சரிய முன்னர் கைகொடுக்க வாரீர் – எம்.எஸ்.அப்பாஸ்
(எம்.எஸ். அப்பாஸ்)
அருள் மறை அவனிக்கு இறங்கிய நாளினை
நினைவூட்டி நிற்கிறேன் கால் கடுக்க
வருடமும் ஐம்பத்தி மூன்றாச்சு
ஒற்றைக் காலில் இனியும் நிற்க இயலாது
சலிந்து போய்விட்டேன் சரிந்து விழுவேனோ
அச்சமாய் இருக்கிறது கைகொடுங்களேன்.
.
நகர மத்தியிலே என்னைத் தூக்கி நிறுத்தியர்கள்
நெடுநாளுக்கு முன்னமே போய்விட்டார் இன்று
பார்ப்பாரில்லாமல் தனித்து நிற்கிறேன்
தள்ளாமை எனைத் தள்ளி வீழ்த்தப் பார்கிறது
தடுத்து நிறத்த வேண்டிய சமுகமோ என்னை
நெருங்க விடாமல் உங்களைத் தடுக்கிறது.
.
கடந்து போன காலங்களை எண்ணிக்
கலங்கி நிற்கிறேன் நானிங்கு வந்த நாளில்
என்னமாய் நடந்தது பொரு விழா
எல்லாமே கனவாய்க் கரைந்து போனது
இன்றோ நாளையோ நான் சரிந்து வீழ்ந்தால்
என்ன எனைச் செய்வாய் என் சமுகமே?
கைகொடுப்பீர்கள் என்றுதான் காத்திருக்கிறேன்
.
காலம் இன்னும் கனிய வில்லையோ சமுகமே
கைகொடுத்துதவ மனம் வரவில்லையோ?
வீழ்ந்த பின்னர் மனம் வருந்தி
முகநூலில் பதிவிட்டென்ன பயன்?
சாயுமுன்னர் கைகொடுக்க மாட்டிர்களா?
நகரமும் மாநகராகிப் போனது
மாற்றங்கள் கண் முன்னே தெரியுது
நான் சரிந்து வீழும் நாளும் தான்
காத்திருக்க நேரமில்லை சமுகமே
கால் கடுக்கிறது கைகொடுத்துதவ
விரைந்து தான் வாருங்களேன்.
.
WAK
WAK
