(“கலா பூஷனம்” , “தாஜுல் அதீப் ” அல்ஹாஜ் A.N .M .ஷாஜஹான் அவர்கள் சைமன் காசிச்செட்டி பற்றி எழுதிய பெரிய கட்டுரை ஒன்றின் சுருக்க வடிவம் இங்கு தரப்படுகின்றது. . )
இலங்கை அரசு சேவையில் சுதேசியருக்கு உயர்பதவிகளை அளிப்பதில் அரசு கடைபிடிக்கும் அநீதியான நடைமுறைகளை சாடி அரசுடன் பல கடிதத் தொடர்புகளை சைமன் காசிச் செட்டி ஏற்படுத்தினார். ஐரோப்பியவர்களின் அரசுகளில் ஊழியர்களாக வாழ்க்கை நடாத்திய ஒரு பரம்பரையில் உதித்த ஐரோப்பியர்களின் நெருக்கமான நண்பராக விளங்கிய அரசினால் பல பதவிகள் வழங்கப்பட்ட அரசின் விசுவாசத்திற்குரிய ஒருவர் அரசின் அநியாயத்தைச் சுட்டிக் காட்டிய தைரியமும், சுதேச மக்களின் முன்னேற்றத்தில் காட்டிய கரிசனையும் சைமன் காசிச் செட்டியின் பண்புகளை சுதேச பற்றுதலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 1833ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி சைமன் காசிச் செட்டியின் தந்தை கப்ரியல் காலமானார்.
கப்ரியல் காசிச் செட்டியின் கல்லறை
அவரின் மறைவுக்குப் பின்னர் சைமன் கற்பிட்டியில் முதலியாராக நியமனம் பெற்றார். அதே வேளை புத்தளம் மாவட்ட நீதி மன்றத்தில் சட்டத்தரணியாக கடமையாற்றவும் அனுமதிக்கப்பட்டார்.
சைமன் காசிச் செட்டி பல்வேறு பதவிகளிலிருந்த போதும் முதலியார் என்ற பட்டமே அவரின் பெயரோடு சேர்த்து வழங்கப்பட்டது.