இலங்கை முஸ்லிம்களும், பெண் மகப்பேற்று நிபுணரின் தேவையும்!

ஆங்கில வைத்திய முறைகள் வளர்ச்சி பெற்றிராத முன்னைய காலங்களில், எமது சமுகத்துப் பெண்கள் தமது வீடுகளிலேயே மகப்பேற்றினை நிறைவு செய்தனர். அக்காலங்களில் எமது…

By: DR.M.N.M.DILSHAN

(இந்த ஆக்கம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பயிற்சி வைத்திய உத்தியோகத்தராக கடமை புரியும் சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் எம்.என்.முஹம்மத் டில்ஷான்  அவர்கள்  கிழக்கு பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் கற்கின்ற பொழுது எழுதியதாகும். முக்கியத்துவம் கருதி இங்கு பிரசுரிக்கப் படுகிறது.)

ஆங்கில வைத்திய முறைகள் வளர்ச்சி பெற்றிராத முன்னைய காலங்களில், எமது சமுகத்துப் பெண்கள் தமது வீடுகளிலேயே மகப்பேற்றினை நிறைவு செய்தனர். அக்காலங்களில் எமது பெண்களுக்கு, மகப்பேற்றிற்கு உதவி செய்யும் பணியை நிறைவு செய்வதற்காக, அனுபவ முதிர்ச்சி அடிப்படையில் தேர்ச்சி பெற்ற சிலர் சமூகத்தில் காணப்பட்டனர். இவர்கள் பெண்களாக இருந்ததுடன் “மருத்துவிச்சி” எனவும் அழைக்கப்பட்டனர். அத்தோடு, வயது முதிர்ந்த, ஏற்கனவே பல பிரசவங்களை அனுபவித்திருந்த பெண்களும், மகப்பேற்று விடயங்களில் இளம் பெண்களுக்கு ஒத்தாசைகள் செய்யும் பாண்டித்தியத்தைப் பெற்றிருந்தனர்.

அக்காலத்தில் மருத்துவ வசதிகளும், மகப்பேறு தொடர்பான விழிப்புணர்வும் போதியதாக இன்மையால், அதிக பிரசவங்களை பெண்கள் அனுபவித்திருந்த போதிலும், சுப பிரசவங்களின் எண்ணிக்கை, மொத்தப் பிரசவங்களின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே இருந்தது. பல குழந்தைகள், பிறக்கும் போதே இறந்த நிலையில் பிரசவித்தன.

ஆனால் ஆங்கில மருத்துவத்தின் வருகையின் பின்னர், பிறக்கும் குழந்தைகள் இறந்து பிறக்கும் விகிதம் சரியத் தொடங்கியது. இதனால் பெண்கள் உயிருள்ள குழந்தைகளை அதிகம் பெறும் எண்ணத்திலும், இலகுவாகப் பெற முடியும் என்கிற நம்பிக்கையிலும் புராதன மருத்துவிச்சி முறையிலிருந்து விலகி, நவீன ஆங்கில மருத்துவ சேவையின் பக்கம் தம்மை இணைக்கத் தொடங்கினர்.

ஆரம்ப காலங்களில், ஆங்கில மருத்துவத் துறையில் மகப்பேற்று நிபுணர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே காணப்பட்டது. சாதாரண மருத்துவர்களும் ஒரு மகப்பேற்று நிபுணரின் பணிகளையும், பொறுப்புக்களையும் ஏற்று செயற்பட வேண்டியிருந்தது. அத்தோடு, தாதியர்களுக்கும் மகப்பேறு தொடர்பில் அதீத பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தன.

இத்துறைக்கு நியமிக்கப்படும் தாதியர்களும், குடும்ப நல உத்தியோகத்தர்களும் பெண்களாகவே இருந்ததனாலும், அவர்களே பெண்களின் பிரசவத்தில் அதிக வகிபாகத்தைக் கொண்டிருந்ததனாலும், அக்காலங்களில் பெண் மகப்பேற்று நிபுணர்கள் தொடர்பில் எமது சமூகம் அந்தளவுக்கு கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை. மார்க்க விடயங்களில் காணப்பட்ட தெளிவின்மையும், பெண்களின் கல்வியில் காணப்பட்ட பின்னடைவும் இதில் ஓரளவு செல்வாக்குச் செலுத்தியிருக்கும் என்றெண்ணுகிறேன்!

காலம் செல்லச் செல்ல, மருத்துவ சேவைகளில் ஏற்பட்ட அதீத வளர்ச்சியினாலும், தொழிநுட்பங்களின் உட்செலுத்துகையினாலும், அவற்றைக் கையாள்வதற்கும், முகாமை செய்வதற்கும் விசேட நிபுணர்களின் தேவை ஏற்பட்டது. இதனால் மகப்பேற்று நிபுணர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது.

இவ்வதிகரிப்பானது, பெண்களை அவர்களின் பக்கம் ஈர்க்கத் தொடங்கியது. தமது பிரசவம் மகப்பேற்றில் பாண்டித்தியம் பெற்ற ஒருவரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினர். இதில் சமகாலத்தில், பெண்களின் கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சியும், பிரசவம் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வும் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது! இதேவேளை, மார்க்க விடயங்களின் மீதான சமூகத்தின் தெளிவும், விழிப்புணர்வும் கூடவே அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் பெண்களும், அவர்களின் துணைவர்களும் ஆண் மகப்பேற்று நிபுணர்களிடம் பிரசவ ஆலோசனைகள் பெறுவதில் விருப்பமின்மையை வெளியிட்டதோடு, எங்காவது பெண் மகப்பேற்று நிபுணர்கள் கிடைக்க மாட்டார்களா என்ற தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர். மகப்பேற்று வைத்தியத்தில் செய்யப்படுகிற உடற் பரிசோதனைகளின் தன்மை இதில் அதிக தாக்கம் செலுத்தியது என்றால் மிகையாகாது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், எமது சமூகத்தில் மட்டுமல்லாது, ஏனைய சமுகங்களிலும் பெண் மகப்பேற்று நிபுணர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருப்பதே ஆகும். இதனால் எமது சமூகம், வேறு மதத்துப் பெண் மகப்பேற்று நிபுணர்களைக் கூட கண்டு கொள்ள முடியாது போனது. எனவே தான் இது ஒரு சமூகப் பிரச்சினையாகவும், சமூகத்தின் தேவையாகவும் மாறத் தொடங்கியது.

எமது சமூகத்திற்காக பெண் மகப்பேற்று நிபுணர்களை உருவாக்கியே ஆக வேண்டும் எனும் விடயத்தில் வாதப் பிரதிவாதங்களையும், தர்க்கங்களையும் முன்வைத்து ஒரு சாராரும், இதை எப்படிச் சாத்தியப்படுத்த முடியும் எனும் ஆய்வில் ஒரு சாராரும், சாத்தியப்படுத்தும் முயற்சியில் ஒரு சாராரும் எனப் பலரும் இதற்காக தம்மை அர்ப்பணித்து வருகின்றமையைக் காணக்கிடைப்பது மன நிறைவைத் தருகிறது. எனினும் இதன் பின்னால் உள்ள சில யதார்த்தங்களையும் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும். அத்தகைய சில விடயங்களையே கீழே பட்டியலிட விழைகிறேன்.

 1. மகப்பேற்று நிபுணர்கள் எனும் விடயத்தில் மாத்திரமல்லாது, மருத்துவத்தின் ஏனைய துறைகளிலும் எமது சமூகப் பெண்கள் நிபுணர்களாக இருப்பது மிக மிகக் குறைவாகும். இன்னொருபுறம், பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் கூடக் குறைந்த சதவீதத்திலேயே மருத்துவத் துறைகளில் நிபுணத்துவம் பெறுகின்றனர். எமது சமூகத்தில் நிலவும் பொதுமைப்பாடான இப்பின்னடைவில் பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்றெண்ணுகிறேன்.
 2. i) ஊக்கப்படுத்தல், வழிகாட்டல் மற்றும் முயற்சி என்பன இன்மை:

ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற கடின உழைப்பும், வழிகாட்டலும் அவசியமாகும். அதிலும் மருத்துவத் துறையில் இவற்றின் தேவை மிக அதிகம். சரியான பாதையில் முயற்சித்து, கடின உழைப்புச் செய்கிறவனே இதில் வெற்றி காண முடியும். இவ்வாறான முயற்சியை மேற்கொள்ள ஊக்கப்படுத்தல் அவசியமாகும்.

கவலைக்குரிய விடயம் என்னவெனில், எம்மவர்கள், தனது சகோதரன் ஒருவன் பதவியிலோ, படித்தரத்திலோ உயர்ந்து செல்வதை விரும்புவதில்லை; இதனால் அவர்களை ஊக்கப்படுத்துவதுமில்லை. மாறாக அவர்கள் மீது பொறாமை மற்றும் வஞ்சக எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் உயர்ச்சிக்குத் தடையாகவே அமைந்து விடுகின்றனர். இதனால், பாதிப்புக்குள்ளாகும் முயற்சியாளன், தன் முயற்சியைக் கைவிட்டு விடுகிறான்.

 1. ii) முறையற்ற சமுகக் கட்டமைப்பும், எதிர்பார்ப்புகளும்:

மருத்துவம் என்பது ஒரு சேவைத் தொழில். இலங்கை போன்ற செல்வம் குறைந்த நாடுகளில், மருத்துவர்களும், மருத்துவம் சார் பணியாளர்களும் தாம் பெறும் ஊதியத்தினை விடவும் அதிகமாகவே சேவைகளை வழங்குகின்றனர் என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நிலமை இப்படியிருக்க, எமது சமூகம் மருத்துவர்களிடமிருந்து சேவைகளை மாத்திரம் எதிர்பார்க்காது, அவர்கள் செல்வந்தர்களாக வாழ வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு மருத்துவர், பிரதேசத்திலேயே சிறந்த வீடொன்றில் வாழ வேண்டுமெனவும், மிகச் சிறந்த வாகனமொன்றில் பயணம் செய்ய வேண்டுமெனவும் எதிர்பார்க்கின்றனர். எனினும் மருத்துவர்கள் பெறுகின்ற அரச ஊதியத்தை மாத்திரம் வைத்துக் கொண்டு சமூகம் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறையொன்றை அமைத்துக் கொள்வதென்பது, இலங்கையைப் பொறுத்தவரை கடினமானதொரு காரியமாகும். அதிலும், மார்க்க விழுமியங்களைப் பேணி வாழ விளையும் ஒரு வைத்தியரால் குறுகிய காலத்தில் அவ்வாறானதொரு இலக்கை அடையவியலாது.

இதனால், தான் பெற்ற மருத்துவ அறிவை எங்காவது விற்றுப் பிழைக்க வேண்டிய நிலைக்கு அநேக மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக சீதனத்தின் ஆதிக்கதிற்கு உட்படவும், தனியார் துறையில் ஈடுபாடினைக் காண்பிக்கவும் மருத்துவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இவற்றின் விளைவாக மேற்படிப்பினைத் தொடர முடியா நிலைக்கு எமது சமூகத்தின் மருத்துவர்கள் ஆளாகின்றனர். ஒரு சில மருத்துவர்கள் இவற்றையெல்லாம் தாண்டியும் மேற்படிப்பைத் தொடரும் பயணத்தில் காலடி எடுத்து வைக்கிற போது, அவர்களுக்கு சரியான ஊக்கப்படுத்தலும், வழிகாட்டலும், நிதியுதவிகளும் கிடைக்காமல் போவதால் பயணத்தை இடை நடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

iii) மருத்துவ பட்டப்படிப்புக்கும், மேற்படிப்புக்கும் செலவாகும் காலமும், அவற்றின் கடினத் தன்மையும்:

மருத்துவத் துறையில் மேற்படிப்புகளைத் தொடர அநேக மருத்துவர்கள் பின்னிற்பதற்கு, அதற்குச் செலவாகும் காலமும், அதன் கடினத் தன்மையும் முக்கிய காரணிகளாகும். சாதாரண மருத்துவப் பட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கே மருத்துவர்கள் ஐந்து அல்லது ஆறு வருடங்களை பல்கலைக்கழகத்தில் செலவு செய்து, மிகவும் சிரமப்பட்டுக் கற்று சித்தியடைகின்றனர்.

அதற்கு முன்னரும், பாடசாலைக் கல்வியில் உலகிலேயே மிகக் கடினமான போட்டிப் பரீட்சைகளில் ஒன்றான உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்து உயர் வெட்டுப் புள்ளிகளைப் பெற்றே அவர்கள் பல்கழைக்கழகம் தெரிவாகின்றனர். இத்தகைய நிலையில் ஏனைய துறைகளோடு ஒப்பிடுகிற போது, அதிகளவான தியாகங்களையும், இழப்புகளையும் சந்திக்கின்ற அவர்கள், மருத்துவ மேற்படிப்பினைத் தொடரத் தயங்குகின்றனர். இதற்குக் காரணம், மருத்துவத் துறையின் மேற்படிப்புகளுக்கு குறைந்தது 6-8 ஆண்டுகள் செலவாவதோடு, அவற்றின் பரீட்சைகளும் போட்டிப் பரீட்சைகளாக இருப்பதாகும். பரீட்சைகளில் சித்தியடைகிற போதும், குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெறுகிறவர்களாலேயே மேற்பட்டங்களைப் பெற முடியும்.

ஒரு மருத்துவர் விசேட நிபுணராக வெளியாகும் போது, அவரது வயது குறைந்தது 33-35 ஆக இருக்கும். வேற்று மதத்தினர் இதற்காக இல் வாழ்க்கையைத் தியாகம் செய்து கற்கின்றனர். எனினும் எம்மவர்கள் இல்வாழ்க்கையில் இணைந்த பின்னரேயே மேற்படிப்புகள் பற்றிச் சிந்திக்கின்றனர். எனினும் அநேகரது இல்வாழ்க்கை மேற்படிப்புக்குத் தடையாக அமைந்து விடுகிறது. இதற்கு மருத்துவத் துறை குறித்தும், மருத்துவர்களின் பணிகள் குறித்தும், மேற்பட்டங்களின் அவசியம் மற்றும் தார்ப்பாரியம் குறித்தும் இல் வாழ்க்கையின் புதிய உறவுகளுக்கு புரிந்துணர்வு இல்லாமல் போவதும் ஒரு காரணியாகும்.

 1. iv) மருத்துவர்களின் சமூகப் பொறுப்புணர்ச்சியும், சமூகப் பற்றுதலும்:

எல்லாக் குற்றங்களையும் சமூகத்தின் மீதே இட்டு விட முடியாது. மருத்துவர்களின் பக்கமும் சில தவறுகள் இருக்கத் தான் செய்கின்றன. அநேக மருத்துவர்கள் சமூகத்தின் தேவைகள் குறித்து கவனிப்பாரற்றோராய் இருக்கின்றனரா என்ற கேள்விக் குறி நிலவுகிறது. மேற்குறித்த சமூகத்தின் எல்லாச் சவால்களையும் எதிர்கொண்டு, தடைக் கற்களையும் படிக்கல்லாக்கி வெற்றி பெறும் மருத்துவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடியதாகவே உள்ளது. இதற்காய் மருத்துவர்களைத் தயார்படுத்தும் பணியையும் காணக் கிடைப்பதில்லை. மருத்துவர்களின் சமூகப் பொறுப்புணர்வும், சமூகப் பற்றும் அதிகரிக்கிற போது, இந் நிலமைகளில் மாற்றம் ஏற்படக் கூடும்.

 1. மருத்துவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதில் எதிர்நோக்குகின்ற மேற்குறித்த பொதுவான பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, எமது சமுகத்துப் பெண் மருத்துவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதில் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிலவற்றைப் பட்டியலிட விழைகிறேன்!
 2. i) பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், திருமணப் பற்றாக்குறையும்:

இலங்கையில், குறிப்பாக எமது சமூகத்தில், பெண்களின் கல்வித் தரம் ஆண்களின் கல்வித் தரத்தை விட அதிகரித்து வருகிற ஒரு நிலமையை அண்மைக்காலமாகக் காணமுடிகிறது. இங்கு, பெண்களின் கல்வித் தரம் அதிகரித்தது என்று சொல்வதை விட, ஆண்கள் கல்வித் தரத்தில் பின்னடைகிறார்கள் என்று சொல்வது பொருத்தம் என்றெண்ணுகிறேன்.

இதில் ஆண்களின் மீதான சமூக வலைத் தளங்களின் தாக்கமும், பெற்றோரின் கவனிப்பற்ற நிலையும், சினிமாப் படங்களின் ஆதிக்கமும், நண்பர் வட்டங்களின் தன்மையும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளுள் பிரதானமானவை. இதனால் பெண் மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லும் போக்கை எமது சமூகத்தில் அவதானிக்க முடிகிறது. இந்நிலை ஆரோக்கியமானதா என்கிற விடயம் தலைப்பிட்டு விவாதிக்குமாளவிற்கு பாரியதாக இருப்பதால், அது ஒரு புறமிருக்க, இந் நிலையால் பெண் மருத்துவர்களின் இல் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்கிற பாதிப்பு எத்தகையது என்பதும், அதனால் அவர்கள் மேற்படிப்பைத் தொடர்வதில் எதிர்நோக்குகின்ற சவால்கள் எத்தகையவை என்பதும் இங்கு அலசப்பட வேண்டியவையாகும்.

மருத்துவத் துறை இரவு நேர பணிகளை கொண்ட, விடுமுறைகள் மிகக் குறைந்த சேவைத் தொழில் ஒன்றாக இருப்பதால், பெண் மருத்துவர்களை திருமணம் செய்வதற்கு சமூகத்தில் உள்ள ஆண்கள் தயங்குகின்றனர். இதனால் எவ்வளவு கற்றிருந்தும், மணமகன் கிடைக்காத நிலை பெண் மருத்துவர்களுக்கு -அதுவும் குறிப்பாக எமது சமுகத்துப் பெண் மருத்துவர்களுக்கு- ஏற்பட்டுள்ளது. இதையும் தாண்டி, ஒரு பெண் மருத்துவர் திருமணம் செய்யப்படின் பல நிபந்தனைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்க நேரிடும்.

குறிப்பாக அதிகரித்த சீதனத்தை வழங்கி திருமணம் செய்ய வேண்டிய நிலையும், மேற்படிப்பைத் தொடர முடியாத நிலையும் ஏற்படும். மருத்துவத் துறையின் வேலைப்பளுக்களைப் புரிந்து கொள்ள முடியாத கணவர்களோடான திருமண பந்தம் காலப்போக்கில் பிரிந்தும் விடும் சம்பவங்களும் இல்லாமலில்லை. மனைவியின் உயர் கல்வித் தரமும், அந்தஸ்த்தும் இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாய் அமைந்து விடுகிறது.

இதனால் பெண் மருத்துவர்கள், தன் நிலையைப் புரிந்து கொண்டதும், தனது அந்தஸ்த்துக்குச் சரி சமனான நிலையில் இருப்பவருமான இன்னுமொரு மருத்துவரையே திருமணம் செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். எனினும், ஆண் மருத்துவர்களின் எண்ணிக்கை சமூகத்தில் குறைந்து கொண்டு செல்வதாலும், பிள்ளைப் பராமரிப்பு தொடர்பான அச்சம் காரணமாக ஆண் மருத்துவர்கள், பெண் மருத்துவர்களை திருமணம் செய்யத் தயக்கம் காட்டுவதாலும், இப்பாக்கியம் ஒரு சில பெண் மருத்துவர்களுக்கே கிட்டுகிறது. குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், எமது சமுகத்திலேயே இப்பிரச்சினை ஒப்பீட்டளவில் அதிகமாகும்.

 1. ii) பெண்களின் மன தைரியமும், பக்குவமும்:

எமது சமூகத்தைப் பொறுத்தவரை பெண்களை மேற்படிப்பின் பக்கமிருந்து தூரமாக்கும் மற்றுமொரு காரணியாக, பெண்களின் மன தைரியம் திகழ்கிறது. இயல்பிலேயே மனதளவில் இளகு தன்மை கொண்ட பெண்கள், எமது சமூகத்தின் பெற்றோர்களாலும் மன தைரியம் குறைந்தவர்களாகவே வளர்க்கப்படுகின்றமை, அவர்களை மேற்படிப்பு, சமூக அக்கறை என்றெல்லாம் ஈடுபடுவதிலிருந்து தூரமாக்கி விடுகிறது. மார்க்க வரைமுறைகளுக்குள் நின்று கொண்டு தைரியமாகச் செயலாற்றும் பக்குவம் எமது பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதில் மருத்துவப் பெண்களும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே அதிக சிரமப்பட்டு தனது கற்கைகளைப் பூர்த்தி செய்த அவர்களுக்கு, மேற்படிப்பு என்பது குடும்பச் சுமைகளோடு, தொழில் புரியும் நிலையில், மேலதிகமான ஒரு சுமையாக மாறி விடுகிறது. இதனால் மேற்படிப்பின் பக்கம் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை.

 1. மருத்துவ மேற்படிப்பை மேற்கொள்வதில் காணப்படும் பொதுவான மற்றும் விசேடமாக பெண்களுக்குள்ள பிரச்சினைகள் சிலவற்றையே மேலே சுட்டிக் காட்டினேன். இவை மருத்துவத்தின் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். இதற்கு மேலதிகமாக, மகப்பேற்று நிபுணர்களாக பெண்கள் உருவாகுவதில் உள்ள விசேட பிரச்சினைகளும் இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஏனைய மருத்துவத்தின் துறைகளைப் போலல்லாது, மகப்பேற்று துறை சற்றே வித்தியாசமானது. இலங்கை போன்ற, மருத்துவர்களினதும், நிபுணர்களினதும் தேவை அதிகரித்த நாடுகளில், மகப்பேற்றுத் துறை மிகவும் கடினமான துறையாக மாறி விட்டிருக்கிறது. பிரசவம் எவ்வேளையிலும் இடம் பெறலாம், இதனால் மகப்பேற்று மற்றும் பெண்ணியல் தொடர்பான நிபுணர் எவ்வேளையிலும் தொலைபேசித் தொடர்பு மூலம் அழைக்கப்படலாம், நள்ளிரவு வேளையும் இதற்கு விதி விலக்கல்ல. இதனால் பெண்ணொருவர் இத்தகைய நிபுணராக தன்னைத் தரமுயர்த்திக் கொள்கிற போது, பல தியாகங்களையும், இழப்புகளையும் சந்திக்க நேரிடும். இதனை அப்பெண்ணின் கணவர் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார் என்பதில் சிக்கல் உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையைப் புரிந்து கொள்ளாத, ஒரு சாதாரண முஸ்லிம் ஆண், இதனை வெறுக்கும் நிலையே ஏற்படும்.

இது ஒரு புறமிருக்க, மகப்பேற்றுத் துறை அதிக உடற் சக்தி தேவைப்படுகிற ஒரு துறையாகும். ஒரே நாளில் பல சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படலாம். இந் நிலைக்கு முகங்கொடுக்கக் கூடிய மன தைரியமும், பக்குவமும் உள்ள பெண்கள் மிக அரிதாகவே எமது சமூகத்தில் காணப்படுகின்றனர். இது பாரியதொரு பிரச்சினையாகும். இஸ்லாமிய வரையறைகள் என்ற பெயரில் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் கூடப் பெண்கள் தைரியமூட்டப்படுவதில்லை. பெண்கள் உடற்பயிற்சி செய்வதில்லை; பெண்கள் விளையாடுவதில்லை; முன்னைய காலங்களைப் போல், இக்காலத்தில் உடலை வருத்தும் வேலைகளும் பெண்களுக்கு கிடையாது. இதனால் பெண்கள் மனோ வலிமை மாத்திரமல்ல, உடல் வலிமையும் குறைந்தவர்களாகவே உருவாக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாகக் கல்வியில் பிரகாசிக்கும் பெண்களுக்கு, உடல் வலிமை அறவே இல்லை என்ற நிலையில், பெண் மருத்துவர்களிடம் மகப்பேற்று நிபுணராகும் அளவுக்கு தைரியத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது???

இத்தகைய பிரச்சினைகளெல்லாம் இருக்கிறது என்பதற்காக ஒரு பெண் மகப்பேற்று நிபுணரை எமது சமுகத்திலிருந்து உருவாக்கவே முடியாது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. மாறாக இப்பிரச்சினைகளுக்கு எத்தகைய விதத்தில் சமூகம் தீர்வினைக் கண்டு, அதனை சரிப்படுத்தி, தமது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாய் மாறி இருக்கின்ற பெண் மகப்பேற்று நிபுணரைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதையே நான் சுட்டிக் காட்ட விளைகிறேன்! எனது புலப்பட்ட வகையில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக சில ஆலோசனைகளையும் கீழே முன் வைக்க எண்ணுகிறேன். எனினும், இவ்விடயங்கள் மேலும் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது அவா!

 1. மருத்துவம் உட்பட எல்லாத் துறைகளிலும், அடிப்படை நிலையைத் தாண்டி மேலிடங்களுக்கு உயர்வு பெறுகின்ற ஒவ்வொரு சமூக அங்கத்தவரையும் ஊக்குவிப்பதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஒவ்வொரு ஊரிலும் அல்லது தேசிய அடிப்படையில் ஒரு அமைப்பு எமது சமுகத்திற்காகத் தொழிற்பட வேண்டும். இவ்வமைப்பின் மூலமாக வருடா வருடம் சாதனையாளர்கள் பாராட்டப்படுவதும், ஊக்குவிக்கப்படுவதும் மாத்திரமல்லாது, சாதனை புரியத் துடிப்பவர்களுக்கு வழிகாட்டல்களையும், தேவைப்படும் உதவி ஒத்தாசைகளையும், புலமைப் பரிசில்களையும் வழங்கி கை கொடுக்கும் பணியும் நிறைவு செய்யப்படல் வேண்டும். இவ்வமைப்பில் ஏற்கனவே சாதனை புரிந்த சமூக அங்கத்தவர்களும், தனவந்தர்களும், சமூகத் தலைவர்களும் இணைத்துக் கொள்ளப்படுவது சாலப் பொருத்தம்.
 2. மருத்துவர்கள் செல்வந்தர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சமூக மனப்பாங்கினை மாற்றியமைக்கவும், மருத்துவத் துறையின் முக்கியத்துவம் மற்றும் வகிபாகம் என்பவற்றை உணர்த்துவதற்கும், பெண் மருத்துவர்களுக்கு இல் வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதன் முக்கியத்துவம் குறித்து தெளிவு படுத்துவதற்கும் விழிப்புணர்வு செயலமர்வுகள் ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் செய்யப்படல் வேண்டும். பெண் மகப்பேற்று நிபுணர்களினதும், ஏனைய நிபுணர்களினதும் சமூகத் தேவை குறித்து ஆய்வு செய்யவும், அறிவூட்டவும் வேண்டிய தேவையும் இருக்கிறது. இவ்விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறும் ஜும்மாக்களின் ஊடாகப் பேசப்படும் பொருளாக மாற்றமடையும் போது அதன் பெறுமதி மேலும் அதிகாரிக்கும். இதற்காக மார்க்க அறிஞர்களும் இவ்விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இவற்றையெல்லாம் நிறைவு செய்ய, தனியானதொரு சமூக விழிப்புணர்வூட்டல் மையமொன்று தாபிக்கப்படின் அது பெறுமதி மிக்கதாயமையும்.

பெண் மருத்துவர்களைத் திருமணம் செய்யும் மருத்துவத் துறை சாராத ஆண்கள் மருத்துவத் துறை குறித்து விசேடமாக அறிவூட்டப்பட வேண்டும். மருத்துவத் துறை பற்றி புரிந்து கொண்டவர்களையே இயலுமானவரை பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கைங்கரியத்தை பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்

 1. முஸ்லிம் பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் தைரியம் உடையவர்களாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி ரீதியில் பிரகாசிக்கின்ற பெண்களுக்கும், ஆண்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி பாசறைகளும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். இதற்காகப் பாடசாலை மட்டத்திலிருந்து திட்டங்களைத் தீட்டுதல் வேண்டும். இதனை ஏற்கனவே தொழிற்படு நிலையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொள்ள முடியுமாக இருக்கும் என்றெண்ணுகிறேன்.
 2. ஆண் மருத்துவர்கள், பெண் மருத்துவர்களை திருமணம் செய்வதன் அவசியம் குறித்தும், அவ்வாறான திருமணத்தின் பின்னர், எவ்வாறு பிள்ளை வளர்ப்பில் ஈடுபடுவது என்பது குறித்தும் வைத்தியர்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும் காலத்தின் தேவையாகும். அத்தோடு ஆண் மாணவர்களின் கல்வியில் ஏற்படும் பாரிய பின்னடைவு உடனடியாகச் சரி செய்யப்படல் வேண்டும். இல்லாவிடின் அநேக பெண்கள் எதிர்காலத்தில் எமது சமூகத்தில் கன்னிப் பெண்களாகவே காலம் கழிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 3. மருத்துவத்துறையில் அரசாங்கமும் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்களின் ஊதியம் அதிகரிக்கப்படுவதோடு, நோயாளிகளுக்கான வைத்தியர்களினதும், நிபுணர்களினதும் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டி இருக்கிறது. இதனால், ஒரு வைத்தியரே முழுப் பகலும், முழு இரவும் பணியாற்றுவது தவிர்க்கப்பட்டு, சுழற்சி அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ளதைப் போல், குறித்த நேரத்திற்கு வேலை செய்தால் போதுமானது என்ற நிலை உருவாகும். இதனால் பெண்கள் தமது குடும்பச் சுமைகளையும், பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ள போதிய கால அவகாசம் கிடைக்கும்.
 4. இவை எல்லாவற்றிக்கும் மேலாக மருத்துவர்கள் சமூகப் பற்றுடையவர்களாகவும், சமூக அக்கறை கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்கப் பட வேண்டும். இதற்காக மருத்துவ மாணவர்களுக்கு போதியளவு விழிப்புணர்வு வழங்கப்படல் வேண்டும். மேற்படிப்பின் அவசியம் குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக மருத்துவர்களுடனான கலந்துரையாடல்களை சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இவை எல்லாவற்றையும் குறுகிய காலத்தினுள் மேற்கொள்ளவும் முடியாது, விழிப்புணர்வுகளால் மாத்திரம் சாதிக்கவும் முடியாது. யாரேனும் ஒருவர் தன்னைத் தியாகம் செய்து, இப்பணியில் ஈடுபடாதவரை பெண் மகப்பேற்று நிபுணர்கள் என்பது எமது சமூகத்திற்கு எட்டாக் கனியாகவே இருக்கும்!

-தில்ஷான் நிஷாம்-

Inamullah Net