கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் – 03
அந்த அருங்காட்சியகம் இருக்கும் வரை அவரது புகைப்படமும் அங்கு இருக்கும். இது நமது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கின்றது…
கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் 03
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
புத்தளம் மண்ணின் மைந்தன் இஷாம் மரைக்காரின் புகைப்படம் கத்தாரின் புகழ்பெற்ற முஷெய்றப் அருங்காட்சியகத்தில் இடம்பெற உடனடிக்காரணியாய் ஒரு சம்பவம் இடம்பெற்றது.
கத்தார் நாட்டில் இயங்கிய அமைப்பொன்று, அந்நாட்டில் வசிக்கும் தன்னார்வ தொண்டர்களை கிழமை நாள் ஒன்றில் இரவு ஏழு மணிக்கு மியா பூங்காவுக்கு வருமாறு அழைப்புவிடுத்தது.
பொதுவாக இத்தகைய நிகழ்வுகளுக்கு கிழமை நாட்களில் சமூகமளிப்போர் குறைவு. ஆனால் இஷாம் மரைக்கார் அங்கு சென்றார். அது அந்நாட்டின் அமைச்சு ஒன்றினால் விடுக்கப்பட்ட அழைப்பு என்பது அங்கு சென்றபின்னரே அவருக்கு தெரியவந்தது. அங்கு சமூகமளித்தோரிடம் தமக்கு சில விஷேட தன்னார்வ தொண்டர்கள் தேவை என்றும் ஒவ்வருவரும் தம்மை சுயமாக அறிமுகப்படுத்தியபின்னர் தமக்கு தேவையானோரை தேர்ந்தெடுப்பதாகவும் அங்கு வருகைதந்திருந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இஷாம் மரைக்கார் தனது செயற்பாடுகளை குறிப்பிட்டதுடன் கத்தாரில் சர்வதேச மட்டத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டி, குதிரைப்பந்தயம், தகவல் தொழிநுட்ப மாநாடு (QIIT) ஆகியவற்றில் உதவும் நோக்கில் பங்கேற்றமையையும் குறிப்பிட்டார். அதேவேளை ஐ லவ் கத்தார் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விவரணப்படம் பற்றியும் அந்த அதிகாரிகள் அறிந்துவைத்திருந்தனர்.
இந்த நிகழ்வின் பின்னர் அமைச்சில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு இஷாம் மரைக்காருக்கு வந்தது. பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரபணு தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் கத்தாருக்கு தன்னார்வத் தொண்டு புரிந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் புகைப்படங்களை முஷெய்றப் (Msheireb) அருங்காட்சியகத்தில் The faces of Qatar என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்போவதாகவுகும் அதில் அவரின் புகைப்படமும் ஒன்று என்றும் குறிப்பிட்டனர். மேலும் அதற்கான சில தகவல்களையும் அனுமதியையும் எழுத்துமூலம் வேண்டினர்.
கத்தாரின் வரலாற்று, மரபுரிமைகளை சித்தரிக்கும் புகழ்பெற்ற முஷெய்றப் (Msheireb) அருங்காட்சியகத்தில் நமது புத்தளம் இஷாம் மரைக்காரின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகம் இருக்கும் வரை அவரது புகைப்படமும் அங்கு இருக்கும். இது நமது மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்கின்றது. இஷாம் மரைக்கார் அமைதியாகவே இருந்து அமைதிப்படையணிமூலம் எமக்குப் பணிபுரிவது பலருக்குத் தெரியாது. /Zan