கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் – 01
முஷெய்றப் அருங்காட்சியகத்தில் Radwani House இல் கத்தாரின் சில முகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எமது புத்தளம் முகமும் ஒன்று என்பது எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது….
கத்தார் முகங்களில் (Faces of Qatar) புத்தளம் முகம் 01
(இஸட். ஏ. ஸன்ஹிர்)
மேற்கு ஆசியாவில் அரேபிய தீபகற்பத்தின் வட கிழக்கில் அமைந்துள்ள ஒரு சிறிய தீபகற்பம் கத்தார். உலகின் அளவில் மிக சிறிய நாடுகளுள் கத்தாரும் ஒன்று. புவியில் ரீதியில் பாரசீக வளைகுடாவானது அதனை பஹ்ரைன் நாட்டிலிருந்து பிரிக்கின்றது. அதன் தென் எல்லை சவூதி அரேபியாவாகும். தமீம் பின் ஹமாத் அல் தானி தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகின்றது. அல் தானி குடும்பத்தினர் ஆட்சியில் பெருமளவு பங்கேற்கின்றனர். கத்தார் நாட்டின் உத்தியோகபூர்வமொழி அரபு.
வரலாற்று ரீதியில் கத்தார் முத்துக்குளித்தல், கடல் வணிகம் போன்றவற்றுக்கும் அத்துடன் மசகெண்ணை குறிப்பாக எரிவாயு உற்பத்திக்கும் பெயர்பெற்றது. உலகின் செல்வந்த நாடு கத்தார் ஆகும்.
இங்கு சுமார் 2.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தாரின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக அந்நாட்டு மக்கள் இல்லை என்பது ஆச்சரியத்துக்குரியது. சுமார் 15 சதவீதத்தினரே இந்த நாட்டவர் ஆவர். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இன மக்கள் இந்த நாட்டில் தொழில் நிமித்தமும் வேறு தேவைகளுக்காகவும் கத்தாரில் வசிக்கின்றனர். இவர்களுள் 4.35 சதவீதத்தினர் இலங்கையர் ஆவர். சனத்தொகையின் அடிப்படையில் உலகில் இந்நாடு 141 வது இடம் வகிக்கின்றது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கத்தாரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள் போன்றோருடன் மிக சொற்ப அளவில் யூதர்கள், பழைமை மத நம்பிக்கை,ஏனைய நம்பிக்கையுடையோரும் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது.


அரபிகள் தமது மரபுகளை பேணுவதிலும் கலை கலாசாரங்களை பாதுகாப்பதிலும் ஆர்வமுள்ளோராவர். கத்தாரில் தமது வரலாறு, பாரம்பரியம், மரபு, மரபுரிமை, கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் பல அருங்கலையகங்களும் நூதனசாலைகளும் உள்ளன. தனியாரால் தமது சொந்த செலவில் நடத்தப்படும் பிரமாண்டமான அருங்காட்சியகம் இங்கு இருப்பதும் குறிப்பிடக்கூடியது. இஸ்லாமிய நுண்கலை அருங்காட்சியகம், ஷேஹ் பைசல் பின் காசிம் அல்தானி அருங்காட்சியகம், கட்டிடக் கலை அம்சங்களுடன் கூடிய கத்தார் புதிய தேசிய அருங்காட்சியகம், முஷெய்றப் (Msheireb) அருங்காட்சியகங்கள் போன்றன இவற்றுள் சில.

கத்தார் தோஹாவில் முஷெய்றப் நகர மத்தியில் முஷெய்றப் அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. கத்தாரின் பிரதான வரலாற்று, மரபுரிமைகளை சித்தரிக்கும் வகையில் நான்கு பிரிவுகளாக அவை அமைக்கப்பட்டுள்ளன. Mohammed Bin Jassim House, Company House, Bin Jelmood House, Radwani House என அவற்றிற்கு பெயரிடப்பட்டுள்ளன. Mohammed Bin Jassim House இல், முஷெய்றப் உடைய மரபுகளும் விழுமியங்களும் கால மாற்றத்துக்குகேற்ப எவ்வாறு மாறிச்செல்கின்றன என்பதை அறியக்கூடியதாயுள்ளது. Company House, கத்தார் நாட்டின் வெற்றிகரமான முதலாவது மசகு எண்ணெய் கண்டுபிடிப்பை வெளிப்படுத்திடுகின்றது. Bin Jelmood House, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான அடிமைமுறை, மானிட சுரண்டல் போன்றவற்றையும் அதன் ஒரு அங்கமாக கத்தார் எவ்வாறு இருந்து வந்திருக்கின்றது என்பதையும் அறியத்தருகின்றது.
Radwani House ஆனது கத்தாரின் பாரம்பரிய வாழ்க்கை நடைமுறைகள், குடும்ப வாழ்க்கை முறையின் பரிணாம வளர்ச்சி, வரலாற்று ரீதியியான சமூக மாற்றம் போன்றவற்றை சித்தரிக்கின்றது. தொல்பொருள் ஆய்வாளர்களின் முதல் தொல்பொருள் அகழ்வும் இப்பகுதியில்தான் இடம்பெற்றது. இங்குதான் கத்தாரின் சில முகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எமது புத்தளம் முகமும் ஒன்று.
.
இன்னும் வரும் …
/ Zan