கந்தசாமி ஆசிரியருக்கு புத்தளம் நகர மக்கள் வழங்கிய அதியுயர் இறுதி மரியாதை

புத்தளம் நகர பிதா, சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, புத்தளம் நகர வரலாற்றில் முதன் முதலாக ஒழுங்கு செய்யப்பட்ட அதியுயர் இறுதி அஞ்சலி நிகழ்வாகும் என இரங்கலுரை நிகழ்த்திய நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். கந்தசாமி ஆசிரியர் புத்தளம் நகரில் கல்வி பணிக்கு வழங்கிய சேவைக்கான அதி உச்சகட்ட மரியாதையாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது. இறுதியாக மாலை 4.45 மணிக்கு, இறுதிக் கிரியைகளுக்காக புத்தளம் மண்ணிலிருந்து யாழ் மண்ணுக்கு கொண்டு செல்லப்பட்ட, நல்லாசானின் பூதவுடலை கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைத்தது புத்தளம்..!

அமரர் கந்தசாமி ஆசிரியரின் பூதவுடலுக்கு புத்தளம் வாழ் மக்கள் இறுதி மரியாதை செலுத்துகின்ற உத்தியோகபூர்வ நிகழ்வு (නිල උත්තමාචාරය) நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (30/10/2020) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் நகர பிதா, சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, புத்தளம் நகர வரலாற்றில் முதன் முதலாக ஒழுங்கு செய்யப்பட்ட அதியுயர் இறுதி அஞ்சலி நிகழ்வாகும் என இரங்கலுரை நிகழ்த்திய நகர பிதா கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். கந்தசாமி ஆசிரியர் புத்தளம் நகரில் கல்வி பணிக்கு வழங்கிய சேவைக்கான அதி உச்சகட்ட மரியாதையாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 விதிமுறைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் முற்றாகப் பேணப்பட்ட நிலையில், அமரர் கந்தசாமி ஆசியரின் மாணவர்கள், நண்பர்கள், அபிமானிகள் மற்றும் கல்வியிலாளர்கள், சமூக சமயத் தலைவர்கள் என ஆண், பெண், இன மத பேதமின்றி நூற்றுக்  கணக்கான புத்தளம் வாழ் மக்கள் அன்னாரின் பூத உடலுக்கு தமது இறுதி மரியாதையினைச் செலுத்தினர்.

புத்தளம் இந்து மகா சபையின் சார்பில் உரையாற்றிய அதன் தலைவரும் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபருமான திரு மா. நாகராஜா தனது உரையில் கந்தசாமி ஆசியரின் கல்விப் பணிகள் தொடர்பாக சிலாகித்துக் பேசினார். ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் இஸட்.ஏ. ஸன்ஹிர் தனது உரையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட கந்தசாமி ஆசிரியர் புத்தளத்தை அதிகமாக நேசித்ததுடன் புத்தளத்தை தனது சொந்த ஊராக வரித்துக் கொண்டவர் எனக் குறிப்பிட்டார். ஸாஹிரா கல்லூரி ஆசிரியர் எஸ்.ஆர்.எம். முஹ்ஸி, சமூக  ஆர்வலர் இஷாம் மரிக்கார், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தேசிய தலைவர் ஹுஸைர்  இஸ்லாஹி ஆகியோரும் இந்நிகழ்வில் இரங்கலுரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மாலை 4.45 மணிக்கு, இறுதிக் கிரியைகளுக்காக புத்தளம் மண்ணிலிருந்து யாழ் மண்ணுக்கு கொண்டு செல்லப்பட்ட,  நல்லாசானின் பூதவுடலை கனத்த இதயத்துடன் வழியனுப்பி வைத்தது புத்தளம்..!