உனது பாசறையில் பயிற்றப்பட்ட பலர் இன்று ஊடக நாயகர்கள்
(Faris Saly)
.
அஷ்ஷேய்க் ராமக்குட்டி அப்துல்லாஹ் அஸ்ஸாம் இஸ்லாஹி 18-02-2023 அன்று இறைவனிடம் மீண்டார். ராமக்குட்டி அப்துல்லாஹ் அஸாம் சகோதரனாக, கொள்கை வழி நின்ற தோழனாக, எப்படி உன்னைப்பற்றி கடல் போல் வியாபித்திருக்கும் நினைவுகளை எழுதி முடிப்பது.
.
அஷ்ஷேய்க் ராமக்குட்டி அப்துல்லாஹ் அஸ்ஸாம் இஸ்லாஹி 18-02-2023 அன்று இறைவனிடம் மீண்டார். ராமக்குட்டி அப்துல்லாஹ் அஸாம் சகோதரனாக, கொள்கை வழி நின்ற தோழனாக, எப்படி உன்னைப்பற்றி கடல் போல் வியாபித்திருக்கும் நினைவுகளை எழுதி முடிப்பது.
.
முதல் சந்திப்பு 1991 செப்டம்பர் ; இறுதியாக நானும் காமிலாவும் 2023 பெப்ரவரி 4 ஆம் திகதி ஜமாஅத் தலைமையகம் – தாருல் ஈமானில் சுதந்திர தின நிகழ்வில் உன்னைச் சந்தித்தோம். கதைத்துக் கொண்டோம். 32 வருட உறவில் எத்தனை பயணங்கள் செய்திருப்போம், கனவுகள் பற்றி பேசியிருப்போம். நமக்குள்தான் எத்தனை வாத விவாதங்கள், உடன்பாடுகள், முரண் பாடுகள். எல்லாவற்றையும் தாண்டி அழகிய உறவாய் எப்போதும் அது நிலைத்திருந்தது.
.
‘அல் ஹஸனாத்’ இஸ்லாமிய குடும்ப மாத இதழ் உனது மூச்சாக இருந்தது. சமுக , அரசியல் பேசிய ‘எங்கள் தேசம்’ உனது வார்த்தையாக இருந்தது. மாணவச் செல்வங்களின் கைகளில் ‘அகரம்’ உனது செல்லப் பிள்ளையாக தவழ்ந்தது. ‘சிட்டு’ உனது மழலை மொழியாக சின்னஞ் சிறார்களிடம் பேசியது. நீ தமிழ் இதழியல் இலக்கியத்தில் இன்றியமையாத ஆளுமை. ‘இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி’ என வாழ்ந்தாய். உனது பாசறையில் பயிற்றப்பட்ட பலர் இன்று ஊடக நாயகர்கள். உன்னை இறைவன் எதற்குப்படைத்தானோ அந்தப் பணியை நீ செவ்வனே செய்துவிட்டாய் என்றே எனக்குத்தோன்றுகிறது. இறைவனே மிக்க அறிந்தவன்.
.
தோழா நான் எனது வாண்மைத் தொழிலில் மிக்க ஈடுபாடு காட்ட நேர்ந்ததும், ஜமாஅத்தில் தவிர்க்க இயலாது பல பொறுப்புகளை ஏற்க வந்ததும் நமது உறவு ஒரு வகை உத்தியோக பூர்வமாக அமைந்து விட்டது. என்னை ஒருவகை மரியாதையோடு பார்த்தாய். சந்திக்கும் சபைகளும் அப்படி அமைந்து விடும். அது தவிர ஸலாத்தோடு கடந்து போகும் தருணங்களில் அன்றிருந்த நாள் வராதா என மனது ஏங்குவதை தவிர்க்க இயலுவதில்லை. உனது அர்ப்பணங்கள் பலவற்றில் என்னை ஆச்சரியப்படுத்தும் இரண்டு. ஒன்று கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்திற்கு தேர்வாகி அதனை உதரிவிட்டாய் . மற்றையது ஆசிரியத்தொழில் கிடைத்த போதும் அதனை விட்டொதுங்கினாய். இவற்றிற்காக நீ கவலைப்பட்டு ஒரு நாளும் நான் கேட்டில்லை.
.
கொள்கைப்பற்று , இறை நாட்டத்தில் அதீத நம்பிக்கை, சரியெனப்பட்டால் துணிந்து நிற்கும் உறுதி, உண்மையின் பக்கம் உண்மையாய் நிறகும் திராணி, உரியவர் அற்ற இடத்தில் விடயதானத்தை மீறி உரியவர் பற்றி கதைக்காத பக்குவம், முகத்துதி இன்றி என்றும் இயல்பாய் இருத்தல் என உன் எந்தக் குணத்தைப்பற்றி நான் எழுத என் தோழா. நேற்றைய என் இரவு உன் நினைவால்தான் விடிந்தது. நீ அல்லாஹ்விடம் மீண்டு விட்டாய். உனது பாவங்களை மன்னித்து , அல்லாஹ் ஏற்றுக் கொண்ட ஆன்மாவாக உன் ஆன்மா அவன் சந்நிதானத்தில் அமையட்டும். சுவர்க்கத்தில் ஜன்னதுல் பிர்தெளவ்ஸை உனக்கு வழங்கட்டும். உன்னை இழந்து நிற்கும் மனைவி பிள்ளைகளுக்கும்,குடும்பத்தினருக்கும் அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கட்டும். நீ முந்தி விட்டாய் தோழா! ஆமீன்.
.
WAK
