அரூஸ் : ஓய்வற்ற பணியாளனின் ஓய்வு

சிறிதளவும் எதிர்பாராத பேரிழப்பு. குறிப்பாக கனமூலை கிராமத்தின் வரலாற்றிலும் பொதுவாக இந்தப் பிரதேசத்தின் வரலாற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாத ஆளுமை…

(அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி))
.
சிறிதளவும் எதிர்பாராத பேரிழப்பு. குறிப்பாக கனமூலை கிராமத்தின் வரலாற்றிலும் பொதுவாக இந்தப் பிரதேசத்தின் வரலாற்றிலும் பிரித்துப் பார்க்க முடியாத ஆளுமை. கனமூலையின் அசைவியக்க வரலாறு எழுதப்படும்போது அரூஸ் மௌலவி அல்லது அரூஸ் ஹஸரத் என்ற நாமத்தை தவிர்த்து எழுத முடியாது. கனமூலை கிராம மாற்றத்திற்கான உழைப்பில் அவரது பணியும் பங்களிப்பும் காத்திரமானது. ஊரையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய ஓய்வற்ற ஒரு பணியாளனின் மரணம். அதுவொரு சாதாரண மரணமல்ல ஈடு செய்யவே முடியாத இழப்பை தந்த மரணம். மீண்டுமொரு அரூஸை இந்தக் கிராமம் பெற்றுக்கொள்ள எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படுமோ தெரியாது.
.
மூன்று பெண் பிள்ளைகளின் பின் ஒரு ஆண்மகனாகப் பிறந்தவர். அவர் நான்கு சகோதரிகளையும் இரண்டு சகோதரர்களையும் உடன் பிறப்புகளாகக் கொண்டவர். தனது குடும்பத்தின் கேந்திரமாக (Family Hub) இருந்தாரென்று சொல்வது அவர்பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. சகோதர, சகோதரிகள், அவர்களது பிள்ளைகள் என அனைவரது விவகாரத்திலும் ஓடியாடி, பார்த்து, கவனித்து என்று எல்லாமே அவர்தான். அவரில்லாத ஆலேசனை, முடிவு என்று எதுவும் அந்தக் குடும்பத்தில் கிடையவே கிடையாது. எல்லாமே தம்பி, எல்லாமே நாநா, எல்லாமே மச்சான், எல்லாமே மாமா. இதுதான் அந்தக் குடும்பத்தின் நிலைப்பாடு.
.
மறுபக்கம் தனது மனைவி மூன்று பெண் பிள்ளைகள். மூத்தவள் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு. இவ்விடத்தில் அவரது வகிபாகம் என்னவென்று நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. எல்லாமே கணவன், எல்லாமே வாப்பா. தனது மனைவி பிள்ளைகள் சன்மார்க்க நெறிகளைப் பேணி வாழ வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையோடும் கவனத்தோடும் இருந்தவர். அதற்கு தனது உச்ச கட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்டவர்.
.
இவற்றிற்கு அப்பால் ஒரு மஸ்ஜிதின் இமாமாக அவரது பணி ஈடிணையற்றது. மஸ்ஜித் இமாம்களின் இமாம் என்று அவரைக் குறிப்பிடலாம். ஒரு இமாம் என்றால் யார் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணம். இமாமாக, முஅத்தினாக, ஒரு சிற்றூழியனாக அவரது பங்களிப்பு மகத்தானது. குறித்த மஸ்ஜிதின் உள், வெளி விவகாரங்கள் அனைத்தும் அவர்தான். அவரின்றி அந்த மஸ்ஜித் அனுபவிக்கும் வலியை இந்த மானிட உலகம் உணரமுடியாது. அதன் தூய்மையில், அதன் வசீகரத் தன்மையில், நாளாந்த பௌதீக வளர்ச்சியில் அவர்தான் முன்மொழிவுகள் கொண்டு வரவேண்டும்; ஆலோசிக்க வேண்டும்; அமுலாக்கம் செய்ய வேண்டும். அந்த மஸ்ஜிதின் தோற்றப்பொழிவுக்குப் பின்னால் அரூஸ் மௌலவியின் உள்ளமிருக்கின்றது என்று துணிந்து சொல்வேன். மஸ்ஜிதின் விடயங்களில் அவர் பொடுபோக்காக இருந்தார் என்று எவராலும் சொல்ல முடியாது.
.
அவர் ஒரு மஸ்ஜிதின் இமாமாகத் தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. ஊரின் இமாமாக அவர் இருந்தார். கனமூலையில் ‘ஹஸரத்’ என்றால் அது அரூஸ் மௌலவிக்கேயுரிய சிறப்பு நாமமாக இருந்தது. அவரது குரலுக்கும், கருத்திற்கும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கிராமத்திலிருந்தது. ஊரினதும் அயல் கிராமங்களினதும் மிம்பர்களை அலங்கரித்து வந்தார். ஊரின் பொது சபையில் தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வந்தார். குறிப்பாக தனது மஹல்லா மக்களினது இன்ப, துன்பங்கள், கஷ்ட, நஷ்டங்கள் எல்லாவற்றிலும் அவர் ஊடுருவியிருந்தார். எந்த வீட்டில் யாருக்கு என்ன தேவை? என்ன பிரச்சினை? என்ற தகவல்களை தனது நுனி விரலில் வைத்துக்கொண்டிருந்தார். மஹல்லாவின் இளைஞர்களை வழிநடத்துவதில் தனித்துவமான வழிமுறைகளை கையாண்டார். குடும்ப விவகாரங்கள், கணவன், மனைவி முரண்பாடுகள் என்பவற்றை தீர்த்து வைப்பதில் முன்னணியில் நின்றார். தனது மஹல்லா எல்லா மஹல்லாக்களுக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பது அவரது பேரவாவாக இருந்தது. அழிக்க முடியாத சுவடுகளை அவர் தன்னந்தனியாக இந்தக் கிராமத்தில் பதிப்பித்திருக்கின்றார்.
.
பாடசாலையில் அவர் கல்வி சாரா ஊழியர். ஆனால் அவரது வகிபாகம் கல்விசார் ஊழியர்களையும் மிஞ்சியது. பாடசாலைக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் தன் பிள்ளையாகவே பார்த்தார். அதிலும் குறிப்பாக ஏழை மாணவர்களின் விவகாரங்களில் கரிசனையோடு செயற்பட்டார். ஒவ்வொரு பிள்ளையும் படித்து கண்ணியமாக வாழ வேண்டும் என தினம் கனவு கண்டார். பெண்பிள்ளைகளுக்கு ஒரு தந்தையாகவே அந்த வளாகத்தில் அவர் வளம் வந்தார். ஆசிரியர்களை மதிப்பதிலும் அவர்களது தேவைகளை நிறைவு செய்வதிலும் அவர் சலிப்படைந்ததில்லை. பாடசாலை அலுவலகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலமான பாலமாக அவர் இருந்தார்.
.
அவர் தேசியப் பணியின் பங்காளனாக இருப்பதற்கு மூன்று தேசிய அமைப்புகளை தெரிவுசெய்தார். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பாடசாலை. ஊரிலுள்ள மூத்த ஆலிம்களையும் முந்திக்கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டவர். இம்மூன்று அமைப்புகளிலும் தனது உயர்ந்த பட்ச பங்களிப்பை வழங்கிய இறையூழியன். இவ்வமைப்புகளின் பணியில் தொய்வின்றி உழைத்தார். அன்பு, பணிவு, பரிவு, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, சில விடயங்களை கண்டுகொள்ளாமை, முன்னிற்றல், முன்தள்ளுதல், துணிவு, விடாப்பிடியாக நிற்றல், பொறுப்பேற்ற காரியத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை ஓயாது உழைத்தல், அர்ப்பணிப்பு என்று எண்ணற்ற விலை மதிப்பற்ற குணப்பண்புகளோடு இவ்விரு அமைப்பிலும் தனது காத்திரமான பங்களிப்புகளை வழங்கியவர்.
கனமூலைக் கிராமத்தின் நிலமெங்கும் ஊடுருவிப் பாய்ந்த வேர். ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த இறைபணியாளன்; சமூகத் தொண்டன். மிக மிக அரிதான மனித வளம்.
.
இங்கு கனமூலையின் சமூகத் தலைமைகளுக்கும் நலன் விரும்பிகளுக்கும் சொல்ல விரும்பும் செய்திகள் பல உண்டு. அது பள்ளித் தலைமையாக, அரசியல் தலைமையாக, ஆன்மீகத் தலைமையாக, அறிவுத் தலைமையாக என்று எவராக இருந்தாலும் சரி.
.
“இனி அரூஸ்கள் பிறக்கமாட்டார்கள்; அவர்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்பதை உங்களுக்கு அழுத்திச்சொல்கின்றேன்.
.
WAK