இந்த மண்ணின் மற்றொரு மாணிக்கம் மர்ஹூம் நபாத் டொக்டர்

எங்கள் ஊரின் ஈடுஇணையற்ற மாணிக்கம் மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) அவர்களது ஆய்வுக்குப் பின், அந்த கண்ணியமிக்க வரிசையில் அடுத்தவராக புத்தளம் வாழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட இம்மண்ணுக்கு தன்னாலான பெரும் தியாக சேவை புரிந்து மறைந்த மற்றுமொரு மாணிக்கமாம் மர்ஹூம் நபாத் டொக்டர் அவர்கள் வாழ்வை ஓரளவு திரட்டி எழுதக்கிடைத்திருக்கின்றது. – “அல்ஹம்துலில்லாஹ்”

இம்மாமனிதர் “வல்ல அல்லாஹ்வின் வரம் பெற்ற ஒரு வைத்தியராவார்.”…

-அபூஹனிபா நவ்சாத்-

எங்கள் ஊரின் ஈடுஇணையற்ற மாணிக்கம் மஹ்மூத் ஹஸரத்  (ரஹ்) அவர்களது ஆய்வுக்குப் பின், அந்த கண்ணியமிக்க வரிசையில் அடுத்தவராக புத்தளம் வாழ் மக்களால் பெரிதும்  போற்றப்பட்ட இம்மண்ணுக்கு தன்னாலான பெரும் தியாக சேவை புரிந்து மறைந்த மற்றுமொரு மாணிக்கமாம் மர்ஹூம் நபாத் டொக்டர் அவர்கள் வாழ்வை ஓரளவு திரட்டி எழுதக்கிடைத்திருக்கின்றது. – “அல்ஹம்துலில்லாஹ்”

இம்மாமனிதர்  “வல்ல அல்லாஹ்வின் வரம் பெற்ற ஒரு வைத்தியராவார்.” நம் மண்ணின் இளம் சமுதாயம் கட்டாயமாக இப்பெருந்தகையைப்பற்றி அறிந்திருத்தல் வேண்டும். புத்தளத்தின் அரசியல் சாராத பெரும் வரலாறுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாறு பெரிய ஹஸரத் உடையதும் நபாத் டொக்டர்  உடையதும் ஆகும்.

டொக்டர் நபாத் அவர்களின் முழுப்பெயர் “செல்லத் தம்பி மரைக்கார் நெய்னா மரைக்கார் ” என்பதாகும். இவர்01-10-1950 இல் சுலைமான் லெப்பை மரைக்கார் செல்லத்தம்பி மரைக்கார் மற்றும் ஹப்ஸா உம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்கள். ஆரம்பக் கல்வியை புத்தளம் சாஹிராவில் கற்ற அன்னார் உயர்கல்வியை பருத்தித்துறை சிதம்பரம் கல்லூரியிலும், கண்டி சில்வெஸ்டர் கல்லூரியிலும் கற்றார்கள். பின் மருத்துவத்துறைக்கு வருவதற்கு முன் கற்பிட்டி, திகளி பாடசாலைகளில் “மெட்ஸ்” ஆசிரியராக 5, 6 வருடங்கள் சேவை செய்தார்கள். இவர் ஒரு திறமையான “மெட்ஸ்” ஆசிரியர்  என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மெடிக்கல் கொலேஜ் ராஜகிரியவிலிருந்து கொலெஜ் என்ட்ரன்சும், பொலிஸ் எஸ்.ஐ அதிகாரி பதவிக்குரிய நியமனமும் ஒரே தருணத்தில் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றன.நபாத்  அவர்கள் வல்ல அல்லாஹ்வின் அருளால் மெடிக்கல் கொலேஜ்ஜை தெரிவு செய்து 1982 இல் யூனானி டொக்டர் பட்டத்துடன் மரைக்கார் வீதியில் அவர்களது சொந்த இடத்தில் தனது மருத்துவச் சேவையை ஆரம்பித்தார்கள்.

தனது 13 வருட கால  வைத்திய சேவையில் பல்லாயிரக்கணக்கான மூவின மக்கள் மனதிலும் இப்பெருந்தகை கண்ணியத்துடன் வீற்றிருந்தார்கள். மருத்துவத்துறை படிப்பில் பெரும் பட்டங்கள் பெறாத, சாதாரண யூனானி டொக்டரான  அவர்கள் நோயாளிகளைப் பார்வையிடும் முறை சற்று வித்தியாசமாகவே இருந்தது.

ஒரு நோயாளி அவரிடம் வந்தாரானால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், பரம்பரை இவையணைத்தையும் அவரைப் பரிசோதனை பண்ணும் போதே கேட்டு அறிந்து கொள்வார்கள். வல்ல அல்லாஹ்வின் அருளால் நோயாளியை அவர் சிரித்த முகத்துடன் கனிவாக, மிகக் கனிவாக (ஆம், இதற்கு  மேல் அந்த இனிமையை எழுத என்னால் முடியாது) ட்ரீட்மெண்டுக்கு உள்வாங்கி சிகிச்சை அளிப்பார்கள். அந்த நோயாளி பெரும்பாலும் உளவியல் ரீதியாக கால்வாசிக்கும்மேல் நோய் குணமாகிய வண்ணம் வெளியேறுவார். இது அன்னார் அக்காலத்திலே செய்த நோயாளிக்குரிய அடிப்படை சிகிச்சை வழிமுறையாகும்.

பொதுவாக அவரைப்பற்றி மக்களின் அபிப்பிராயம் இப்படி அமைந்திருந்தது. “அவர் சிரித்தாலே நோய் குணமாகிவிடும்.” “அந்த புதுணத்த என்னெண்டுசொல்ல,  அவரிடம்  போனதுமே நோயெல்லாம் பறந்துரும்.” படித்தவர் மத்தியிலும், பாமரர்களிடமும் டொக்டர் நபாத்தைப்பற்றிய “மந்திர வசனங்கள்” இவை. பொதுவாக இவர்களைப்பற்றி புத்தளம் ஏரியாவில் அன்று யாரைக் கேட்டாலும் எனக்கு டொக்டர்  நபாத் மிகவும் நெருக்கமானவர் என்பார்கள்.அந்தளவு மக்களின் உள்ளங்களில் ஊடுருவி வைத்தியம் செய்தார்.

மரைக்கார் வீதியில், அக்காலத்தில் பிரபல வைக்கோல் வியாபாரியாக இருந்த பீர்ஸா அப்பா அவர்கள் கடும் சுகவீனமுற்ற போது, அங்கிருந்தவர்கள் உடன் வந்து டொக்டர் அவர்களை , கேட்வாசலில் நின்று, உரத்த குரலில் கூப்பிட்டு இருக்கின்றனர். அப்போது பின்னிரவு 2.30 மணி.டொக்டர் பெணியனோடு “ஸ்தெதஸ்க்கோப்பையும்” கையில் எடுத்த வண்ணம் வீட்டு வாசல் கதவை திறந்தவர் வெளியே கேட் திறப்பை மறந்து விட்டார். ஆனாலும் அன்னார் திறப்பை எடுக்கத்  திரும்ப வீட்டுக்கு உள்ளே செல்லாமல், வெளியே கேட்டை ஏறிப்பாய்ந்து பீர்ஸா அப்பா கடைக்கு ஓடி இருக்கின்றார். பீர்ஸா அப்பா இறைவனடி சேர்ந்த விடயத்தை உணர்ந்து கொண்டவராக உணர்ச்சிவசப்பட்டவராக அந்த இடத்திலேயே வெகு நேரம் அமர்ந்து இருக்கின்றார்.

நானும் மிக மரியாதையோடு  அன்னாரிடம் நெருங்கிப்பழகியவர்களில் ஒருவன்.எனவே எனக்கும் சங்கைக்குரிய டொக்டர் சம்மந்தப்பட்ட நிகழ்வு ஒன்றை வாசகப்  பெருமக்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன். எனது இளைய சகோதரியின் மகளுக்கு 4 வயதில் காய்ச்சல் ஒன்று வந்து, அதிகமாகி “பிட்” வந்து விட்டது. சம்பவ தினம் ஒரு வெள்ளிக்கிழமை. நானும் எனது நெருங்கிய நண்பனான அஜ்மல் ரோஷன் (புத்தளத்தின்  ஆரம்ப தமிழ் பேராசான் அபூஸாலிஹ் சேரின் மைந்தன்) அவர்களும் ஜும்ஆ  தொழுது விட்டு எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் வீட்டைச் சுற்றி சுமாரான கூட்டம் இருப்பதைக் காண்கின்றோம். வீட்டுக்குள் இருந்து பெண்களின் அழுகைச் சத்தமும் வந்து கொண்டிருந்தது. உடனடியாக வீட்டுக்குள் நுழைந்த போது எனது சகோதரியின் மகளை  ஒரு பாயில் கிடத்தி இருந்தார்கள். வாயிலிருந்து நுரை வழிந்திருந்தது. அங்கிருந்த அனைவரது எண்ணங்களிலும் “எல்லாமே முடிந்து விட்டிருந்தது”

எனினும் எனது நண்பனும் நானும் எதற்கும் எமது குடும்ப டொக்டர் நபாத் அவர்களிடம் காட்டி,   உறுதிப்படுத்திக் கொள்ள முடிவு செய்து குழந்தையை தோளில் போட்டுக்கொண்டு வெகு வேகமாக பக்கத்தில் இருந்த டொக்டர் வீட்டுக்கு ஓடிப் போய் “கோலிங்பெல்லை” அழுத்தினோம். உடன் கதவு திறக்கப்பட்டது. சாப்பிட்ட கையோடு வந்தார் டாக்டர். குழந்தையை 7, 8 வினாடிகள் கூர்ந்து நோக்கிவிட்டு பின் உடன் கையை கழுவிக் கொண்டு “டோன்ட் டென்ஷன் ” “டோன்ட்  டென்ஷன்” என்று கூறியவாறு குழந்தையை தூக்கிக்  கொண்டு உள்ளே சென்றார்.

ஒரு 10 நிமிடத்தில் குழந்தையின் கண்கள் திறந்திருக்க என்னிடம் குழந்தையை தந்துவிட்டு, “உடனே கொண்டு வந்தது அல்லாஹ்வின் உதவி. காய்ச்சல் அதிகமானதால் குழந்தைக்கு”பிட்” வந்து விட்டது. மூச்சுடன் சளியும் புளக் ஆகிவிட்டது. “அல்ஹம்துலில்லாஹ்” இப்போ கொண்டு போங்க  என்று கூறியவாறு அவர் விடை பெற்றுச் சென்றார்.

“தனது 13 வருட வைத்திய சேவையில் சொற்ப பணத்தையும் ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதையும் சம்பாதித்தார் மர்ஹூம் நபாத் டொக்டர்.  அன்னார், நோயாளிக்கு  மருந்தும் கொடுத்து பஸ்ஸுக்கு காசும் கொடுத்து அனுப்புவார்.

கரப்பந்தாட்டத்தில் மிகத் திறமையான “டேஷராக” திகழ்ந்தார். மீன்பிடித்தல், வேட்டையாடுதல் என்பன அவரது மிக விருப்பமான பொழுதுபோக்குகள்.

“எனது மைத்துனராக மட்டுமின்றி நெருங்கிய நண்பராகவும் இருந்தார். இரகசியமான முறையில் நிறைய தருமம் செய்தார். ஏழ்மையான பெண்பிள்ளைகளின் திருமணங்களை நடாத்தி வைத்தார். அவரும் நுவரெலியாவைச்  சேர்ந்த அவரது அன்பு மனைவி மர்சூனா அப்துல் கபூரும் மெடிக்கல் கொலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். டொக்டர் இளம் வயதிலேயே (45வயது) இறையடி சேர்ந்தார். காலமாகிய பின்னர் “பேங்க் பெலன்ஸ்” எதுவும் இருக்கவில்லை. மக்களைத்தான் சம்பாதித்து இருந்தார். அவர் மரணிக்கும் போது அவரது நாளாவது பிள்ளைக்கு (மகள்) எட்டு மாதங்கள். காலமாகி கிட்டத்தட்ட ஏழு, எட்டு  மாதங்கள்  மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கனக்கான மூவின மக்களும் வந்து தமது சோகத்தை தெரிவித்தனர். அவரது ஜனாஸாவுக்கு வந்த மக்கள் வெள்ளம்  புத்தளத்தின்  மற்றுமொரு வரலாறாகும்” என அவரது மைத்துனர் மதிப்புக்குரிய ஹுஸைர் மாஸ்டர் சற்று உணர்ச்சி வசப்பட்டவராக என்னிடம்கூறினார்.

டாக்டர் நபாத் ஒரு நியாய வாதி. நேர்மையைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பார்.  நான் சிறுவனாக இருக்கும் போது அவரது கரப்பந்தாட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். அவ்வேளைகளில் குழுக்களுக்கிடையே வரக்கூடிய கருத்து வேறுபாடுகள் வலுப்பெறும்  போது அவரது தரப்பில் நியாயம் இருந்தால் உணர்ச்சிவசப்பட்டவராக முன்னின்று வாதிடுவார். நியாயம் கிடைக்காதபோது, தமது குழுவுடன் மைதானத்திலிருந்து வெளியேறிய சந்தர்ப்பங்களும் உண்டு.

மார்ச் 13, 1995 இல் இறையடி சேர்ந்த இப்பெருந்தகையின் ஜனாஸாவின் இறுதிக்கிரிகையில் மூவின மக்களும் கண்ணீருடன் கலந்து கொண்டனர். புத்தளத்தில் நாலாபாகங்களிலுமிருந்தும் மக்கள் சாரை சாரையாக அவரது ஜனாஸாவுக்கு வந்தனர். குறிப்பாக கற்பிட்டியிலிருந்து ஊரே சமூகமளித்திருந்தது. புத்தளம்  மையத்துப் பள்ளி ஜனாஸாத் தொழுகைக்காக மக்களால் நிறைந்து வழிந்தது. வல்ல அல்லாஹ் அன்னாரைப்  பொருந்திக் கொள்வானாகவும். ஆமீன்..!

மூன்று ஆண்  மக்களும், ஒரு புதல்வியும் அவரது வாரிசுகள் ஆகும். 1. மிப்தாஹ் முஹம்மத் (MBBS – London) 2. மிஸ்ராப் அஹ்மத் – நளீமி  3.முஹம்மத் முஷ்பிக் – Engineer, மகள் பாத்திமா முஸ்னா ஆவார்கள்.  மர்ஹூம் ஸுஹுத் சேர் (அலாவுத்தீன் மற்றும் நவ்சாத் சேர் ஆகியோர் அவரது சகோதரர்கள் ஆவார்கள்.

நபாத் டொக்டருக்கு முன்பும் அவரது காலத்துக்குப் பின்பும் புத்தளத்தில் வைத்தியப்  பெருந்தகைகள் பலர் சேவை செய்து மறைந்திருக்கின்றார்கள். அனைவரது சேவைகளையும் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. அத்துடன் இங்குள்ள தற்போதைய சீனியர் வைத்தியர்களினதும், இளம் டொக்டர்களினதும் சேவைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாகவும். அமீன்..!

வைத்தியத்துறைக்கு தகுதிபெற்று மருத்துவக் கல்லூரிகளில் கற்றுக்கொண்டிருக்கும் எமது மண்ணின் வருங்கால வைத்தியர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் ஒன்று, “இந்த பொய்யான உலகில், உங்கள் அனைவரினதும் சீனியரான புத்தளத்தின் கண்ணியத்துக்குரிய மர்ஹூம் நபாத் டொக்டருடைய பாதையில் செல்ல நீங்களும் முயற்சி எடுங்கள்.” என்பதாகும்.

நம் நாட்டில் வழக்கத்திலுள்ள மருத்துவ முறைகளான சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யூனானி வைத்தியம், ஹோமியோபதி போன்றன கீழைத்தேய மருத்துவ முறைகளாகும். ஆங்கில மருத்துவம் (Allopathic Medicine) இன்று பிரபல்யமான ஒன்று. ஆயினும், இவ்விடத்தில் கணிசமான  மக்கள் இதுவரை அறிந்திராத உண்மை ஒன்று உள்ளது. அது யூனானி மருத்துவத்துறையையும் ஆங்கில மருத்துவத்துறையையும் உருவாக்கியவர் ஒருவரே என்பது. அவர் கிரேக்க ஆராய்ச்சியாளர்  ஹிப்போகிரேட்ஸ் ஆவார். மருத்துவத்துறையில் ஐரோப்பா இருண்டு கிடந்த 13 ஆம்  நூற்றாண்டில் யூனானி மருத்துவம் அரேபியர்களால் பெரும் வளர்ச்சி கண்டு, ஐரோப்பாவுக்கும் மற்றும் முழு உலகிற்கும் உதவியது. 9ம்  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வாழ்ந்த முறையே சக்கரியா அல் ராசி, அலி இபுனு ஸீனா (அலிஸன்னா) போன்றோரும் மற்றும் அல் ஸ்சஹ்ராவியும் இத்துறையைக் கட்டியெழுப்பி வளர்த்தார்கள். வல்ல அல்லாஹ் இவர்களைக்கொண்டு அன்றைய உலகின் மருத்துவ இருள் நீக்கி, ஒளி வழங்கினான். (Golden Period of  Unani Medicine – 1300 to 1700)

மகத்துவம் மிக்க மருத்துவத்துறையில் மக்கள் சேவகன், நம் மண்ணின் மைந்தன் நபாத் டொக்டர்.

அவர் பார்த்து சிரித்தாலே நோய்  போகும் என்பார் – “படித்தவர்”.  அவர் கிட்ட போனாலேயே நோய் ஓடி  போய்றும் என்பார் – “பாமரர்”.

13 வருட காலம் புத்தளம் மண்ணின் மூவின மாந்தருக்கும் மருத்துவப் பேரரசர் அவர் தான். பணத்தையும் செல்வத்தையும் புறக்கணித்தார். மறுமைக்காக சேகரித்தார்.

“மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) என்ற மாபெரும் மாணிக்கத்தின் மறைவுக்கு அடுத்து.., நபாத் என்ற மாசற்ற மாணிக்கத்தின் மறைவுக்காக “மழையாய்ப் பொழிந்தது ” மக்கள் வெள்ளம்”

மாணிக்கங்கள் இம்மண்ணில் வாழ்ந்த காலம் புத்தளப் பூமி பூத்த “வைர வரி” வரலாறாம்”..!