சித்திரா பௌர்ணமி விரதம்
(கலைச்சுடர்-க.மகாதேவன்-உடப்பூர்)
ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விஷேட விரதம் வருவது போல் சித்திரை மாத பௌர்ணமியும் சிறப்புப் பொருந்திய சித்திரா பௌர்ணமியாகத் திகழ்கின்றது. சித்திரை மாத நிறை நாள் சிறந்ததாகையால் சித்திரா பூரணை என்க என்று சிலப்பதிகார உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழாவென்று இவ்விழா தனிச்சிறப்புப் பெறுகின்றது.
முதன்மை பெற்று விளங்கும் தமிழ் வருடச் சித்திரை மாதத்திலே தான் பிரம்மதேவன் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்று கூறப்படுகின்றது.சித்திரை மாதத்தில் சித்திரா பௌர்ணமியோடு சித்திரை நட்ஷத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்புடையது சில நாட்களில் சித்திரை நட்ஷத்திரம் ஒரு நாள் முந்தியும் அல்லது ஒரு நாள் பிந்தியும் வருவதுண்டு. அவ்வேளைகளில் சித்திரா பௌர்ணமியன்று மறைந்த தாயாரை நினைத்து விரதம் அனுஷ்டித்து தர்ப்பணம் தானம் செய்தல் வேண்டும்.
பூமியின் ஒரு பக்கம் சூரியனும் மறுபக்கம் சந்திரனும் வருவதே பௌர்ணமி எனப்படும்.சூரியனைத் தந்தையென்றும் சந்திரனைத் தாய் என்றும் சோதிட நூலோர் நோக்குவர்.அதன்படி இயற்கை எய்திய மாதாவுக்குரிய விரதமாக சித்திரா பௌர்ணமி விளங்குகின்றது.சித்திரா பௌர்ணமியை சித்திரைப் பருவம் சித்திரா பூரணை என வேறு பெயர்களாலும் அழைக்கப்பட்டு வருகின்றது.ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் மாதாவை நினைத்து வழிபட முடியாதவர்கள் வருடத்தில் ஒரு முறை வருகின்ற சித்திரா பௌர்ணமி விரதத்தை கட்டாயமாகப் பிடிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.வள்ளி தெய்வானையுடன் முருகன் திருத்தணிகையில் ஒரு சித்திரா பௌர்ணமியன்று தான் போய் அமர்ந்து மக்களுக்கு அருள் புரிகின்றார் என்றும் பல ஆலயங்களில் அன்று முருகனுக்கு மஹோற்சவ திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.சித்திரா பௌர்ணமியன்று தான் அயோத்தியில் இராமபிரானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
பிரபஞ்சமே தந்தையும் தாயும் என்பதை பிள்ளையார் சிவன் உமை இருவரையும் சுற்றி வந்து மாங்கனி பெற்ற கதை மூலம் அறிகின்றோம். இதனால்தான் ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை’ என ஆன்றோர் கூறினர். அன்னை பாரசக்தியே தாய் என எண்ணி சித்திரா பௌர்ணமி விரதம் பிடிப்பது உத்தமம். ‘துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்’ என்ற பாடலில் ஈற்றில் ‘திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே’ என்று அபிராமி அந்தாதியில் அபிராமிப்பட்டர் அன்னையைத் துதித்துப் பாடுகின்றார்.
புறவடிவமாக விளங்குகின்ற எம்மை ஈன்றெடுத்த தாயை வழிபட்டால் உலக மாதாவாகிய பராசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.சகல ஜீவராசிகளுக்கும் உண்மையான நிரந்தரமான தாயும் தந்தையும் பரம் பொருளாகிய சிவனும் சக்தியுமே இதனை விளக்கும் வடிவமே அர்த்த நாரீஸ்வர வடிவம்.எமக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.அதில் முதல் ஆறு மாதமும் உத்தராயண காலமாகும்.
இப்பகல் பொழுதில் 15 நாளிகை முதல் 20 நாளிகை வரையுள்ள ஐந்து நாளிகை நேரமே சித்திரை மாதமாக வருகின்றது.இந்த மத்தியான வேளையில் பௌர்ணமி சேர்ந்து சித்திரா பூரணையாக விஷேட காலமாக வருவதனால் தாயை நினைத்து தீர்த்தமாடி விரதம் பிடித்து பிதிர்க்கடன் செய்வது அவர்களுடைய சந்ததியை விருத்தியடையச் செய்யும்.முசுகுந்தச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட ஏழு லிங்கங்களுள் ஒன்று திருவாரூரில் உள்ளது.சித்திரா பௌர்ணமியன்று அங்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.
முருகன் பிறப்பதற்குக் காரணமாக இருந்த மன்மதன் எரிந்ததைக் கருத்திற் கொண்டே மலை நாடுகளில் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. சித்திரா பௌர்ணமி நாளை ஞானசம்பந்தர் அட்டமி நாள் என பூம்பாவைப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். பிரகஸ்பதியாகிய வியாழனின் அறிவுரைப்படி இந்திரன் தல யாத்திரை செய்து கொண்டு மதுரையை அடைந்த வேளை அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைக் கண்டு தனது பாவம் குறைவதையுணர்ந்து சிவலிங்க பூஜை செய்ய குளத்திற்குச் சென்ற பொழுது அவ்விடத்தில் பொற்றாமரை மலர்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்து பொற்றாமரை மலரால் லிங்கத்தைப் பூஜை செய்த நாள் சித்திரா பௌர்ணமி எனக் கூறுவர்.
மேலும் இந்திரன் தேவதச்சனாகிய விஸ்வகர்மாவைக் கொண்டு மதுரையில் சொக்கநாதருக்கும் மீனாட்சி அம்மைக்கும் அழகிய நான்மாடக்கூடலை அமைத்து சித்திரா பௌர்ணமியன்று தான் கும்பாபிஷேகம் செய்வித்ததாக அறிய முடிகிறது.இந்தப் புனித தினமான சித்திரா பௌர்ணமியில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் மறைந்த தாயாரையும் எல்லாம் வல்ல தாயாக விளங்கும் பராசக்தியையும் வழிபட்டு அருளும் ஆசியும் பெற்று வாழ்வோமாக.
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனிமலர்ப்
பூங்கணையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும்
கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.