அறிவியல் மரபுக்கு வித்திட்ட பேரறிஞர் சைமன் காசிச் செட்டி – 06

(“கலா பூஷனம்” , “தாஜுல் அதீப் ” அல்ஹாஜ் A.N .M .ஷாஜஹான் அவர்கள் சைமன் காசிச்செட்டி பற்றி எழுதிய பெரிய கட்டுரை ஒன்றின் சுருக்க வடிவம் இங்கு தரப்படுகின்றது. . )

(06)

(‘கலாபூஷணம்’, ‘தாஜுல் அதீப்’, அல்ஹாஜ் ஏ.என்.எம்.ஷாஜஹான்)

சைமன் காசிச் செட்டி எப்போதும் தமக்கு சூழவுள்ள சுதேச மக்களைப் பற்றியே சிந்தித்தார். சமூக வாழ்விலும் மத வழிபாடுகளிலும், கல்வியிலும் சுதேச மக்கள் மேம்பாடடைய வேண்டுமென்ற நோக்கில் தமது நோக்கத்தையும், பணத்தையும் செலவிட்டார்.

Church1839ம் ஆண்டில் கற்பிட்டியில் புறட்டஸ்தாந்து தேவாலயமான சென்ற் பீட்டர்ஸ் தேவாலயத்தைக் கட்டி முடிப்பதில் செலவின் அரைப் பாகத்தைத் தாமே செலவளித்தார்.

Church3

இவ்வாலயம் நாளடைவில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட போது 1870ம் ஆண்டில் புத்தளத்தில் நிறுவப்பட்ட சென்ற் கிளமென்ற் தேவாலயத்துக்கு அங்குள்ள புனித சின்னங்கள் கொண்டு வரப்பட்டன.

Church4

சட்ட நிரூபண சபையில் தமிழ்ப் பேசும் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த திரு குமாரசுவாமி முதலியார் காலமான போது, அவ்விடத்திற்கு சைமன் காசிச் செட்டியை நியமிக்குமாறு முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும்  ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த போது தமது பொருளாதாரக் கஷ்டத்தை நோக்கி சைமன் காசிச் செட்டி அப்பிரதிநிதித்துவத்தை ஏற்க மறுத்து விட்டார்.

பின்பு காசிச் செட்டி முன்வைத்த கோரிக்கைகளுக்கு உடன்பட்டு ஆளுநர் ஸ்டுவர்ட் மெக்கன்ஸி அவரை 1838ஜூலை மாதம் 29ம் திகதி

சட்ட நிரூபண சபையின் பிரதிநிதியாக நியமனம் செய்தார். இதன் மூலம் சைமன் காசிச் செட்டிக்கு பல அறிஞர்களின் தொடர்பு ஏற்பட்டு தமது எழுத்தாக்க முயற்சிகளுக்கு ஊக்குவிப்புக்கள் கிடைத்தன.

இவ்வேளையில் தமிழ் இலக்கியங்களைக் கற்க வேண்டுமென்ற ஆசை காசிச் செட்டிக்கு ஏற்பட்டது. தென்னிந்தியாவிலிருந்த இலக்கிய ஆர்வலர்கள், அச்சகத்தார் ஆகியோருடன் தொடர்பு கொண்டு பல தமிழ் இலக்கிய நூல்களைப் பெற்றார்.

இதன் பெறுபேறாக சிலோன் கேசெட்டியருக்கு அடுத்தபடியாக யாவரும் புகழக்கூடியதும், இன்று கூட எழுத்தாளர்களால் முன்னோடியாகக் கையாளப்படுவதுமான தமிழ்ப் புளூட்டாக் என்ற நூலை ஆக்கி 1843ம் ஆண்டில் வெளியிட்டார். அந்நூலில் 197 புலவர்களின் வரலாறுகளும், அன்னவர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

இக்கால கட்டத்தில் தாவரவியலிலும் கவனத்தைச் செலுத்தி மூலிகை, தாவர மாதிரி சேகரிப்பு நிலையமொன்றையும் ஏற்படுத்தியதுடன், தாவரவியல் அகராதி ஒன்றையும் அச்சிட்டு வெளியிட்டார்.

1840ம் ஆண்டில், ” தமிழர்களின் இலக்கியம், நடைமுறை, பழக்கவழக்கங்களின் குறிப்புகள் ” என்ற நூலை எழுதி அச்சிட்டு வெளியாக்கினர்.

இலங்கையில் சிங்கள அரச பரம்பரயொன்றை நிறுவிய விஜயனின் தலை நகரமாகிய  புத்தளத்திற்கு அண்மையிலுள்ள தம்மனா நுவர என்னும் புராதன இடத்தைப் பற்றிய ஆய்வுகளை நேரிற் சென்று நிகழ்த்தி விபரமான ஆய்வுக் கட்டுரையொன்றை ஆசிய வேத்தியல் கழக சஞ்சிகையில் வெளியிட்டார்.1841ம் ஆண்டில் சிலோன் மேகஸின் என்ற பத்திரிகையில் பின்வரும் ஆக்கங்களைப் பிரசுரஞ் செய்வித்தார்.

  1. இலங்கை, தென்னிந்திய தமிழ்ப் புலவர்களினதும், தத்துவ ஞானிகளினதும் சுருக்கக் குறிப்புகள்.

  2. தமிழர்களின் மொழியும் இலக்கியமும் பற்றிய குறிப்புகள்.

  3. இராணி அல்லியரசாணியின் வரலாறு.

  4. இலங்கை வரைபட விபரம்.

  5. கற்பிட்டிக்குடா நாட்டின் தென்னைச் செய்கை பற்றிய குறிப்புகள்.

  6. இஸ்லாமிய மரபுக்கதைகளின் படி ஆதமின் உற்பத்தியும், வீழ்ச்சியும்.

இதே நேரத்தில் 1841ல் ” உதயாதித்தன் ” என்னும் பத்திரிகையை ஆரம்பித்தார் சைமன் காசிச் செட்டி. நிதி நெருக்கடி, சந்தாதாரர்களின் பொடுபோக்கு ஆகியவை காரணமாக 13 மாதத்துள் இப்பத்திரிகை நிறுத்தப்பட்டது.

1842ல் கி.பி.1505லிருந்து இலங்கையின் வரலாற்று நிகழ்வு அட்டவணையைத் தயாரித்துள்ளார்.

                                                                                                                                                                                              தொடரும்…