அருகிப் போன களிகம்பு விளையாட்டுக் கலை

நமது மூதாதையர், ஊர் விசேட வைபங்களின் போது அழகான கைகுட்டையை தலையில் அணிந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு அடி நீளமான வலிமையான…

(ஆக்கம் :- அபூஹனிபா நவ்ஷாத்)

நமது மூதாதையர், ஊர் விசேட வைபங்களின் போது அழகான கைகுட்டையை தலையில் அணிந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு அடி நீளமான வலிமையான இரண்டு கம்புகளை இருகப் பிடித்து கொண்டவர்களாக அந்த கலைக்குரிய வரிசையில் நின்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் பாடியவர்களாக பாடலின் வேகத்திற்கேற்ப அமைதியாகவும் சுழன்று சுழன்றும் கம்பை அடித்து விளையாடிய விளையாட்டே களிகம்பு விளையாட்டாகும்.
.
இந்த களிகம்பு துவர மரத்திலிருந்து செதுக்கப்பட்டதாகும். ஏனெனில் துவரக்கம்பினால் அடிக்கும் போதுதான் கணீரென்று கடும் சப்தம் உருவாகும். அத்தோடு கம்பு எளிதில் உடையாமல் வலிமையாகவும் இருக்கும்.
அடிக்கும் அடி மற்றவர்களின் கம்பில் படாமல் விரல்களில் பட்டுவிட்டாலோ பெரும்பாலும் விரல்கள் உடைந்து விடும். அந்தளவு வேகமான அடியாகும்.
.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரத்து முஸ்லிம்களின் மரபு வழி பாரம்பரியமாக இக்கலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாகியதாகும். போர்த்துக் கீசியரை எதிர்த்துப் போராடிய கேரள சமோரின் மன்னனின் தளபதிகளாக விளங்கிய குஞ்செலி மரைக்கார் சகோதரர்கள் இந்திய சுதந்திரப் போரின் ஆரம்ப வீரர்களின் வரிசையில் வைத்து போற்றப்படுபவர்கள் ஆவார்.
.
இவர்கள் இந்த களிகம்புக் கலையை தங்களது சொந்த ஊரான பொன்னானி நகரத்தின் விசேட வைபங்களுக்கு மக்கள் விளையாட ஊக்குவித்தவர்களாவார். பர்மா தேக்கு மரத்தில் குடைந்து செய்யப்பட்ட நீண்ட படகுகள் மூலம் ஆரம்பத்தில் கச்சவடத்திற்காக (வியாபாரம்) இலங்கை வந்த மலையாள சகோதரர்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே இக்கலையை இலங்கையின் கரையோரங்களுக்கு கொண்டு வந்தனர். அத்தோடு அவர்களது மரபுவழி தற்காப்புக் கலையான ‘களரி’ கலையையும் நம் நாட்டவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர்.
.
இக்கலையை கற்றவர்கள் அக்கால சீன அடி முதல் கராத்தே, ஜுடோ அனைத்தையும் எதிர் நின்று ஈடுகொடுத்து தம்மை காத்துக் கொண்டனர். மேற்குறிப்பிட்ட இரண்டு கலைகளுமே நம் நாட்டில் தற்போது அருகிவிட்டன.
.
நன்றி
.
WAK