எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 05

எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977)– 05

இஸட்ஸன்ஹிர்  

குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் whatsapp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.

முதல் கூட்டமும் நளீம் ஹாஜியாரும்

நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்தோருக்கான  ஜாமிஆ நளீமியா பற்றிய அறிமுகக் கூட்டமும் ஹாஜியாரின்  வெள்ளவத்தை, அலக்ஸான்ட்ரா வீதி இல்லத்திலேயே நடைபெற்றது. ஜாமிஆவின் சட்டதிட்டங்கள் மாணவர்களை சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் போன்றன பற்றி விளக்கிக் கூறுவதற்காக 1973 ஜூலை 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு எமது பெற்றோருடன் அங்கு சமூகமளிக்குமாறு நழீமிய்யா இஸ்லாமியக் கலாநிலையச் சங்கம் லிமிடெட் பரிபாலன சபையினால்  நாம்  அழைக்கப்பட்டிருந்தோம். 

 

அக் காலத்தில் ஊரில் ஹாஜியார் என்றால்  வயது முதிர்ந்த நரைத்த தாடியுடன் ஒருவர் இருப்பார். நளீம் ஹாஜியாரை 40 வயது இளைஞராக சவரம் செய்த முகத்துடன் புன் சிரிப்புடன் சாந்தமே உருவான அமைதியான தோற்றத்துடன் பார்த்தபோது எமக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவருடைய மிருதுவான கைகளைப் பற்றி அன்று முதன்முறையாக ஸலாம் கொடுத்தை என்றுமே மறக்க முடியாது.

கூட்டத்தில் ஜாமிஆ  நளீமிய்யாவை அறிமுகப்படுத்தி பலரும்  பல தலைப்புக்களில் உரையாற்றினர். சாகுல் ஹமீது பஹ்ஜி அவர்கள், வத்தகுல்லாஹ் வயு அல்லிமுகுமுல்லாஹ் என்ற ஜாமியாவின் மகுட வாசகத்தினை (Motto)  விளக்கி, உரையாற்றினார். அவரின் பேச்சுப் பாங்கு வித்தியாசமானது. பிற்காலங்களில் விடுதியில் அவைகளை நாம் சுவாரஷ்யமாகப் பரிமாரியுள்ளோம். 

பெற்றோர் சார்பான  நன்றியுரையை எனது தந்தை எம்.ஐ. எல். இஸட். ஆப்தீன் நிகழ்த்தினார். பகல் உணவு புரியாணி. அரிசிக்கு கஷ்டமான, சோற்றுக்கு சிரமப்படும் அக் காலகட்டத்தில்,  கிராமங்களில் இருந்து வந்தோர் சிலர்  அன்றுதான் புரியாணி சாப்பாட்டை ருசித்ததாகக் கூறினர்.

M.I.L.Z. Abdeen, Puttalam

இன்னும் வரும்  …