எமது மண்ணின் மாணிக்கமாம் மர்ஹும் மஹ்மூத் ஆலிம் (பெரிய ஹஸ்ரத்) – பகுதி 04

முனீர் மௌலவி அவர்கள் தனது பாட்டனாரை பதிவு செய்த பிற்பாடு, ஒரு தினம் பெரிய ஹஸ்ரத்திடம் தனது சிறுபராயத்திலிருந்தே நெருங்கிப் பழகியவர்களில்…

(அபூஹனிபா நவ்ஷாத்)

முனீர் மௌலவி அவர்கள் தனது பாட்டனாரை பதிவு செய்த பிற்பாடு, ஒரு தினம் பெரிய ஹஸ்ரத்திடம் தனது சிறுபராயத்திலிருந்தே நெருங்கிப் பழகியவர்களில் ஒருவரான புத்தளத்தின் அலி மரைக்கார் ஹாஜியாரின் மகன் சகோதரர் நபீல் அவர்களிடம் மஹ்மூத் (ரஹ்) அவர்களின் பதிவுகள் சிலவற்றை பெற்றேன்.

நபீல் அவர்கள் தனது 7 வயதிலிருந்தே விடுமுறை தினங்களில் பெரிய ஹஸ்ரத்திடம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொண்டார்கள்.

இவர் தனது 30 வயதிலே நிர்ப்பந்தத்தின் பேரில் பெரிய பள்ளி வாயிலின் டிரஸ்டியாக பொறுப்பேற்றுக் கொண்ட சமயம் அங்குள்ள முக்கியஸ்தர்கள் சிலர் சகோதரர் நபீல் அவர்களுடன் எப்போதும் முரண்பட்ட வண்ணமே இருந்தனர். இதனால் நபீல் அவர்களுக்கு பெரும் பொருளாதார வசதிகளுடன் கூடிய புத்தளம் பெரிய பள்ளியை பொறுப்பெடுத்து நடாத்துவதில் நிறைய சங்கடங்கள் ஏற்பட்டன.

இத்தருணத்தில் பெரிய ஹஸ்ரத் பற்றி ஊரில் கதைக்கப்பட்டுவந்த ‘ஜின்வாசலாத்து’ விடயங்களில் ஈர்க்கப்பட்ட அவர் தன்னுடன் நியாயமற்ற முறையில் தவறாக முரண்படுவோரை சற்று கொன்றோலில் வைக்கலாம் என்று அந்த இளம் வயதில் அவருக்கு ஏற்பட்ட சிந்தனையினால் பெரிய ஹஸ்ரத்திடம் சென்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

அதற்கு பெரிய ஹஸ்ரத் ‘தம்பி நீங்கபோய் ஜின்ன வசப்படுத்துவதை விட, வல்ல அல்லாஹ்வுக்கு நீங்க வசப்படுவது மேலான காரியம்’ என்று பதிலுரைத்தார்கள்.

இந்த விளக்கத்தினால் சகோதரர் நபீல் மிகவும் திருப்தியுற்றார். அவரது வாழ்வில் மஹ்மூத் (ரஹ்) அவர்களை எண்ணும் சமயமெல்லாம் மேற்கூறிய வசனங்கள் முந்நிலை பெறுகின்றது.

ஒரு கட்டத்தில் சகோதரர் நபீல் தாம் ஒருவரிடம் கடனாக பெற்ற பெரும் தொகையை திரும்ப கையளிப்பதில் மிகவும் சங்கடப்பட்டு இது தொடர்பாக பெரிய ஹஸ்ரத்திடம் முறையிடவே மஹ்மூத் (ரஹ்) ‘ஆல இம்ரான்’ சூறாவையும் சில அவ்ராதுகளையும் தொடர்ந்து ஓதி வரும்படி பணித்திருந்தார்கள். ஹஸ்ரத்தின் கட்டளைப்படி அவற்றை தொடர்ந்து ஓதியதன் மூலம் வல்ல அல்லாஹ்வின் அருளினால் அந்த கடன் சங்கடத்திலிருந்து நபீல் அவர்கள் மீண்டுள்ளார்.

பெரிய ஹஸ்ரத் டயபெடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சமயம் அக்காலத்தில் பிரபல டொக்டராக இருந்த வாஹித் அவர்களின் துணைவியார் (வாஹித் நோனா) ஒவ்வொரு நாளும் இன்சுலின் மருந்து ஏற்றி உதவி இருக்கிறார்.

மத்ரஸாவுக்கு நிறைந்த சொத்துக்கள் இருந்தும் கூட காஸிமிய்யா தொடர்ந்து பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படவே வக்பு போடுக்கு எழுதப்பட்டு அந்த சமயம் கொமிஷனராக இருந்த மன்னாரைச் சேர்ந்த சகோதரர் மரைக்கார் என்பவர் வரவழைக்கப்பட்டார்.

ஹஸ்ரத்தின் அறையில் எதிர்த்தரப்பினரோடு மர்ஹும் ஷாபி ஹாஜியார், முபாரக் சேர் (வ.பி), அரபா ரயிஸ்மில் மஹ்பூப் மரைக்கார், நபீல் ஆகியோருடன் விசாரணை ஆரம்பமாகியது. ஆயினும் சற்று நேரத்திலேயே பெரிய ஹஸ்ரத் ‘எதற்கு தம்பி வழக்கும் வம்பும்’ என்று கூறி விசாரனையை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் E. S. M. பரம்பரையினர் ஆரம்பத்திலிருந்தே மத்ரஸாவுக்கு செய்து வந்த கொடைகளை நினைவு கூர்ந்தார்.

பெரிய ஹஸ்ரத்துடைய ஜனாஸா அன்னார் இதய பூர்வமாக நேசித்த காஸிமிய்யா கலாசாலையிலேயே குளிப்பாட்டப்பட்டது என்று பெரிய ஹஸ்ரத் பற்றிய தனது மனப்பதிவுகளைத் தந்த சகோதரர் நபீல் அவர்கள் அன்னாரின் வாழ்க்கையில் சிறிதளவாவது தானும் சம்பந்தப்பட்டிருப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன் என்று முகம் மலரக் கூறினார்.

பெரிய ஹஸ்ரத்தின் காலத்துக்குப் பின் காஸிமிய்யா மத்ரஸாவை, அவர்களது இளைய சகோதரர் சங்கைக்குரிய சேகு மதார் ஹஸ்ரத் பொறுப்பேற்று அதிபராக இருந்து மிகத் திறமையாகவும் ஆளுமையுடனும் வழி நடத்தினார்கள.;

அன்னாரது மறைவுக்குப் பின் மஹ்மூத் (ரஹ்) அவர்களின் இளைய மகனும், மதீனாவில் ஓதி பட்டம் பெற்றவருமான, சங்கைக்குரிய அப்துல்லாஹ் (மதனி), அன்னவர்களது சுகவீனமான நிலையிலும் மத்ரஸாவை நிருவாகம் செய்கிறார்கள். ‘வல்ல ரஹ்மான் அவர்களது உடலில் ஆரோக்கியத்தை தந்தருள்வானாகவும். ஆமீன்…
அவர்கள் என்னிடம் தன் அன்புத் தந்தையைப் பற்றி குறிப்பிடும்போது..

‘எல்லாவற்றிலும் மிதவாதப் போக்கை கடைப்பிடித்த எனது தந்தையார் ஊரில் எப்படி மனிதர்களுடன் நடந்து கொண்டார்களோ, அதையே வீட்டில் எங்களுடனும், நடந்து கொண்டார்கள். நாங்கள் 7 பேர் அன்னாரின் பிள்ளைகள். ஸாலிம் என்ற மூன்றாவதாகப் பிறந்த எனது தமையனார் பாலகராக இருக்கும் போதே இறையடி சேர்ந்து விட்டார்.

சாப்பாட்டுக்கு உணவு, கறி வாங்கும் போது பெரும்பாலும் சகோதர சகோதரிகள் குடும்பத்துக்கும் சேர்த்து, மொத்தமாக வாங்கி எங்கள் வீட்டில் வைத்து பங்குவைத்து, என்னிடம் அவருக்குரிய பங்கை கொடுத்துவர உத்தரவிடுவார்கள். அப்போது எனது திருமணமாகாத சகோதரிகளும் இவ்வேலையை பொறுப்பெடுத்து செய்தனர்.

எங்கள் அனைவருக்கும் உயர்தரமும் இல்லாமல், விலை குறைந்தும் இல்லாமல் நடுத்தரமான உடைகளை வாங்கித் தருவார்கள். எளிமையான வாழ்வு வாழவும் முழுக் குடும்பமும் முரண்பாடுகள், சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழவும் வழிகாட்டினார்கள். மேலும்,

எமது சமூகத்தின் திருமண வாழ்வுக்கு, எனது தந்தையார் ஒரு முன்மாதிரியாக விளங்கினார்கள். தேசிய ரீதியில் நாட்டில் மிகப் பிரசித்தி பெற்ற ஒருவராக இருந்த அக்காலத்திலேயே எனது சகோதரிகள் அனைவருக்கும் தொழுகையாளிகளாக பள்ளிவாயில்களோடு மிகவும் நெருங்கி இருந்த, நல்லியல்புள்ள மிகச் சாதாரணமான மாணவாளர்களை. அதில் ஓரிரு திருமணத்தின் போது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அனைத்தையும் முன்னின்று முடித்து வைத்து, பெண் சகோதரிகள் அனைவருக்கும் வல்ல அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய சூழலோடு நல்வாழ்வை அமைத்துக் கொடுத்தார்கள்.

அன்னாரது சகோதர, சகோதரிகளாகவும், மக்களாகவும், பேரர்களாகவும், பேத்திகளாகவும், கொள்ளுப் பேரர்களாகவும், கொள்ளுப் பேத்திகளாகவும் இவ்வுலகில் எம்மை அமைத்தது.

வல்ல ரஹ்மான் எம்மீது கொண்ட பெரும் கிருபையினால் தான் என்பதாக தமது ‘காது’ சம்பந்தப்பட்ட கடினமான உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் தனது அன்புத் தந்தையின் எண்ணங்களில்… முகம் மலர்;ந்தவர்களாகக் கூறினார்கள்.

சங்கைக்குரிய அப்துல்லா (மதனி) அவர்களின் கூற்று சத்தியமான உண்மையாகும்.

மஹ்மூத் (ரஹ்) அவர்களின் பேரர்களான சங்கைக்குரிய முனீர் மவ்லவி, ஹுஸைர் மவ்லவி, நாஸர் மவ்லவி முதற்கொண்டு அன்னாரின், ஆண் பெண் சந்ததிகள் அனைவரும் சன்மார்க்கத்தில் பெரும் இறை சேவகர்களாக தொண்டாற்றுகின்றார்கள். ‘அல்ஹம்துலில்லாஹ்’

அத்தோடு நம் சமூக திருமணங்களுக்கு இப்பெருந்தகை காட்டித் தந்த வழிமுறை, பொருளாதாரத்தை மாத்திரம் குறியாக வைத்து தத்தமது மகளையும், மகனையும் சீரழிப்பவர்களுக்கு இவ்விடயத்தில் ஒரு பெரும் படிப்பினையாகும்.

இறுதியாக எமது நாட்டின் உலமாக்கள் அனைவரினதும் கண்ணியத்துக்குரிய புத்தளத்தின் ஒப்புவமையற்ற மாணிக்கமாம் மஹ்மூத் அப்துல் மஜீத் (ரஹ்) அவர்களது ‘பெருவாழ்வு’ இந்நாட்டு முஸ்லிம் பெருமக்கள் அனைவரதும், சகோதரத்துவத்துக்கும் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாகும்.

WAK