எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977) – 06
எமது ஜாமிஆ நழீமிய்யா (1973-1977)– 05
இஸட். ஏ. ஸன்ஹிர்
குறிப்பு: இக்கட்டுரைத் தொடர் ஜாமிஆ நளீமிய்யா முதல் தொகுதி மாணவர் WhatsApp குழுமத்தில் இடப்பட்டு கலந்துரையாடப்பட்ட பின்னர் puttalamonline இணையத்தளம் ஊடாகப் பதிவிடப்படுகின்றது.
ஜாமிஆவில் முதல் நாள்
எமது ஜாமிஆ நழீமிய்யா, 1973 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறன்று மாலை திறந்துவைக்கப்பட்டது. நாம் முதல் நாள் சனிக்கிழமையன்றே, தேவையான பொருட்களுடன் பெற்றோர் சகிதம், பிற்பகல் 1.00 மணிக்கும் 4.00 மணிக்கும் இடையில் பிரசன்னமாகும்படி வேண்டப்பட்டோம்.
சனிக்கிழமை மாலைவேளை பலர் அங்கு வருகை தந்து நளீமிய்யாவை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அறிமுகமற்ற, எனது வயதையொத்த பேருவளை நண்பர் ஒருவர், அவராகவே எம்முடன் வந்து கதைத்து, வளாகத்தைக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றார். ஓரிரு கட்டிடங்களே அப்போது இருந்தன. பள்ளிவாசல் முழுமையாகக் கட்டப்பட்டிருந்தது. வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து , இறுதியில் விடைபெறும்போது அவரைப் பற்றி நான் விசாரித்தபோது, அவர் நளீம் ஹாஜியாரின் மருமகன் என்றார். அவரின் பெயர் ரியால், (ரியால் ஹாஜியார்).
அடுத்தநாள் மாலை இரண்டு மணிக்கு ஜாமிஆ நளீமிய்யா உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஜாமிஆவைத் திறந்துவைத்தார்கள். இலங்கையின் தலைசிறந்த கல்விமான்கள் உட்பட பல பிரமுகர்கள் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நளீம் ஹாஜியார் அவர்கள் கல்வி அமைச்சரை வரவேற்கிறார்
கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களையும் ஏனைய பிரமுகர்களையும்
வரவேற்று, அழைத்துச்செல்லல்
பிரதம அதிதி உரையாற்றுகிறார்
சமூகமளித்தோரில் ஒருபகுதியினர். முதல் தொகுதி மாணவர்களும் அமர்ந்திருக்கின்றனர்.
இடமிருந்து வலம், ஜாமிஆவின் முதலாவது சிரேஷ்ட மாணவர் தலைவர், மர்ஹூம் எம். எஸ். எம் நபீஸ் (வியங்கல்ல, களுத்துறை)
எமது முதல் அதிபரான மெளலவி மர்ஹூம் யூ. எம். தாஸீம் (நத்வி, அல் அஸ்ஹரி) அவர்கள், தொடக்க விழாவில், “….. இங்கு உருவாகிச் செல்லும் புத்தம் புதிய இஸ்லாமிய இளைஞர்களின் கைகளிலே, அறிவுக்களஞ்சியங்களின் கைகளிலே, சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நாங்கள் எல்லோரும் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்போம்….” என்று மகிழ்வுடனும், உற்சாகம் கரைபுரண்டோடும் புன்முறுவலுடனும் அரியதோர் சொற்பொழிவாற்றினார்கள்.

மறுநாள் காலை, அகில உலக தப்லீக் அமைப்பின் தலைவர், மெளலானா இனாமுல் ஹசன் ஹசரத் ஜீ அவர்கள், எமது வகுப்புக்கு வந்து, சூரதுல் பாத்திஹாவை சொல்லித்தந்து உத்தியோக பூர்வமாக பாடங்களை ஆரம்பித்து வைத்தார். அக் காலப் பகுதியில் இலங்கையில், மருதானை ஸாஹிறாவில் அகில உலக தப்லீக் இஜ்திமா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதில் நாமும் கலந்துகொண்டோம்.
இன்னும் வரும் …