உறைந்து போன கண்ணீர் – 3
மற்ற விளையாட்டு மைதானங்களுக்கு சென்றால் அங்கும் புதிய சிறுவர்கள் விளையாட வந்து விடுகிறார்கள். துரத்தவும் முடியாது. அவர்களும் எங்கு தான் போய் விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் …
உறைந்து போன கண்ணீர் – 3
-இம்தாத் பசர்-
வழமையான பாடசாலை வகுப்புக்களில் மெதுவாக புதிய முகங்கள் முளைத்தன. புதிய வெளியூர் மாணவர்கள் ஓரிரண்டு பேர் எனது வகுப்பில் உள்வாங்கப்பட்டிருந்தனர். பல நூறு மாணவர்களை எவ்வாறு ஏலவே நடைபெறும் வகுப்புக்களில் உட்கார வைப்பது. தளபாடங்களோ இடமோ போதாது. ஒரு சில வாரங்களில் கல்விக் கந்தோர் தலையீட்டோடு இடம்பெயர்ந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் வைத்து மாலை நேர பாடசாலைகள் ஆரம்பமானது. எங்களின் பாடசாலை விட்டதும் அவர்களின் வகுப்புக்கள் ஆரம்பமாகும்.
பிற்பகல் நேரம் பாடசாலை இயங்க பொருத்தம் குறைவாகவும் மற்ற அலுவல்களுக்கு சௌகரியம் குறைவாகவும் காணப்படுவது இயல்பு. ஒரு சில புலம்பெயர் ஆசிரியர்கள் செல்வாக்கை பயன்படுத்தி தமது பிள்ளைகளை காலை நேர பாடசாலைகளில் சேர்ப்பித்தனர். அந்த மணவர்களின் மொழியும் பாவணையும் எங்களுக்கு அந்நியமாக இருந்தது. நாங்கள் அவர்களின் மொழியை கிண்டல் செய்தோம். அதே போல் பேசிக்காட்டி எங்களுக்குள் பாசாங்கு செய்தோம். எங்களுக்கு அவர்கள் புதிய மாணவர்கள் அவ்வளவு தான். ஊர் பேர் விலாசத்திலெல்லாம் அக்கரை இருக்கவில்லை. இடம்பெயர்ந்த பிள்ளைகளுக்கு மாலை பாடசாலை இடம்பெறுவதால் மாலையில் எங்களை பாடசாலை மைதானத்திற்கு விளையாட வரக்கூடாது என பாடசாலையில் சொல்லப்பட்டது. எங்களுக்கு கொஞ்சம் குறையாக அது இருந்தது. வழமையாக விளையாடும் மைதானத்தை விட்டு எங்கே போய் விளையாடுவது. இப்படி சில காலம் சென்றது.
2004ம் ஆண்டு சுற்று மதில் பூர்த்தியடையாத நிலையில் புத்தளம் சாஹிரா கல்லூரியின் ஒரு பகுதி – விடுதி
மற்ற விளையாட்டு மைதானங்களுக்கு சென்றால் அங்கும் புதிய சிறுவர்கள் விளையாட வந்து விடுகிறார்கள். துரத்தவும் முடியாது. அவர்களும் எங்கு தான் போய் விளையாடுவார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். புத்தளத்தில் புட்போல் படு பேமஸ். டிக்கட் வாங்கி உள்ளூர் மெச்களை மக்கள் பார்க்க செல்லுமளவு புட்போல் பேமஸ். இன்றும் ஊரை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் ஊரளவில் அறியப்படுபவர்கள். கிரிக்கட் உலக கிண்ணம் நடைபெறும் வரை கால்பந்து தான் புத்தளத்தின் மெய்ன் விளையாட்டு. யாழ்ப்பாணத்து சிறுவர்களும் சரி இளைஞர்களும் சரி புட்போலில் கில்லாடிகள். திறமையாக புட்போல் விளையாடுவார்கள். யாழ் சிறுவர்களோடு புத்தளத்து சிறுவர்கள் அடிக்கடி புட்போல் மெச் வைப்பார்கள். அதில் அநேகமாக யாழ் டீம் வென்றுவிடும். ஊர் டீம் தோற்றுவிடும். உடனே தோற்ற ‘காமுசாரமும்’ தொடங்கிவிடும். வெளியூர்காரனிடம் சொந்த ஊரிலேயே தோற்றுவிட்ட தாழ்வுச்சிக்கல் வரும். எங்கிருந்தாவது ஒருவன் பணங்கொட்டை என தொடங்குவான். அவர்களும் ஏதாவது ஏசுவார்கள். இனி கொஞ்ச நேரம் வாய்ச்சண்டை பிடித்துவிட்டு இரண்டு டீமும் பிரிந்து போய்விடும். எந்த மெச்சும் கைகளப்பில் முடிந்ததாக ஞாபகங்கள் இல்லை. எல்லாரும் கட்டை களிசான் கேஸ்கள். வாயாடிவிட்டு களைந்து போய் விடுவார்கள்.
இதற்கிடையில் 6ஆம் கட்டை முதல் கல்பிட்டி வரை தகுதி தகுதியாக பல முகாம்கள் அமைக்கப்பட்டும் தோட்டங்களிலும் வீடுகளிலும் குடும்பங்கள் சிதறிச் சிதறி குடியமர்த்தப்பட்டார்கள். அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மாற்றலாகி வர சிறிது காலம் எடுத்தது. மற்றவர்களுக்கு வாழ்வாதாரம் என்ன செய்வதென்று தெரியவில்லை. இடம்பெயர்ந்தவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. தங்களூரில் கண்ணியமாக தொழில் செய்து அழகாக சீவியம் நடத்தியவர்கள். திடீரென விடுதலைப் புலிகள் ஊரைவிட்டு துரத்தியடித்ததும் திக்கற்று நிர்க்கதிக்கு உள்ளானவர்கள். பரிதாபத்திற்கு மேல் பரிதாபம் என்னவென்றால் அவர்களின் பொருளையும் செல்வத்தையும் பரித்துக் கொண்டு வெறுங்கையோடு விரட்டியத்த வெறித்தனம் புலிகளின் கொடுங்கோன்மையை உலகுக்கு பரைசாற்றியது.
தொடரும் …
(இம்தாத் பசர்)
/Zan