ஜனாஸா எரிப்பு – 5
ஜனாஸா எரிப்பு – 5
(பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்)

அமைச்சர் அலி சப்ரி தகனத்தை நிறுத்தக் கோரி அமைச்சர் அவைக்கு சமர்ப்பித்த பத்திரம் நிராகரிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் குழு இதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் தகனம் தொடரும் என்று அரசாங்க ஊடகங்கள் அலறியதை நாம் கேட்டோம். புதைக்கலாம் அல்லது தகனம் செய்யலாம். இதுதான் இலங்கை அரசாங்கம் மார்ச் மாதத்தில் முதலில் எடுத்த முடிவு. புதைப்பதற்கு விரும்பினால் புதைக்கலாம். இது WHO வின் விதிகளுக்கு இசைவான தீர்மானம்.
ஆனால் முதல் முஸ்லிம் ஜனாஸாவுடன் ஒரு குழப்ப நிலை தோற்றுவிக்கப்பட்டது. மறு வர்த்தமானி மூலம் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் இன மத வேறுபாடின்றி எரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். முன்னைய அனுமதி இரவோடிரவாக மாற்றம் செய்யப்பட்டது. நிலக்கீழ் நீருடன் தொடர்புபடுத்தி இறந்த உடலை எரிப்பதுதான் நாட்டைத் தொற்றில் இருந்து காப்பாற்ற ஒரே வழி என்பது போல் விஞ்ஞானம் பேசப்பட்டது.
ஒரு முஸ்லிமின் கௌரவமான, மார்க்கரீதியான மரண இறுதி நம்பிக்கைகள் பிடுங்கி வீசப்பட்டன. மரணத்தையும் சடலத்தையும் கையாள்வது பற்றிய அவனது / அவளது உரிமை மறுக்கப்பட்டது. குறைந்த பட்சம் அரசாங்கம் திறந்த மனதுடன் உண்மை நிலையைக் கூறி, முஸ்லிம் தரப்பு நியாயங்களைப் பொறுமையுடன் கேட்டருக்கலாம். சுமுகமான தீர்வுகளைத் தேட அரசாங்கத்திற்கு நேரம் இருக்கவில்லை அல்லது கலந்துரையாட முஸ்லிம்களுக்கு அவகாசம் தரப்படவில்லை. முஸ்லிம்கள் தமது சொந்த மக்கள் என்பதை நாடு கருத்தில்கொள்ள வில்லையா என்ற எண்ணத்திற்கு அநியாயமாக முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.
கடைசியாக இரு வாரங்களுக்கு முன்பு ஐ.நா. சபையின் சார்பாக அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த நிரூபத்தில் முஸ்லிம்களின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து அவர்களுக்கு நியாயம் வழங்கும் படியும் அவர்களின் இறுதிக்கிரியை விடயத்தை சாதகமாக நோக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது . தேவையான தீர்வுகள் எடுக்கப்படாவிட்டால் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதை உரிய சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தமாட்டார். இது ஆபத்தானது. தமது உடல் தகனம் செய்யப்படாமல் இருக்க இதை அவர்கள் செய்யலாம் என்பதையும் அக்கடிதம் அரசாங்கத்திடம் கூறியது. ஐரோப்பிய ஒன்றியமும் தனது கவலையை வெளியிட்டதாக ஞாபகம். உலக மனித உரிமைகள் அமைப்பும் தகன சட்டத்தில் முஸ்லிம்களின் கோரிக்கையை அரசு மதிக்க வேண்டும் என்று கூறிஇருந்தது . அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களிலும் இப்பிரச்சினை கவலையை ஏற்படுத்தியது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் நீதி அமைச்சர் அலிசப்ரி முஸ்லிம்களுக்கு தகனத்திலிருந்து விலக்களிக்கும் கோரிக்கையை அமைச்சர் அவையில் சமர்ப்பித்தார். சரியாகப் பார்த்தால் சர்வதேச அழுத்தங்களுக்கு காய்வெட்டும் சூனியக்காரியின் பாத்திரத்தை அரசு ஏற்றிருந்தது. போலி வாக்குறுதிகளின் சூனியக் களரியில் எம்மவர்கள் கழைக்கூத்தாடினார்கள்.
நாடகத்தின் முதல் காட்சி, கோரிக்கை சமர்ப்பிக்கப்படல்.
இரண்டாம் காட்சி, நன்றிப் படலம் . நன்றிப்படலம் சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது. எதுவும் நடைபெறவில்லை ஆனால் நன்றி. நன்றி தெரிவிப்பு மரதனில் பங்கு பற்றாதவர்கள் இல்லை. அடிமை சாசனம் போன்ற அந்த நன்றி தெரிவிப்புக்கள் சமூகத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்தது.
விரைவில் காட்சிகள் மாறின . சிறுபான்மையினர், அல்லது முஸ்லிம்களின் விடயத்தில் பற்றி எரியும் முகத்தோடு காட்சிதரும் பாத்திரங்கள் மேடையை அலங்கரித்தன. அலிசப்ரி தனிமைப் படுத்தப்பட்டார்.
யார் இந்த அலி சப்ரி ? நியமனப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் வந்தவர் என்பதை அவர் மறந்து விட்டாரா? இது சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு , நீதி அமைச்சர் பதவி பெரும்பான்மைக்குரியது. நீதி அமைச்சர் பதவியியை ( நாட்டின் சட்டத்திற்கு அப்பால் சென்று) தனது சமூகத்திற்காகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். ஞானசாரர் உள்ளிட்ட அந்த அணியினைச் சேர்ந்த சில பிட்சுகள் அலிசப்ரியின் அடிப்படையையே அசைத்தனர் . பெரிய இடங்களில் அவருக்குத் தொடர்பு இருக்கலாம். அது எங்களை எதுவும் செய்யப் போவதில்லை . நாட்டின் முன்னேற்றம்தான் எமது நோக்கம் என்றும் ஞானசாரர் கூறினார்.
பேரினவாதிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில்தான் சப்ரி நீதி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றார் என்பது இரகசியமல்ல. தகனப் பிரச்சினையோடு அதையும் ஒரு வழி பண்ணிவிட கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் திரிகின்றனர் என்பதையும் மக்கள் அறிவர்.
கொரோணா நோயாவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உதவலாம் என்ற கனவும் இன்று கானல் நீராகிவிட்டது. அலி சப்ரியின் அமைச்சரவைச் சமர்ப்பணம் சட்டிக்குள் இருந்து அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது. வழமைபோல் அரசாங்கம் ஊமையாகிவிட்டது. சமயப் பிரிவினர் பேச ஆரம்பித்து விட்டனர்.
சிங்களப் பொதுமக்களை உசுப்பேற்றி அவர்களைத் தவறாக வழிநடத்தும் பேச்சாளர்கள் தமது பணியை ஆரம்பித்தவிட்டனர். தகனத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்களிக்கப்படுவது நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என்ற கருத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மன்னார் அல்லது முல்லைத்தீவுப் பகுதியில் தொற்றுக்கு உள்ளாகி இறக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக அறிகிறோம். அதை அந்த மாவட்ட மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அந்த பிரதேச பா. உ. ஒருவர் குரல் எழுப்பி உள்ளார். இதுதான் நிலைமை.