எங்கள் விஞ்ஞானப் பேராசான் V.T. ரஜப்தீன் (VTR)
எங்கள் விஞ்ஞானப் பேராசான் V.T. ரஜப்தீன் (VTR)
கண்ணியத்துக்குரிய V.T. ரஜப்தீன் ஆசிரியர் அவர்கள் 17.03.1945 இல் ஊர்காவற்றுறையில் (Kayts) பிறந்தார்கள். ஆரம்பத்தில் தனது கல்வியை முறையே தனது ஊர் பாடசாலைகளான கதிரேசானந்த வித்தியாசாலை, சென் அந்தனீஸ் கல்லூரி (புனித அந்தோனியார் கல்லூரி) ஆகியவற்றிலும் பின்னர் மாத்தளை விஜயா கல்லூரியிலும் பயின்றார்கள். தொடர்ந்து வட்டுக்கோட்டை ‘ஜப்னா கல்லூரியில்’ (Jaffna College – முன்னைய Batticotta Seminary) தனது உயர்தரத்தைப் பூர்த்தி செய்தார்கள். பின்னர் மொறட்டுவை, கட்டுப்பெத்தை தொழில்நுட்ப கல்லூரிக்கு கனிஷ்ட தொழில்நுட்ப உத்தியோகத்தராக (Junior Technical Officer) தெரிவு செய்யப்பட்டு அங்கு சிறிது காலம் பயின்றபோதும் கல்வியைத் தொடர அவரின் குடும்ப வருமானம் இடம்தரவில்லை. இந்நிலையில் 9.9.1967 இல் புனித ஆசிரியர் பணியில் பிரவேசித்தார்கள்.
பயிற்சிக்கு முன்னரான நியமனம் (Pre-Training) நியமனம் நுவரேலியா புனித திரித்துவக் கல்லூரியிலாகும் (Holy Trinity College). அங்கிருந்து பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டு, விஞ்ஞானத் துறையில் சிறப்பு பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியராக இரத்தினபுரி புனித லூகாஸ் (St. Lukas) கல்லூரிக்கு நியமனம் பெற்றார்கள் (1.1.197. – 31.7.1970). அங்கு சொற்ப காலம் கடமையாற்றிய ரஜாப்தீன் ஆசிரியர் அவர்கள் 1.8.1970 இல் புத்தளம் ஸாஹிறா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்து 16.3.2005 இல் ஓய்வு பெறும்வரை இங்கேயே விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றினார்கள்.
1970 காலப்பகுதியில் விஞ்ஞானப் பாடத்துக்கு ரஜப்தீன் ஆசிரியர் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. நாடு முழுதும் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானம் கற்பிக்க ஆசிரியர் பற்றாக்குறை நிலவிய காலப்பகுதி அது. பெளதீகம், இரசாயனம், உயிரியல் என மூன்று பிரிவுகளை விஞ்ஞாப்பாடம் கொண்டிருந்தது. இதற்குப் புறம்பாக உயர்வகுப்பு மாணவர்களுக்கு பெளதீகம், இரசாயனம், போன்றவற்றையும் எமது பேராசானே கற்பித்தமையும் குறிப்பிடத்தக்கது. சாதாரண தர விஞ்ஞானப் பாடபெறுபேறு இவரின் காலப்பகுதியில் எண்பது சதவீதம் வரை அல்லாஹ்வின் உதவியால் அதிகரித்தது. அண்மையில் எம்மை விட்டும் பிரிந்த கந்தசாமி ஆசிரியர் அவர்கள் ரஜப்தீன் ஆசிரியர் அவர்களுக்கு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் ஸாஹிறா கல்லூரிக்கு வருகை தந்தார்கள். அவர்களின் வருகைக்குப் பின்னர் இப்பாடங்களை இவர்கள் இருவரும் பகிர்ந்து கற்பிக்கத் தொடங்கினர்.
எமது பேராசான் ரஜப்தீன் அவர்கள் கற்பிக்கும் பாங்கு அலாதியானது. கவித்துவமாக அனைவரையும் கவரக்கூடியது. பாடத்தில் கவனக்குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு கடும் தண்டனைகளும் உண்டு. பொய் கூறினால் அதீத கோபம் வரும். ஆனால் பாடம் முடிந்த பின்னர் மாணவர்களுடன் மிகவும் நட்புறவுடனும் நகைச்சுவையுடனும் பழகும் ஆசான் அவர்கள். ஒருமுறை குறும்புக்கார மாணவனான என்னைப் பார்த்து “நவுசாத் ரெம்பப் பொடி, ஆனால் துடி, அதுக்கு அடி” என்று கவிதைப்பாங்காக நகைச்சுவை ததும்பக் கூறினார். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இவ்வாறாக கவிதை ததும்பும் நகைச்சுவையுடன் கதைப்பது அவரின் இயல்பாகும்.
அன்றொருநாள் பெளதீகப் பாடம். ஆசிரியர் வகுப்புக்கு வந்ததும் ‘மின்னழுத்தப் பெட்டி’ என தலைப்பிட்டார். தொடர்ந்து ஒரு மாணவரை எழுப்பி மின்னழுத்தப் பெட்டி என்றால் என்ன என்று கேட்டார். அனால் அவனுக்கு அதற்கு பதில் தெரியவில்லை. தொடர்ந்து ஆசிரியர் அதே மாணவனிடம் ‘அயன் பொக்ஸ்’ என்றால் என்னவென்று தெரியுமா என்றார். அதற்கு அம்மாணவன் “தெரியும் சேர்” என்றான். “அதுதான் மின்னழுத்தப் பெட்டி” என்றார் ஆசிரியர். “நீங்கள் ஆங்கிலத்தில் கூறி இருந்தால் நான் விடை சொல்லி இருப்பேன்” என்றான் மாணவன்.
அடுத்தநாள் பெளதீகப் பாடத்துக்கான தலைப்பு ‘தேமஸ் பிளாஸ்க்’. அதே மாணவனைப் பார்த்து “தம்பி, தேமஸ் பிளாஸ்க் என்றால் என்னவென்று தெரியுமோ” என்று கேட்டார். மாணவன் “தெரியாது சேர்” என்றான். “சுடுதண்ணி போத்தல் தெரியுமோ”. “தெரியும்” என்றான் அம்மாணவன். அதுதான் தேமஸ் பிளாஸ்க் என்றார் எமது ஆசான். அதற்கு அக்குறும்புக்கார மாணவன் “சேர், நீங்கள் தமிழில் கேட்டிருந்தால் விடை சொல்லி இருப்பேன் என்றான். வகுப்பில் சிரிப்பொலி அதிர்ந்தது.
ஆறாம் வகுப்பில் கற்கும் போது இடம்பெற்ற சம்பவமொன்று நினைவுக்கு வருகின்றது. அனைவரும் மின் மணி ( Calling bell) செய்துகொண்டு வரவேண்டும். சரியாக செய்யமுடியாவிட்டாலும் முயற்சிக்க வேண்டும் என்பது எமது ஆசானின் கட்டளை. இயற்கையிலேயே தொழில்நுட்ப அறிவுள்ள மாணவனொருவன் நன்கு ஒலிக்கக்கூடிய மணி ஒன்றை செய்துகொண்டுவந்தான். பலர் முயற்சிசெய்து கொண்டு வந்திருந்தனர். நாங்கள் ஆறு பேர். ஒன்றுமே செய்யவில்லை. இடைவேளையின் போதுதான் நினைவே வந்தது.
இடைவேளைக்குப் பிறகு பெளதீகப்பாடம். ஆலோசனையில் ஆழ்ந்தோம். இறுதியில் எமது குழுவிலிருந்த குறும்புக்கார மாணவனொருவன் ஆய்வுகூடத்துக்குள் மறைந்து சென்று மின் விளக்கு வயர்கள் சிலவற்றை வெட்டி எடுத்து வந்தான். நாம் அதிலிருந்த மின் கம்பி சுருள்களை கவனமாக உருவி எடுத்து ஆளுக்கு ஆள் பகிர்ந்து கட்டைகளிலும் பலகைகளில் ஆணிகளை அடித்தது கம்பிகளை ஆணிகளில் சுற்றிக்கொண்டோம், முயற்சித்தோம் எனக்காண்பிக்க. அதாவது அடியில் இருந்து தப்புவதற்கு.
ஆய்வு கூடத்தில் நாம் நடத்திய விளையாட்டு அடுத்தநாள் ஆசானுக்கு விளங்கிவிட்டது. எம்மை அழைத்து அறிவுரை கூறினார். பாடசாலை உபகாரணங்களின் பெறுமதி அதனைக் கையாளும் விதம் என்பன பற்றியெல்லாம் கூறினார். அவரது செலவில் அனைத்தையும் வாங்கி மின்விளக்குகளை ஒளிரவிட்டார்கள்.
இப்போதுபோல் அன்று டியூஷன் வகுப்புக்கள் இருக்கவில்லை. பாடசாலைக் கல்வியை மட்டுமே வறிய மாணவர்கள் நம்பியிருந்த காலம். விஞ்ஞான ஆசிரியர்களுக்கும் பற்றாக்குறை. இந்நிலையில் தனியாளாக நின்று, புத்தளம் ஸாஹிறா கல்லூரியில் தலை சிறந்த விஞ்ஞான ஆசிரியராக விளங்கி அர்ப்பணிப்புடன் கற்பித்து பொறியியலாளர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், என புத்தளம் பிரதேசத்தில் பலரை உருவாக்கிவிட்டவர் பேராசான் ரஜப்தீன் அவர்களாவார்.
ரஜப்தீன் சேரின் மனைவி தஸ்பீஹா ஆவார். அப்துல் முக்சித் (பேராசிரியர், மலேசிய Monash University), தவ்ஹீதா (மனையாள்), வஹீதா(MLT), அஜ்மல் (IT Engineer), அம்ஜத் (Civil Engineer) ஆகிய இரட்டையர் என அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.
சைவ சமயத்தவராக V.T. ராஜேந்திரனாக புத்தளம் வந்த கண்ணியத்துக்குரிய விஞ்ஞானப் பேராசான் அவர்கள் தீனுல் இஸ்லாத்தில் இணைந்து V.T. ரஜப்தீனாக, ஒரு சன்மார்க்க இறை நேசராக, அவரது குடும்பம் புத்தளத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது நாம் புளகாங்கிதம் அடையவேண்டிய விடயமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணரையும் அவரது குடும்பத்தினரையும் பெருமையிலிருந்து இறுதிவரை பாதுகாப்பானாக. ஆமீன்.
ரஜப்தீன் சேர் கூறுகின்றார், “நான் எனது மாணவர்களை அதிகம் கண்டித்திருக்கின்றேன். ஆயினும் எனது மாணவர்கள் இன்றுவரை என்னுடன் நன்றியறிதலோடு நடந்துகொள்கின்றனர். புத்தளத்துக்கு வந்ததை வல்ல அல்லாஹ்வின் பாக்கியமாகக் கருதுகின்றேன்”. ஆம்… புத்தளம் நகரமும் எங்கள் விஞ்ஞான வித்தக பேராசான் ரஜப்தீன்ஆசிரியர் அவர்களை இந்த மண்ணின் மதிப்புக்குரிய மைந்தனாகக் கண்ணியப்படுத்துவதில் மகிழ்வடைகின்றது. மேலும் பல்லாண்டுகள் சுகதேகியாகத் தனது குடும்பத்தினருடன் இன்புற்று வாழ அல்லாஹ்வை இறைஞ்சுகின்றோம்.
/Zan
உண்மையான விடயம் நான் அவரிடம் படிக்காவிட்டாலும் அவருடைய வெளியிடு விஞ்ஞான ரசம் இப்பொழுதும் என்னிடம் இருக்கின்றது.
எமது ஸாஹிரா பாடசாலையின் இரு கண்களாக திகழ்ந்த கண்ணியத்துக்குரிய VTR ஆசிரியர் மற்றும் கந்தசாமி ஆசிரியர் இருவரிடமும் எனக்கு, என் பாடசாலை நாட்களில் கல்விகற்கும் சந்தர்ப்பம் கிடைக்கா விடினிலும் பிரத்தியோக வகுப்பின் மூலமாக VTR ஆசிரியரிடம் சாதாரணதரம் மற்றும் உயர்தரம் கற்க சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு கிடைத்த வரம் என்பேன்.
பேராசான் VT ரஜப்தீன் தனக்கென்று தனிப்பட்ட பாணியை கொண்டு பாடம் நடத்துபவர்.
TR போன்று பஞ்ச் நகைச்சுவையில் வார்த்தைகள் கூறுவதில் கெட்டிக்காரர். பாடநேரத்தில் நேரம் போவது கூட தெரியாத விதத்தில் அவரின் வகுப்பறையின் அமைந்திருக்கும்.
பாடத்தில் ஏதேனும் விளங்காமல் இருந்தால் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக்கொள்ளும் பழக்கத்தை நான் அவரின் பாடம் முடிந்த பிட்பாடு கேற்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். பாடத்தியிலும் சரி பாடத்திட்டத்திற்கு வெளியிலும் சரி ஏதேனும் கேட்டால் அதை திறம்பட விளக்கப்படுத்தி விட்டு இடத்தை விட்டு செல்லக்கூடிய ஒருவர்.
மார்க்கத்தில் மிகுந்த பக்தியுடை ஆசான். அதான் கூறிவுடன் வகுப்பறையை தொழுகைக்காக சிறிது நேரம் இடைவெளி விட்டு அனைத்து மாணவர்களையும் பள்ளிசென்று தொழுமாறு கூறிவிட்டு அவரும் தொழுத பின்னரே பாடங்களை தொடருவார்.
எனது தொழில் துறை தற்போது வேறுபட்டு இருக்கும் நிலையிலும் ஒரு தசாப்தம் கடந்தும் கூட இரசாயனவியலில் நான் கற்றுக்கொண்ட உலோகங்களின் தாக்குவீத தொடர் (REACTIVITY SERIES OF METALS) பட்டியலினை இலகுவாக மனனம் செய்துகொள்ள அவர் சொல்லித்தந்த சூத்திரம் “பொறுமை சோதரா ” இன்றுவரை என் ஆழ்மனதில் பதிந்துள்ளது.
பொறுமை ( பொட்டாசியம்/Potassium – K )
சோதரா ( சோடியம்/Sodium – Na )
கடமை ( கல்சியம்/Calcium – Ca )
மனதில்வை ( மக்னீஷியம்/Magnesium – Mg )
அல்லாஹ் ( அலுமினியம்/Aluminium – Al )
நாடினால் ( நாகம்/Zinc – Zn )
இருமை ( இரும்பு/Iron – Fe )
வெல்வாய் ( வெள்ளீயம்/Tin – Sn )
ஈமான் ( ஈயம்/Lead – Pb )
செலுத்திட ( செம்பு/Copper – Cu )
இதயம் ( இரசம்/Mercury – Hg )
வெளுத்திட ( வெள்ளி/Silver – Ag )
பொறுத்திடு ( பொன்/Gold – Au )
பிழைகள் ( பிளாடினம்/Platinum – Pt )
இவ்வரிகளை உச்சரிக்கும் போதெல்லாம் வகுப்பறை நினைவுகள் கண்முன் தோன்றுகின்றன.
தற்போதைய மாணவர்களுக்கு இவரிடம் கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் இவரிடம் ஒரு முறையேனும் கல்விகற்று பாருங்கள்.
மேலும் பாடத்தில் மற்றும் அல்ல விளையாட்டிலும் இவர் வல்லவர் என்பதை பலர் அறிவர். table tennis மற்றும் volleyball இவருக்கு கைவந்த கலை. table tennis யில் Reverse Pendulum Backspin Serve பண்ணுவதில் சிறந்தவர் என்று என் நண்பர் ஒருவரின் வாய்மூழி மூலமாக செவியுற்றிருக்கிறேன். இந்த வித்தையையும் இன்றைய விளையாட்டுவீரர்கள் இவரிடம் இருந்து கற்றுகொள்ளலலாம்.
பேராசான் VT ரஜப்தீன் அவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நீண்ட ஆயுளை அல்லாஹு தஆலா வழங்க நாமும் பிரார்த்திப்போம்.