ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்

‘போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ என்ற விருது தினகரன், தினகரன் வார மஞ்சரி பத்திரிகையின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

புகையிலை, புகைப்பிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உழைத்துவரும் ஊடகவியலாளர்களை புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை (நாட்டா) தெரிவு செய்து விருது வழங்கி (23.12.2020)  கௌரவித்துள்ளது.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தமிழ் மொழிக்கான விருது தினகரன், தினகரன் வார மஞ்சரி பத்திரிகையின் இணையாசிரியர் மர்லின் மரிக்காருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

‘போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ என்ற விருதை சுகாதார அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி மர்லின் மரிக்காருக்கு வழங்கி வைப்பதையும் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தலைவர் கலாநிதி டொக்டர் சமாதி ராஜபக்‌ஷ உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

மர்லின் மரிக்கார் சுகாதார விஞ்ஞான ஊடகத்துறை மேம்பாட்டுக்காக இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகப் பங்களிப்பு நல்கி வருபவராவார். அந்த வகையில் இவரது சுகாதார விஞ்ஞானம் தொடர்பான கட்டுரைகள் இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம்,  இலங்கை மருத்துவர்கள் சங்கம், சுகாதார கல்வி பணியகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றின் தேசிய விருதுகளை ஏற்கனவே பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தளம் விருதோடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்லின் மரிக்கார் புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன், Puttalam Online இணைய தளத்தின் ஆலோசனை சபை உறுப்பினர்களில் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.