உதவி ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு ஸெபக்தக்ரோ வீரர்கள் நன்றி தெரிவிப்பு

ண்பரே நாங்கள் நன்றி கூறினோம். அதையும் வைபவ ரீதியாக மேற்கொண்டோம். ‘நன்றி என்பது உயர்வானதொன்று. அதை தாழ்வானவர்களிடம் எதிர்பார்க்க வேண்டாம்’ என்கிறது ஆங்கில பழமொழியொன்று. நாம் தாழ்வான மனிதர்கள் அல்ல என்பதை அமைதியாக கூறினோம்.
.
உதவி ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கூறுவது அபூர்வமானதல்ல, அனைவரும் செய்கின்றனர். வார்த்தையினாலோ உத்தியோகபூர்வ கடிதத்தினாலோ நன்றியைத் தெரிவிப்பர். எனினும், நன்றி கூறுவது தொடர்பில் புதிய கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் அதற்கொரு முன்மாதிரியை வழங்கியதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
.
இவ்வைபவத்தில் இன்னுமொரு சிறப்பான கலாசாரமொன்றையும் அறிமுகப்படுத்தினோம். அம்முன்மாதிரி மிக்க புதிய கலாசாரங்கள் தொடர்பாக இக்கட்டுரையில் கலந்துரையாடுகின்றோம்.
.
2022 டிசம்பர் 26 – 31 பங்களாதேஷில் நடைபெற்ற நான்காம் தெற்காசிய ஸெபக்தக்ரோ சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணியில் விளையாடிய புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ ஆட்ட வீரர்களின் பயண செலவுகளுக்கான நிதி அன்பளிப்பு உட்பட பல்வித ஒத்துழைப்புக்களை வழங்கிய விளையாட்டு ஆர்வலர்களுக்கு நன்றி கூறுவது எமது கடமையெனக் கருதி 2023.01.13 ஆம் திகதி பி.ப. 4.00 மணி முதல் புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இந்நன்றி கூறும் வைபவத்தை நடத்தினோம்.
.
இந்நிகழ்வின் அதிதிகளாக,
▪ இலங்கை ஸெபக்தக்ரோ சம்மேளனத்தின் (ASTASL) தலைவர் நிலாம் ஹலால்தீன்,
▪ தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் இந்திக சமரசிங்க,
▪ உதவி பயிற்றுவிப்பாளர் அஸ்மின் ஆமாத்,
▪ முகாமையாளர் ஷிப்லி மர்ஜான் கலந்துகொண்டதுடன்
இலங்கை அணியை பிரதிநித்துவம் செய்யும் புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ ஆட்டக்காரர்களான,
▪ ஸகீ அஹ்மத் (தேசிய அணியின் தலைவர்)
▪ ஹஸினி சந்துனிகா – ஸஹினி ஹிருனிகா (இரட்டை சகோதரிகள்),
▪ அதீப் ஹஸன் – அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டை சகோதரன்கள்) இணைந்துகொண்டனர்.
மேலும், போட்டியில் மூன்றாம் இடத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி பெற்றுகொண்ட வெற்றிக் கிண்ணங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
.
பங்களாதேஷ் பயணத் திகதிக்கான அறிவித்தல் கிடைக்கும்போதே, அரசாங்கத்தினால் பயணத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் வாய்ப்புக்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற சந்தேகத்துடன்தான் கிடைத்தது.
இதன் காரணமாக, பயணச் செலவுகளை திரட்டிக்கொள்ளும் சவாலை ஆட்டக்காரர்கள் முகங்கொடுத்தனர். பல்வேறு நிகழ்ச்சிகள்; முயற்சிகளின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் பங்களாதேஷ் பயணத்துக்கு நாட்கள் நெருங்கிய நிலையில் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு (பகுதி) கிடைப்பதாக செய்தி கிடைத்தது.
.
அந்நேரமாகும்போது, பயணச் செலவுக்காக நிதி திரட்டப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் ஒதுக்கீடு பகுதியும் கிடைத்ததனால் பயணச் செலவுக்குத் தேவையான பணம் போக மேல் மிகுதித் தொகையொன்று புத்தளம் ஸெபக்தக்ரோ குழுவின் கைகளில் மீதப்பட்டது.ஒரு பணத் தேவை நிறைவடைந்த பின்னர், மேல் மிகுதியாக பணத் தொகையொன்று இருக்குமாயின், அப் பணத்தை சமூக நிதியங்களாக இயங்கும் நிறுவனங்களுக்கு மீள் கையளிப்பதன் மூலம் வேறு பல சமூகத் தேவைகளுக்கு ஈடுபடுத்த முடியும்.
.
இக்கருத்தை முன்னிறுத்தி, நிதி சேகரிப்பின்போது நிதி அன்பளிப்பு வழங்கிய புத்தளம் பெரியபள்ளி மற்றும் Puttalam Association Qatar (PAQ) வழங்கியிருந்த பணத்தொகை மீண்டும் அந்நிறுவனங்களுக்கு மீள் கையளிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
.
ஒரு விளையாட்டுப் போட்டியென்பது தனித்த சம்பவம் அல்ல, ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுகளின் தொகுப்பாகும்.அவை அச்சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தாக்கத்தை சமூக மேம்பாட்டின் திசைக்கு செலுத்துவது பொறுப்புள்ள பிரஜைகளின் கடமையாகின்றது. அக்கடமையை இந்நன்றி கூறும் நிகழ்வினூடாக நிறைவேற்றினோம் எனக் கருதுகின்றோம்.
.
செய்தி ஆக்கம்: Hisham Hussain
.
WAK