர் அப்துர் ரஹீம் வட்டக்கண்டல் முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். விஞ்ஞானப் பட்டதாரியான திருமதி நிஸாரா அப்துர் ரஹீம் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரிக்கு பிரதி அதிபராக நியமிக்கப்பட்டார். அதிபர் அப்துர் ரஹீம் தனது ஏழரை வருட சேவையின் பின்னர் வட்டக்கண்டலில் இருந்து வெட்டாளை அசன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்துக்கு அதிபராக நியமிக்கப்பட்டார்.

இவர்கள் இருவரும் தமது சேவையை மிகவும் திருப்திகரமாக நிறைவேற்றிய நிலையில் இடமாற்றம் பெற்று செல்கின்றனர். அமைதியான சுபாவமிக்க இருவரும் ஆளுமைமிக்கோர் என்பதனை அனைவரும் அறிவர். புத்தளம் கல்வி அபிவிருத்திக்கு ஒரு தசாப்த  காலம் ஆற்றிய பணியை புத்தளம் சமூகம் என்றும் மறக்காது. அதற்கு உதாரணமாக ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி தாபகரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் இருவரையும் நகர சபைக்கு அழைத்து கெளரவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அப்துர் ரஹீம் அவர்களின் முதல் நியமனம் அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ முஸ்லிம் மகா வித்தியாலயமாகும். நிஸாரா ரஹீம் மாகோ,  புதுருவகந்த சிங்கள மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்றார். தற்போது அதிபர் ரஹீம் மாஹோ அல் மதீனா மகாவித்தியாலயத்துக்கு அதிபராகவும் நிஸாரா ரஹீம் கல்கமுவ முன்னோடி முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு பிரதி அதிபராகவும் இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் சேவையாற்ற கிடைத்தமையையும் அங்கிருந்து அரிய ஆளுமைகளாய் உருவாகி இம்மண்ணுக்கு பங்களிப்புச் செய்யும் மாணவர்களின் வெற்றிகளைக் காணக்கிடைத்தமையும் அரும் பெரும் பாக்கியமாகக் கருதுவதாக நிஸாரா அவர்கள் தனது நன்றி நவிலலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த  பத்து வருட காலம் நலமாய்  வாழ்ந்து எதிர்பார்ப்புகளைத் தாண்டி பிரியாவிடையில் கெளரவப்படுத்திய அதிபர், ஆசிரியர் குழாம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் உட்பட அனைவருக்கும் தனது நன்றிகளை கூறுவதுடன் வந்தோரை வாழவைக்கும் புத்தளம்  மண்ணுக்கும் அதன் வாழ் மக்களுக்கும் தமது நன்றியறிதலை அவர்கள் தெரிவிக்கின்றனர்.