இலங்கைக்கென ஒரு தேசியக்கொடியை உருவாகுவதற்காக பிரதமர் திரு டீ.எஸ்.சேனநாயக்க 1948 மார்ச் 16இல் ஒரு குழுவை நியமித்தார். அதன் தலைவராக அன்றைய சுகாதார உள்ளூராட்சி அமைச்சர் திரு எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்க அவர்களும், செயலாளராக கலாநிதி செனரத் பரண விதாரன அவர்களும் செயற்பட்டனர். ஜே.ஆர்.ஜயவர்தன, சேர் லலித் ராஜபக்ஷ, சேர் ஜோன் கொத்தலாவல, ஜீ.ஜீ.பொன்னம்பலம், டி.பி.ஜாயா, எஸ்.நடேசன் ஆகியோர் குழு உறுப்பினர்களாவர். தேசியக்கொடியோன்றை அமைப்பதில் பொது மக்களும் உதவுமாறு பத்திரிகைகள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும் கேட்கப்பட்டன. இக்குழு பத்து முறை கூடியது. 13.04.1950 இல் இக்குழு இறுதியாகக் கூடிய போது ஜே.ஏ.டீ.பெரேரா, எஸ்.ஜீ.சார்ள்ஸ் ஆகியோரினால் வடிவமைக்கப்பட்ட கொடியைச் சமர்ப்பித்தது. திரு எஸ்.நடேசன் தவிர்ந்த ஏனையோர் இதனை அங்கீகரித்தனர். சிறுபான்மையினரைக் குறிக்கும் நிறம் தொடர்பான பிரச்சினைகளுக்காக திரு நடேசன் இதில் கையொப்பமிடவில்லை.
1951 மார்ச் 02 இல் இக்குழுவின் சிபாரிசின் பிரகாரம் கொடியில் செம்மஞ்சள், பச்சை நிறங்கள் சேர்க்கப்பட்டன. பின்னர் பாராளுமன்றத்தில் தேசியக்கொடி தொடர்பான விவாதம் தொடங்கியது. அப்போதைய தொழில், மீன்பிடி அமைச்சர் திரு ஜீ.ஜீ.பொன்னம்பலம், தபால் தந்தி அமைச்சர் திரு சி.சிற்றம்பலம் ஆகியோர் இதனை ஆதரித்துப் பேசினர். தமிழரசுக் கட்சியினரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினரும் இதனை எதிர்த்தனர்.வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் திரு சி.சுந்தரலிங்கமும் இப்பிரச்சினை காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1952 பெப்ரவரி 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தின் போது ஏற்றப்பட்டது அங்கீகரிக்கப்பட்ட இக்கொடியாகும்.
1972 ஆம் ஆண்டு வரை இத்தேசியக்கொடியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை.முதலாவது குடியரசு யாப்பின் பிரகாரம் கொடியைச் சுற்றி மஞ்சள் நிறமும், சிங்கத்தைச் சூழவுள்ள 4 அரச இலைகளும் அதன் சரியான வடிவிலும் மாற்றியமைக்கப்பட்டன. இச்சிறிய மாற்றங்களுக்குள்ளான கொடி 22.05.1972 குடியரசு தினத்தன்று பறக்கவிடப்பட்டது. 1978 செப்டம்பர் 08 இல் அமுலுக்கு வந்த இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு யாப்பிலும் தேசியக்கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.