ஜனாஸா எரிப்பு – 2

ஜனாஸா எரிப்பு – 2

(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

Prof. M.S.M. Anas

கொரோனா தொற்றுக்கு ஆளாகும்போது முஸ்லிம் அல்லாத நோயாளிக்கு ஒரே ஒரு கவலைதான். அது நோயிலிருந்து மீளவேண்டும் என்பது . ஒரு முஸ்லிம் தொற்றாளரின் பிரச்சினை அது மட்டுமல்ல. நோயையும் கடந்து மரணம் சம்பவித்தால் தனது உடல் எரிக்கப்பட்டு ஒரு பிடி சாம்பலாக்கப்படும். அவனது /அவளது உள்ளம் சிதறிப் போகிறது. நியாயமற்ற முறையில் இது அவர்களின் மீது சுமத்தப் பட்டுள்ளது என்பதனால் கவலை இரட்டிப்பாகிறது. இது கொரோனாவை வைத்து மட்டும் எடுக்கப்பட்ட முடிவு அல்ல . முஸ்லிம்களை ஓரங்கட்டுவது அலட்சியப்படுத்துவது அதன்மூலம் முஸ்லிம் வெறுப்பிற்குத் தீனி போடுவது. வாக்குகளை அதிகரிக்க இதையும் பயன் படுத்துவது, என்பதற்குள் இதுவும் செருகப்பட்டது.

அறிவிற்கும் மனிதாபிமானத்துக்கும் மக்களின் கோரிக்கைகளுக்கும் இடமளிக்காத ஒரு கடும் நிலைப்பாட்டை உருவாக்க அரசசார்பில் சிலர் இயங்கியதை வெளிப்படையாக அறியக்கூடியதாக இருந்தது. ஒரு கட்டத்தில் எரிப்பை நிறுத்த அரசு ஆர்வம்காட்ட முற்பட்டபோது அது தடுக்கப் பட்டது. முஸ்லிம் கட்சித் தலைவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிப் பிரமுகர்கள் பிரதமர் இராஜபக்சவைச் சந்தித்து எரிப்புப் பிரச்சினையைப் பற்றி பேசச் சென்றபோது விமலும் அங்கிருந்தார். எதற்காக அங்கு விமல் ?
விமல் இல்லாமல் இதைப் பேசலாம் என்ற முஸ்லிம் குழுவினரின் வேண்டுககோள் நிராகரிக்கப்பட்டது. கொழும்பு டெலிகிராபை ஆதாரங்காட்டி அப்போதே இதை எழுதியிருந்தேன்.

றிஷாதை கைது செய்வதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அவரை சம்பந்தப்படுத்துவதற்கும் அமைச்சர் அவையில் முஸ்லிம்களுக்கு இடமளிப்பதைத் தடுப்பதற்கும் மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம்களின் இயல்பான பண்பாட்டம்சங்களை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குவதற்கும் முஸ்லிம்களின் காலில் விழாது, அவர்களின் வாடைகூடப்படாத வகையில் ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்து அரசாங்கத்திற்குள் பயங்கரமாகச் செயல்பட்ட ஒரு குழு இருந்தது. அதற்குச் செல்லப் பிள்ளை அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இனவெறிமூட்டி சிங்கள மக்களை மூளைச்சலவை செய்யும் இயந்திரமாகவும் தனது அடியாளாகவும் அரசாங்கம் இக்குழுவைப் பயன்படுத்தியது. 2/3 பெரும் பான்மையைப் பெறவும் இனவாதத்தைப் பயன்படுத்தி தமக்கு ஆதரவான மக்கள் சக்தியைக் கையில் வைத்திருப்பதற்கும் இவ் அடிவருடிகளின் கூட்டணி அரசுக்குத் தேவையாக இருந்தது. சிங்கள மக்களிடம் இக்குழுவிற்கு பெரிய மரியாதை கிடையாது.

(அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பெயோ இலங்கை மண்ணில் இருந்து சீனாவை எச்சரிக்கை செய்வதற்கும் சீனாவே தஞ்சம் என்று கிடக்கவேண்டாம் , பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று இலங்கைக்கு ஆலோசனை கலந்த ( அன்பு ) கட்டளை இடுவதற்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க- இலங்கை MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் வந்துசென்றார். சிங்கள பௌத்த மக்களின் உயர் கௌரவத்தைப்பெற்ற பௌத்த பிக்கு சிலர் பொம்பியோவின் வருகையை எதிர்த்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பத்திரிகையாளர் “MCC ஒப்பந்தத்தில் அரசாங்கம் ஒருபோதும் கைச்சாத்திடாது . இது உறுதி என்று கம்மம்பில கூறுகிறார்” என்று கூறியபோது பிரதான பிக்கு ஒருவர் ” இதைச் சொல்ல அவர் யார்? பொறுப்புப்புள்ள உயர் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் ” ).

ஆனால் இவர்களின் அண்டப் புழுகுகளையும் இனவாதக் கூச்சல்களையும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருந்தது .தேர்தல் மேடைகளில் விமலும் கம்மம்பிலவும்தான் நட்சத்திரப் பேச்சாளர்கள். சிறுபான்மை யினரை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவது, தமிழ் தலைவர்களைத் தலையாட்டி பொம்மைகளாக்குவது அனைத்துக்கும் மேலாக முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக்குவது, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களைத் தேசத் துரோகிகளாக்குவது, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலோடும் சஹரானோடும் அவர்களைத் தொடர்புபடுத்தி அவர்களின் அரசியல் எதிர்காலத்தை அடியோடு சாய்ப்பது, முஸ்லிம்களைப் புறக்கணிப்பதற்கும் உதாசீனம் செய்வதற்கும் சிங்கள மக்களைத் தூண்டுவது. இவைதான் தலைப்புக்கள் இப்படி ஒரு பெரிய பட்டியல் உண்டு.

ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவைப் பெற்றிருக்கும் அலிசப்றியை ஏனைய இனவாத சக்திகளோடு சேர்ந்து நீதிஅமைச்சர் ஆக்கக் கூடாது என்று கரணம் போட்டதும் இந்தக் கோஷ்டிதான். முஸ்லிம்களோடும் சிறுபான்மையினரோடும் மென்போக்கைக் கடைபிடிக்கிறார் என்பதால் இரட்டைப் பிரஜா உரிமையைப் பெற்றிருக்கும் பெசில்ராஜபக்ச மீது காழ்ப்புணர்வு கொண்டு அவரைப் பாராளுமன்றத்திற்குச் செல்லவிடாது தடுக்கும் ஷரத்தை ஆதரித்துப் போராட்டம் நடத்தியதும் இந்த விமல் குழுவினர் தான்.

இனவெறுப்பை வளர்த்து , அரசாங்கக்கட்சிக்கு விமல் வாக்குகளைத் தேடித் தந்தது உண்மை தான். ஆனால் பாராளுமன்றத்தில் 20 வது திருத்தத்தினைச் சிறப்பாக வெற்றி பெறச் செய்த பெருமை பெசிலுக்குரியது. ஹக்கீம், றிஷாத் கட்சிகளின் 7, 8 வாக்குகளை அரசாங்கத்தோடு இணைத்து விமல், கம்மம்பிலக்களின் முகத்தில் கரிபூசப்பட்டதையும் நாம் மறுக்க முடியாது.
றிஷாத் , றிஷாத் தம்பி கைதுகள் பெசிலின் விருப்பத்திற்கு எதிராக விமலையும் விமல் சார்பு இனவாதக் கும்பலையும் ஆஸ்வாசப்படுத்த அரசு நடத்திய மக்களை ஏய்க்கும் நாடகம்தான். இப்படி இவர்களுக்கு யார் கழுத்தை அறுத்தாவது (போலி) விருந்துகள் படைக்க வேண்டும் . ஜனாஸா எரிப்புப் பிரச்சினையும் ஒருவகை விருந்துதான்.

/Zan