கத்தார் உதைபந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா துரதிஷ்டவசமாக தோல்வி

பீயிங் கைண்ட் பவுண்டேஷன் (Being Kind Foundation) அமைப்பினால் இலங்கையர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி…

பீயிங் கைண்ட் பவுண்டேஷன் (Being Kind Foundation) அமைப்பினால் இலங்கையர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டி தொடரில் புத்தளம் சாஹிரா அணி துரதிஷ்டவசமாக தோல்வியுற்றது.

பெர்லிங் செஷன் சர்வதேச பாடசாலை மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டி தொடரின் குழு போட்டியின் முதலாவது போட்டியில் கல்முனை பிரவ் லங்கன் அணியுடன் 1:0 கணக்கில் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது போட்டியில் முஸ்தகீம் செலுத்திய 3 கோல்களின் உதவியுடன் ஹமீத் அல் ஹுசைனி அணியினை 3:1வெற்றிகொண்டது. எவரோக்ஸ் அணியுடனான மூன்றாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

புள்ளிகளின் அடிப்படையில் சுற்று 16 க்கு தெரிவானது. வெஸ்ட்லி அணியுடனான அப்போட்டியில் நுஸ்பான் செலுத்திய 3 கோல்களினால் 3:0 எனும் கணக்கில் வெற்றியை தனதாக்கி காலிறுதிக்கு நுழைந்தது.

காலிறுதியில் கல்முனை பிரவ் லங்கன் அணியுடன் போட்டி சமநிலையில் முடிவடைய தண்ட உதை வழங்கப்பட்டது. முஸ்தகீம், ஹம்தி ஆகியோர் உதையினை சரியாக பயன்படுத்த, கோல் காப்பாளர் முஹஸ்ஸம் சிறப்பாக தடுக்க 2:0 எனும் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் கம்பளை சாஹிரா அணியும், புத்தளம் சாஹிரா அணியும் பலப்பரீட்சை நடத்தியதில் 1:1 எனும் கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது. தமது அணிக்காக முஸ்தகீம் ஒரு கோலினை பெற்றுக்கொடுத்தார். இதனை அடுத்து தண்ட உதையினை ஹம்தி, நுஸ்பான், முஸ்தகீம், ரசான், முஹஸ்ஸம் ஆகியோர் சரியாக செலுத்திட ஆட்டம் 5:5 என மீண்டும் சமநிலையில் முடிவடைய நடுவர் நாணய சுழற்சிக்கு இரு அணிகளையும் அழைத்தார். துரதிஸ்டவசமாக புத்தளம் சாஹிரா அணி தோல்வியை தழுவியது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் பிரவ் லங்கன் அணியுடன் சமநிலையில் முடிவடைய தண்ட உதை வழங்கப்பட்டது. ரசான், முஸ்தகீம் ஆகியோர் சரியாக பயன்படுத்த, ஹம்தியின் உதை தவற பிரவ் லங்கன் 3:2 எனும் கணக்கில் வெற்றியை தனதாக்கி கொண்டது.

இப்போட்டி தொடரில் புத்தளம் சாஹிரா அணிக்காக அர்ஷாத், ரஸ்வின், ஹம்தி, முஸ்தகீம், ரசான், நுஸ்பான், முஹஸ்ஸம் ஆகியோர் விளையாடினர்.

சாஹிராவை பிரதிநிதித்துவத்திய மற்றுமொரு அணிக்காக ஹகம், ஜெஸார், ஹிமாஸ், நைரூஸ், ஹனான், மஸ்னவி, பைசல் ஆகியோர் விளையாடினர். குழுப்போட்டியில் ஏசியன் புட்போல் கொமினிட்டி அணியுடனான போட்டி சமநிலையில் நிறைவு பெற, வெஸ்ட்லி கல்லூரி அணியுடனான போட்டியில் 0:2 தோல்வியை தழுவியது. எனினும்  இரு அணிகளும் ஒரே புள்ளிகளினை பெற்றதினால் அடுத்த சுற்றுக்கான தெரிவில் ஏசியன் புட்போல் கொமினிட்டி அணியுடன் தண்ட உதையில் 2:3 எனும் கணக்கில் தோல்வி கண்டது. ஹகமின் உதை தவற மஸ்னவி, ஹிமாஸ் ஆகியோரின் உதை கோலானது.

வெஸ்ட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உதைபந்தாட்ட தொடர், ஹமீத் அல் ஹுசைனி பழைய மாணவர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தொடரில் முறையே முறையே குழு போட்டியில், காலிறுதியில் தோல்வியை தழுவியது. எனினும் தனது முயற்சியை கைவிடாது தொடரும் இவர்களுக்கு மைதான ஆதரவு கண்டிப்பாக தேவை என்பது குறிப்பிடதக்கது.

WAK