ஜனாஸா எரிப்பு – 4

ஜனாஸா எரிப்பு – 4

(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

Prof. M.S.M. Anas

ஜனாசா எரிப்பது பற்றி நீண்டு செல்லும் இழுபறிநிலை ஒருவகையில் கவலை தருவது. இன்னொரு பார்வையில் ஆபத்தானது. இவ்வாறுதான் முன்னரும் பல விடயங்கள் பேசப்பட்டு பேசப்பட்டுத் தீச்சுவாலைகளுக்குத் தீனியாகியது. புதைப்பதற்கான அனுமதிதரப்படும் என்ற நம்பிக்கை ஏன் தரப்பட்டது. எந்தப் பிடிமானமும் இல்லாமலா அமைச்சர் அலிசப்ரி அமைச்சர் அவையின் தீர்மானத்துக்காக இதைக் கொண்டு சென்றார். அதாவது பிரச்சினை தீர்க்கப்படும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டாமலா அலிசப்ரி இதில் இறங்கினார். சில தயக்கங்களுக்குப் பின்னர் அமைச்சர் அவையில் அதனைச் சமர்ப்பித்தார் சப்ரி. அமைச்சர் அவையில் பிரச்சினைகள் எழவில்லை. ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஒரு செய்தி பரவியது அல்லது பரப்பப்பட்டது. முஸ்லிம்கள் பரபரப்படைந்தார்கள். நம்பமுடியாத செய்தி என்பதால் இந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் இதையும் மீறி ஜம்யத்துல் உலமா , ஒரு சில சமய இயக்கங்கள், சில அமைப்புகள் அரசுக்கு நன்றி கூறி ஒரு அதீத, அவசியமற்ற , வினோத சூழலை உருவாக்கின. அதில் கபடம் இருந்ததாக நான் கூறவில்லை. ஆனால் எதற்காக நன்றி. சில நன்றிகள் இயல்பானதாக இருக்கலாம். சில நன்றிகள் அப்படியானதல்ல. சமூக வலைத் தளங்களில் இது பேசு பொருளாகியது.

ஞானசார தேரரை விழிப்பூட்ட அந்த நன்றிகள் உதவி உள்ளன. அவர் களரிக்கு வந்தார் . எரித்தல் விடயத்தில் அரசாங்கம் அடிப்படைவாத , தவ்ஹீத்வாத கோரிக்கைகளுக்கு அடிபணிந்து செல்லக் கூடாது என்றார். நினைத்தவாறு சட்டங்களை மாற்றம் செய்யக்கூடாது என்றார். கடந்த காலங்களில் தவ்ஹீத் இயக்க வாதிகளுக்கும் ஜம்மியத்துல் உலமா சபைக்கும் ஞானசார உள்ளிட்ட கடும்போக்குவாதிகளுக்கும் இடையில் பெரிய முறுகல் நிலை காணப்பட்டது ஞாபகம் இருக்கும்.

புதைப்பதற்கான அனுமதியை அமைச்சர் அவை வழங்கி உள்ளது என்ற செய்தி தவறானது என்று பின்னர் அரசு அல்லக்கைகள் மூலம் செய்தி வெளியிட்டது. சுகாதார அமைச்சின் விஞ்ஞான நிபுணர்கள் குழுவின் முடிவுக்காக அலிசப்ரியின் விண்ணப்பத்தை அனுப்பி உள்ளோம். அவர்களின் முடிவுதான் இறுதியானது. விமலும் கெஹலியவும் ஊடகச் சந்திப்புக்களில் கூறினர். அலிசப்ரி விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். ஆனால், அமைச்சர் அவை எந்த முடிவையும் எடுக்கவில்லை. வெளிவந்த செய்திகளில் உண்மை கிடையாது என்று இதற்கு முன்னரும் விமல் ஊடகங்களில் தெரிவித்தார். அவரது கட்சி அங்கத்துவரும் பா. உ. ருமான முஸம்மில் முஸ்லிம் சடலங்கள் புதைக்கப்பபடக்கூடாது எரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ஆக்ரோஷமாகப் பேசினார். அவர் ஒரு சர்ச்சைக்குரிய பேர்வழி.

இதனைத் தொடர்ந்து இனவாதக் குழுக்கள் இனவாத ரீதியாக கருத்துக்களைப் பரப்பத் தொடங்கின. 90 வயதைத் தாண்டிய சிங்கள இலக்கியவாதியும் இனவாத சிற்பிகளில் ஒரு வருமான குணதாச அமரசேகர எதிர்பார்த்தது போல் தமது கருத்துக்களை வெளியிட்டது அலிசப்ரியின் ( அல்லது முஸ்லிம்களின்) கோரிக்கைக்கு சங்கு ஊதப்படும் என்பதை உறுதி செய்தது.

முஸ்லிம் அமைப்புகள் சில ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்து இரண்டு தினங்களில் அது வெளிவந்தது. (அதன் தமிழ் வடிவம் இணையத்தளத்தில் வந்திருந்தது). ஒரு எளிய சூத்திரத்தின் ஊடாக அவர் தனது விருப்பத்தை வெளியிட்டார். ஒரு நாடு ஒரு சட்டம். எரிப்பது எல்லாருக்கும் பொதுவான சட்டம். அரசாங்கம் அதை மாற்றக் கூடாது. முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கும் தீவிரவாதிகளின் கோரிக்கைகளுக்கும் அடிபணியக் கூடாது. எரிப்பதற்கு எதிராக சாதாரண ( பாரம்பரிய ) முஸ்லிம்களை இவர்கள் தவறாக வழிநடத்துகிறார்கள். அடிப்படைவாதிகளின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றக் கூடாது. அவரது கருத்து க்கள் கடுமையானதாக இருந்தன. படிப்படியாகப் புதைக்கும் பிரச்சினைக்கு தீவிரவாதிகளின் சாயம் பூசப்பட்டது.

தொடரும்.

/Zan