உறைந்து போன கண்ணீர் – 5
உறைந்து போன கண்ணீர் – 4
-இம்தாத் பசர்-
உணவு உடை உறையுள் மூன்றும் மனிதனின் அடிப்படை தேவைகள் என படித்துத் தந்தார்கள். அடையாளமும் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை பிறகு கற்றுக்கொண்டேன். அது எல்லா வித அடையாளங்களையும் குறிக்கும். ஆண், பெண், ட்ரான்ஸ்ஜென்டர், மதம், மொழி, கலாச்சாரம், தேசியம், ஜாதி, தோல் நிறம், கல்வி, நாடு, ஊர் என எல்லாமே அடையாளங்கள் தான். தேவைக்கு ஏற்ப ஒரு விடயத்தை சாதித்துக் கொள்ள தேவையான அடையாளத்தை மனிதன் வெளிப்படுத்துவான். ஆதிக்கத்தை நிலைநாட்ட அல்லது தேவையை பூர்த்தி செய்ய அல்லது தப்பிப் பிழைப்பதற்கு (survival) என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அடையாளம் ஒன்றை வெளியில் கொண்டு வருவான். அதே அடையாளத்தை பிறரை ஒடுக்குவதற்கும் புறந்தள்ளவும் மேலாதிக்கம் செலுத்தவும் பயன்படுத்துவான் மனிதன். அப்படித் தானேனும் ஒரே அடையாளத்துக்குள் அடங்கி விட்டால் ஈற்றில் படிப்பு செல்வம் என வினோதமான வர்க்க பேதங்களை அள்ளிப்போட்டு தனது மேலாட்சியை நிறுவுவான்.
துரதிர்ஷ்டமும் மனதால் சகித்துக்கொள்ள முடியாத வேதனை தான் மனிதர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு இடம்பெயர்க்கப்படுவது. அவ்வாறு வடபுல முஸ்லிம்கள் துரத்தப்பட்ட போது அவர்களின் பூர்வீகத்தையும் பாரம்பரியத்தையும் பகுதிகளாக அல்லது முழுமையாக இழக்க வேண்டி வந்தது. அவ்வாறு இழந்தவனுக்கு தான் அதன் வலி புரியும். ஊரில் சகல சௌபாக்கியங்களோடு வாழும் ஒருவனுக்கு அவ்விழப்பை புரிய வைக்க முடியாது. மண், அதில் விளைந்த மொழி, அதனது வட்டார வழக்குகள் என வாழ்வின் அலங்காரங்களை இழந்த மனிதர்களின் துன்பத்தை தலைமுறைகளாக ஓரிடத்தில் தொடர்ந்து வாழும் ஒரு சமூகத்தால் முற்றாக உணர முடியாது.
அடையாளம் எனும் அடிப்படை தேவையை இழக்கும் போது அங்கே ஏற்படும் வெற்றிடம் (vacuum) அது சொல்லொனா துயரங்களை தரும். இன்று stateless people என அடையாளம் பெற்றுள்ள பங்களாதேசில் வாழும் ரொஹிங்ய அகதிகள் ஒரு உதாரணம். இலங்கையை பொறுத்த வரையில் வடபுல முஸ்லிம் இடம்பெயர்வு (exodus) பல நிர்வாக பிரச்சினைகளுக்கு வழிகோழியது. அவை இன்றளவும் 30 வருடங்களாகியும் தீர்க்கப்படவில்லை. சில வேண்டுமென்றே தீர்க்கப்படாமல் தொய்வில் போடப்பட்டுள்ளது.
சமூக அடையாளம் பற்றி புகழ்பெற்ற சமூக ஆய்வாளர்கள் Cooleyஉம் (1902) G.H Meadஉம் (1934) அப்பவே சொல்லி வைத்தார்கள். அவர்கள் மட்டுமல்ல இன்றளவும் இதை பல சமூக ஆய்வாளர்கள் பல கோணங்களில் ஆய்ந்து அறிக்கை எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதில் கெதரின் ப்ருன்னும் ஒருவர். அங்கே வடபுலத்தில் முஸ்லிம் காணிகளின் எல்லைகள் அழிந்துவிட்டன. சில எல்லைகள் புலிகளாலும் அவ்விடத்தில் வதியும் மனிதர்களாலும் மாற்றப்பட்டுள்ளன. பத்து வருடங்களுக்கொரு முறை நிகழும் தேசிய புள்ளி விபர கணக்கெடுப்பு இரண்டு முறைகள் வடக்கில் நிகழவில்லை.
எத்தனை பேர்கள் வெளியேறினார்கள் என்பது அரச பதிவுகளில் இல்லை. Central recordல் பதிவான வடபுல முஸ்லிம் வாக்காளர் கணக்கெடுப்பை பயன்படுத்தி குத்துமதிப்பு எண்ணிக்கையை பெற முடியும். ஆனால் அதில் 18 வயதிற்கு குறைவானவர்களின் பதிவு இருக்காது. அந்த கணக்கெடுப்பையும் அந்த நாட்களில் பதிவாக்குவதில் தாமதங்கள் ஏற்பட்டன. இன்றளவும் யாரிடமும் துள்ளியமான அல்லது ஆதாரபூர்வ தோராயமான எண்ணிக்கை இல்லை. இப்பெரும் புலம்பெயர்வு ஒரு தசாப்த காலமாக ஆவணப்படுத்தப்படாமலே இருந்து வந்தது. அவ்விடைவெளியின் சிறிய பகுதியை கலாநிதி S.H ஹஸ்புல்லாஹ் அவரது ஆய்வின் மூலம் 2001ல் ஆவணப்படுத்தினார். அவர் மன்னார் எறுக்கலம்பிட்டியை சேர்ந்தவர் என்பதோடு இடம்பெயர் முஸ்லிம்கள் தொடர்பிலான வேறு ஆய்வுகளையும் செய்துள்ளார். தொடர்ந்து தொண்டர் நிறுவனங்களும் வேறு சிலரும் வடபுல முஸ்லிம் பெயர்வு பற்றி அறிக்கைகள் தயாரித்துள்ளனர். அதில் Law and Society Trust வெளியிட்ட The quest for redemption (2011) நூல் காத்திரமான பதிவுகளை பல்லின ஆய்வாளர்களை களத்தில் இறக்கி செய்திருந்தது. அதன் நம்பகத்தன்மையும் பக்க சார்பற்ற நடுநிலை பதிவுகளும் வரவேற்பை பெற்றன.
அடுத்த பிரச்சினை இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் அரசாங்க பதிவு. அனேக இடம்பெயர் முஸ்லிம்களுக்கு இங்குமில்லை அங்குமில்லை என்ற நிலை. அதைத் தவிர மற்ற அனைத்துமுண்டு. அது எப்படி. பதிவை அவர்கள் நாடவில்லையா அல்லது பதிவை செய்யாமலிருப்பதால் அதன் பின்னாலுள்ள அனுகூலங்கள் அவர்களை பதியவிடாமல் தடுத்ததா என்பது கேள்விக்குறி. பதிவு செய்த வியாபரம் செய்கிறார்கள் சட்டபூர்வமாக வீடு வாசல் வாங்குகிறார்கள். வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு எடுக்கிறார்கள். இலக்ஷன் வந்தால் சிலரின் பதிவு அங்கே. எங்கோ உதைப்பதாக தோன்றும். ஆனால் பிரயோக சிக்கலும் இதில் உள்ளது. முழுப்பதிவையும் புத்தளத்திற்கு மாற்றிவிட்டால் வடபுலத்திலிருக்கும் அவர்களின் பூர்வீக காணிகளுக்கு மீள்திரும்புவதற்கான உரிமை மழுங்கடிக்கப்படும்.
சரி இதெல்லாம் எதுக்கு இப்ப. அது தான் 30 வருடங்கள் போய்விட்டதே. இக்காலப்பகுதியில் ஒரு சந்ததி பிறந்து வளர்து பிள்ளை குட்டியும் ஆகிவிட்டது. பூர்வீகம் பாரம்பரியம் என ஒரு சந்ததி தேட ஆரம்பிக்கும் போது வேர்களை தேட ஆரம்பிக்கும். வந்திறங்கிய ஊரில் தமது கலாச்சார அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பிரயத்தனம் எடுப்பார்கள். இதெல்லாம் புத்தளத்தில் நடந்தேறிவிட்டது. அதில் பிழையுமில்லை.
தமது உறவுகளோடு தமக்கு பரிச்சயமான ஊர் வழக்கில் பேசி ஒன்றாய் அருகில் வாழ்வது யாருக்கும் பிடிக்கும் செயல். அதில் என்ன பிழை. பல புதிய வீதிக் கிராமங்களும் சமூகமாக வாழும் இடங்களும் புத்தளத்தில் தோன்றி மக்கா, ஜித்தா, கூபா நகர், காசிம் சிடி என தோன்றிவிட்டன. சும்மா கிடந்த காணிகளின் விலையும் எகிரிவிட்டன.
புத்தளத்தில் பிறந்து வளர்ந்த இடம்பெயர் சந்ததிக்கு ஒரு வகை அடையால குழப்பமும் உருவாகிவிட்டது. தமது ஊர் என எதை தேர்ந்தெடுப்பது. பிறந்தகமா புத்தளமா. அவர்கள் புத்தளம் என கூறினால் சில ஊரவர் விடுவதாயில்லை. மன்னார் புத்தளம் என சுட்டப்படுவார்கள். யாழ் புத்தளம் என அடையாளப்படுத்தப் படுவர். பல திருமணங்கள் இவ்வூர்களை சேர்ந்தவர்களிடையில் நிகழ்ந்து கலந்தும் விட்டார்கள். ஆனாலும் இரண்டரக்கலக்க முடியாத நிலை. இடம்பெயர்ந்தவர்களால் பூர்வீகம் என்ற பிணைப்பை துண்டிக்க முடியாத நிலை. புத்தளத்தில் அகம் சார்ந்து ஒன்று கலக்க முடியாத நிலை. ஊரோடு கலக்காமல் வேறாக தனித்தியங்க விரும்பும் நூற்றுக்கணக்கான புலம்பெயர் மனிதர்கள் இருக்கிறார்கள். அதன் பின்னால் பொருளாதார காரணிகளும் ஒளிந்திருக்கின்றன. ‘ஒற்றுமை எனும் இறைவனின் கயிற்றை பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்’ என கோட்பாடு பேசும் இஸ்லாமிய போதகர் கூட்டமும் தத்தம் ஊர் பெயரில் இயக்கம் வளர்க்கவே விரும்பும் போக்கு. இவ்வாறு நிலைமையிருக்க புலம்பெயர்ந்தவர்கள் மீது ஊரவருக்கு எவ்வாறு பிடிப்பு வரும். இதற்கிடையில் புலம்பெயர்ந்த சமூகத்தினுள்ளும் அரசியலடிப்படையில் ஏற்றத்தாழ்வு வேறு. மொத்தத்தில் அது ஒரு வகை எண்ணெயும் தண்ணியும் போன்ற உறவு. புலம்பெயர் உள்ளூர் முரண் ஒரு பக்கம் புலம்பெயர் சமூகத்தினுள் பிளவு ஒரு புறம். சிக்கலோ சிக்கல், அது ஒரு இடியப்ப சிக்கல். இவைகளை எழுதிக்கடப்பது இலகு. வாழ்ந்து முகம் கொடுப்பது கடினம். நாளும் நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்ய வேண்டி உள்ளது. இன்னும் காலங்கள் பலதை கடக்க வேண்டியுமுள்ளது.
அப்ப முடிவு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி குறை காண்பதா. வாழுமிடத்தில் காழ்ப்புணர்வுகளை மறைத்து முகஸ்துதியோடு நயவஞ்சகமாக நடிப்பதா.
இம்தாத் பசர்
/Zan