அமரர் கந்தசாமி ஆசிரியர் பற்றி அன்னாரது மாணாக்கர்கள்- மபாஸ்

Zarook Sir, Kandasamy Sir ஆகியோர் 80,90,2000 களில் புத்தளத்தின் கணித, விஞ்ஞான மறுமலர்ச்சியில் மறுக்க முடியாத இரு துருவங்கள். அது மட்டுமில்லாமல் கடமை உணர்ச்சிக்கு நிகரில்லா உதாரணப் புருஷர்கள்.

அடியில் ஆரம்பித்து அரவணைப்பில் முடிவுற்ற ஓர் உறவு

இன்று 29.10.2020 மாலை எனது Batch நண்பர்களின் WhatsApp குழுமத்தில் சரியாக மாலை 06.13 இற்கு கந்தசாமி ஆசிரியரின் “அகால” மரணச் செய்தி பகிரப்படுகின்றது.

“சுள்” என்ற ஓர் உணர்வுடன் மீண்டும் கண்களை பிசைந்து கொண்டு அந்தச் செய்தியை வாசிக்கின்றேன். ஆம் வெறும் மரணம் அல்ல, “அகால மரணம்”.

விடயத்தை உள்வாங்கிக் கொண்ட மனதுக்குள் ஓர் ஏக்கம், படபடப்பு. சுகயீனமுற்றிருந்தார் என்பது தெரியும், இருந்தாலும் என்ன நடந்திருக்குமோ என்ற கேள்விக்கணைகள் என்னுள் பாய்கின்றன. அடுத்து ஒரு கிணறின் Videoவும், அத்துடன் சில அழுகை 😭😭😭 Smileyக்கள்.

“கிணற்றுக்குள் விழுந்து…” என்ற வாசகங்களை கண்டவுடன் மனது கனக்கின்றது. ஒரு வகையான சோக மேகம் என்னை ஆட்கொள்கின்றது. நிச்சயமாக என்னைப் போன்ற அவரது பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குள்ளும் இதே சோகம் இத்தருணத்தில் குடிகொண்டிருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவ்வேளையில் பல இரங்கல் செய்திகள் எழுதப்பட்டிருக்கும், அல்லது எழுதுவதற்காக, Publish பண்ணப்படுவதற்காக நிச்சயம் தயாராகிக் கொண்டிருக்கப்படலாம். பொதுவாக நீண்ட இரங்கல் செய்திகளை நான் பதிவது குறைவு. என்றாலும் என் பாடசாலை நாட்களை பாதித்த மதிப்புக்குரிய கந்தசாமி Sir தொடர்பில் சில நினைவுகளை என் பிட்சரங்களுக்காக பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

முதல் அனுபவம்
————————-
1998, தரம் 8; புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் ஓர் Interval முடிவடையும் நேரம்; Bell அடிக்கப்படுகின்றது. Cader Hall இனுள் இருக்கும் எமது வகுப்புக்களுக்கு அனைவரும் அந்த மண்டபத்தின் பல வாயில்களினாலும் அவசரம் அவசரமாக உள் நுழைகின்றனர். அதன் பிரதான வாயிலை தவிர்த்து ஏனைய வாயில்களினால் அனைவரும் உள்நுழைகின்றனர். பிரதான வாயிலில் ஓர் வெண்ணிற Shirt உம், வெண்ணிற Trouser உம் போட்ட ஒரு “நானா” அதன் நிலையில் கையை சாய்த்துக்கொண்டு நாம் விரைந்து உள் வருவதனை அவதானிக்கின்றார். மற்றவர்கள் அந்த வாயிலை தவிர்ந்ததற்கும் அவர் அங்கு நின்றது தான் காரணம்.

என் புகைக் கண்களுக்கு மட்டும் “நானா தானே” என்ற அலட்சிய சமிக்ஞை கால்களுக்கு கொடுக்கப்பட, அசட்டைத் திமிறுடன் அந்த நானாவின் கைகளுக்குள்ளால் அவரின் காலையும் தள்ளிக்கொண்டு நுழைகின்றேன். நுழைந்து இரண்டு அடி கூட நகர்ந்திருக்காது. ஓர் கை என் கழுத்தைப் பிடித்து என் ஓட்டத்தை நிறுத்துகின்றது.

“என்ன திமிறுடா உனக்கு!?…” என்று ஏசியவராக “டுமுக்கு…டுமுக்கு” என்று முதுகில் விழுகின்றது.
ஏற்கனவே புகையாக இருந்த என் கண்களுக்கு, முதுகில் விழுந்த அடி, இன்னும் கண்ணில் புகைச்சலை ஏற்படுத்தியது. அதுவரை யார், ஏன் அடிக்கின்றார்கள் என்பது புரியவில்லை. படபடப்பின் உச்சத்தில் காய்ந்த உமிழ்நீரை சுரப்பதற்குள் திரும்பி பார்த்தபோது தான் கந்தசாமி Sir ஐ இனம் கண்டு நடந்தவற்றை புரிந்து கொண்டேன்.

“இவர் பெரிய ஆளு…ஆள தள்ளிப்போட்டு தான் வருவீங்களோ?”… மற்றவர்கள் கிளுகிளுக்க, வெட்கத்தில் மௌனித்த சிரிப்புடன் என் Bench இற்கு சென்றேன். அண்மையில் எமது பாடசாலைக்குச் சென்ற போது, இன்று சுயரூபம் இழந்து நிற்கும் அந்த வாசலில் சற்று நின்று இந்த சம்பவத்தை மீட்டி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

தொடரடி (மொத்தல்..ம்ம்..)….
———————————————
அதே தரம் 8 இல் பக்கத்து வகுப்பிற்கு விஞ்ஞான பாடம் எடுக்கும் அவர், அப்பாட வேளையில் திறந்த காதர் மண்டபத்தில் அந்த வகுப்பின் இரு மருங்கிலும் இருக்கும் வகுப்புக்களையும் தன் வருகையால் அமைதிப்படுத்தும் ஆற்றல் மிக்கவர். பக்கத்து வகுப்பில் பெண் ஆசிரியரோ, ஆண் ஆசிரியரோ, கந்தசாமி Sir இன் பிரசின்னம் அங்கிருந்தால் பூச்சிகளின் அரவம் கூட அடங்கிப்போகும் அளவிற்கு மயான அமைதி நிகழும். அந்தளவு பக்குவமாக மாணவர்களும், ஆசிரியர்களும் பக்கத்து வகுப்புக்களில் நடந்து கொள்வர். விரல் விட்டு எண்ணக் கூடிய ஆசிரியர் சிலருக்கு இறைவன் கொடுத்த ஓர் அருள் எனலாம்.

இப்படி இருக்கும் போது ஒரு நாள் எமது வகுப்பில் பாடவேளைக்குரிய ஆசிரியர் வரவில்லை. பக்கத்து வகுப்பிற்கு வருகைதந்த கந்தசாமி Sir, எம்மைப் பார்த்து “எல்லாரும் மேசைல தலைய வச்சு தூங்கு… ஒரு சத்தம் வரக்கூடா….” கட்டளையிட்ட மறு கணமே கதிரைகளை Adjust பண்ணும் இரைச்சலுடன் எமது தலைகள் சாய்ந்தன.

அடுத்த வகுப்பில் மீட்டலுடன் விஞ்ஞான பாடம் துவங்குகின்றது. “ஒவ்வொருத்தரா ஆவர்த்தன அட்டவணைல உள்ள மூலகங்கள பற்றி கேட்கப் போறேன். மூலகத்தை சொல்ல அப்படி வரிசைல ஒவ்வொருத்தரும் அதன் குறியீட சொல்லணும். சொல்லாதவனுக்கு… (‘நழு நழு’ என்று நாக்கை கடித்தவராக கண்ணையும் முழுசிக்கொண்டு) நல்ல நொள்ளு இருக்கு சரியா….?” என்றவாறு மூலகங்களின் பெயரை எழுந்தமாராக ஒவ்வொருத்தரிடம் சத்தமாக கேட்கின்றார். விடை சொல்ல முடியாதவர்கள் ‘நொள்ளு பூசைக்காக’ ஒரு பக்கமாக வரிசப்படுத்தப்படுகின்றனர். அங்கு விடை சொல்ல முடியாதவர்களின் விடைகள் எமது வாய்க்குள் முணுமுணுக்கின்றன. அடுத்தவரிடம் “ஹீலியம்?” என்று தொடுக்கப்படுகின்றது. அதுவரை வாய்க்குழிக்குள் விடையை கூறிக்கொண்டிருந்த நான், நிதானம் தவறி

“H..E !!!”
என்று உரத்துக் கூறிவிடுகின்றேன். கையிலிருந்த புத்தகத்தை “தொப்” என்று மேசையில் அடித்தவராக, கண்ணாடியை கிழற்றிக் கொண்டு எமது வகுப்பிற்குள் விறு விறு என்று நுழைகின்றார்…
”விடை சொன்னவன் எழும்பு”…
நெஞ்சு படபடக்கின்றது. எழவில்லை.
“விடை சொன்னவன் மரியாதையா எழும்பு…”
இரண்டாம் முறை குரல் உரமாகின்றது. இனியும் எழும்பாவிட்டால சரியில்லை என்று மனச்சாட்சி உறுத்த, Guinea Pig போல மெதுவாக தலையை உயர்த்துகின்றேன். என்னிடத்துக்கு விரைவாக வந்த அவர், காதை திருக்கி, முதுகில் அதே “டுமுக்கு..டுமுக்கு” அடியுடன்
“என்ன திமிர் இருந்தா அங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்வ? விடை மட்டும் பிழையா இருந்திருந்தா இன்னும் கூட தந்திருப்பன்” என்று ஏசி விட்டு அவரது வகுப்பு மாணவர்களை நோக்கி கண் அடித்து சிரித்தவராக தனது கதிரைக்குச் செல்கின்றார். உணமையிலேயே அந்தச் Psychology எனக்கு அன்று புரியவில்லை. அதிர்ச்சி தந்த அவமானத்துடன், வாயை கட்டுப்படுத்தும் பாடத்தை மட்டும் கற்றுக்கொண்டேன்.
முதல் மரியாதை!
————————–
1999, தரம் 09; SEC (அன்றைய Saidha Education Centre) இன் தரம் 09 இற்கான முதல் விஞ்ஞான வகுப்பு, திங்கட்கிழமை மாலை 03.30மணி.

அது பலருக்கும் முதல் விஞ்ஞான வகுப்பாக இருந்தாலும், எனக்கு கந்தசாமி Sir விஞ்ஞான பாடம் எடுக்கும் முதல் வகுப்பு. 03.20 போல மழை சற்று உரத்து பெய்கின்றது. 03.30 ஆகியும் மழை குறைந்த பாடில்லை. இனியும் தாமதிக்க ஏலாது என்று குடை ஒன்றை எடுத்துக் கொண்டு விரைகின்றேன். 03.40 இற்குள் SEC வளாகத்துக்குள் நுழைந்த நான், தரம் 09 இற்கான வகுப்பை தேடிப்பிடிப்பதற்குள் 03.45 ஆகி விட்டது. கந்தசாமி Sir என்னை கண்டும் காணாதமாதிரி நிற்கின்றார். மாணவர்களுடன் அவர் நடாத்தும் உரையாடலிலிருந்து அவர் இன்னும் பாடத்தை ஆரம்பிக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது, என்றாலும்

“ஏன்டா, உள்ளுக்க எடுக்க மாட்டிக்கிறார்?”, என்று உள்ளம் குடைகின்றது…
சற்று நேரத்தில் “உள்ள வா” என்றதுடன், குடையை மடித்துக்கொண்டு கமக்கட்டில் மாட்டிக் கொண்டு உள்ளே நுழைய, என்னை எட்டிபிடித்த அவர், அவரது Trademark நொள்ளான முழங்கைக்கு பின்னால் மேல் பகுதியில் கிள்ளிக் கொண்டு, நோவினால் “ஆ” என்று நான் அலற, என் முகபாவத்தை போன்றே சுளித்திக் கொண்டு
“உடையார் மாதிரி குடையை பிடிச்சுக் கொண்டு வாரார். என்ட Class இற்கு Timeக்கு வரணும். போ..போய் இரு…” என்றார்.

“முதல் Classலயே இப்படியா..ஏன்னா மனுஷன்யா இவன்!” என்று என் மனம் குமுற போய் அமர்ந்தேன்…

இதே முதல் வகுப்பு மரியாதை SEC தரம் 10 கணித பாடவேளையிலும் நடைபெற்றது. எண் தொடர்களை கரும்பலகையில் எழுதி விளங்கப்படுத்திய பின்னர் எம்மை குறித்துக் கொள்ளச் சொன்னார். அனைவருக்கும் முதலாக நான் எழுதிவிட்டு அவரது முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன்.
“டேய், அதுக்குள்ள எழுதிட்டியா? கொண்டா கொப்பிய”
என்று கையை நீட்ட, நானும் கொஞ்சம் ஆத்ம திருப்தியுடன் கொப்பியை நீட்ட, தனது கண்ணாடியை பணித்தவராக எழுதியதை Scan செய்கின்றார். 5 செக்கன் போயிருக்காது….
“ஹா ஹா…கள்ளன் மாட்டினான்..” என்று இளித்தவராக, “இஞ்ச வா” என்றார். ஒரே குழப்பத்துடன் அவரை நோக்கி செல்கின்றேன்…
கந்தசாமி Sir: ”Z+, Z- எப்படி எழுதியிருக்கின்றேன்…Boardஅ பார்த்து வாசி…”
நான்: “-3, -2, -1, 0, 1, 2, 3…”
கந்தசாமி Sir: “நீ எழுதினத வாசி”
நான்: “-1, -2, -3, 0, 1, 2,…” (விஷயத்தை புரிந்து கொண்டு தலையில் கையை வைத்துக் கொள்கின்றேன்)
மீண்டும் அதே Signature நொள்ளை வாங்கிக் கொண்டு “அவசரப்படாதே” என்று Bench இற்கு என்னை அனுப்பினார்.
இரண்டும் முதல் வகுப்பு தண்டனைகள். என்றாலும் எனது பின்னைய நாட்களில் நிறைய பாடங்களை கற்றுத் தந்த அனுபவங்கள் அவை. அவற்றைத் தொடர்ந்து வந்த O/L கல்விப் பயணத்தில் அவரது விருப்பத்துக்குரிய சில மாணவர்களில் நானும் ஒருவனானேன்!
தரம் 10 இல் இரண்டாம் முறை Haj இற்கு குடும்பத்துடன் சென்று திரும்பிய போது, அவரிடம் நான் பயணம் சொல்லவில்லை என்பதற்காக, வகுப்பில் வைத்தே ஏனைய மாணவர்களிடம் கிண்டல் அடிப்பார்;
“இங்கே ஒருத்தர் இருக்காரு, அவரு பெரிய ஆளு. இனி அவர ஏச முடியாது.” என்று சொல்லிக்கொண்டு வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மௌன சிரிப்பொன்றை போடுவார். உண்மையில் மாணவரின் உள்ளங்களை கொள்ளைக் கொள்வதில் அவருக்கு நிகர் வேறு எவரும் அக்காலத்தில் இருந்ததில்லை. அதனையொட்டி எனக்கு அவர் வைத்த பட்டப்பெயர் “Double Haj”. இன்றளவிலும் எனது நண்பர் வட்டத்தில் அது வளம் வருகின்றது.
O/L Results வந்ததும் “அவரிடம் Results சொல்ல போறது வேலையில்லடா, கணக்கும் எடுக்க மாட்டாரு” என்று சில Senior வகுப்பு மாணவர்களின் அறிவுரைகளையும் உதாசீனம் செய்தவனாக, SEC Tutoryக்குள் சில நண்பர்களையும் தைரியப்படுத்தியவனாக நுழைகின்றேன். எமது அடுத்த வருட மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். எம்மைக் கண்டவுடன்
“ஆ..சரி சரி..நல்லம்..நல்லம்” என்றவாறு மீண்டும் வகுப்புக்கள் நுழைந்தார்.
என்னா, ஏது Result என்றும் கேட்கவில்லை. நாமும் அதனை பொருட்படுத்தவில்லை. காரணம் அவரது தன்மானப் போக்கும், Psychology ஐயும் அதுவரை நனறாகவே புரிந்து வைத்திருந்தோம். எம்மிடம் சந்தோஷத்தை வெளிப்படுத்தாத அவர், வகுப்பு நடாத்தப்பட்டிருக்கும் மாணவர்களிடம் அதனை வெளிப்படுத்துவார் என்பதனை எமது Senior கள் இதே போன்று Resultsகூற வந்த போது எம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டதனை வைத்து புரிந்து கொண்டு விடைபெற்றோம்! தன்மானத்தை பேணுவதில் ஓர் வித்தியாசமான மனிதர்!
இறுதிச் சந்திப்பு
————————-
2004 February மாதம்; Zahira Sports Meet நடைபெறுகின்றது. A/L விடுகை ஆண்டில் இருக்கும் நாம், May மாதத்திற்குப் பிறகு பாடசாலை வாழ்க்கைக்கே விடைபெற இருக்கின்றோம். அதுவரைக் காலமும் எந்தவொரு Sports meet இலும் March Past ஐத் தவிர எந்த ஒரு Track Event அல்லது Team Games இலோ கலந்து கொண்டது கிடையாது, கலந்து கொண்ட சந்தர்ப்பமும் கிட்டவில்லை. இனி எங்கே சந்தர்ப்பம் கிடைக்கப்போகுது என்று, Fun இற்காக 1500m மற்றும் 5000m போட்டிகளில் Under 18 பிரிவில் தாரிக் இல்லம் சார்பாக களம் இறங்க பெயர் கொடுத்தேன்.
1500m போட்டி முதலில் ஆரம்பிக்கின்றது. முதல் இரு சுற்றுக்களுடன் தாகம் வாரி இறைக்கின்றது. வேகம் அமர்முடுகளில் செல்லச் செல்ல, கொட்டோ கொட்டென்று வெயிலும் என்னுள் மயக்கத்தை ஏற்படுத்த ஆரமபிக்கின்றது. மூன்றாவது சுற்று ஆரம்பிப்பதற்குள் முன்னிலையில் ஓடிய அன்புச் சகோதரன் பசூல் ஹக், என்னை கடக்கின்றான்… மற்றைய இல்லங்களில் இருந்தும் “ஹூ” என்ற கூக்குரல் கேட்ட மாத்திரத்தில் அப்படியே Track இன் நடுவில் மூர்ச்சையாகின்றேன். சுட்டெரிக்கும் தரை கூட என் மயக்கத்தை கலைக்கவில்லை. சற்று நேரத்தில் ஓர் குரல் அண்மிக்கின்றது.
“சரி, சரி ஆசீர்வாதம் வாங்கினது போதும்..ஒழும்பு…ஒழும்பு…” என்று எனது தோள்களை ஒரு கை உளுப்புகின்றது. தலையை நிமிர்த்து பார்க்கின்றேன்; கந்தசாமி Sir.
“ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாடா உனக்கு” என்று என் மனம் கடுமையாக அவரை விமர்சிக்க, Dr. Azath உம், வேறு சிலரும் என்னை அவர்களின் தோள்களுக்குள் மாட்டிக்கொண்டு அப்புறப்படுத்துகின்றனர்.
அது தான் அவருடன் நான் பாடசாலையில் அனுபவித்த இறுதி சம்பாஷனை. அதற்கு பின்னால் பல சந்தர்ப்பங்களில் வீதிகளில் கண்டாலும், ஒன்றில் அவர் கண்டும் காணாததுமாக செல்வார், அல்லது ஓர் சடுதியான சிரிப்புடன் செல்வார். ஒரு கணப்பொழுதிற்கு அது Odd ஆக இருந்தாலும், அது தான் அவரது தன்மை என்பதனை, அவர் மீது இருக்கும் மரியாதை என்னை அமைதிப்படுத்திவிடும்.

எனது வலீமாவிற்கான அழைப்பிதழை சில நண்பர்களினூடாக அனுப்பிய போது, எனது பெயரை ஆரம்பத்தில் மறந்த அவருக்கு அவர் எனக்கு வைத்த பட்டப்பெயரான ‘Double Haj’ என்பதனை கூறிய போது நினைவுகூறியதாக கூறினர். எனது வலீமா வைபவம் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் தான் விரதம் இருப்பதாக கூறி வர முடியாமல் போகும் என்ற செய்தியையும் கவலையுடன் கூறியிருக்கின்றார்.

தனது தேகத்தில் தெம்பு இருக்கும் வரைக்கும் பிற்கால மாணவர்களுக்கு அவரது கற்பித்தல் பணியை செவ்வன்னே நிறைவேற்றியதாகவே அறிய கிடைக்கின்றது. Zarook Sir இன் உற்ற நண்பரான அவர், அவரின் மறைவிற்கு பின்னால் இன்னும் சோர்வு அடைந்ததாகவும் கேள்விப்பட்டோம்.

கவலையால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்!

ல இப்படியான Legendகளின் Legacyக்கள் அடுத்த பரம்பரை ஆசிரியர்களில் தொடரப்படுமா?

S.M.Mohammed Mafaz
29.10.2020