எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 03

சமூக ஊடகங்கள் மட்டுமன்றி தொலைக்காட்சிகளே இல்லாத அக்காலத்தில் இந்த நாட்டில் பிரபலம் பெற்றிருந்த நளீம் ஹாஜியாரின் உருவம் அப்போது எமக்கு தெரியாது. அவர்தான் நளீம் ஹாஜியார் என்பதை …

எமது ஜாமிஆ நழீமிய்யா  (1973-1977) – 03

இஸட். ஏ. ஸன்ஹிர்  (1973)

குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் whatsapp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.

 நளீமிய்யா அங்குரார்ப்பணத்தின் முன்

 ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கான முதல் தொகுதி மாணவர்களைத் தெரிவுசெய்வதற்காக அன்றைய தேசியப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. 8 ஆம் வகுப்பு (Junior School Certificate – JSC) சித்தியடைந்திருத்தல் ஜாமிஆவில் சேர்வதற்கான அடிப்படை தகைமையாகும். விண்ணப்பித்தோருக்கான எழுத்துப்பரீட்சையொன்று 1973 ஜூலை 16 ஆம் திகதி சனிக்கிழமையன்று மருதானை ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் மொழி, கணிதம், இஸ்லாம், பொது அறிவு ஆகியவற்றில் பரீட்சை இடம்பெற்றது. நாம் விண்ணப்பித்த மொழியிலேயே பரீட்சை எழுதவேண்டுமெனவும் கேட்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர் பரீட்சைக்குத் தோற்றினர்.

பரீட்சையில் சித்தியடைந்த நூற்றுக்கணக்கானோர் நேர்முகப் பரீட்சைக்காக இல 12, அலக்ஸான்ட்ரா வீதி, வெள்ளவத்தையில் அமைந்திருக்கும் நளீம் ஹாஜியாரின் இல்லத்துக்கு அழைக்கப்பட்டோம். 1973 ஜூலை மாதம் 9,10,11,16,17,18 ஆகிய தினங்களில் நேர்முகப்பரீட்சை நடைபெற்றது. 8 ஆம் தரம் சித்தியடைந்தமைக்கான அத்தாட்சி கேட்கப்பட்டிருந்ததுடன் க. பொ. த. (சா /த) சித்தியடைந்தோர் இருப்பின் அதற்கான சான்றிதழ்களும் கோரப்பட்டிருந்தன.

நேர்முகப் பரீட்சையை நடத்தியோரில் அறிஞர் எ. எம். எ. அஸீஸ், மசூத் ஆலிம் சாஹிப், மெளலவி யூ. எம். தாஸீன், அல்ஹாஜ் ஏ சீ ஏ வதூத், ஷாகுல் ஹமீத் பஹ்ஜி, நீதிபதி ஏ எம் அமீன், கலாநிதி எம் ஏ எம் சுக்ரி, மெளலவி ஏ. எல். எம். இப்ராஹிம், ஹிப்பதுல்லாஹ் ஹாஜியார் போன்றோர் குறிப்பிட்டு சொல்லக்கூடியோராவர். எனது நேர்முகத் தேர்வின் இறுதிக்கட்டத்தில் அறிஞர் அஸீஸ் அவர்கள் மேசையில் இரு கைகளையும் ஊன்றி சற்று மெதுவாக எழும்பி எனக்கு சலாம் கூறியதும் அதற்கு நான் பதிலளித்ததும் இன்றும் நினைவில் உள்ளது.

Mashood Aalim Saahib

நளீம் ஹாஜியாரும் அங்கு இருந்தார். சமூக ஊடகங்கள் மட்டுமன்றி தொலைக்காட்சிகளே இல்லாத அக்காலத்தில் இந்த நாட்டில் பிரபலம் பெற்றிருந்த நளீம் ஹாஜியாரின் உருவம் அப்போது எமக்கு தெரியாது. அவர்தான் நளீம் ஹாஜியார் என்பதை நாம் அப்போது அறிந்திருக்கவில்லை.

இன்னும் வரும் …