உறைந்து போன கண்ணீர் – 6

-இம்தாத் பசர்-

(இறுதிப் பகுதி)

குறிப்பு: முன்னைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இப்பதிவை வாசிக்க வேண்டாம்.

1999 ஒக்டோபர் 8ஆம் திகதி இரவு. காசிமிய்யா அரபு மத்ரசாவில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. புலம்பெயர் சமூக மற்றும் ஊர் சமூக புத்திஜீவிகள், பிரதிநிதிகள் ஒன்று கூடுகிறார்கள். சமூகங்களிடையில் புகைய ஆரம்பித்துள்ளதை பெரு நெருப்பாக கணன்றெரிய முன்னர் நிலைமையை சுமுகமாக்கும் தேவை இரு சாராருக்கும் இருந்தது. ஒரு முறை அடிபட்டு வெளியேறியாகிவிட்டது. மறுமுறை வெளியேற்றப்பட்டால்…… அது நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஒற்றுமையை போதிக்கும் நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் பிறர் கெக்கலித்து சிரிக்கு முன்னர் சமாதானம் செய்வதற்கான முயற்சி அது. இரு தரப்பிலும் உணர்வுகளை பின் தள்ளி அறிவு முன்னால் நின்றது. நல்லதொரு முன்மாதிரி சமரசக்கூடல்.

இரு தரப்பு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அலசப்பட்டன. மனத்தாங்கள்கள் பகிரப்பட்டன. அதற்கான தலைமையை ஹஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையிலான ஆய்வுக்குழு ஏற்று செயற்பட்டது. இதுவும் அவரது ஆய்வின் பகுதியாக இருந்திருக்கும். ஏனெனில் அதில் ஆய்வுக்குழு சார்பில் ஹஸ்புல்லா என கூறப்பட்டிருந்தது.

அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் அச்சிடப்பட்டன. அதில் புலம்பெயர் சமூகம் சார்பில் பலர் பங்கேற்றனர். பிரசுரமெங்கும் புலம்பெயர்ந்தவர்களை அகதிகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து சொந்த நாட்டினுள் இருப்பவர்கள் அகதிகள் அல்ல. அகதிகள் என்றால் யார் என்பதை 1951 ஆம் ஆண்டு சர்வதேச அகதிகள்  சமவாயத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அது உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட வரைவிளக்கணம். கற்றரிந்த ஹஸ்புல்லாஹ் அவர்கள் இதை பற்றி அறிந்திருப்பார் என நம்புகிறேன். தமது புலம்பெயர் சமூகத்தை விழிக்கும் போது அவர் தலைமையிலான குழு அகதி என்றே தொடர்ந்தும் குறிப்பிடுகின்றது. அந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற புத்தளத்தில் வசிக்கும் புலம்பெயர் பெண்மணி 2020 ஒக்டோபர் 30ஆம் திகதி The Hindu பத்திரிகைக்கான கட்டுரையில் புத்தளம் மக்கள் இன்னும் தங்களை அகதிகள் என அழைக்கிறார்கள் என குறைபட்டுள்ளார். இது முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தனக்கு தேவையான போது தன் இடம்பெயர் சமூகத்தை அகதிகள் என விழிப்பதும் புத்தளத்தவர் அகதி என  கூறும் போது பிழை காண்பதும் சந்தர்ப்பவாதம்.

2020 ஒக்டோபர் மாதம் Colombo Telegraph பத்ரிகைக்கான தனது கட்டுரையில் ஷிரீன் சரூர் எனும்  பத்தியாளர்

“Three decades of neglect and misunderstanding by local residents, government officers, international donors, and southern Muslims have left northern Muslims feeling there is no one left to trust”

என சொல்லி அனுதாபம் தேடுகிறார். இதில் புத்தளம் மக்கள் புலம்பெயர் மக்களை புறக்கணித்ததாக அனைவர் மீதும் அபாண்டம் சுமத்துகிறார் இந்த செய்நன்றி கொண்ட மகவு. தானும் புலம்பெயர்ந்தவர் என சில இடங்களில் சொல்லிக்கொள்ளும் இவர் எத்தனை வருடங்கள் புத்தளத்தில் வாழ்ந்தார் என்பதை தேடிப்பார்த்தால் தகிடுதத்தம் புரிந்துவிடும். அவரின் குடும்பம் இடம்பெயரும் போது கொழும்பு பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த குட்டிப்பெண்ணுக்கு புத்தளத்தவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர்கள் சொல்லிக்கொள்ளட்டும் அனுதாபம் தேடட்டும். புகழாரம் சூடத் தேவையில்லை ஆனால் ஒவ்வொரு கறுப்பு ஒக்டோபரின் போதும் தங்களை ஆதரித்தவர்கள் மீது கரி பூசி அனுதாபம் தேடுவது தப்பு. வந்த போது எங்களை ஆதரித்தார்கள் என்று முருக்க மரத்தில் ஏற்றி    முறித்துவிடாமலிருந்தாலே போதும். 1999இல் ஆடோ பார்க்கில் தொழில் செய்ய விடுகிறார்கள் இல்லை என்று அறைத்த மாவையே மீண்டும் மீண்டும் 2020இலும் அறைப்பது கொஞ்சம் சலிப்பாக உள்ளது. புதுசாக ஏதும் ட்ரை பண்ணலாமே. எந்த ஊரிலும் சரி சொந்த ஊர் காரனே ஏலவே இருக்கும்  ஒரு பார்க்கில் புதிதாக தன் ஆடோவை நிறுத்தினால் விடவா போகிறார்கள். பொருளாதாரம் சார்ந்து பல கசமுசாக்கள்.

பத்து வருடங்களுக்கும் மேலாக அதிகரித்த ஒதுக்கீடு இன்றி அத்தனை பேரும் அதே எல்லைகளுக்குள் வாழ்ந்தார்கள் என்பதை வரலாறு மறக்காது. புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேச செயலக பிரிவுகளுக்குள் தான் இடம்பெயர் சமூகம் குடியமர்ந்தது. பாடசாலையில் பிள்ளைகளை சேர்த்தல், வைத்தியசாலை வளங்கள் (மருத்துவர், மருந்து), பேரூந்து எண்ணிக்கை என சொல்லிக்கொண்டே போகலாம். புத்தளத்தின் மகா பெரும் பிரச்சினை நீர். இதை யாருமே பெரிதுபடுத்தவில்லை காரணம் அதிக கிணறுகள் உள்ளன. புதிய வீடுகளுக்கான நீர் இணைப்பை பெறுவது பெரும் சிரமம். நீண்ட காத்திருப்பிற்கு பிறகு தான் இணைப்பு கிடைக்கும். ஓரிரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் அதற்கு விடிவு வந்தது. திடீரென அதிகரித்த குடிசன நெருக்கடி ஊரின் அடிப்படையிலேயே கை வைத்தது. அதை ஊர் பொறுத்துக்கொண்டது. ஒரு நாள் இரண்டு நாளல்ல. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அந்த பொறுமை தொடர்கிறது.

நாள் கூலியில் சரிவு (அதிகரித்த தொழிலாளர் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர்), வாடகை செலுத்துவோர் திக்கு முக்காடினர்,  இடம்பெயர்ந்தவர்கள் வந்ததால் தான் இத்தனை பிரச்சினை என புத்தளத்தவர்கள் ஊடகங்களில் கூவித் திரியவில்லை. இரு சமூகங்களினதும் ஒரு சில பிரச்சினைகளே இப்பதிவுகளில் கோடிட்டு காட்டப்பட்டன. அவை எழுந்தமானமாகவே இங்கே பேசப்பட்டன. ஆழ்ந்து நோக்கினால் இரண்டு பக்கத்து பொத்தல்களும் வெளித்தெரியும். வந்தாவருத்தான், வந்தேரி என்பதெல்லாம் மனங்களை புண்படுத்தும் சொல்லாடல்கள். இவற்றை உள்ளூர்வாசிகள் பயன்படுத்துவதும் கண்டிக்கத்தக்கது. ஆனானப்பட்ட ஐரோப்பிய நாடுகளிலேயே 10 வருடங்களில் PR கிடைத்தாலும் புத்தளத்தான் PR கொடுக்க மாட்டான் போல. அதே போல இஸ்ரேல்காரனை போல நாகவில் என்ற ஊர் பெயரை எருக்கலம்பிட்டி என மாற்றி அழைப்பதும் பொறுத்தமற்றது. அங்கு வாழ்ந்தவர்களுக்கும் அடையாளமிருக்கின்றது. இந்த ஊர் பெயர் மாற்றும் சூட்சுமத்தை புலிகள் செய்தனர். தமது ஆழுகைப்பிரதேசத்தில் அடையாள அழிப்பிற்காக முஸ்லிம் கிராமங்களுக்கு தமிழ் பெயர்களை சூட்டினர். கச்சேரி கிராம பதிவுகளில் பழைய பெயர்கள் மாற்றப்படுவதில்லை. புதிய கிராமங்கள் பதியப்படும்.

கஷ்டப்பட்டு ஒரு சமூகம் முன்னேறி மேல் வருவது வரவேற்கத்தக்கது. அதை பார்த்து நான்கு பேர் பொறாமைக் கண் வைப்பார்கள். அதை புத்தளத்தவர்களும் செய்கிறார்கள். புலம்பெயர் சமூகத்தின் கடின உழைப்பு வெள்ளிடை மலை. அதன் விளைவான வளர்ச்சி மெச்சத்தக்கது. அவர்களிலும் பிரதேசவாதம் பேசும் அழுகிய மனிதர்கள் இருக்கிறார்கள். புத்தளம் ஒரு அரசியல் அனாதை. புலம்பெயர் சமூகத்தில் அரசியல் பிரதிநிதி வந்துவிட்டார் தொடர்ந்தும் அமைச்சுகள் அவரிடம் இருந்தன அதனால் நாங்கள் இதை செய்தோம் அதை செய்தோம் என இருமாப்பு கொள்வதும் குறுகிய போக்கே. அதற்காக இடம்பெயர் சமூகத்தையே சாடுவது தார்மீகம் ஆகாது. அரம் சாகும் போது அதை கொல்லும் சமூகம் சரிவை நோக்கி பயணிக்கும். அந்த சாபக்கேடு புத்தளத்திற்கு வராமல் இருக்க பிரார்த்திக்கிறேன். சகலரும் வளர்ந்தோங்க வேண்டுகிறேன். Afterall இது நாம் வசிக்கும் பூமி. அவனவனுக்கு அளந்தது கிடைத்தே தீரும்.

புலம்பெயர் சமூகங்கள் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு செய்கின்றன என்பது ஆய்வுகள் கூறும் மறுக்க முடியாத உண்மை. பல ஆய்வுகளை வாசித்து விட்டேன். ஒருவர் வராவிடில் இன்னொருவர் வந்து வளர்ச்சியில் பங்களிப்பு செய்வார். சைனா, இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்கள் வருவது எமக்கு நன்கு தெரியும். அதே நேரம் ஏலவே இருந்தவற்றை தாங்கள் வந்து வளர்த்தெடுத்தோம் என பீற்றிக்கொள்வது அறியாமை.

புத்தளத்தவர்கள் மீது குறை கூற வேண்டும் என்பதற்காக ஆட்டோபாக் கதையையும் பாடசாலை ஆசிரியர் பிரச்சினைகளையும் எங்களை அகதி என அழைக்கிறார்கள் என்றும் எத்தனை தசாப்தங்களுக்கு தான் இந்தப் பெண்கள் வாலைப்பிடித்து தொங்குவார்களோ தெரியாது. வருடாவருடம் தான் வாழும் ஊரையும் அதன் சமூகத்தையும் குறை கூறி ஊடகங்களில் அனுதாபம் தேடுவது வெற்கப்பட வேண்டிய ஒன்று. இதை புலம்பெயர் அறிவு சார் சமூகம் கண்டும் கண்டிக்காமல் இருப்பது விசனமளிக்கின்றது.

இங்கே எம்மோடு ஒன்றாக கலந்து வரம்பு தெரியாமல் நீர் நிறைந்த வயல்களை போல் மாறிவிட்ட பல நண்பர்களும் உறவினர்களும் கலந்து வாழ்கிறார்கள். தொடர்ந்தும் இருப்பார்கள். அவர்களை விரட்டவோ பிரதேசவாதம் பேசி இழிவு படுத்தவோ என் மனம் பொறுக்குதில்லை. அவ்வாறு பேசுபவர்களையும் முடியுமான வரை எதிர்த்து வந்துள்ளேன். பிரதேசவாதம் ஒரு அறியாமை. அந்த தீயை நெய்யூற்றி வளர்த்தால் அதற்கான விலையை எம் பிள்ளைகள் கொடுக்க வேண்டி வரும். அது இரு சமூகத்துக்கும் பொருந்தும்.

குறைசொல்லத் தொடங்கினால் அடுக்கிக்கொண்டே போகலாம். அது தீர்வை நோக்கி நம்மை நகர்த்தாது.

அவயவம் உடைந்திருக்கும் உடலில் சிறு கீறல்களை யாரும் பொருட்படுத்துவதில்லை. புலம் பெயர் சமூகத்தின் அவயவம் உடைக்கப்பட்டு முப்பது வருடங்களாகிவிட்டது. அதை தொடர்ந்து உள்ளூர் சமூகத்தின் உடலில் கீறல்களும் காயங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில போது அது கோடரிக்கொத்துகளாக விழுகின்றன. அவற்றுக்கு மருந்திடாவிடில் கீறல் சீல் வைத்து விடும். அதற்கு மருந்திட புலம்பெயர் சமூகமும் முன்வர வேண்டும்.

முற்றும்.

இம்தாத் பசர்

படங்கள்: கலந்துரையாடல் பற்றிய 3ஆம் வெளியீட்டின் முதல், இறுதி பக்கங்கள்.

உபயம்: புத்தளத்தின் ஆவணக்காப்பகமாக (repository) இருந்து பழைய துண்டுப்பிரசுரங்களை தந்துதவிய Zanhir ZA சேருக்கு மிகுந்த நன்றிகள்.

/Zan