எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி I
எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி I
(அபூஹனிபா நவுசாத்)
இற்றைக்கு 75 வருடங்களுக்கு முன்பிருந்து புத்தளம் நகரில் வருடாவருடம் நடந்து வந்த மீலாத் விழாக்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த இறைநேசர்களால் சன்மார்க்க உபந்நியாசங்கள் நடாத்தப்பட்டு வந்தன. திருக்குர்ஆனை மொழிபெயர்ப்பு செய்தவர்கள், தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹு போன்றஷரீஆ துறைகளில் பெரும் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களும்இவர்களில் அடங்குவர்.
அந்நவர்களது சொற்பொழிவுகளில் பெரும்பாலும், “இந்த ஊரில் ஒரு பெரும் மாணிக்கம் ஒன்று மறைந்திருக்கிறது. நாங்களோ அண்டை நாட்டிலிருந்து அழைப்புக்கிணங்கி வந்து எமக்குத் தெரிந்தவைகளை கூறிக் கொண்டிருக்கிறோம்”.என்ற ஒரு வசனத்தை அவர்களது சொற்பொழிவுகளின் ஆரம்பத்திலோ அல்லது இடைநடுவிலோ பெரும்பாலும் மொழிவார்கள்.
அன்று அந்நவர்கள் சூசகமாக உறைத்த இந்த மண்ணின் ஒப்புவமயற்ற மாணிக்கம் தான், எம் மக்கள் அனைவரினதும் சங்கைக்குரிய மஹ்மூத் ஆலிம் –பெரிய ஹஸரத் (ரஹ்) அவர்களாவர்.
இப்பெருந்தகையை நம் இளம் சமுதாயம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டியதுடன், நம் நாட்டினதும் அண்டை நாடுகளினதும் ஸீனியர் உலமாக்களின் எண்ணங்களில் அந்நாரின் நினைவுகளை மீட்டிக்கொள்ளச் செய்வதும், மட்டுமன்றி இந்நாட்டு அனைத்து இஸ்லாமியர்களும் சகோதர பொது மக்களும் இப்படிப்பட்ட பெருந்தகைகளை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவாவுமே இந்த ஆய்வின் நோக்கமாகும். இன்ஷா அல்லாஹ்.
பெரிய ஹஸரத் அவர்கள் புத்தளம் நகரின் குடியிருப்பு பகுதியிலுள்ள “நாவன்னா கடை” சந்தியிலிருந்து ஜாவுசன் பள்ளி ரோட்டுக்கு போகும் பாதையின் இடது பக்க சிறிய முதலாவது ஒழுங்ககையிலுள்ள “ஸ்க்ரீன் லெப்பை” என்று அழைக்கப்படும் அப்துல் மஜீத் லெப்பை மர்யம் நாச்சியா தம்பதிகளின் வீட்டில் அவர்களது மூத்த புதல்வராக 1915.06.01 இல் அவதரித்தார்கள். ஆரம்பக் கல்வியை புத்தளம் ஆண்கள் சிரேஷ்ட பாடசாலையில் (காள ஸ்கூல்) பூர்த்தி செய்த அந்நார்,1884.01.10 இல் ஆரம்பிக்கப்பட்ட ஐதுரூஸ் பள்ளியின் முன் திண்ணையில் அமைந்த அறபுக் கூடத்தில், அந்த காலத்தில்பெரும் உலமாக்களில் ஒருவராகத் திகழ்ந்த சங்கைக்குரிய செய்யது இபுறாகீம் ஆலிம் அவர்களிடமும், பாஸில் பட்டமும் “ஹக்கீமுல் யூனானி” என்ற மருத்துவப்பட்டமும் பெற்ற புத்தளத்தை சேர்ந்த “சித்தங்குட்டி ஆலிம்” என்று அழைக்கப்பட்டவரான முஹம்மது அபூபக்கர் ஹஸரத்திடமும் ஆரம்ப ஷரீஆ கல்வியைப் பயின்றார்கள். சொற்ப காலத்தில் இந்த திண்ணை மத்ரஸாவுக்கு பக்கத்திலுள்ள பெரியகாணி வக்பு செய்யப்பட்டு நாட்டின், ஆரம்பகால அறபு மத்ரஸாக்களில் ஒன்று – அல் மத்ரஸதுல் காஸிமியா வல்ல அல்லாஹ்வின் அருளைக்கொண்டு உதயமாகியது.
மத்ரஸா புத்தளம் நகரில் அமையக்காரணமாக அமைந்தவர்கள் தென்னிந்தியாவின் மாபெரும் உலமா “இமாமுல் அரூஸ்” மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களும், அன்னாரின் மருமகனார் பல்லாக்கு ஆலிம் அவர்களுமாவார். வல்ல அல்லாஹ் அந்நவர்களையும் இம்மத்ரஸாவுக்காக பாடுபட்ட அனைவரையும் பொருந்திக் கொள்வானாகவும். ஆமீன்.
பெரிய ஹஸரத் அவர்கள் தனது ஆரம்ப ஷரீஆ கல்வியை திண்ணை பள்ளியில் நிறைவு செய்து தன் உயர்கல்விக்காக 1933 இல் தென்னிந்தியா சென்று பொதுக்குடி அந்நூருல் முஹம்மதிய்யா மத்ரஸாவில் மௌலவி ஆலிம் தராதரம் பெற்றார்கள். அடுத்து வேலூர் பாக்கியத்துஸ்ஸாலிஹாத் அரபிக்கல்லூரியில் முதல்தரத்தில் விசேட சித்தியடைந்து,அதன் பின் சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியில் “அப்லலுல் உலமா” பட்டம் பெற்றார்கள். இரண்டு தடவைகள் இல்முக்காக தென்னிந்தியா சென்ற அந்நார் அக்கால தென்னிந்தியாவின் மாபெரும் உலமாவான கண்ணித்துக்குரிய அமானி ஹஸரத் (ரஹ்) அவர்களிடமும் இல்மு கற்றதுடன் அப்பெருந்தகையின்அன்பிற்குரிய சீடராகவும் இருந்தார்கள்.

அறபு இலக்கணம், மார்க்க சட்டம், வாரிசு உரிமைச் சட்டம், வானசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் முதலிய துறைகளிலும் விசேட திறமைகள் பெற்று, 1942 ஆம் ஆண்டு தாய்நாடு திரும்பினார்கள். அதே ஆண்டிலே தான் ஆரம்பமார்க்கக் கல்விகற்ற புத்தளம் காஸிமிய்யா அறபுக்கல்லூரியின் அதிபராக பதவியேற்று,1985.01.02 இல் வபாத்தாகும்வரை 43 வருடங்கள் மிகத்திறமையாக அக்கலாசாலையை நிருவகித்தார்கள்.
மாணவர்களது ஒழுக்க விடயங்களில் மிகவும் கண்டிப்புடன் செயற்பட்டார்கள். பணிவுடன் பல்லின மக்களையும் மதித்து பழகினார்கள். அவர்கள் கலாசாலையை நிருவாகம் செய்தபோது, வேற்று மத சகோதர்களும் காஸிமிய்யா கலாசாலைக்கு எவ்வித தயக்கமும் இன்றி வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
தன்னை நாடிவரும் ஏழை எளியோரை வெறும் கையுடன் திருப்பி அனுப்பிய சரித்திரம் இல்லை.
ஷரீஆ துறையில் ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்பட்ட அறிவுஞானத்தை அவர்களிடம் கற்ற உலமாக்கள் மனதில் பதிய வைக்க அரும்பாடு பட்டார்கள். ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த மனிதர்களை தன்னைச் சுற்றி உருவாக்கி,அக்கால புத்தளம் சமுதாயம் தீமைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள உலமா சபை ஒன்றை இம்மண்ணில் நிறுவி, அதன்ஆயுட்கால தலைவராக தொண்டு செய்தார்கள். அந்த சபை பின்னர் “உலா சபை” என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) காஸிமிய்யா கலாசாலையை நிருவாகம் செய்த 43 வருட காலமும் “புத்தளத்தின் பொற்காலமாகும்”.இது புத்தளம் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகைப்படுத்தப்படாத உண்மையும்கூட.
இங்குள்ள பிரபலமான ஸீனியர் உலமாக்களில் ஒருவரும், கணீரென்ற குரல் வளமுடையவருமான சங்கைக்குரிய நெய்னா புஹாரி ஹஸரத்(காஸிமி) அவர்கள் 1956இல் இருந்து காஸிமிய்யாவில்,பெரிய ஹஸரத்தின் மருமகனும், நீண்ட காலம் புத்தளம் பெரிய பள்ளிவாயிலின் பேஷ் இமாமாகவும் இருந்த சங்கைக்குரிய மர்ஹூம் எஹ்யா (காஸிமி) அவர்களுடன் தோழராக, காஸிமிய்யாவில் ஒன்றாகக் கற்றவரும், பெரிய பள்ளியின் ஜும்ஆ பயானை அக்காலத்தில் தொடர்ந்து செய்துவந்த ஒருவருமாவார்கள்.
இந்த ஆய்வுக்காக அந்நார் வழங்கிய விடயங்கள் பின்வருமாறு:
மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) அவர்கள் காஸிமிய்யாவுக்குமிகவும் இக்கட்டான பொருளாதார தட்டுப்பாடு நிலவிய காலத்தில் நெடுங்குளம் வீதியில் தமக்கு சொந்தமான ஒரே காணியை விற்று மத்ரஸா மாணவர்களின் உணவுப் பிரச்சினையை அல்லாஹ்வுக்காக தீர்த்தார்கள்.

அவர்கள் ஸீனியர் மாணவர்களுக்காக பாடங்கள் நடாத்தும் முறை, சுபஹ்தொழுகை முடிந்ததும் கற்பித்தல் ஆரம்பமாகி லுஹர் தொழுகைக்குப் பின்பும் சில சமயங்களில் நிறைவு பெறும். அவ்வாறு அவர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் மிக அவதானமாகக் கற்க வேண்டும்.
வேலைப்பழு காரணமாக மிகவும் களைப்பான சந்தர்ப்பங்களில் உறங்கச் செல்லும் முன் என்னை ஒரு நேரத்தை குறிப்பிட்டு எழுப்பிவிடுமாறு கூறிவிட்டு ஆழ்ந்த குறட்டையுடன் அரிதுயில் கொள்வார்கள். உஸ்தாத் அவர்கள் சொன்ன நேரத்தில், நான் மெதுவாக அவர்களுக்குப் பக்கத்தில் வந்து சீமேந்து தரையில் எனது காலை லேசாக தேய்த்தவுடன், “அஸ்தஃபிருல்லாஹ்” என்று கூறிக்கொண்டு உடன் விழித்துக்கொள்வார்கள்.அதாவது கண்கள் மாத்திரம் உறங்கும் நிலையில்… கல்பு அல்ல.
மாணவர்களின் ஒழுக்க விடயங்களில் மிகவும் கண்டிப்பு
பட்டம் பெற்று வெளியேறும் வரை நீண்ட “கிருதா” வைத்துக்கொள்ள முடியாது. சோட் கட்தான்.
ஒரு சமயம் இறுதியாண்டு வகுப்பில்இருந்த நாங்கள் ஸீனியர் ஆதலால், சற்று சலுகை கிடைக்கும், என்று எண்ணி எஹ்யா ஹஸரத் உட்படகொஞ்சம் முடியை வளர்த்து கிருதா வைத்துக்கொண்டோம்.
சம்பவம் நடந்த அன்று, முடியைசற்று வளர்ந்த சிறிய வகுப்பு மாணவர்கள் அனவைருக்கும் முடியை வெட்டும் படி கண்டித்து உத்தரவிட்டு விட்டு,நேராக எங்கள் வகுப்புக்கு வந்து ஒரு தடவைக்கூட அவர்களது வாழ்வில் “வா” என்று அழைத்திராத எஹ்யா மௌலவியை கூப்பிட்டு “தொப்பியை கழட்டு” என்றார்கள்.
இந்த வசனத்தை சற்றும் எதிர்பார்க்காத எஹ்யா மௌலவியின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் சொறிந்தது.
“புடலம் பாத்திக்கு போற போட்டா… புடலங்கா நல்லா காய்க்கும். இல்மு கற்கும் போது தலைல முடிவளர்த்தா மூளைய முடி தின்னும். முடி வெட்டப்பட்டவுடன் அழகியல் சிந்தனை இல்லாமையால் இல்மு நல்லாவரும்.”
இது, தலைமுடி விடயத்தில் ஒரு மாணவர் பட்டம் பெரும் வரை பெரிய ஹஸரத்தின் விதி முறையாக இருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும் அல்ஹம்துலில்லாஹ் கூறிவிட்டு அதன்பின் பல தடவைகள் “அஸ்தஃபிருல்லாஹ்” கூறக்கூடியர்வகளாக இருந்தார்கள்.
காரணம் கேட்டதற்கு, “மத்ரஸாவுக்காக வக்பு பண்ணப்பட்ட சொத்தில் சாப்பிடுகிறோம். மாணவர்களுக்குப்போல எமக்கும் இது ஆகுமாக்கப்பட்டதா?”என்ற எண்ணம் வந்துவிடுகின்றது. அதனால் தான் பலதடவை அஸ்தஃபிருல்லாஹ் (பாவமன்னிப்பு) செய்கிறேன் என்பார்கள்.
மேலும், மத்ரஸா மாணவர்கள் காகம் போல உறங்கவேண்டும் என்பார்கள்.காகங்கள் கூட்டமாக உறங்கும் மரத்தின் பக்கம் போய் சிறு சைகை செய்தாலும் அவை அனைத்தும் விழித்துக்கொண்டு கரைய ஆரம்பிக்கும்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அவர்களை தரிசிப்பதற்கு வருபவர்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு தமது ஹதியாக்களை வழங்கிச்செல்வது வழமையாக இருந்தது. அவற்றஎண்ணிப்பார்க்காமல்தலையணையின் அடியில் தனித்தனியாக வைப்பார்கள்.தேவை கருதி யார் வந்து கேட்டாலும், (எங்களது காலத்தில்) என்னை கூப்பிட்டு அதனை எடுத்துக்கொடு என்பார்கள்.
நான் இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் நோட்டுக்களை எண்ண முற்பட்ட சமயம் “என்ன எண்ணிக்கொண்டிருக்கிறாய் எடுத்ததை அவரிடம்கொடு” என்று என்னை அதட்டினார்கள். ‘கவுண்டிங்’ எல்லாம்இப்படியான விடயங்களில் அன்னாரிடம் கிடையாது. அன்பளிப்புகளை வாங்கி தனித்தனியாக வைப்பது தேவைப்படுபவர்களுக்கு அவற்றிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுப்பதற்கு அவ்வளவுதான். விருந்தினர்கள் மத்ரஸாவுக்கு வந்தால் வீட்டிற்கு ஆளனுப்பி அவர்கள் வீட்டில்உள்ளவைகளையும் எடுத்துவரச் செய்து, மத்ரஸா உணவுகளோடு, வந்த அனைவரையும் உபசரிப்பார்கள்.
ஒரு தடவை மத்ரஸாவின் உஸ்தாத்மார்களுக்கும், பொறுப்புதாரிகளுக்கும் இடையில் சம்பளப் பிரச்சினை வந்தது. அந்த சமயம் “மத்ரஸா பிள்ளைகளுடன் சென்று ½ நாள் கடலில் மீன்பிடித்து அதை விற்று பெற்ற ஊதியத்தில் ½ நாள் பாடம் நடத்துவேன்”. என்று ஆவேசமாகக் கூறினார்கள். அத்துடன் அந்த ஊதியப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
வெண்ணிற உடைகளையே அணிவார்கள். தலைப்பாகைக்குரிய துணியை, தலைப்பாகை அணியாமல் தனது தலையில் போர்த்திக் கொள்வார்கள். அடர்ந்த நீண்ட தாடி, தீட்சண்யமான ஒளிமிகுந்த கண்கள் அந்நாருக்குரியவை.
இவ்வாறாக சங்கைக்குரிய நெய்னாபுஹாரி (காஸிமி) அவர்கள் பெரிய ஹஸரத்தைப் பற்றி தனது நினைவுகளை பதிவு செய்தார்கள்.
மேலும், அண்மையில் இறையடி சேர்ந்த, ஹுதா பள்ளிவாயில் பேஷ் இமாமாக நீண்ட காலம் சேவை செய்த சங்கைக்குரிய மௌலவி நிஸார் (காஸிமி) அவர்களும், புத்தளம் மர்கஸின் பேஷ் இமாமாக சேவை செய்த சங்ககைக்குரிய மர்ஹும் அப்துல் வாஹித் மௌலவி (காஸிமி) போன்றோரும், அன்னாரின் மாணவர்களாவார்கள். மத்ரஸாவின் நீண்ட கால உஸ்தாத்களாக சங்கைக்குரிய ஹபீப் முஹம்மத் ஆலிம், சங்கைக்குரிய அபூசாலிஹ் ஆலிம் மற்றும்சங்கைக்குரிய எஹ்யா ஆலிம் ஆகியோர் இருந்தனர்.
நள்ளிரவு நேரங்களில் தனித்து நின்று வணங்குவது மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) அவர்களின் வழக்கமாக இருந்தது. பெரும்பாலும் வெகு சொற்பநித்திரைதான். வாழ்ந்த காலத்தில் அவர்கள் ஊரில் நடந்த எந்த விசேட வைபவங்களிலும் கலந்து கொண்டதில்லை.தான் உருவாக்கி தலைமை தாங்கிய உலமா சபையைத் தவிர.
அக்காலத்தில் அந்நாரோடு நெருங்கிப் பழகிய அனைவரும் இப்பெருந்தகைகயை ஒரு “வலீ”என அழைத்தனர்.
மஹ்மூத் ஹஸரத்(ரஹ்) அவர்களும், எனது தந்தையாரான அதிபர் மர்ஹும் A.K. அபூஹனீபா அவர்களும் ஒரே வகுப்பில் சிறு பராயத்தில் கல்வி கற்ற பள்ளித்தோழர்கள்.
தந்தையாரின் உத்தியோக காலங்களில் கிழமைக்கு ஒரு முறை ஹஸ்ரத் அவர்களை சென்று தரிசிப்பதைவழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். சில சமயங்களில் சிறுவனாக இருந்த அடியேனையும் கூட்டிச்சென்று அசீர்வாதம்பெற்றிருக்கிறேன்.
அந்நார் அந்தக்கால புத்தளம்நகரில் இருள் சூழ்ந்த பின்னிரவு வேளைகளில் தியானத்தோடு, வெட்டுக்குளம் ஜனாஸா அடக்கஸ்தளத்தில்“ஸியாரத்” செய்பவர்களாகவும் இருந்தார்கள். அந்த சமயங்களில் இரவு வேலை முடிந்து அந்த வழியாக வீடு செல்வோருக்கும், அந்தப்பாதையில் தட்டுத்தடுமாறி திரிவோருக்கும்ஒரு அரணாக நின்றுஅவரவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைப்பார்கள்.
பெரிய ஹஸரத் அவர்களின் ஆய்வு விடயமாக சங்கைக்குரிய நாஸர் மௌலவி வீட்டிற்கு சென்றபோது, அவர்களின் ஆயுளோடு ஒன்றிவிட்ட நெஞ்சின் ஆழத்திலிருந்தபூட்டனாரின் எண்ணச்செடியிலிருந்து நறுமணமிக்க, பிரகாசமான மலர் கொத்து ஒன்றை எனக்குத் தந்தார்கள். அந்த வாசனை மிகுந்த பூக்கொத்தை பகுதி, பகுதியாக வாசகப் பெருமக்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) அவர்களின் குடும்ப உறவை பிரதிபலிக்கும் அறபுக்கவிதையின் மொழிபெயர்ப்பை கற்றோருக்கும் சாதாரணமானவர்களுக்கும் விளங்கும்வகையில் இலகு தமிழில் நாஸர் ஹஸரத் தந்ததை அப்படியே இங்கு எழுதுகிறேன்.
“இதயக்கண்ணாடி கொண்டு இவ்வேளை தங்களை நான் பார்க்கிறேன். உங்கள், அசைவு, அமைதி, நிற்றல், இருத்தல், பேச்சு,மௌனம், நடை, உலாவுதல், சவாரி, புன்னகை சிரிப்பு, தூக்கம், விழிப்பு யாவும்என் கண்முன்னே காட்சி தருகின்றன.
உங்கள் குரல் என் செவிப்பறையில் ரீங்காரமிடுகிறது. உங்கள் பார்வை என் பார்வையைபறிக்கிறது. நீங்கள் அப்துல் மஜீத் அவர்களின் பிள்ளைகளில் ஒருவர் என் தாயின் தாயும், அவர்களின் பிள்ளைகளில் ஒருவர். வாப்பா அப்துல் மஜீத் உம்மா மரியம் நாச்சியா.
நெருங்கிய இரத்த உறவு, நீங்கள் நம்மை பார்க்க வருவீர்கள்.நாமும் உங்களைப் பார்க்க வருவோம்.
நான் சிறுவனாக இருக்கும்போது, என்தந்தையின் கடைக்கு வருவீர்கள்.வாப்பா உங்களுக்கு பப்பாசிப்பழம் கொடுத்து கௌவிப்பார்.
இரண்டு காரணங்களுக்காக…ஒன்று அது தங்களுக்கு விருப்பமான பழம், மற்றது அது உங்கள் “சீனிக்கும்” நல்லது.
நீங்களும் என் தந்தையும் பரிமாறிக்கொள்ளும் நகைச்சுவகைள் அவற்றை தொடர்ந்து எழும் சிரிப்பொழிகள் என்றும் என் மனதில் பசுமையான நினைவுகள். ஆம் அந்த நாட்கள் எங்கேயோ போய்விட்டன.
தூரப்பட்டுப்போனோம் தங்களோடு மிகவும் தூரப்பட்டுவிட்டோம் அப்பா… நிறையக் கதைக்கனும் என்று கொள்ளை ஆசை. ஆனாலும்… இன்றைய வேலைகள் நேரத்தைவிடக் கூடுதல் நிற்குது.
எனவே என் பூட்டனாரே… அண்மையில் வேறொரு சந்தர்ப்பத்தில் இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.”
நாஸர் ஹஸ்ரத்தின் பல கவிதைகள் அறபு உலகில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவை உலக தரம் மிக்கவையாகும்.
இன்னும் தொடரும்…