ஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும்
செப்டம்பர் மாதம் 27 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.45 க்கு புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி..
எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மௌலா மக்காம் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும், புத்தளம் நகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 46 வது ஆண்டு நிறைவும், அதன் வருடாந்த டைனி டொட்ஸ் இல்ல விளையாட்டு போட்டியும் செப்டம்பர் மாதம் 27 ம் திகதி வியாழக்கிழமை மாலை 3.45 க்கு புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளது.
புத்தளம் நகரில் முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த இல்ல விளையாட்டு போட்டியில் “மா” , “பலா” ஆகிய இரண்டு இல்லங்களை சேர்ந்த 25 மழலை சிறார்கள் தமது பென்னம்பெரிய திறமைகளை மைதானத்தில் வெளிக்கொணர உள்ளார்கள். இல்ல அலங்கரிப்புக்கள், வரவேற்பு நிகழ்வுகள், பழைய மாணவர்களுக்கான ஓட்டம், பெற்றார்களுக்கான போட்டிகள் மற்றும் அதிதிகள் கலந்து கொள்ளும் போட்டிகள் என்பனவும் இடம்பெறவுள்ளன.
“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வருட இல்ல விளையாட்டு போட்டியின் தொனிப்பொருளாகும்.
50 மீட்டர் ஓட்டம், டொபி சேகரித்தல், பலூன் உடைத்தல், பந்து மாற்றுதல், பூ கோர்த்தல், போத்தலில் நீர் நிறைத்தல், சாக்கு ஓட்டம், கால் கட்டி ஓட்டம், சீருடை அணிதல், நிறங்கள் சேகரித்தல் மற்றும் சங்கீத கதிரை ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
அனைத்து மழலை செல்வங்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கி, கிண்ணங்கள் வழங்கப்பட்டு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இது தவிர போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
போட்டிக்கு நடுவர்களாக புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் மத்தியஸ்தர் சபையில் அங்கம் வகிக்கும் எம்.எஸ்.எம். இனாஸ், எம்.எஸ்.எம். நௌபி, எம்.ஓ. ஜாக்கீர், எச்.எச். ஹம்ருஸைன், எம்.எம். ஷிபான் ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது இன்று புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர் எம்.டி.எம். அமீன், முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். முஹுசி, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் முன்னாள் செயலாளர் ஜே.எம். ஜௌஸி, புத்தளம் பெரிய பள்ளியின் செயலாளர் ஜே.இஸட். எம். நாசிக், புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச்சங்க முகாமையாளர் நஸ்லியா காதர், ஊடகவியலாளர் ஏ.என்.எம். பௌமி, தொழிலதிபர் என்.எம். முக்சித், புத்தளம் தாய் சேய் சிகிச்சை நிலைய அதிகாரி திருமதி பரீனா, புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஜே.எம். லிப்டி, டாக்டர் என்.எம். மிப்தா, சட்டத்தரணி ஹிஸ்மி உள்ளிட்ட பல துறை சார்ந்த நிபுணர்கள் இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.
சிறுவர் தினத்தையொட்டி நடைபெறவுள்ள இந்த இல்ல விளையாட்டு போட்டியில் அனைவரையும் கலந்து சிறப்பித்து மழலை செல்வங்களுடைய விளையாட்டு திறமைகளுக்கு உற்சாகமளிக்குமாறு முன்பள்ளி பொறுப்பாசிரியை எம்.எஸ். பவுசுல் ரூஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தளம் ஒன்லைன் இந்நிகழ்வுக்கு பூரண ஊடக அனுசரணையை வழங்கியுள்ளது.
Really grate grate job for this. We are ready to suport allways.