உறைந்து போன கண்ணீர் – 1

எங்கோ ஊரிலிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு அரக்கப்பறக்க துரத்தப்பட்டு உடுதுணியோடு விடியச்சாமத்தில் புத்தளத்திற்கு வந்திறங்கினார்களாம். அவர்கள் தான் தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனராம் என கொஞ்ச நாள் போக …

உறைந்து போன கண்ணீர் – 1

-இம்தாத் பசர்-

வழமையை போல நேரகாலத்தோடு புத்தளம் சின்ன சாஹிராவுக்கு சென்று விட்டேன். அது சின்ன சாஹிராவில் எனது இறுதி வருடம். ஐந்தாம் ஆண்டு வரை அங்கே பயில முடியும். அடுத்த வருடம் பெரிய சாஹிரா செல்ல வேண்டும். நாங்கள் பெரிய மாணவர்களாக கருதப்படுவோம் என ஒரு வகை மகிழ்ச்சி நிரம்பிக் காணப்படும் இறுதித் தவணை. மெய்ன் ஹோலில் ஒரே மக்கள் கூட்டம். வீட்டிலிருக்கும் கோலத்தில் பெண்கள், சிறுவர்கள், கை பிள்ளைகளை சுமந்த பெண்கள் என ஒரே மக்களால் பாடசாலை நிரம்பி வழிந்தது. பாடசாலையில் குழுமியிருந்த மக்கள் ஒரு வகை அந்நியமாக தோன்றினர். எங்களை வெறிக்க வெறிக்க ஏக்கத்தோடு பார்த்தனர். நாங்கள் விளையாடிய பாடசாலை மைதானத்தின் மூலையில் தள்ளித் தள்ளி மலங் கழித்திருந்தனர்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்ச நேரம் பாடசாலையிலிருந்தேன். பிறகு எல்லா மாணவர்களையும் வீடு செல்லுமாறும் பாடசாலை நடைபெறாது என்றும் சொல்லப்பட்டது. ஒரே குதூகலம். வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.
வீட்டுக்கு வந்தால் உம்மாவும் மற்றவர்களும் ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். என்ன என்று கேட்கவும் முடியாது, பெரியவர்கள் பேச்சில் ஏன் கலக்கிறாய் என ஒரு கொத்து விழும். இனி கொஞ்ச நாளைக்கு பாடசாலை நடைபெறாது என சொன்னார்கள். அது ஒரு மாதமா இல்லை அதை விட குறைவான காலமா என நினைவிலில்லை. ஆனால் சில வாரங்கள் என நினைவிருக்கின்றது.
எங்கோ ஊரிலிருந்து முஸ்லிம்கள் ஊரை விட்டு அரக்கப்பறக்க துரத்தப்பட்டு உடுதுணியோடு விடியச்சாமத்தில் புத்தளத்திற்கு வந்திறங்கினார்களாம். அவர்கள் தான் தற்காலிகமாக பாடசாலையில் தங்க வைக்கப்பட்டனராம் என கொஞ்ச நாள் போக தெரிந்து கொண்டேன். யார் செய்தார்கள் ஏன் செய்தார்கள் என்பதெல்லாம் தெரியாது. எங்களுக்கு அது out of topic. தெரிந்து கொள்ளும் ஆவலும் இருக்கவில்லை. நமக்கு இருந்த அலுவலெல்லாம் நன்றாக தூங்கி பொழுது போக விளையாடுவது தான்.

.
பாடசாலையின் பின் கோடியில் நடுசென்டரில் ஒரு பனை மரம் நிற்கும். ஓட்டப்பந்தயங்கள் வைத்து அதை சுற்றி ஓடுவது எங்களின் வழமையான விளையாட்டு. அது நேராக நெடிதுயர்ந்து கர்வத்தோடு நிற்கும் ஒற்றை பனை. அதிகாலையில் பாடசாலை வரும் மர்சூக் அவன் பொருக்கிய பனம்பழத்தை காட்டும் போது நானும் ஒரு நாள் அவனுக்கு முன்னால் நேரத்தோடு வந்து பனம்பழம் பொருக்கனும் என்று ஆசை வரும். அது ஒரு நாளும் நடக்கவில்லை.
சில வாரங்களில் மீண்டும் பாடசாலை ஆரம்பித்தது. போனால் அந்த பனைக்கு இடது புறம் மதில் ஓரமாக ஓலையால் வேய்ந்த கக்கூசுகள் கட்டப்பட்டிருந்தன. அதனருகில் நாங்கள் செல்வதில்லை. நாறும். அவை நிலத்தில் குளி தோண்டி அமைக்கப்பட்ட அடிப்படை மலகூடங்கள். வரிசையில் இரண்டு மூன்று கட்டியிருந்தார்கள். கொஞ்ச நாளில் குளிகளை மூடி அதனை அகற்றிவிட்டார்கள்.

.
நாங்களும் யாரோ வேற்று மக்கள் பாடசாலையில் தங்கிருந்ததை மறந்து விட்டோம். இப்பொழுது பெரிய சாஹிராவுக்கு மாறும் நேரம் வந்துவிட்டது. பெரிய சாஹிரா சுமார் 200 மீட்டர் தொலைவில் அதே மன்னார் வீதியிலேயே உள்ளதால் மாணவர்களை வரிசையா நிற்க வைத்து ஆசிரியர்கள் கவனமெடுத்து கால் நடையாக கூட்டிப் போவார்கள். அங்கே புதிய வகுப்பில் நாங்கள் வகுப்புவாரியாக சென்று அமர்வோம். நான்காம் வகுப்பில் இருக்கும் போது ஐந்தாம் வகுப்பு முடிந்த மாணவரகளை வரிசையில் கூட்டிப்போவதை பார்க்கும் போது பெரிய சாஹிரா போவது பெரிய விஷயமாக தோன்றும். அந்த நாளுக்காக காத்திருந்தோம்.

.
மீண்டும் ஒரு நாள் பாடசாலை சென்றால் மறு அறிவிப்பு வருகிறது. பாடசாலை மூடப்பட்டுள்ளது எங்கிருந்தோ மீண்டும் மக்கள் வந்துள்ளார்கள் என. ஒரே திகைப்பாக இருந்தது. மீண்டும் பாடசாலை மூடுவிழா. ஆனால் பெரிய மகிழ்ச்சி தோன்றவில்லை.

.
இம்தாத் பசர்
படம்: நவீனமாகிவிட்ட சின்ன சாஹிரா மெய்ன் ஹோல்
பட உபயம்: http://puttalamblog.blogspot.com/…/zahira-college…

/Zan