சம்பளமில்லா சமூக சேவை செய்த வட்டார உறுப்பினர் பாருக்

எம்.எஸ்.எம். அப்பாஸ் (Newton Isaac)
.
“No Ibleeses left in the hell; all went to Puttalam to Contest in the election” ”நரகத்தில் இப்லீஸ்கள் மீதமில்லை ; எல்லாம் தேர்தலில் போட்டியிட புத்தளத்துக்குப் போய்விட்டன”
.
மாநகர, பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுத் தாக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான் இப்படி பதிவிட்ட போது அதை சீரணித்துக் கொள்ள முடியாமல் போன ஒருவர் அதை 3ம் தரம் எனக் குறிப்பிட்டிருந்தார். என்ன செய்வது சர்வதேச மட்ட ஊடக வாசனை இல்லாதவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். இம்மாதிரியான மொழிக் கையாட்சி சர்வதேச ஊடகத் துறைக்கு சாதாரணமான ஒன்று. 90 களில் ‘ருவண்டா’ இனப் படுகொலைகள் பற்றி எழுதும்போது ஒரு சர்வதேச பத்திரகை இப்படி எழுதியிருந்தது. “No devils in the hell; all went to Rwanda”
.
“தினபதி”, “தினகரன்”, “டெய்லி நியூஸ்”, ” டெய்லி மிரர்” போன்ற பத்திரிகைகளுக்கு இளம் வயது முதலே செய்தியாளராகக் கடமை செய்த நான் எனது ஆக்கங்களில் இவ்வாறான மொழிப் பிரயோகங்களைச் செய்வது வழக்கம். அந்த வரிகளில் என்ன தவறு இருக்கிறது? அநியாயமான, அக்கிரமமான செயற்பாடுகளில் ஏராளமானோர் ஈடுபடுவதை வேதனையோடு சுட்டிக் காட்டுவதற்கான மொழிப் பிரயோகம்தான் அது.
.
கடந்த வாரம் புத்தளம் உள்ளுராட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டது முதல் பெரிய அரசியல் வாதிகள் என தம்மை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் எவ்வாறெல்லாம் நடந்து கொண்டார்கள் என்பதை தெரிந்திருந்தால் அந்த நபர் எனது கருத்தை மூன்றாம் தரம் என்ற சொல்லியிருக்க மாட்டார். அது எனக்கு ஒரு பொருட்டும் அல்ல. முக நூலைப் பெரிய ஊடகம் என நினைத்துக் கொள்பவர்களுக்குத்தான் அது ஒரு விவகாரம்.
.
நேற்று மாலை கால் நடையாக எனது பூர்விக பிறப்பிடமான கங்காணிக்குளம் வீதிப் பக்கமாக நடந்து போள்ஸ் வீதி 9வது ஒழுங்கைப் பக்கமாகத் திரும்பும் போது தனது வீட்டிற்கு முன்னால் பாதையோரமாக கதிரை ஒன்றைப் போட்டு கைத் தடியையும் வைத்துக் கொண்டு தனக்கெதிரே நீண்டு கிடந்த வெறுமையை வெறித்து நோக்கிய நிலையில் அமர்ந்திருந்த பாரூக் காக்கா என்னை அடையாளம் கண்டு அகமும் முகமும் மலர ஸலாம் சொன்னார். அவருக்குப் பதில் சொல்லிய நொடியிலேயே இப்படி ஒரு ஆக்கத்தை வெளியிட வேண்டும் என்று எண்ணம் மனதில் பளிச்சிட்டது.
.
பாரூக் காக்கா அந்தக் காலத்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். புத்தளம் நகரத்தின் 09 ஆம் வட்டார உறுப்பினர். சம்பளமில்லாத சமுக சேவை செய்தவர். அப்போதெல்லாம் உள்ளுராட்சி உறப்பினர்களுக்கு சம்பளம் இல்லை. எனவே அவர்களிடம் வாகனங்கள் இருக்கவில்லை. நகரத்தின் 09 ஆம் வட்டாரத்தில் இருந்து துவிச்சக்கர வண்டியை மிதித்து நகர சபைக்கு வந்து தமது சேவைகளைச் செய்வார்கள். அவர்களுக்கு ஜே.பி. பட்டம் கூட இல்லை. அப்படி இருந்திருந்தால் கூட இந்தக் காலத்து ஜே.பி. மார்போல ஒரு ஒப்பத்துக்கு ஐநூறு ருபா பறிக்கும் ஈனச் செயல்களை செய்யவே மாட்டார்கள். ஏனெனில் அவர் சிவப்புச் சட்டைக்காரர். சேவை ஒன்றுதான் சிவப்புச் சட்டைக் காரர்களுக்கு முக்கியம்.
.
மூன்று நான்கு தசாப்தங்கள் ஓடி மறைந்துவிட்டன. இன்னும் எனது மனத் திரையில் நிழலாடுகிறது. 09 ஆம் வட்டார மக்கள் பாரூக் காக்காவுக்கு புத்தம் பதிய சைக்கிள் ஒன்றை அன்பளிப்புச் செய்த நாள் . அதைக் கையளிக்கும் விழாவுக்கு ஓய்பெற்ற ரவுப் மாஸ்டர் தலைமை தாஙக்கினார். எனக்கும் ஒரு சிற்றரையாற்ற சந்தர்ப்பம் தந்திருந்தார்கள்.
.
அந்த பொன்னான நாட்களிலே ஒரு சைக்கிளின் விலை என்ன? வெறுமனே 600 ரூபா மாத்திரம் தான். அதைக் கூட ஐம்பது சதம், ஒரு ரூபா என்று மக்களிடமிருந்து அறவிட்டுத்தான் சேர்த்திருந்தார்கள். அப்படியான தன்னிகரில்லா சமுகத் தொண்டாற்றிவிட்டு முதுமையடைந்து நடக்கக் கூட சக்தியில்லாமல் பேசுத் துணைக்குக் கூட ஒருவரும் இல்லாமல் பாதையோரம் கதிரை ஒன்றைப் போட்டு தனக்கு முன்னால் விரிந்து கிடந்த சூன்யத்தை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்த பாரூக் காக்காவிடம் எத்தனை வயது என்று கேட்டேன் 83 என்று சொன்னார். தன்னிகரில்லா சமுகப் பணியாளர்களின் இறுதி கால வாழ்வு இப்படித்தான் கழிகிறது.
.
மீண்டும் எனது நினைவுகள் நேற்றைய வேட்பு மணு தாக்கல் செய்யும் நிகழ்வின் பக்கம் ஓடுகின்றன. விடிந்தால் வேட்பு மணு தாக்கல செய்யும் இறுதி நாள். கடைசி நிமிடம் வரையில் கிளை விட்டுக் கிளைதாவும் குரங்குச் சேட்டைகளைத்தானே பெரும்பாலும் எல்லா எதிர்கால அரசியல் தலைவர்களெனத் தம்மை நினைத்துக் கொள்ளும் ஒவ்வொருவனும் செய்து கொண்டிருந்தான். பணம், பதவி, இதுதான் இவர்களது அரசியல் சித்தாந்தம். என்ன செய்வது சாய்ந்தால் சாய்கின்ற பக்கம் சாய்கின்ற செம்மறிக் கூட்டம் ஓட்டுப் போட தகுதி பெற்ற நாட்டில் நாம் எதைத்தான் எதிர்பார்ப்பது?
.
WAK