எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி 03
1985.01.02 இல் அன்னார் வபாத்தானபோது புத்தளம் நகரின் மூவின மக்களின் வியாபார தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாவட்டத்தின் எல்லாப்புறங்களில் இருந்தும்…
எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி 03
(அபூஹனிபா நவுசாத்)
1985.01.02 இல் அன்னார் வபாத்தானபோது புத்தளம் நகரின் மூவின மக்களின் வியாபார தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாவட்டத்தின் எல்லாப்புறங்களில் இருந்தும், நாட்டின் பல பாகங்களில் இருந்தும், மக்கள் வெள்ளம் நிறைந்து அன்னாரின் இறுதி அஞ்சலியில் இறைஞ்சியது.கடைகள் அனைத்தும் மூட்டப்பட்மையும், திரண்ட மக்கள்வெள்ளமும், புத்தளம் நகரின் வரலாராகும்.இதுவரையும் எந்த ஜனாஸாவுக்கும் இப்படி மக்கள் திரண்டதில்லை என்பதையும் இந்த மண்ணில் வாழ்கின்ற மூத்தோர் அறிவார்கள்.
வல்ல அல்லாஹ் எங்கள் பெரிய ஹஸ்ரத் (ரஹ்) அவர்களைப் பொருந்திக்கொள்வானாகவும் ஆமீன்.
2009.07.25 இல் இந்நாட்டு அரசாங்கம் சங்கைக்குரிய அறிஞர் சித்திலெப்பைக்குப் பிறகு இஸ்லாமிய உலமா ஒருவருக்கு முதன் முறையாக முத்திரை வெளியிட்டு பெரும் சங்கை செய்தது.
அதற்கு மதிப்பளித்து, ஜம்மிய்யதுல் உலமாவின் அக்கால செயலாளர் நாயகம் மௌலவி M.J.M. ரியால் (கபூரி) அவர்கள் தினகரன் பத்திரிகையில்“இலங்கையில் முதன் முறையாக மௌலவி ஒருவருக்கு தபால் முத்திரை வெளியீடு” என்ற தலைப்பின் கீழ் “காஸிமிய்யாவையும் புத்தளம் முஸ்லிம் சமூகத்தையும் கட்டி எழுப்பிய மர்ஹூம் மஹ்மூத் ஹஸ்ரத்துடைய தியாக வாழ்க்கை மத்ரஸா அதிபர்களுக்கும் உஸ்தாத் மார்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.” என்று தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார்கள். நாட்டில் 2009இல் வாழ்ந்த உலமா பெருமக்கள் அனைவரும் தங்கள் தங்கள் மன நிறைவை இந்த முத்திரை கௌரவத்திற்கு வழங்கினார்கள்.
ஸ்ரீ லங்கா அரசாங்கம் முத்திரை வெளியீட்டுக்கான தனது அரசாங்க பதிவேட்டில்,
“அஷ்ஷெய்க் அப்ழலுல் உலமா மஹ்மூத் அப்துல் மஜீத் அவர்களின் 40 வருட சேவைக்காலம் காஸிமிய்யா அறபுக் கல்லூரியின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. 1915.01.01 இல் பிறந்த அன்னார் தனது ஆரம்பக் கல்வியை இதே கல்லூரியின் கற்று இளம் வயதிலே உயர்கல்விக்காக இந்தியா சென்று அங்கு அறபு இலக்கணம், மார்க்க சட்டம், வானசாஸ்த்திரம், தர்க்க சாஸ்திரம் முதலிய துறைகளில் விசேட திறமை பெற்று 1942ஆம் ஆண்டு நாடு திரும்பினார். அன்று முதல்,1985.01.02 ஆந் திகதி அன்னார் மரணிக்கும்வரை காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராகவும், தலைமை நிருவாகியாகவும் இருந்து தனிப்பெரும் சேவையாற்றினார்கள். கற்றல், கற்பித்தல் விடயங்களில் புரட்சி கர மாற்றங்களை ஏற்படுத்தி மாணவ சமுதாயத்தின் ஒழுக்க பண்பாட்டு விடயங்களில் கூடிய கவனம் செலுத்தினார். “பெரிய ஹஸ்ரத்” என்று இலங்கை வாழ் முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப்படும் இவர் பணிவையே பூரணமாகக் கொண்டவர். நாடிவரும் ஏழை எளியொருக்கு சாதி மத வேறுபாடின்ற கொடுத்துதவும் ஈகைப்பண்பாளர். முற்போக்கு சிந்தனையுள்ள இவர் ஒரு சீர்திருத்தவாதியும் ஆவார்.
இரவு நேரங்களில் தனித்திருந்து வணக்கங்களில் ஈடுபடுவதும், பகலில் கல்வி, சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதும் இவரது வழக்கமாகும். புத்தளம் மாவட்ட இஸ்லாமிய மார்க்க சபையை ஸ்தாபித்து அதன் ஆரம்பகால தலைவராக இருந்து வழிநடத்தனார்.”
என்று அந்நாருக்குரிய “மாண்பை” வழங்கி கண்ணியப்படுத்தியது.

இந்த முத்திரை வெளியீட்டு விழாமேடையில் சங்கைக்குரிய நாஸர் ஹஸரத் அவர்கள் தனது பூட்டனாருக்காக அறபியில் யாத்து எழுதிய கவிதை ஒன்று அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
நாஸர் ஹஸரத் அவர்கள் எனக்குக் தந்த அதன் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றேன்.
“காலமெல்லாம் நம்மிடையே கவிதையாகிப்போன ஒருவர் பற்றி
என் இதயத்துள் கவிதை பீறிட்டு வருகிறது.
பிரபலமான மார்க்க அறிஞரை நினைத்து…
இதயத்தில் கவிதை திடீரென வெடித்தது.
மஹ்மூத் அவர்களின் நாமம்..
அது நிரந்தரமாக்கிப்போனது.
அவர் அழகிய வர்ணனையையும் மிஞ்சியவர்
வாழ்நாள் முழுதும்,
பரக்கத், கீர்த்தி,கண்ணியம், விவேகம்,வினோதம், கம்பீரம், பெற்றிலங்கினார்.
மவுனம் அவரை மேலோங்கி நின்றது.
அமைதி அவரை அழகுபடுத்தியது.
ஆழ்ந்த சிந்தனையும், நளினமும், அழகிய நடத்தையும்கொண்டு,
மக்கள் மனங்களில் அரசோச்சினார்.
அவரின் அபார கொடை நம்மை ஆச்சரியப்படுத்தியது.
புன்முறுவல் என்னும் அடையாளம் கொண்டு
மக்களின் மனங்களை சிறைப்படுத்தினார்.
அவர்களுக்குள்ளே இறையச்சத்தையும்
பகுத்து அறியும் தெளிவையும்
பேரறிவையும் கண்டோம்.
புத்தளம் புதுப்பள்ளி திண்ணையிலே
மறை கற்க ஆரம்பித்து,
தென்னாட்டு சீமையிலே சந்மார்க்க தெளிவு பெற்று,
இம்மண்ணின் ஒளியாக, காஸிமிய்யா அதிபராக 42 ஆண்டுகாலம்…
அது… புத்தளத்தின் பொற்காலம்.
ஆன்றோர் அவரிடம் கற்றுத்தேர்ந்தனர்.
அவரின்சிறப்புக்கு எம்மிடம்அவர்கள்
சான்று பகர்ந்தனர்.
மார்க்க சேவைக் கென்றே அவனியில் அவர் வாழ்ந்தார்.
அகிலத்தாரின் இரட்சகன் அவரை
ஏற்றுக்கொள்வானாக.
அவரின் ஜனாஸாவுக்கு திரண்ட பெருவெள்ளம் அந்நாரின் தியாத்துக்கு பெரும் ஆதாரம்
நாம் அதனை கண்ணாரக் கண்டோம்
இந்த நாள் பலர் கூடும் ஒளியமான நாள்.அவர் முத்திரை அவரைப்பற்றி “உலகில்” நினைவூட்டுகின்றது.
மரணத்தின் பின்பும் நெஞ்சங்களில் உயிர் வாழ்கிறார்.
அவரை பல தடவை நினைக்கிறோம்.
சளிப்பு வரவில்லை.
அறிஞர்களுக்கும் உதாரணமான இப்பெரியார் பற்றி,
எத்தனையோ மனப்பதிவுகள் என்னிடம் உள்ளன. எம் நாட்டு அரசு இந்நாட்டு ஆன்மீக சிரேஷ்ட முனிவனுக்கு முத்திரை வழங்கி வாழ்த்துகிறது.
இந்த நாள் அந்நாரின் இரத்தவழி இனத்தவர்க்கும், அவரின் இனிய நினைவுகளில் இன்புறும் இதயங்களுக்கும், மட்டுமல்ல…. இந்நாட்ன் இஸ்லாமியர் அனைவருக்கும் இது ஒரு பெருநாள்தான்…
ஆனாலும், இறைவனின் முத்திரை பட்டோலையை வலது கரம் வாங்கிக்கொண்டு, வளமான ஜென்னத்தில் வசந்த வாழ்வை இப்பெரியோன் சுவைக்க, இறைஞ்சுகின்றேன். பேர் இறையை “பூட்டனின்” இரத்த வழி வந்த சிறியோன் –“பேராண்டி”
பெரிய ஹஸரத்தின் காலத்துக்குப்பின் காஸிமிய்யா மத்ரஸாவை, அவர்களது இளைய சகோதரர் சங்கைக்குரிய சேகு மதார் ஹஸரத் பொறுப்பேற்று அதிகபராக இருந்து திறமையாக வழி நடத்தினார்கள்.

அன்னாரது மறைவுக்குப் பின் மஹ்மூத் ஹஸரத்(ரஹ்) அவர்ளின் இளைய மகனும், மதீனாவில் ஓதிபட்டம்பெற்றவருமான,சங்கைக்குரியஅப்துல்லாஹ்(மதனி) அந்நவர்களது சுகவீனமான நிலையிலும் மத்ரஸாவை திறமையாக நிருவாகம் செய்கிறார்கள்.வல்ல ரஹ்மான் அவர்களது உடலில் ஆரோக்கியத்தை தந்தருள்வானாகவும். ஆமின்.
அவர்கள் என்னிடம் தன் அன்புத் தந்தையைப் பற்றி குறிப்பிடும்போது…
“எல்லாவற்றிலும் மிதவாதப் போக்கை கடைப்பிடித்த எனது தந்தையார் ஊரில் எப்படி மனிதர்களுடன் நடந்து கொண்டார்களோ, அதையே வீட்டில் எங்களுடனும், நடந்து கொண்டார்கள். நாங்கள் 7 பேர் அந்நாரின் பிள்ளைகள். ஸாலிம் என்ற மூன்றாவதாகப் பிறந்த எனது தமையனார் பாலகராகஇருக்கும்போதே இறையடி சேர்ந்துவிட்டார்.
சாப்பாட்டுக்கு உணவு, கறி வாங்கும்போது பெரும்பாலும் சகோதர சகோதரிகள் குடும்பத்துக்கும் சேர்த்து,மொத்தமாக வாங்கி எங்கள் வீட்டில் வைத்து பங்குவைத்து, என்னிடம் அவரவருக்குரிய பங்கை கொடுத்துவர உத்தவிடுவார்கள். அப்போது எனது திருமணமாகாத சகோதரிகளும் இவ்வேலையை பொறுப்பெடுத்து செய்தனர்.
எங்கள் அனைவருக்கும் உயர்தரமும் இல்லாமல், விலைகுறைந்ததும் இல்லாமல் நடுத்தரமான உடைகளை வாங்கிதருவார்கள். எளிமையான வாழ்வு வாழவும் முழுக் குடும்பமும் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழவும் வழிகாட்டினார்கள்.

மேலும்,எமது சமூகத்தின் திருமண வாழ்வுக்குஎனது தந்தையார் ஒரு முன்மாதிரியாக விளங்கினார்கள். தேசிய ரீதியில் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்ற ஒருவராக இருந்த அவர்கள், எனது சகோதரிகள் அனைவருக்கும் மிகச் சாதாரணமான ஆனால் தொழுகையாளிகளாக பள்ளிவாயில்களோடு மிகவும் நெருங்கி இருந்த, நல்லியல்புள்ள மிகச் சாதாரமான மணவாளர்களைதேர்வுசெய்தார்கள்.
அதில் ஓரிரு திருமணத்தின்போது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அனைத்தையும் முன்னின்று முடித்து வைத்து, பெண் சகோதரிகள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய சூழலோடு நல்லவாழ்வை அமைத்துக் கொடுத்தார்கள்.
“அன்னாரது சகோதரசகோதரிகளாகவும்மக்களாகவும், பேரர்களாகவும் பேத்திகளாகவும், கொள்ளுப் பேரர்களாகவும் கொள்ளுப் பேத்திகளாகவும், இவ்வுலகில் எம்மை அமைத்தது, வல்லரஹ்மான் எம்மீது கொண்ட பெரும் கிருபையினால் தான்” என்பதாக தமது கடினமான உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் தனது அன்புத்தந்தையின் எண்ணங்களில்… சங்கைக்குரிய அப்துல்லா (மதனி) முகம் மலர்ந்தவர்களாகக் கூறினார்கள்.
அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்களின் கூற்று சத்தியமான உண்மையாகும். மஹ்மூத் ஹஸரத்(ரஹ்) அவர்களின் பேரர்களான சங்கைக்குரிய முனீர் மௌலவி, ஹுஸைர் மௌலவி, நாஸர் மௌலவி முதற்கொண்டு அந்நாரின் ஆண்பெண் சந்ததிகள் அனைவரும் சன்மார்க்கத்தில் பெரும் இறை சேவகர்களாக தொண்டாற்றுகின்றார்கள். “அல்ஹம்துலில்லாஹ்”.
அத்தோடு பொருளாதாரத்தை மாத்திரம் குறியாக வைத்து இடம்பெறும் நம் சமூக திருமணங்களுக்கு இப்பெருந்தகை காட்டித்தந்த வழிமுறைஒரு பெரும் படிப்பினையாகும்.
எமது நாட்டின் உலமாக்கள் அனைவரினதும் கண்ணியத்துக்குரிய புத்தளத்தின் ஒப்புவமையற்ற மாணிக்கமாம் மஹ்மூத் அப்துல் மஜீத் (ரஹ்) அவர்களது “பெருவாழ்வு” இந்நாட்டு முஸ்லிம் பெருமக்கள்அனைவரதும், சகோதரத்துவத்ததுக்கும் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகும்.
அன்பு நிறைந்த சகோதரர் நவ்ஷாத் அவர்களுக்கு நன்றிகள். ஜஸாஹ் அல்லாஹ் கைரா.
என் அரபுக் கட்டுரையின் ஒரு பகுதியையும் மற்றும் என் கவிதை அடிகளையும் தமிழ்ப்படுத்தித் தருமாறு சோதரர் நவ்ஷாத் என்னிடம் கேட்டார். ‘சிரமமான காரியம். பொருளை ஓரளவு நெருக்கித் தருகிறேன். நீங்கள் உங்கள் தமிழில் செய்துகொள்ளுங்கள்.’ என்று அவரிடம் சொன்னேன். பின்னர் அப்படித்தான் செய்தோம். பொருள் என்னுடையது. மொழி அவருடையது. பணிவு நிமித்தம் சுயத்தைத் தவிர்த்து பெயரை எனக்குக் கொடுத்துள்ளார். அவரது உழைப்புக்கும் அடக்கத்துக்கும் சபாஷ். மூலத்தைப் படிக்க விரும்புவோரின் நன்மைக்காக இந்த இணைப்புக்களைத் தருகிறேன் :
http://shaikhnazar.net/poems-text-12.php
http://shaikhnazar.net/appreciations-arabic-6.php
எனது கவிதைகள் தொகுப்பான அல்-ஸுஹூர் அல்-பாஸிமஹ் (الزهور الباسمة) எனும் நூலிலும் மஹ்மூத் ஹழ்ரத் பற்றிய கவிதையைப் படிக்கலாம்.
அபூ அவ்வாப் ஹனிபா அப்துல் நாஸர்