உறைந்து போன கண்ணீர் – 2

-இம்தாத் பசர்-

நாள் செல்லச் செல்ல நிறைய புதிய மனிதர்கள் ஊரில் உலாவத் தொடங்கினார்கள். முல்லைத்தீவிலிருந்து வந்துள்ளார்கள், மன்னாரை சேர்ந்தவர்கள், யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் என சொல்லிக்கொண்டார்கள் ஊரில். எனக்கு அப்பிரதேசங்கள் இலங்கையில் எங்கே இருக்கின்றதென்றே தெரியாத வயது. வித்தியாசமான பேச்சுத்தொணி, வித்தியாசமான வார்த்தைகள், கண்ணாமார் (மூதாட்டிகள்) கம்பாயத்தையும் வொய்ல் சாரிகளையும் வித்தியாசமாக அணிந்திருந்தார்கள். பெரிய அளவில் முந்தானையை முன்னால் விசிரி போல் கொசுவி உடுத்தியிருப்பார்கள். பார்ப்பதற்கு நிறைய விடயங்கள் வித்தியாசமாக இருந்தன. அவை புதுமையாக இருந்தன.

 

வாப்பம்மா வீட்டுக்கு போனேன். ஒரே வளவினுள் இரண்டு மூன்று வீடுகளிருக்கும். மாமி வீடு தனியாக இருக்கும். புதிதாக நிர்மானித்த அறையினுள் ஒரு குடும்பம் குடி வந்திருந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றார்கள். என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் தங்கியிருந்தார்கள். அவர்கள் மன்னார் என்றார்கள்.

 

ஊர் ஒரு வகை வேகத்தில் இயங்குவது போன்ற பிரமை ஏற்பட்டது. காண்பவர்கள் வாயிலெல்லாம் வந்தவர்கள் அவர்களுக்கு நிகழ்ந்த துன்பங்கள் என எக்கச்சக்கமான கதைகளை கேட்க முடிந்தது. யாரும் விலாவாரியாக எனக்கு விளக்கவில்லை. ஒரு நாள் வாப்பா என்னையும் கூட்டிக்கொண்டு காலையிலேயே எங்கோ புறப்பட்டார். இன்றைய பெண்களை போல எதற்கெடுத்தாலும் கணவனோடு தொற்றிக்கொண்டு பயணம் போகும் பழக்கம் குறைவு என்பதால் வீட்டுப் பெண்கள் யாரும் எங்களோடு வரவில்லை. பின்னால் கதவற்ற சபாரி டைப் பச்சை நிற ஜீப்பில் சுற்றப்போகும் மகிழ்ச்சியில் ஏறிக்கொண்டேன். எங்கோ ஒரு தென்னந்தோப்பை அடைந்தோம். காலை நேரம். சுறுசுறுப்பாக கூலியாட்கள் சிலர் பல  சிறிய கொட்டில்களை வேய்ந்து கொண்டிருந்தார்கள். அவை இடம்பெயர்ந்தவர்களை குடிவைக்க கட்டப்பட்ட சிறு குடிசைகள். யாருடைய தோட்டம் என்று தெரியாது. நிறைய கொட்டில்களுக்கான கம்புகால்கள் நடப்பட்டிருந்தன. வேயும் வேலையை மேற்பார்வை செய்ய வாப்பா போயிருந்தார். அங்கிருந்து மீண்டும் வீடு வந்து வழமையான வேலைகளில் வாப்பா ஈடுபட்டார்.

2004ல் ஹுதா பள்ளி சந்தி

 

மரிக்கார் வீதி பகல் இரண்டு மணிக்கு பிறகு கறுப்பு வெள்ளை திரைப்படங்களில் வரும் மனித நடமாட்டமில்லாத வீதிகளை போல காட்சி தரும். மதியத்தில் எச்சி வாயோடு வெளியில் போகாதே என்று உம்மம்மா சொல்வார். பேய் வரும் செய்தான் பிடிச்சிருவான் என்றெல்லாம் சொல்வார். மனித நடமாட்டமில்லாத பகல் நேர மரிக்கார் வீதி பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். இருந்து நின்று  ஒரு மிதிவண்டி வரும் சில நேரம் மோட்டர் பைக் வரும். ஒரு கோடியில் ஹுதா பள்ளியிருக்கும் அதற்கு முன்னால் பள்ளி கடையிருக்கும். தெருவின் மற்ற பக்கம் தொங்கல் வரை சென்றதில்லை. இடையில் இரால் சந்தி கிணறும் அதற்கு எதிரில் மான் முடுக்கு தொடக்கத்தில் மர்ஹும் ஹுதாவின் மீன்கடையும் இருக்கும். கிணறு தனியாக தெளிவாக நின்றிருக்கும். அதை தாண்டி பெரியம்மா வீடு. இவ்வளவு தான் நான் தனியாக நடமாட அனுமதிக்கப்பட்ட தூரம். கிணற்றுக்கும் எங்கள் வீட்டுக்குமிடையில் ஒரு லோன்டரி ஓலையால் வேயப்பட்டிருக்கும். அந்த லோன்டரி முகப்பில் புதுவருடத்துக்கு New Year 1990 என பல நிறங்களிலான கிரேப்  தாள்களால் ஒட்டியிருந்தார்கள். அந்த இடத்தில் காலமான நௌபல் அவர்களின் பிலால் டெகரேஷன்ஸ் வந்துவிட்டது. அதற்கு பக்கத்து காணியில் ஆமணக்கும் பால் பற்றையும் வளர்ந்து பற்றைக்காடாக இருக்கும்.  புத்தளத்தின் உஷ்ணத்திற்கு பகலில் உண்ட பின் உறங்குவது அனேகரினதும் வழமை. அடிக்கின்ற சூட்டில் கடைக்கு எவனும் வரவும் மாட்டான். அந்த அணலில் ஏன் காய வேண்டும்னு சொல்லி கடைகளையும் பகலில் அனேகமானோர் மூடிவிட்டு மாலையில் மீண்டும் திறப்பார்கள். இப்பொழுது போல வீதிக்கு வீதி ஹோட்டல்களும் இருக்கவில்லை. டவுனுக்கு போய் உணவு பார்சல் வாங்க வேண்டும். சுணங்கினால் இருக்காது. எல்லா பொழுதுக்கும் வீடுகளில் சமைப்பதால் பகலுணவை கடைகளில் வாங்கியுண்பது மிக அரிது. பனிசும் பாணும் வாங்குவார்கள்.

 

முஸ்லிம்களின் வெளியேற்றம் நிகழ்ந்து ஓரிரு மாதங்களில் இந்த மரிக்கார் வீதி அதிக நடமாட்டம் உள்ள வீதியாக ட்ரான்ஸ்போம் ஆகியது. எந்த நேரமும் மனிதர்கள் அதில் நடமாடத் தொடங்கினார்கள். பகலிலும் சரி இரவிலும் சரி அதிகமான மனிதர்கள் எல்லா வீதிகளிலும் நடமாடத் தொடங்கினார்கள். ஆம் மூன்று ஊர்களில் இருந்து 75,000 இற்கும் அதிகமானவர்கள் இரண்டு வாரங்களில் புத்தளத்திற்குள் (புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகப்பிரிவுகளில்) அடைக்களம் புகுந்தார்கள். நகரத்தினுள்ளும் நகரின் புற இடங்களிலும் இவர்கள் குடியமர்த்தப்பட்டார்கள். இவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட முகாம்கள் வீடுகளாக மாறினாலும் இன்னும் முகாமாகவே இருக்கும் பகுதிகளும் இன்றளவும் உள்ளன.

 

சும்மா யோசித்து பாருங்கள் உங்கள் ஊரின் சனத்தொகை ஒரே வாரத்தில் இரட்டிப்பாகினால் எப்படியிருக்கும்.

 

இவர்கள் எவ்வளவு காலம் இருக்கப் போகிறார்கள் என்பதோ திரும்பிப் போவார்களா என்பதோ யாரின் மனதிலும் எழாத கேள்விகள். வந்தவர்கள் சுமந்திருக்கும் வலியும் வருத்தமும் கையில் சல்லிக்காசின்றி கண்ணீரும் கம்பலையுமாக வந்திருப்பதும் எல்லோரையும் கரைந்து போகச்செய்தது. அவர்கள் உடைந்தழுத போது நெகிழாத மனங்களிருக்கவில்லை. அவர்கள் நின்றிருந்த எரிபொழுதுகளின் உஷ்ணம் எங்களை உருகச்செய்தது. ஆதரியுங்கள் பகிருங்கள் வீடுகளில் தங்க வையுங்கள் என்பது தான் எங்கும் போதனையாக ஒலித்தது.

தொடரும் …

இம்தாத் பசர்

படம்: 2004ல் ஹுதா பள்ளி சந்தி

/Zan