இளையோர் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்றார் சிலாபத்தின் பாரமி வசந்தி

2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா…

ஆர்ஜெண்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் 3 ஆவது கோடை கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அண்மையில் நடைபெற்ற பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் இளம் வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கம் இதுவென்பதுடன், இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பிறகு சர்வதேச மட்டத்தில் பதக்கமொன்றைப் பெற்றுக் கொண்ட முதல் வீராங்கனையாகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

சிலாபம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி பயின்று வருகின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவியான பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியை 6 நிமிடங்களும் 37.9 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் (6 நிமி. 59.63செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் அவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இலங்கை 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் றக்பி அணிக்காக விளையாடிய பாரமி வசந்தி, ஜப்பானின் ஜிபு நகரில் கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதனையடுத்து, ஆர்ஜென்டீனாவில் தற்போது நடைபெற்று வருகின்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருந்தார். தாய்லாந்தின் பெங்கொங் நகரில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

இதன்படி, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதற்கான வாய்ப்பையும் பாரமி பெற்றுக்கொண்டதுடன், சுமார் ஒரு தசாப்தங்களுக்குப் பிறகு மெய்வல்லுனர் போட்டியொன்றில் இலங்கைக்கான முதலாவது சர்வதேச பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார்.thankstothepapare.

WAK