ஜனாஸா எரிப்பு – 3
ஜனாஸா எரிப்பு – 3
(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

ஜனாஸா எரிப்பின் அரசியல் பற்றி முன்னர் சில குறிப்புகளை எழுதி இருந்தேன் . கடந்த வாரம் நீதி அமைச்சர் அலிசப்ரி பாராளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசினார். அவரது பேச்சில் இருந்தும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அரசாங்கத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினை மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மக்கள் சாதகமான தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளனர். அலிசப்ரிமீது மட்டும் மக்கள் அழுத்தம் தருவது நியாயம் அல்ல. அவரைக் கடந்த சக்திகள் இங்கு செயல் படுகின்றன.
இனவாத மதவாத சக்திகளை முதன்மைப்படுத்தி அதன் அச்சில் சுழலும் அரசு அரசுக்கான சுதந்திரத்தை இழந்து விடுகிறது . உரியவகையில் விருந்துகள் படைத்து, இனவாத சக்திகளின் (அநியாயமான) கோரிக்கைகளில் சிலவற்றிற்காவது ஆதரவளிக்கும் நிர்ப்பந்தங்கள் உள்ளன.
அதனால் விளிம்பு நிலைப் பிரச்சினைகளை அல்லது சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது பலியிடுவதற்கு அரசாங்கம் தள்ளப் படலாம்.
19 வது அரசியல் சாசனத் திருத்தத்தை திருத்தி இரட்டை பிரஜாஉரிமையாளர்கள் பாராளுமன்றம் வருவதை அரசாங்கத்திற்குள் ஒரு சிறுகுழு எதிர்த்தது. MCC கு அரசாங்கம் கைச்சாத்திட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாகவும் அதே குழு கூறிவருகிறது. இக்குழுவின் எதிர்ப்புக்களை ஜனாபதி கவனத்தில் எடுத்துள்ளாரா?
ஜனாஸா எரிப்பு அரசியல் ஆக்கப்பட்டதை முன்னரே பேசி உள்ளேன்.முடிவடைந்த தேர்தலோடு அதன் அரசியல் தேவை குறைந்துள்ள போதும் அரசியல் தேவைகளில் இருந்து இன்னும் அது முற்றாக விடுபட்டு விட்டதா? வைத்தியர்கள் அடங்கிய சக்தி வாய்ந்த முஸ்லிம் குழு ஒன்று கொரோனா தொடர்பில் அரசாங்கத்தின் சிறப்புப் பிரிவாக இயங்கிவந்த அதிகாரமுள்ள குழுவை சந்தித்து இப்பிரச்சினை குறித்து ஆராய்ந்தது . ஆறு மாதங்களுக்கு முன் நடந்த இச்சந்திப்புத் தோல்வி அடைந்தது.
தாங்கள் இதுவரைக்கும் அறிந்திராத தொற்றுக் கிருமியோடு போராட்டம் நடத்தவேண்டி இருப்பதால் கொரோனாவினால் இறப்பவர்களின் உடலை எரிப்பதற்கு எடுத்த முடிவு மாற்றப் படக்கூடியதல்ல என்றுஅந்தக் குழு மறுத்துவிட்டது . ஆனால் இதற்காக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ஆராய்ந்து முடிவெடுக்க இணக்கம் காணப்பட்டது. ஆறு மாதங்கள் ஆகியும் குழு அமைக்கப்படவில்லை.
புதைப்பது பற்றி உலகில் யாருக்கும் இல்லாத பயம் இலங்கை விஞ்ஞானிகளுக்கும் வைத்தியர்களுக்கும் ஏற்பட்டது எப்படி. அமெரிக்கா இந்தியா ஐரோப்பிய நாடுகள் இன்னும் பல நாடுகளில் புதைப்பதற்கு அனுமதிதரப்பட்டதுமட்டும் அல்ல, அது நல்ல முறையாகவும் கருதப்பட்டது. கூட்டு முறையிலும் அடக்கம் நடந்தது. மேற்கு நாடுகளும் இன்னும் பல நாடுகளும் பண்பாட்டு வேறுபாடுகளுக்கு மதிப்பு அளித்தன. அவரவர் நம்பிக்கைகள் , வாழ்வுப்பெறுமானங்கள. இறுதிக்கட்ட உடல் அழிப்பு பற்றிய சமயவிதிகள். மரணித்தல் மற்றும் மரணித்தலோடு தொடரும் மறுமைபற்றிய கொள்கைகள் எல்லாம் இதில் அடக்கம். பண்பாட்டை மதித்தலும் பண்பாட்டுப்புரிதலும் இன்றி இதனை விளங்க முடியாது.
சிரச டிவி நடத்தும் தவஸ ( கொவிட் 19 ) நிகழ்ச்சியில் சிங்களக் குடிமகன் ஒருவன் தொலைபேசி மூலம் நிகழ்ச்சியை நடத்தும் ரொசான் வட்டவலவிடமும் அங்கிருந்த இரு சிங்கள பேச்சாளர்களிடமும் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான் ” கொரொனா வினால் இறந்தவரின் உடலை எரிக்க வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த முடிவை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாது புதைக்க வேண்டும் என்று ஏன் கேட்கவேண்டும். ”
அவர் அவ்வாறு பேசியதில் தவறில்லை . அவருக்கு தெரிந்த அளவில் அவர் பேசுகிறார். அது அவரது விருப்பமாகவும் இருக்கலாம். இனவாத நிழல் படாமலும் அரசியல் சாராமலும் இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். உலகம் முழுக்க இதற்கு முன்மாதிரிகள் இருக்க சிறுபான்மை மக்களின் நியாயமான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் தண்டிக்க நினைப்பது நியாயமற்றது. காலத்தைக் கடத்துவது ஆபத்தானது. ஆனால் பெரும்பான்மை மக்களிடம் சில வேளை இது தவறான அல்லது இனவாதப்பார்வைகளுக்கு இடமளிக்க லாம்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்றவாறு சிறப்புக் கண்காணிப்பின் கீழ் புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்து இது ஒரு பெரிய பிரச்சினை யாக வளராது தடுத்திருக்கலாம். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து ஐ. நா. தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் எரிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளது.
அரசாங்கம் தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இப்போது பத்து சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன. இன்னும் இது இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்கலாம்.இதற்கு இடையில் தகுந்த ஆலோசனைகளை வழங்க அரசாங்கம் முஸ்லிம்களையும் உள்ளடக்கிய ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக அறிகிறோம். இப்பிரச்சினை குறித்து நீதியான முடிவையே முஸ்லிம்கள் எதிர்பார்த்துள்ளனர்.
முஸ்லிம்கள் ஆரம்ப த்தில் இருந்தே மிக அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கே முயன்று வருகின்றனர். ஆனால் தமது கவலையையும் எதிர்ப்பையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.