எங்கள் முதல் மரியாதைக்குரிய ஆரம்ப ஆசான் மர்ஹூம் எச். எம் செயினுலாப்தீன் (சேகுலாப்தீன்)

(அபூஹனீபா நவ்சாத்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியத் தந்தை எல்பிரட் சேர் அவர்களின் பேரறிவுத் தடாகத்தில் முங்கி எழுந்த, இம்மண்ணின் முதலாவது ஆசானாகப் பிரகாசித்த மர்ஹூம் எச்.எம் செய்னுலாப்தீன் அவர்களை, அன்னாரது உத்தியோகபூர்வமான தகவல்களை, ஓரளவு தேடி எடுத்து ஏற்கனவே கௌரவித்த ஆசிரியர்கள் மற்றும் ‘இன்ஷா அல்லாஹ்’ எழுதி கண்ணியப்படுத்தப்படவேண்டிய ஆசான்கள் அனைவருக்கும் மத்தியில், “மண்ணின் மைந்தர்கள்” பகுதி தனது முதல் மரியாதையை வழங்குகிறது.

“அல்ஹம்துலில்லாஹ்”

அன்னார் 03.03.1917 இல் பிறந்தார்கள். ஆரம்பக் கல்வியை கால ஸ்கூலில் கற்று மதிப்பிற்குரிய எல்பிரட் சேரின் கற்பித்தலில்  தனது கல்வியைப் பூர்த்தி செய்தார்கள்.

ஆசிரியர் தொழிலை 06.01.1941 இல் பாலாவி பாடசாலையில் ஆரம்பித்த அன்னார், புத்தளம் பாலர் பாடசாலை, பள்ளிவாசல்துறை, பலலுவெவ, வட்டக்கண்டல், கடையாமோட்டை, கரைத்தீவு, ஸாஹிறா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் சேவையாற்றி ஆசிரியராகவும் பின் ஹெட்மாஸ்டர் ஆகவும் உயர்ந்தார்கள். அக்கால இலங்கையில் பாடசாலை அதிபர்கள் தட்டுப்பாடு காரணமாக, ஆசிரிய சீனியர்களை ஹெட்மாஸ்டராக்கி கனிஷ்ட வித்தியாலயங்களை நிருவகிக்க கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆசான் சேகுலாப்தீன் அவர்கள் இறுதியாக புத்தளம் அஸன்குத்துஸ் வித்தியாலயத்தில் சேவை செய்து தனது ஆசிரிய ஓய்வை 31.01.1972 இல் பெற்றார்கள்.

1965 இல் நாங்கள் சின்ன ஸாஹிராவுக்கு பாலர் பிரிவில் சேர்ந்தபோது, ஆசான் செய்னுலாப்தீன் அவர்கள் எமக்கு ஹெட்மாஸ்டர் ஆக இருந்தார். சில சமயங்களில் P.T பாடத்திற்கு வருவார்.

கைகளிரண்டையும் விரித்து பறவைகள் பறப்பது போல் கூ கூ என்று கூவிக்கொண்டு இருந்த இடத்திலிருந்து அடுத்த எல்லைக்கு ஓட வேண்டும். “ஏரோ பிளேன் ஓட்டமாம்” அக்கால விஞ்ஞான உலகில் மக்கள் அதிசயமாகப் பார்த்த ஆகாய விமானங்களை நினைவு கூறும் வகையில் அப்படி ஒரு ஓட்டம். செய்னுலாப்தீன் சேர் முதலில் கூவிக்கொண்டு ஓடி எங்களையும் பயிற்றுவிப்பார். ‘கூவாமல்’ யாரும் ஓடினால்தான் பிரச்சினை வரும்.

பாடசாலை இடைவேளையில் வெளிநாட்டிலிருந்து பாடசாலைகளுக்கு என அன்பளிப்பு செய்யப்பட்ட போஷாக்குள்ள ஒரு வகை பால் மாவை வெந்நீரில் குழப்பி பேஸ்ட் செய்து, அக்கால பேக்கரியின், இந்தக் காலத்து சீனி பன்னை விட சற்று பெரிய பன்னில் இட்டு எம் அனைவருக்கும் தருவார்கள். சுவையாக இருக்கும். அதோடு பாடசாலை மாணவர்களுக்காக வெளிநாடொன்றில் இருந்து, தரமான பிஸ்கட்டுகளும் அந்தக் காலத்தில் கிடைத்தன.

சேகுலாப்தீன் சேர் பாடசாலை நிர்வாகத்தில் கண்டிப்பானவர். வகுப்பில் பாடத்திற்கு ஆசிரியர்கள் வராவிட்டாலும் எந்தச் சிறாரும் தூங்க முடியாது. உறங்குவதை பார்க்க நேர்ந்தால் “மனே இங்க வா மனே..” இது அவர்களது பேச்சு மொழி.

அவர்களால் கூப்பிடப்பட்ட சிறுவன் அவனது வகுப்பிலிருந்து கிட்டத்தட்ட 150 மீட்டர் தூரத்திலுள்ள பனை மரத்தை, ஓடிப்போய் தொட்டுவிட்டு வரவேண்டும். பனைமரத்தை தொடாமல் இடையிலே திரும்பினாலோ, ஆசான் அதனை பார்த்துவிட்டாலோ அச்சிறுவன் ஆரம்ப எல்லைக்கு வந்து மீண்டும் ஓட வேண்டி வரும்.

கண்ணியத்துக்குரிய சேகுலாப்தீன் சேர் கம்பீரமான, உயரமான மனிதர். ‘பாலாமணி’ ஷர்ட் என்று கூறப்படும் அக்கால உடையை விரும்பி அணிவார்கள். வளுவளுத்த கதைகள் கிடையாது. வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கதைத்து முடிப்பார்கள். “ஜென்டில்மன் டைப்”.
இந்தப் பெருந்தகைதான் புத்தளம் நகரில் படித்து முதலாவது ஆசிரியரானவர் என்று பதியப்பட்டிருக்கிறது. அதாவது ஆசிரியப் பயிற்சி கலாசாலை போகாத, ஆசிரிய அந்தஸ்து.

மறைந்த அதிபர் ஏ.கே அபூஹனிபா அவர்கள், புத்தளத்தில் ஆசிரிய கலாசாலை சென்று பயிற்றப்பட்ட முதல் பூரணமான ஆசிரியராவார்.

கண்ணியத்துக்குரிய செய்னுலாப்தீன் சேருடைய நண்பர்கள் மறைந்த அபூதாஹிர் சட்டத்தரணி, மறைந்த எம்.ஐ.பி. இப்ராஹீம் அவர்கள் (தங்கமூளை) ஆகியோராவர்.

சேகுலாப்தீன் சேரின்இளைய மகள் ஜெஸ்மின் அவர்கள் தன் தந்தையாரைப்பற்றி கூறும் போது,

“வீட்டில் எங்கள் அனைவரையும் எங்கள் தந்தையார் கண்டிப்போடு வளர்த்தார்கள். நேரம் தவறாமை மிகவும் முக்கியம். மஹ்ரிபு தொழுது, குர்ஆன் ஓதிவிட்டு, பாடங்கள் மீட்ட வேண்டும். பிரம்பு மேசை மேல் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். மாலை தேநீர், ஏதாவது ஒரு சோட் ஈட்ஸோடு கிடைக்கும். சாப்பாடு, தூக்கம் எல்லாம் அந்த அந்த நேரத்திற்கு. எல்லாவற்றிலும் எமது தந்தையார் ஓர் ஒழுங்கைப் பேணி எங்களை வளர்த்தார்கள். யாராவது கடன் கேட்டால், தன்னிடம் இருப்பில் இருக்கும் பட்சத்தில் உடன் கொடுத்துவிட்டு, பின்னர் அந்தக் கடனை கேட்டு வாங்கும் பழக்கம் அவர்களிடம் இருந்ததில்லை. கடன் கொடுத்தவர் திரும்பக் கொடுத்தால் பெற்றுக்கொள்வார்கள். இல்லாவிட்டால் அது ஹலால்தான்.” என்றார்.

எனது தந்தையார் A.K. அபூஹனீபா அவர்கள் சேகுலாப்தீன் சேரைப்பற்றி கூறும் போது,

“ஆற்றுக்குப் போய், வேட்டை கிடைத்தால் , அந்த இறைச்சிகளில் ஓரளவுக்கு எடுத்து, கீமா செய்து, அவர்களிடம் இருந்த பெட்டிஸ் செய்யும் இயந்திரம் ,சற்று பெரியதாம். நிறைய கீமா வைத்து, பெரிய பெரிய பெட்டிஸ்களாக பொரித்து ஆளுக்கு ஒன்று கொடுப்பார்கள்” என்றார்கள்.

இவர்களது மனைவியாரின் பெயர் உம்முல் ஹயர் என்று அழைக்கப்படும் யூசுப் நாச்சியா. அஜ்மிர்தீன், மர்ஹூம் பிர்தௌஸ், சுன்தூஸ், சப்ரி, வபா என்ற 5 ஆண்களும் மர்ஹூம் சுரையா, ஜெஸ்மின், நிஸ்மா என்ற 3 பெண் மக்களும். அவருக்கு 4 சகோதரர்கள், 2 சகோதரிகள்.

எங்கள் கண்ணியத்திற்கும் முதல் மரியாதைக்கும் உரிய ஆசான் சேகுலாப்தீன் அவர்கள் 10.08.1979 இல் இறைவனடி சேர்ந்தார்கள். பெருந்திரளான மக்கள் அவர்களது ஜனாஸாவுக்கு வந்து அன்னாருக்காக இறைஞ்சினார்கள் என்று கூறப்படுகிறது.

வல்ல அல்லாஹ் கண்ணியமிக்க சேகுலாப்தீன் சேர் அவர்களை பொருந்திக்கொள்வானாக.

ஆமீன்