எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி 02
எனது தந்தையாரான மர்ஹூம் அதிபர் அபூஹனிபா அவர்களோடு, அக்காலத்தில் அரபுக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய சங்கைக்குரிய மௌலவி A.R.M. புஆத் மெளலவி அவர்களும் பெரிய ஹஸரத்துக்கு நெருங்கிய தோழராக இருந்தார்கள்.
(அபூஹனிபா நவுசாத்)
எனது தந்தையாரான மர்ஹூம் அதிபர் அபூஹனிபா அவர்களோடு, அக்காலத்தில் அரபுக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய சங்கைக்குரிய மௌலவி A.R.M. புஆத் அவர்களும் பெரிய ஹஸரத்துக்கு நெருங்கிய தோழராக இருந்தார்கள். நாஸர் ஹஸரத் அவர்கள் புஆத் ஆலிமைப் பற்றி “புஆத் மௌலவி மறக்க முடியாத மார்க்க அறிஞர்” என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

“மர்ஹூம் புஆத் ஆலிமின் பரந்துபட்ட சேவை மழையில் புத்தளம் அல் – மத்ரஸதுல் காஸிமிய்யாவும் நனைந்தது. இக்கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படும் மஹ்மூத் ஹஸ்ரத் அவர்களின் அதிபர் காலப் பகுதியில் இவர் ஹஸ்ரத் அவர்களுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கியும், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டும், மத்ரஸாவின் வளர்ச்சிக்கு மகத்தான தொண்டாற்றியமையும்வரலாறாகும். மஹ்மூத் ஹஸரத் அவர்களும் புஆத் மௌலவிஅவர்களின் திறமைகளை மதித்துகாஸிமிய்யாவின் வளர்ச்சிக்குஅந்நாரை பயன்படுத்திக்கொண்டார்கள்.
சங்கைக்குரிய புஆத் ஆலிமுக்கு நடந்த பெரிய ஹஸ்ரத் சம்மந்தப்பட்ட சுவையான நிகழ்வு ஒன்றை இங்கு வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றேன்.
அடியேன் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை எனது தந்தையார் என்னையும், கூட்டிக்கொண்டு சங்கைக்குரிய புஆத் மௌலவி வீடு சென்ற சமயம் புஆத் மௌலவி எனது தந்தையாரிடம் கூறியவைகளை குறிப்பிடுகிறேன்.
“நான் வழமை போல பெரிய ஹஸரத்தை தரிசிக்க சென்ற சமயம் மஃரிபுடைய நேரம் எனக்கு நெருங்கிக் கொண்டிருந்தது. நேராக பெரிய ஹஸரத்தின் அறைக்கு சென்று, கதவை தட்டி சலாம் கூறினேன். உடன் கதவை திறந்த ஒரு தலைப்பாகை அணிந்த மாணவர் ஒருவர் என்னை உள்ளே வரும்படி சைகை செய்துவிட்டு, எனக்கு முன்பதாக அறைக்குள் சென்றார். நான் உள்ளே சென்றபோது, அறை சற்று மங்கலாக இருந்தது. ஆயினும் அந்த மங்கிய அறையின் அடுத்த மூலையிலுள்ள கதிரையில் கதவைத்திறந்த மாணவர் அமர்ந்திருப்பது தெளிவாக விளங்கியது.
எனினும்,அந்த அறையை வெளிச்சமாக்க எண்ணிய நான் ஏற்கனவே எனக்கு பரீட்சையமான மின் சுவிட்சை போட எண்ணியபடி எனதுகையை சுவிச்போட் அருகே கொண்டுபோய்க் கொண்டிருக்கையில், சற்றும் எதிர்பாராத விதமாக, அறையின் அடுத்த மூலையில் கதிரையில் அமர்ந்திருந்த அந்த மாணவரின் கை கிட்டத்தட்ட 8 அடிக்கு நீண்டு எனக்கு முன்பதாக என் கைக்கு அருகே இருந்த மின் சுவிட்சைஓன் செய்து விட்டு, மீண்டும் அந்த கை சாதாரண நிலைக்கு வந்ததை என் கண்களால் கண்டு…. உடனே என் தலை சுத்துவதை உணர்ந்தேன்.

விழித்தபோது அந்த அறையில் பாய் ஒன்றில் படுத்திருந்தேன். பெரிய ஹஸரத் புன்முறுவல் பூத்தவாறு எனது தலைமுடியை கோதிக்கொண்டு இருந்தார்கள். இரண்டு ஸீனியர் மாணவர்களும் பக்கத்தில் நின்று கொண்டு…. மூவரும் என்னை கனிவோடு நோக்கினர். நான் மெல்ல எழுந்து அறையை நோட்டமிட்டபோது, ஏற்கனவே அங்கு இருந்த அசாதாரண மாணவரை காணவில்லை. மஹ்மூத் ஹஸரத் (ரஹ்) என்னை மஃரிபு தொழ அழைத்தார்கள். தொழுது முடிந்ததும் ஹஸரத்திடம் இருந்து விடைப்பெற்று வீடுவந்தேன். நடந்த விடயங்கள் அனைத்தையும் பெரிய ஹஸரத் விளங்கி இருந்தார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். பின் நாளில் 2, 1 தடவைகள் எனக்கு அவர்களது அறையில் நடந்த சம்பவத்தை ஹஸரத்திடம் விபரமாகக் கூறியும் கூட புன்முறுவல் ஒன்றே பதிலாகக் கிடைத்தது என்றார்கள்.
ஜின்கள் என்பது நம்மைப்போல அல்லாஹ்வின் ஒரு படைப்பாகும். அவை அவற்றிற்கு வரையறுக்கப்பட்ட அமைப்பில் கூட்டம் குடும்பமாக வாழும் நம்மில் உள்ளவர்ளைப் போன்றே, அவற்றிலும் நல்லவையும்தீயவையும் உண்டு. அக்காலத்திலும், ஏன்? இன்றும் கூட மத்ரஸாக்களில் தீய ஜின்கள் குழம்பம் விளைவிக்க முற்படுவதைக் காணலாம். நல்லவைகள் மனிதர்களுக்கு உதவி செய்தும்உள்ளன. உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன் வட இந்திய தேவ்பந்த் மத்ரஸாவில் சமையல்காரர்கள் சில மாதங்கள் இல்லாமல் இருந்த காலத்தில், இவ்வினத்தில் நல்லவை சில, மனிதரூபத்தில் அங்கு கல்விகற்ற மாணவர்களுக்கு சமைத்துப் பரிமாறிய வரலாறும் உண்டு. இக்காலத்தில் இந்த இனம் மனிதர்களோடு பழகுவது குறைவு எனலாம். நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு இவ்விடயத்தில் இறைவன் கொடுத்த அருட்கொடை இவ்வுலகம் முடியும் வரை யாருமே அனுபவிக்க முடியாத ஒன்றாகும்.
கண்ணியத்துக்குரிய பெரிய ஹஸரத் அவர்களுடைய ஆய்வை எழுதும் போது, அந்நாரின் வாழ்வில் பிண்ணிப் பிணைந்திருந்தஅல் – மத்ரஸதுல் காஸிமிய்யா பற்றியும்புத்தளம்நகரைப் பற்றியும்சற்று குறிப்பிட்டாக வேண்டும்.
புத்தளம் நகரம் 7 நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இலங்கையின் இஸ்லாமிய நகரங்களில் ஒன்று. அக்காலத்திலிருந்தே இந்த மண்ணின் மக்கள் சுதந்திரப் போக்கும்வீர உணர்வும் மிக்கவர்களாக இருந்தனர்.
சன்மார்க்க விடயங்களைப் பொருத்தவரை குர்ஆன் ஓதத் தெரிந்த லெப்பைமார்கள் வைபவங்களிலும்வீட்டு விசேசங்களிலும் பாத்திஹா ஹத்தம் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அக்கால பெண்டிர் “கம்பாயம்” எனப்படும் தென்னிந்திய முஸ்லிம் பெண்கள் அணிந்த உடையையும், பருத்தியினால் நெய்யப்பட்ட கதர் ஆடையையும் அணிந்தார்கள். “சீத்தை”என்ற சீனாவில் இருந்து இறக்குமதியான உடையும் மேற்கூறிய ஆடைகளுக்குப் பின் பாவனையில் இருந்தது.
அக்காலப் பெண்மணிகள், மீலாத் விழாக்கள் மற்றும் நம் மூதாதையருக்கு “சரி” என்று மனதில் பட்டதைபக்தி சிரத்தையுடன் ஓதிய மௌலூதுகள் முடிந்து சமைத்து, புதிதாக இளைத்த பணை ஓலைப்பாயில் பரத்திய… இக்காலஇளம் சமுதாயம் அநுபவித்திராத அபூர்வநறுமணமிக்க நார்சாக்களை(இறைச்சி கலந்த நெய்ச்சோறு) எடுத்துப் போகவும், இரு பெருநாட்களிலும், விமரிசையாக “புத்தளம் கங்காணிக்குளம்” மைதானத்தில், நடந்த “பந்தாயத்தரவையை” கண்டு களிக்கவும் கூடுவார்கள். இது பொதுவாக அக்கால இலங்கை பெண்டிரின் “மரபுவழி” பாரம்பரியமாகும்.

சன்மார்க்க விசேட நிகழ்ச்சிகளிலும், மீலாத் விழாக்களிலும், மார்க்க உபந்தியாசங்களுக்கு நம் நாடு, அக்காலத்தில் தென்னிந்தியாவை எதிர்ப்பார்த்த வண்ணமே இருந்தது.
தென்னிந்தியாவைப் பொருத்தவரை 17 ஆம் நூற்றாண்டில் முற்பகுதியிலியே குர்ஆன் மத்ரஸாக்கள் தோன்றி இருந்தன.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கை வந்த “இமாமுல் அரூஸ்”… மாப்பிள்ளை லெப்பை ஆலிமின் பெருமுயற்சியினால், வல்ல அல்லாஹ்வின் கிருபையைக்கொண்டு, நம் நாட்டிலும் ஆங்காங்கே ஓரிரு மத்ரஸாக்கள் தோன்ற ஆரம்பித்தன.
புத்தளத்தின் பெரும் தனவந்தர்களான இ.செ.மு. (ESM) பரம்பரையில் உதித்த, சங்கைக்குரியவர்களான அப்துல் ஹமீத் மரைக்கார், சேகு இஸ்மாயீல் மரைக்கார் ஆகிய பெரியார்களின் மனதில் தோன்றிய ஈமானிய கவலையினால், பழம் பெரும் ஐதுரூஸ்பள்ளி (புதுப்பள்ளி) முன் திண்ணையில் நம் நாட்ன் ஆரம்பகால மத்ரஸாக்களுள் ஒன்றான “காஸிமிய்யா” 1884.01.10 இல் அல்லாஹ்வின் அருளைக்கொண்டு உருவாகியது. பின்னர் ஐதுரூஸ் பள்ளிக்கு பக்கத்தில் உள்ள 6 ஏக்கர் நிலம் மேற்கூறிய பெயரியார்களின் வழித்தோன்றலான சங்கைக்குரிய முஹம்மத் காஸிம் மரைக்கார் என்ற வள்ளல் மூலம் அறக்கட்டளை எழுதி வக்பு செய்யப்பட்டது. இதனால் மத்ரஸாவின் பெயரும் “காஸிமிய்யா” என்று அழைக்கப்பட்டது.
மேலும் முந்தல் தாண்டிக்குறிச்சி என்ற இடத்திலுள்ள 125 ஏக்கர் தென்னங்காணிகாஸிமிய்யா மத்ரஸாவுக்காக வக்பு செய்யப்பட்டதுடன், புதுப்பள்ளிவாசலுக்கு (ஐதுரூஸ்பள்ளி)தேற்றாப்பளையில்பனையடித் தோட்டம் எனும் 12 ஏக்கர் 01 பேட்ச் தென்னந்தோட்டமும்சேர்த்து வக்பு செய்து எழுதப்பட்டது. பின்னர் கரைத்தீவு, ஆலம் வில்லு என்ற இடத்தில்100 ஏக்கர் தென்னங்காணியும், கற்பிட்டி வீதி தலுவையில் அண்ணாவிச்சேனை என்ற 42 ஏக்கர் தென்னங்காணியும் காஸிமிய்யாவுக்காக வக்புசெய்யப்பட்டது. பிற்காலத்தில் இதன் தர்மநம்பிக்கைப் பொறுப்பாளர்களாக புத்தளம் செல்வந்தர்களான ப.த. இபுராஹீம் நெய்னா மரக்கார், ப.த. மஹ்மூத், கலாநிதி காமில் ஆசாத் போன்றோர் பொறுப்பெடுத்து செவ்வனே நடத்தினர்.
பிற்காலத்தில் இரண்டாவது முஹம்மது காஸிம் மரைக்கார் (I.N.M. முஹம்மது காஸிம் மரைக்கார் அல்லது சுல்தான் மரைக்கார்) என்பவரும் (ESM) பெரிய ஹஸரத்துடைய கால நம்பிக்கைப் பொறுப்பாளர்களில் ஒருவராவார்.
அப்போதைய பிரதமர் மான்புமிகு ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்கா அவர்களின் ஆட்சியில் காணி உச்சவரம்பு சட்டம் என்று, கொண்டுவரப்பட்டு இந்த இரண்டாவது முஹம்மது காஸிம் மரைக்காரின் ஆயிரக்கணக்கான காணிகள் அரசாங்க வசமாகின. இதனால் இந்த மனிதர் மனமுடைந்து, மனநிலைப்பாதிப்பிற்கு உள்ளானார். அவருடைய எஞ்சிய காணிகளும், மத்ரஸா காணிகள் உட்பட ஒழுங்கான பராமரிப்பு இன்மையால்அழிவுற்றதுடன் ஏனையவர்களினால் சூரையாடப்பட்டன. இதனால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டதுடன் மத்ரஸாவினை நடத்துவதில் பெரிய ஹஸரத் பல கஷ்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டார்கள்.
இத்தகைய இக்கட்டான சந்தர்ப்பங்களில், தனது மனைவி உவந்தளித்த தங்க ஆபரணங்களை விற்றும்,நெய்னா புஹாரி ஹஸரத் அவர்கள் குறிப்பிட்டவாறுநெடுங்குளம் வீதியிலுள்ள தனது சொந்த காணியை விற்றும் நிலைமையை சமப்படுத்தினார்கள்.
அன்னாரது மருமகனார் சங்கைக்குரிய எஹ்யா ஆலிம் அவர்களும் முன்நாள் புத்தளம் சாஹிராவின் அதிபர் C.S.M. ஹனிபா சேரும் “டவுன்கெலக்சனில்” இறங்கி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். சகோதரர் நபீல் அவர்களும் நிறைய உதவிகளை செய்தார். பெரிய ஹஸரத் இறுதிவரையும் இவ்விடயத்தில் மனம்தளராது, தனது குடும்பத்தவரினதும் ஊர் பிரமுகர்களினதும் மசூராக்களோடு வல்ல அல்லாஹ்வின் உதவியின் மூலம்நிலைமையை தனது இறுதிவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்பது வரலாறு.
1980 களில் பெரிய ஹஸரத் (ரஹ்) அவர்கள் ‘டயபெடீஸ்” நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். ஆயினும் மத்ரஸா நிருவாகத்தையும் கற்பித்தலையும் தொடர்ந்து செய்தவண்ணம் இருந்தார்கள். தனது தாயாரை சென்று தரிசிப்பதையும் தனது விரல்கள் வெட்டப்பட்ட நிலையிலும், போய் சுகம் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். அந்த சமயங்களில் அக்காலத்தில் பிரபல “பக்கி கருத்தை” யான மதிப்பிற்குரிய மர்ஹூம் இஸ்ஹாக் அப்பாவின் கரத்தையில் ஏறி சவாரி செய்து போய் தனது தாயாரை தரிசித்தார்.
பெரிய ஹஸரத்துக்கு சேகு மதார் ஹஸரத் என்ற ஒரு சகோதரரும், ஹாஜரா உம்மா, ஸாரா உம்மா, ஹதீஜா பீபி என்ற 3 சகோதரிகளும் இருந்தனர்.
அவர்கள் ஸாரா உம்மாஎன்பவரை திருமணம் செய்தார்.ஹபீப் நஜ்ஜார், அப்துல்லாஹ் என்ற இரு ஆண்களும், உம்முல் ரஹ்மா உம்மு ஸலாமா,உம்மு அதிய்யா, ஜுவைரியா என்ற 4 பெண்களும் மஹ்மூத் ஹஸரத்(ரஹ்) அவர்களின் மக்களாவார்.
தொடரும்…