எங்களது ஆரம்ப கால பேராசான் கண்ணியத்திற்குரிய இபுனு சேர் அவர்கள்

ஆக்கம் :- அபூஹனிபா நவ்ஷாத்

எங்களது ஆரம்ப கால பேராசான் கண்ணியத்திற்குரிய இபுனு சேர் அவர்கள்
2021.08.27

நான் தொடர்ந்து எழுதி வந்த ஆசிரியர் பெருந்தகைககளின் வரலாற்றிலே ஆரம்ப காலத்தில் எங்களுக்கு கற்பித்த பேராசான்களில் ஒருவரான தனது முதிர்ந்த வயதிலும் மனதால் இன்றும் இன்ஷா அல்லாஹ் என்றும் இளமையான இபுனு சேர் அவர்களை எழுதக் கிடைத்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
அன்னார் 22.06.1936ல் புத்தளத்தின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த காதர் சாஹிப் மரைக்கார், ஆசியா பீவி தம்பதிகளின் மூத்த மகனாக பிறந்தார்கள். புத்தளம் காள ஸ்கூலில் எச்.எஸ்.சி வரை கல்வி கற்ற அன்னார் சென் அன்றூஸ் மகா வித்தியாலயத்தில் ஆங்கிலமும் கற்றார்கள். 1959ம் ஆண்டு ஆசிரிய சேவையை பள்ளிவாசல்துறை பாடசாலையில் ஆரம்பித்து புத்தளம் காள ஸ்கூல், ஸாஹிராக் கல்லூரி, சின்ன ஸாஹிரா, சென் அன்றூஸ், அசன் குத்தூஸ் பாடசாலைகளிலும் மற்றும் பாலாவி, சங்கட்டிக் குளம், நம்முவாவ, புழுதிவயல், விருதோடை ஆகிய கிராமப்புற பாடசாலைகளிலும் சேவை புரிந்தார்கள். பாலாவி பாடசாலையில் கற்பிக்கும் போது அன்னாருக்கு அதிபர் பதவி கிடைத்து அங்கு அதிபராக கடமையாற்றினார்கள்.
இபுனு சேர் அவர்கள் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்தபடியால் அவரது பால்ய வயதில் வீட்டிலிருந்த ஓரிரு மாடுகளில் பால் கறந்து அதை கடைக்கு கொண்டு போய் விற்று அப்பணத்தில் வீட்டிலுள்ள அனைவருக்கும் காலை உணவை வாங்கி வந்து கொடுத்து விட்டுதான் பாடசாலை செல்ல வேண்டியிருந்தது. எனவே பெரும்பாலும் நேரம் தவறியமைக்காக தண்டனை பெற்றுத்தான் வகுப்பறைக்குள்ளும் செல்ல வேண்டியிருந்தது….
இந்தப் மனப் பதிவு காரணமாக அன்னாரது ஆசிரிய சேவையில் கால தாமதமாக வரும் எந்த மாணவருக்கும் தண்டனை கொடுக்க இடம் தரவில்லை என்று சற்று உணர்ச்சி பூர்வமாக கூறினார்கள்.
மதிப்பிற்குரிய இபுனு சேர் அவர்கள் கலைப்பாடங்கள் அனைத்தையும் கற்பிக்கக் கூடியவராக இருந்தார். இவரது கற்பித்தல் முறையில் தண்டனைகள் குறைவு, என்றாலும் மாணவர்களின் கல்வி விடயத்தில் மிகவும் அவதானமாக இருப்பார்கள். 1970 களில் இவர்களிடம் நாங்கள் ஸாஹிராவில் கல்வி பயின்றோம். ஸ்கவுட் ஆசிரியராகவும் சேவை செய்தார்கள்.
அவர்கள் அக்காலத்தில் சங்கட்டிக் குளம் பாடசாலையில் சேவை செய்த போது….. அப்பாடசாலையில் கல்வி கற்ற வறிய மாணவர்கள் பலர் தமக்கு இருந்த ஒரே பாடசாலை உடையை அழகாக மடித்து உறையில் போட்டு கொண்டு வந்து பாடசாலையை நெருங்கி மறைவிடத்தில் தாம் அணிந்து வந்த உடையை களைந்து அந்தப் பாடசாலை உடையை அணிந்து வகுப்புக்கு வந்து கல்வி கற்று பின் பாடசாலையை விட்டு செல்லும் போதும் மிகவும் பவ்யமாக அந்த சீருடையை மீண்டும் களைந்து உறையில் இட்டு தமது சாதாரண உடையை அணிந்தவர்களாக வீடு செல்வார்களாம். அப்படி கற்றவர்கள் இன்று சமூகத்தில் நல்ல அந்தஸ்தோடு உள்ளார்கள் என்றும் ‘அந்த கால பாண் போலீன்’ வறுமை நிலையை ஞாபகம் செய்தவர்களாக கூறினார்கள்.

மேலும் பன்னவ பாடசாலையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் பக்கீஸ் பெட்டி (பழங்காலத்தில் கூறப்பட்ட) ஒன்றை கொண்டு வந்து அதில் அமர்ந்து கொண்டு ஒரு பலகையை மேசையாக பாவித்து எழுதுவார்களாம். நமுவாவ பாடசாலையில் சேவை செய்த போது பாதையில் இருந்து 3 கிலோ மீற்றர் தூரத்தில் பாடசாலை அமைந்திருந்ததால் போகும் சமயம் உதவிக்கு வாகனங்கள் இல்லாத பட்சத்தில் நடையில்தான் செல்ல வேண்டியிருந்தது. இன்று போல அக்காலம் இல்லை. பெரும்பாலும் கிராமப் புறங்களில் கற்பித்த ஆசிரியர்கள் இவைகளை மனப்பூர்வமாக அனுபவித்தோம். அதில் எங்களுக்கு உள உறுதியும் ஆத்ம திருப்தியும் கிடைத்தது என்று மனதார கூறினார்கள்.
இபுனு சேரின் பாரியார் பஸ்யாலையைச் சேர்ந்த சபாயா ஆசிரியையும் சின்ன ஸாஹிராவில் எங்களுக்கு கற்பித்த ஆசிரியையாவார். மாணவர்களோடு மிகவும் கணிவாக நடந்து கொள்வார்கள். பி(க)ளாஸ்க் நிறைய தேனீர் கொண்டு வந்து வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் கணிவோடு தந்ததை நாங்கள் ஞாபகம் செய்கின்றோம்.
எங்கள் இபுனு சேர் அவர்கள் கிராமப்புறங்களில் கற்பிக்கும் போது தன்னால் இயன்றளவு பிரயோசனம் தரும் மரக்கன்றுகளை நாட்டியமையையும் அந்தக் கன்றுகள் இன்று பெரும் விருட்சங்களாக பிரயோசனம் தருவதையும் மகிழ்ச்சியோடு ஞாபகம் செய்தார்கள். தனது 85வது அகவையிலும் மனதளவில் இன்றும் ஒரு வாலிபன் போல ஆட்டோ, மோட்டார் பைக் ஓடிக் கொண்டு தனது அன்றாட வீட்டு கடமைகளை தானே செய்து கொண்டு பஜ்ருடைய தொழுகைக்கு புத்தளம் மௌலாம் மக்காம் மர்க்கஸ் பள்ளிக்கு தவறாது வந்து நிறைவேற்றிச் செல்வார்கள்.
அன்னாருக்கு மர்ஹும் இஸ்ஸதீன், சீ.எஸ்.எம். ஹனிபா சேர், ரவூப் சேர், அய்யூப் ஆகிய 4 சகோதரர்களும், மஹ்ரிபா, ஜென்னத் ஆகிய இரண்டு சகோதரிகளும் உண்டு. அஸ்லம், அஸ்மியா, அஸ்மின் ஆகியோர் இவர்களின் பிள்ளைகள் ஆவர்.
வல்ல அல்லாஹ் இவர்களுக்கும் இவர்களது பாரியார் ஆசிரியை ஸபாயா அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பூரண ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குவானாக! ஆமீன்….
நன்றி
வஸ்ஸலாம்