கிழங்கு அப்பாவும் ஹாஜர் கண்ணாவும்
(அபூஹனீபா நவுசாத்)
புத்தளத்தில் கிட்டத்தட்ட 75 வருடங்களுக்கு முன் இரண்டு ஸாஹிறா பாடசாலைகளின் இடைவேளையில், பள்ளிச் சிராரும் , பெரிய வகுப்பு மாணவரும் ஏன் அப்போது இருந்த, இரு ஸாஹிறாவினதும் ஆசிரியர் அனைவரும் விரும்பி வாங்கி சுவைத்த, கிராக்கியான (மரவள்ளி) கிழங்கு வியாபாரம் செய்த, கிழங்கு அப்பா இபுறாகீம் அவர்களையும் கிராக்கியான விதவிதமான கடலை வகை வியாபாரம் செய்த, ஹாஜர் கண்ணா, கடலைப்பாட்டி ஆகியோரையும் ‘நொறுக்குத் தீனி” வியாபாரம் செய்த ப(B)ணாணா அப்பாவையும் மண்ணின் மைந்தர் பகுதி மரியாதையுடன் ஞாபகம் செய்கிறது.
மரவள்ளிக் கிழங்கை நன்கு அவித்து நசித்து பேஸ்ட் செய்து கடுகு , கரிவேப்பிலை மற்றும் ஸ்பைசிகளுடன் தாளித்து எந்தவிதமான சுவையூட்டிகளும் இல்லாத அந்தக் காலத்தில், அதை சாப்பிட்டவர், தான் சுவைத்ததை நினைத்து, நாவில் உமிழ் நீர் சுரந்து, மீண்டும் சாப்பிட ஆசைப்படும் வண்ணம் , கலை மிகுந்த உணவாக்கிய பெருமை கிழங்கு அப்பாவையே சாரும்.
பாடசாலை இடைவேளை முடிந்ததும் அவர்களது அடுத்த வியாபாரத்தளம் மரைக்கார் வீதியில் தற்போது மீன் வியாபாரம் செய்யும் சந்தியாகும். (பழைய செ.மு. கடை சந்தி)
வியாபாரம் செய்யும் போதே , சன்மார்க்க சம்பாஷணைகளையும் நகைச்சுவையையும் பொழிவார்கள். அந்தக்கால மல்யுத்த வீரர்களைப்பற்றியும் அடிக்கடி கதைப்பார்கள். மறைந்த வீரர்களான தாராசிங், கிங்கொங் , கா(G)மா பயில்வான் போன்றோரின் கதைகளை நாங்கள் கேட்டுக்கொண்டே 5 சதத்திற்கு அன்னார் கைநிறையத் தந்த கிழங்கை சுவைப்போம். கிழங்கப்பா இபுராகீம் அவர்கள் பிரபல ரெஸ்லரான கா(G)மா பயில்வானின் Fan, தினமும் வியாபாரத்தோடு கா(G)மா பயில்வானை அன்னார் ஞாபகப்படுத்துவார். அறக்கையடி , பொறங்கையடி , முட்டுக்கையடி , முட்டுக்காலடி , நெத்தியடி என்று அக்காலத்தில் தனக்குத் தெரிந்த தற்காப்பு அடிமுறைகளை Business நடந்து கொண்டிருக்கும் போதே சிரார்களுக்கு விளையாடியும் காட்டுவார்.
நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது எங்கள் கிழங்கப்பா வயது முதிர்ந்த நிலையிலும் கம்பீரமாக இருந்தார்கள். அண்ணார் இவ்வுலகை விட்டுப்பிரிந்து பல வருடங்களாகிவிட்டன.
வல்ல அல்லாஹ் எங்கள் கிழங்கப்பா இபுருகீம் அவர்களை பொருந்திக் கொள்வானகவும் ஆமீன்.
ஹாஜர் கண்ணா
கிழங்கப்பாவின் காலப்பகுதியில் ஸாஹிரா பாடசாலைகளின் இடைவேளையில் விதவிதமான கடலை வகைகள் , ‘மொச்ச கொட்டை’ என்று உள்ளூர் பாஷையில் கூறப்படும் , இந்தியாவிலிருந்து இறக்குமதியான , வெள்ளை கவ்பியை விட சற்று பெரிதான, ஒருவகை தானியம். பக்கோடா , முறுக்கு போன்றவைகளை வாங்கி சாப்பிடுவோர் திரும்பவும் அவைகளை சுவைக்க ஆவல் கொள்ளும் வண்ணம் தனது கைப்பக்குவத்தில் வறுத்து , அவித்து , பொறித்து, தாளித்து தானே பனை ஓலைகளால் இளைத்த பெரிய அஞ்சராப் பெட்டி (ஐந்து பகுதி அறையுள்ள பெட்டி) இரண்டில் நிறைத்து, தலையில் சுமந்து வந்து பாடசாலையிலுள்ள ஆசிரியர் முதற் கொண்டு, அங்குள்ள அனைவருக்கும் கிராக்கியான வியாபாரம் செய்த மூதாட்டிதான் எங்கள் ஹாஜர் கண்ணா.

நாங்கள் 5 சதம் கொடுத்து ஒவ்வொரு சதத்திற்கு ஒவ்வொரு கடலை வகையைப் பெற்றுக்கொண்டு இப்போதைய ‘மீடியம் சைஸ் சொபின் பேக்கை” விட சற்று பெரிதான எங்கள் அக்கால ‘கலுசான்” பையில் நிறைத்து வைத்து பாடசாலை முடிந்து வீடு போய் சேரும் வரை பகிர்ந்து சாப்பிடுவோம்.
ஸ்கூல் இடைவேளை முடிந்ததும்,அவர்களது அடுத்த வியாபாரத்தளம், மரைக்கார் வீதி மீன் வியாபாரம் நடக்கும் சந்தியாகும். (செ.மு கடை சந்தி). மஸ்ஜித் ரோட்டில் உள்ள “ஆய்பா(B) கடைக்கு” முன்னால் உள்ள சந்தியிலும் (பழைய படுக்குப் பற்றுவாடி) சிலபொழுது அமர்வார்கள்.
இளம் சிறார்களுடன் கனிவாகப் பழகி, கடனுக்கும் வியாபாரம் செய்தார்கள். எங்கள் ஹாஜர் கண்ணாவின் புகைப்படங்கள் எதுவும் விசாரித்த வகையில் கிடைக்கவில்லை. அன்னார் பல வருடங்களுக்கு முன்பே இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். வல்ல அல்லாஹ் கண்ணியத்துக்குரிய மூதாட்டியான எங்கள் ஹாஜர் கண்ணாவை பொருந்திக்கொள்வானாகவும். ஆமீன்.
மேற்கூறியவர்களின் காலப்பகுதியில் போல்ஸ் வீதியில் “கிரசென்ட்” பட மாளிகைக்கு அருகே “தட்டு” போட்டு, மாலை ஐந்து மணியிலிருந்து இரவுப் படக்காட்சி முடியும் வரை வெளிச்சத்துக்காக தீப்பந்தம் ஒன்றையும் பற்றவைத்துக்கொண்டு, ஹாஜர் கண்ணாவின் “நளபாகத்தைப்” போன்றே அறுசுவையாக, அக்கால மக்களுக்கு மிகவும் கிராக்கியான வியாபாரம் செய்தவர்தான் எங்கள் மூதாட்டி, கடலைப் பாட்டி என அன்பாக அழைக்கப்படும், பார்வதி அம்மா.
தன்னை சுற்றி நின்ற வாடிக்கையாளருக்கு வெகு வேகமாக வியாபாரம் செய்வார்கள். மிகவும் கூர்மையானவர். கைகள் கடலை வகைகளை வாடிக்கையாளருக்கு நோஸ் பேப்பர் துண்டுகளில் சுற்றிக் கொடுத்த வண்ணம் இருந்தாலும், அவர்களின் கண்கள் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நோட்டமிட்ட வண்ணம் இருக்கும். வாடிக்கையாளர் எல்லோரையும் ஒரு கொண்ட்ரோலில் வைத்திருப்பார். சிறார்களோடு மிகவும் அன்பானவர்.
புத்தளம் மண்ணின் கண்ணியத்துக்குரிய மூதாட்டியான எங்கள் கடலைப்பாட்டி பார்வதி அம்மா அவர்களும் வெகு காலத்திற்கு முன்பே இறைவனடி சேர்ந்து விட்டார். பெரிய மணி, சின்ன மணி ஆகிய அவர்களின் பேரர்களோடு அன்னாரின் சந்ததிகள் இன்று பெரும் கூட்டம் குடும்பமாக இம்மண்ணில் உள்ள அனைவருடனும் இனிதே, பின்னிப் பிணைந்து வாழ்கின்றனர்.
(B)பணாணா அப்பா
பணாணா அப்பாவும் மேற்கூறியவர்களது காலத்தவர்தான். அக்கால பேக்கரிகளில் உள்ள புதிய தின்பண்டங்களில் உடைந்து நொறுங்கியவைகளை உடனுக்குடன் வாங்கிவந்து பாடசாலை இடைவேளையில் சொற்ப விலைக்கு விற்று விடுவார்.
உயரமான, மெலிந்த உருவம். வெள்ளை நிறமானவர். கோட் போட்டு சாரம் அணிந்திருப்பார். கம்பீரமான தோற்றம். தனது பைசிக்கிளின் பின்னால் உள்ள கெரியரில் வைக்கப்பட்டிருக்கும் செவ்வக உயரமான கண்ணாடி பெட்டி ஒன்றுக்குள் (B)பணாணாக்களை வைத்திருப்பார்.
(B)பணாணா, பணாணா என்று அவர்களது வெண்கலக் குரலால் கூவிக் கூவி வியாபாரம் செய்வார். பணாணா என்ற அந்தக்கால நறுமண எஸ்ஸன்சினை வாசனைக்காக கேக், இனிப்பு, பலகார வகைகளுக்கு கலப்பார்கள். அன்று எமது பகுதியில் கொச்சிக்கடை “சுல்தானா பேக்கரி” இனிப்பு திண்பண்டங்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்தது.
எங்கள் பணாணா அப்பாவும் வெகு காலத்திற்கு முன்பே இறையடி சேர்ந்த ஒருவர். அன்னாரது புகைப்படமும் கைவசம் இல்லை. எங்கள் கண்ணியத்திற்குரிய பணாணா அப்பாவையும் வல்ல ரஹ்மான் பொருந்திக்கொள்வானாக! ஆமீன்.
புத்தளத்தில் அக்கால சிறுவர்களுக்கு,மேலும் சில இனிப்பு வியாபாரங்களும் நடந்தன.
இளம் தலைமுறையினர் அறிவதற்காக இவற்றை எழுதுகிறேன். தோடங்கா முட்டாசி (மிட்டாய்). இந்த இனிப்பு சிறுவர், பெரியவர் அனைவரையும் கவர்ந்ததொன்றாகும். நடுத்தர வர்க்கத்தினர் அக்கால உறைப்பு சாப்பாட்டுக்கு பின் இந்த இனிப்பை வாங்கி சுவைப்பார்கள்.
அடுத்து பல்லி முட்டாசி. இது மிகவும் சிறியது. அதற்குள்ளும் ஒரு சீரகம் வைத்திருப்பார்கள். மற்றயது (B)புல்டோ. இது டொபி வகையை சேர்ந்தது. சற்று கடினமானது.
தோடங்கா முட்டாசி
பல்லி முட்டாசி
(B)புல்டோ
பம்பாய் முட்டாசி
பம்பாய் முட்டாசி, தும்பு தும்பாக ஒட்டிக்கொண்டு இருக்கும். வாயில் போட்டதும் விரைவில் கரைந்து விடும்.
இந்த மிட்டாயில் இன்னொரு வகையும் உண்டு. இழுபடும் அளவுக்கு சீனிப் பாகை சற்று இறுக்கமாக கலர் இட்டு காய்ச்சி, சீரான 6 அடி மூங்கில் கம்பின் உச்சியில்,பாம்பு போல வளைத்து, சுற்றிக்கொண்டு ,சில்லறைக் காசுக்கு, கம்பில் சுற்றியுள்ள இனிப்பின் ஓரத்திலிருந்து இழுத்துப் பிய்த்துக் கொடுப்பார்கள்.
இந்த இருவகை பம்பாய் மிட்டாய் வியாபாரமும் மற்ற கையால் மணி அடித்துக்கொண்டே நடக்கும். இந்த பம்பாய் மிட்டாய் வியாபாரத்தை இப்போதும் கூட ஊரின் முக்கிய வைபவங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.